Thursday, December 31, 2009

வயதும் வருடங்களும்!

எங்கள் கண் முன்னே வளர்ந்த பெண் பிள்ளைகள், அவர்கள் தம் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டிற்கு வருகைதரும் போதிலெல்லாம் என் சகோதரர் சொல்லுவார்: “இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்கிற நினைவே தோன்றுகிறது” என்று! உண்மையான பேச்சு! மனதளவில் எவ்வளவு இளமையாக உணர்ந்தாலும், சமூக நாகரீகம் கருதி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலோ என்னவோ, அநேகமாக எல்லா சூழ்நிலைகளிலும் நான் போகுமிடங்களில் எல்லாம் என் ஸ்வபாவப்படியே ஜாலியாகத்தான் பழகிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் நேரில் சொல்வது ‘கொடுத்து வைத்தவர் ஐயா, நீர் - உமது வயதே தெரிவ்தில்லை’ என்று. பின்னால் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி, நமக்கேன் கவலை! ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளன்று ”இதுவரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி என்ன சாதித்தோம்? வெறும் ’வேடிக்கை மனிதனாகவே’ வாழ்ந்து விட்டோமே” என்று ஆதங்கப்பட்டே வாழ்வின் விளிம்புக்கு வந்தாயிற்று!

வயது என்றதும் சமீபத்தில் நண்பர் ரவிகுமார் கூறிய ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அவருடைய தந்தையார் வீட்டிலே விழுந்த காரணத்தினால் இடுப்பில் மூட்டுக்கிண்ணப்பந்து உடைந்து மருத்துவமனையிலே படுத்திருந்தார். வைத்தியர்கள் பந்தை மாற்றவேண்டுமென்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த நிலையிலே, ரவிகுமாரின் இளைய மகன் கல்லூரியிலிருந்து நேரே தாத்தாவைப்பார்க்க வந்தான். தன் தந்தையிடம், ’தாத்தாவிற்கு என்னப்பா ஆச்சு?’ என்று விசாரித்தான். ரவி கேட்டார்: ‘தாத்தாவின் வயது என்ன?’ என்று. அவருக்கு 80க்கு மேலே என்ற பதில் வந்தது. அதற்கு இவர், ’80 ஓவராகிவிட்டதல்லவா, அதனால், இப்போது பால் மாற்றச் சொல்லிவிட்டார்கள்’ என்று சொன்னார்! இது எப்படி இருக்கு?

Tuesday, December 8, 2009

காவல் நிலையத்தில்......

என்னுடைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த சமயம் நான் பட்ட பாட்டைப்பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியாக, நான் ஊரிலில்லாத சமயத்தில் என்னைத் தேடி காவல் துறை அன்பர் ஒருவர் (சீருடையில் இல்லாததால் அன்பரானார்!) வந்திருந்ததாகவும் என்னை வந்து காவல் நிலையத்தில் சந்திக்கச் சொன்னதாகவும் தகவல் கிடைத்தது. ஏற்கனவே மூன்று முறை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்ததால் (வீண் கற்பனையும் அற்ப சந்தோஷமும் வேண்டாம் - அந்த சந்திப்புகளும் இதே காரணத்துக்காகத்தான்!) என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்திருந்தது. இன்று காலை வழி கண்டுபிடித்துப் போய்ச்சேர்ந்தேன். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் குடைச்சலான கேள்விகளின் ஊடே புகுந்து புறப்பட்டு வெற்றிகரமாகத் திரும்பினேன். அங்கே இலவச இணைப்பாகக் கிடைத்த காட்சியிது: ஒரு நடுத்தர வயது ஆணைத் தன் இருக்கைக்கு அருகில் (குத்த வைத்து) அமரச்சொல்லி ‘அன்புடன்’ விசாரித்துக் கொண்டிருந்தார் (சீருடையில் இல்லாததால் என் ஊகத்தில்) எழுத்தர். வீட்டு விலாசத்தைப் பற்றிய சில பல கேள்விகளுக்குப் பிறகு ஆரம்பித்தது அசல் விசாரணை. முதலில் கைகளை நீட்டச் சொல்லி, இரண்டடி தூரத்தில் நிற்கவைத்து, ஒரு நான்கடி நீளப் பிரம்பால் அடித்தார்கள் பாருங்கள், குலை நடுங்கிவிட்டது எனக்கு! அடிபட்டவனோ, அனுபவசாலி போலிருக்கிறது. அந்த அடிகளுக்கு நடுவே, முதலில் சொன்ன அண்ணாநகரிலிருந்து கோடம்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்தான். இன்னொரு அன்பர் சட்டையைப்பிடித்து, சுழற்றி அடித்தபோது, திருவள்ளூரின் ஒரு பகுதியான வள்ளுவர் நகரத்தில் மாரியப்பனின் பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டான்! அப்போதும் விடவில்லையே அவர்கள்! மாரிமுத்துவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, அந்த மாரிமுத்து இவனைப் பக்கத்து வீட்டுக்காரன் என்று உறுதியளிக்கும் வரையில் தரையில் அமர்ந்து இரண்டு கைகளையும் (சாணி தட்டுவது போலத்)தட்டிக் கொண்டிருக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள், என் வேலை முடிந்துவிட்டதால் (மனதிற்குள்) அலறி அடித்துக்கொண்டு ஓடி வெளியே வந்துவிட்டேன்! நம் சிறு வயதில் போலீஸைக் காட்டி, ‘பூச்சாண்டி’ என்று பயமுறுத்தியதில் பொய்யேயில்லை!

Sunday, November 8, 2009

நானும், மழையும் மற்றும் என் பாஸ்போர்ட்டும்...

மழைக்கும் எனக்கும் ஒரு போட்டி! அது வரும்போதிலெல்லாம் நான் மரியாதையாக வீட்டில் அடங்கி, ஒடுங்கி இருந்தால் போச்சு. மீறி வெளியே போனால் அது எனக்குச் ‘சொந்தக் காசில் சூனியம்’ வைத்துக் கொண்ட கதையாகத்தான் முடிகிறது! பல வருடங்களுக்கு முன்னர், மழையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றபோது விழுந்தேன். இடதுகால் எலும்பை முறித்துக் கொண்டு காலின் உள்ளே காயலான் கடைச் சாமான்களுடன் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறேன். அதன் பிறகும் பல அனுபவங்கள். அதனாலேயே மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிக்கும் எனக்கு வந்தது ஒரு சோதனை. என்னுடைய பாஸ்போர்ட் விரைவில் காலவதியாக இருப்பதனால் அதைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. அதைத் தபாலில் அனுப்ப வேண்டுமானால் அதில் சில ‘கெஜட்டட்’ அதிகாரிகளின் கையொப்பம் பெற வேண்டும். அப்படி ஒருவரும் பக்கத்தில் இல்லாததால், கணிணியின் பேச்சை நம்பவேண்டியதாயிற்று. அதில் (அவர்களின் வலைத்தளத்தில்) கூறியிருந்தபடி பதிவு செய்து கொண்டால் அவர்கள் குறிப்பிடும் தேதி, நேரத்தில் சென்று, எந்த வரிசையிலும் நிற்காமலும் பதினைந்து நிமிடங்களில் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. நம்பினேன். பதிவும் செய்தேன்.

அந்த நாளில் மழை வரலாமோ? வந்தேவிட்டது. ஆட்டோவைப்பிடிக்கச் செல்லுகையில் சேற்றில் காலை வைத்து வழுக்கி விழுந்து, பட்டகாலிலேயே பட்டது. மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்யனாக வீடு திரும்பி, உடை மாற்றி ஒரு வழியாக பாஸ்போர்ட் அலுவலகம் அடைந்தால் அப்படி ஒரு கூட்டம் அங்கே! நான் செல்ல வேண்டிய தளம் எது என்பதைத் தெரிந்துகொள்ளவே இருபது நிமிடங்களானது. எப்படியோ நொண்டிக் கொண்டு போனால் அங்கும் பெரும் கூட்டம்,அமளி. எனக்கு எத்தனை மணிக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்தார்களோ, அதே சமயத்தில் இன்னும் ஐந்து பேருக்கு மேல் வரச்சொல்லியிருந்தார்கள்! வரிசையில் நின்று அவதிப்பட்டுக் கடைசியில் அவர்கள் கொடுத்திருந்த சமயத்திற்கு மேல் இரண்டரை மணி நேரம் கழித்து வெளியே வந்தேன்! இதில் வேடிக்கை என்னவென்றால், நான் போனது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வரிசை, நான் சென்றிருந்த வேலைக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 5 நிமிடங்கள்!

இது நடந்து சிலநாட்களாகின்றன. இன்னும் மழை நின்றபாடில்லை, நானும் நொண்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.

Wednesday, October 7, 2009

என்னுடைய ’வங்கியில் ஒரு அனுபவ’த்தின் தொடர்ச்சியாகும் இது. பத்து நாட்களுக்கு முன் வங்கிக்குச் சென்றிருந்த போது, அவர்கள் இன்னொரு நாள் வரச்சொன்னதும், நான் கடுப்படைந்து, கண்டபடி ஆங்கிலத்தில் திட்டி, அடுத்து நான் போவது வங்கியின் ஆம்பட்ஸ்மேனிடம் புகார் செய்வதற்காக என்றெல்லாம் மிரட்டியதற்குப் பின் காத்திருக்கச் சொன்னார்கள்.ஒரு மணி நேரம் கழித்து என் ’நண்பர்’ வந்து, ‘ஸார், உங்களுக்கான ஏடிஎம் அட்டை தபாலில் அனுப்பப்பட்டு, விலாசம் தெரியவில்லை என்று பெங்களுருக்குத் திரும்பிப் போய்விட்டது, நீங்கள் மீண்டும் ஒரு மனு எழுதிக்கொடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்’ என்றாரே பார்க்கலாம்!
நான் கோபம் தலைக்கேறியவனாக, ’என்ன ஸார், விளையாடுகிறீர்களா?’ என்று எகிற, மற்றோரு அலுவலர் (எல்லா வங்கிக் கிளைகளிலும் வேலை செய்வதற்கென்றே இருக்கும் இந்த மாதிரி ஒருவரைப் பார்க்கலாம்!) குறுக்கிட்டு, இன்னும் அரைமணி நேரம் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.உள்ளே என்ன நடந்ததோ, ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு அட்டையைக் கையில் கொடுத்து, ‘தொலைடா சாமி’ என்று அனுப்பி வைத்தார்கள். விஷயம் இத்தோடு முடிந்துவிடுமா, என்ன? பின்னர் ஒரு நாள், நான் அட்டையின் ரகசியக் குறியீட்டை மாற்ற எண்ணி, இயந்திரத்தில் அட்டையைச் செலுத்தி, அவர்கள் எனக்களித்திருந்த மூல மந்திரச் சொல்லைப் பயன்படுத்தினதும், ‘உன் அட்டையை ஏற்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டது. இப்போது மீண்டும் மனந்தளராத விக்ரமாதித்யனாக நான்.....!

(அன்றைய என்னுடைய கலாட்டாவின்போதும் வங்கி மேலாளர் அங்கிருக்கவில்லை!)

Thursday, September 17, 2009

மனசாட்சியும் பணசாட்சியும்!

பணம் பண்ண, மனசாட்சி இருக்ககூடாது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு. பணமிருந்தால் எல்லாமே கிடைக்கும் - அதாவது அன்பைத்தவிர - என்ற நம்பிக்கையையும் தகர்த்தது அந்த உண்மை.

நன்றாக ஒடியாடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு இப்போது தள்ளாமையினால் ஒரே இடத்தில் வசிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. மகனும் மருமகளும் வேலைக்குச் செல்கிறார்கள்.வீடு திரும்ப இருவருக்கும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இதற்காக, இவரைப் பகல் வேளையில் பார்த்துக் கொள்ள, சென்னையில் இருக்கும் ஏராளமான முகவர்களில் ஒருவர் மூலம் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்தியாயிற்று. இதற்கு ஒரு கணிசமான தொகை செலவாகுமென்பதை அறிவீர்களல்லவா?

சென்னையில் இப்போது பணம் பண்ண இன்னொரு சிறந்த வழியாம் இந்த மாதிரி ஏஜன்ஸி நடத்துவது! இதில், உங்களிடமிருந்தும் கமிஷன் வாங்குவார்கள், அவர்கள் அனுப்பி வைக்கும் அந்த நபரிடமும் கமிஷன் வாங்குகிறார்கள். இதற்கான தொகை கொஞ்சமல்ல - இரண்டு பக்கத்திலும் ஓரோர் மாத சம்பளம்! இத்தோடு போவதில்லை இந்த சமாசாரம். சரியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழிந்ததும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி, நம் வீட்டில் வேலை செய்பவர் கழண்டு கொள்வார் - நீங்கள் மீண்டும் அதே அல்லது வேறே ஏஜண்டிடம் மாட்டிக்கொண்டு மீண்டும் கப்பம் கட்ட ஆரம்பிக்கவேண்டியது தான். இந்த விவகாரம் ஒரு திட்டத்தோடுதான் நடக்கிறது என்பதை இரண்டு மூன்று இடத்தில் என்னால் கவனித்து அனுமானிக்க முடிந்தது. இது ஆயாவேலைக்கு மட்டுமல்ல, எல்லாவிதமான வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜன்ஸிகளிலும் நடக்கிறதாம்! மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது, போங்க ஸார்!

Wednesday, August 12, 2009

மீனாவும் சங்கத்தமிழும்!

எனக்கு, ரவிகுமார் என்றொரு நண்பர். அவர் மணந்திருப்பது என் தமக்கையின் மகள் மீனாவை. மீனாவுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு பழக்கம். நாள் தோறும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன்னர், ஓளவையாரின் ‘பாலும் தெளி தேனும்’ என்ற பாடலைச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வாள்.பாடல் தெரியுமல்லவா உங்களுக்கு? முடிவில் ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்று முடியுமல்லவா? அவர்கள் திருமணமாகிக் கொஞ்ச நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரவி, ஒரு நாள் கேட்டார், ‘ஆமாம் மீனா, நானும் தினமும் பார்க்கிறேன், இந்தப் பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே, திடீரென்று ஒரு நாள் அந்த விநாயகனே நேரில் வந்து ‘இந்தாம்மா, நீ கேட்ட சங்கத்தமிழ்’ என்று மூன்று தமிழையும் கொடுத்துச் சென்றால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?’ என்று! மீனா இன்னமும் முழித்துக்கொண்டிருக்கிறாள்!

Wednesday, July 15, 2009

உணர்ச்சிகள்!

நம்மில் எல்லாருக்குமே சொந்தங்களோ அல்லது நெருங்கியவர்களோ இருப்பார்கள் அல்லவா? அதிலும், (என்னைப்போலப்)பணியிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அனேகமாக தினமும் (ஏதாவது ஒரு) கவலைப்படாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போலிருக்கும். ‘வெளியே சென்றவர்கள் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே’ என்பதில் ஆரம்பித்து, போய்க்கொண்டே இருக்கும். ஆனால், இந்தக் கவலைகளை விடுங்கள், சில சமயம் சற்றே பெரிய (அதாவது அசல்) கவலைகள் கூட எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுந்தானா என்ற சந்தேகம் சமீபத்தில் ஏற்பட்டது எனக்கு. ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கு பேத்தி முறையில் ஒரு பெண், +2 வில் படித்துக்கொண்டிருப்பவளுக்குத் திடீரென அடிக்கடி மயக்கம் வந்து விழுந்துவிடுவதாகவும், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருப்பதாகவும் செய்தி வந்தது. அவளின் பெற்றோருக்கு ஒரே மகளாகையால் (சற்று அதிகமாகவே) செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். போதாதற்கு, அவள் தாத்தா, பாட்டியும் பக்கத்திலேயே வசித்ததால்,இன்னும் அதிகமாகச் சலுகைகள் கிடைத்தன. அவளின் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகையால் வீட்டில் சண்டை, சச்சரவுக்கும் குறைவேயில்லை!

இந்தப்பெண்ணை, ஏதேதோ டாக்டர்களிடம் காண்பித்ததில், பரிசோதனைகளில் உடம்பில் ஏதொரு குறையும் இல்லை என்றும், பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லமே அவளின் மன அழுத்ததிற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டனர்.

என் அவதியைக் கேளுங்கள்! இந்த ‘அளவுக்கதிகமான செல்லம்’ பற்றி பல வருடங்களாகவே
நானும், குடும்பத்தில் இன்னும் சிலரும் கவலைப்பட்டதுண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னதும் உண்டு. எனினும், இப்போது குழந்தை எப்படி இருக்கிறாள் என்று ஒரு தகவலும் இல்லையே என்று நானே தொலைபேசினால், வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருக்கிற சத்தத்தின் நடுவில், ’இப்போது பரவாயில்லை’ என்று ஒரே வார்த்தை பதில் கிடைக்கிறது! அவதி என்னவென்றால், கவலைப்படாமலும் இருக்க முடியவில்லை, நம் கவலைகளைப்பற்றிக் கவலைப்பட அடுத்த தலைமுறையினருக்கு நேரமுமில்லை என்பதுதான்.......

Tuesday, June 2, 2009

வங்கியில் ஒரு அனுபவம்!

என்னுடைய புலம்பல்களை இரண்டு வகைப்படுத்தலாம். (இரண்டுமே படுத்தல்தான் என்கிறீர்களா?!) தற்காலிகம் மற்றும் சிலகாலம் தொடர்வது என்று. ஒரு ஓய்வு பெற்ற மனிதனுக்கு அன்றாடம் புலம்ப ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. என்னுடைய அண்மைக்காலப் புலம்பலை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

ஐயா, என்னுடைய ஏடிஎம் அட்டைக்குப் படக்கூடாத இடத்தில் விரிசல் விழுந்ததால் அதனால் (என்னைப்போலவே) ஒரு பயனுமில்லை என்றாகிவிட்டது. உடனே ஒரு விண்ணப்பம் எழுதி, அதனுடன் பழுதான அட்டையையும் இணைத்து வங்கியில் கொடுத்துவிட்டேன். நல்லவேளையாக ஒரு நகலில் வங்கியில் அத்தாட்சியும் பெற்றுவிட்டேன். பதினைந்து நாட்களில் புதிய் அட்டை வந்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார்கள். இது நடந்து ஏறத்தாழ பத்து மாதங்களாகின்றன. நானும் விடாது கருப்பு என்பது போல வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் அனுப்புகிறார்கள்.அவரோ, எப்போதும் பிஸியோ பிஸி. காலை பத்து மணிக்குப் போனால் மதியம் வரச்சொல்லுவார். மதியம் போனால் சற்று இருங்கள் என்பார். ஓரு நாள் கேட்டேவிட்டார்: ”ஏன் ஸார், எப்போதும் பிஸி டைமிலேயே வருகிறீர்கள்?” என்று. எப்போது அவருக்கு சமயம் கிடைக்குமோ, எப்போது எனக்கு அட்டை கிடைக்குமோ, நானறியேன் பராபரமே!

குறிப்பு: நீங்கள் ஏன் வங்கி மேலாளரைப் பார்க்கவே இல்லை என்கிறீர்களா? எனக்கும் தோன்றாதா இந்த யோசனை? இவ்வளவு நாளில் ஒரு முறையாவது அவர் இருக்கையிலோ அல்லது வங்கியிலோ இருந்திருந்தால் விட்டிருப்பேனா அவரையும்?!

உபதேசம்!

ரொம்ப நாளாகிறது, எழுதி! உடன்பிறந்த சோம்பேறித்தனம் ஒரு முக்கியமான காரணம் என்பதுடன், தவிர்க்க முடியாத அலைச்சல்களும், (வயதானதினால் மட்டுமே வரும்) நிஷ்டூரமும் கூடுதலான, உண்மையான காரணங்கள் தான்.

ஒரு நல்ல பாடம் கிடைத்ததைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டும்: சமீபத்தில், திருவள்ளுரிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்து கிண்டியில் இறங்கினேன். அங்கிருந்து ஈக்காட்டுத்தாங்கல் செல்லவேண்டும். அதற்காக ஒரு ஆட்டோ பிடித்து, ரூ.70 கொடுத்து வந்தேன். இது போல ஒவ்வொருமுறை வரும்போதும், ஆட்டோ ஓட்டிகளிடம், ‘என்னப்பா, திருவள்ளுரிலிருந்து சென்னைக்கே பஸ்ஸில் ரூ.15 கட்டணம் செலுத்தி வந்திருக்கிறேன், நீ ரூ.70 கேட்கிறாயே?’ என்று புலம்புவேன். அவர்கள் எல்லோருமே ஒருவரைப் போல, ‘என்ன ஸார் செய்வது, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, சவாரி கிடைப்பது கஷ்டம்’ என்று பதிலுக்குப் புலம்புவார்கள்!

ஆனால், இந்த முறை ஆட்டோ ஓட்டி வந்தவர், எனக்காகவே அனுப்பப்பட்டவர்! என் வழக்கமான புலம்பலைக்கேட்டதுமே போட்டார் ஒரு போடு! ‘ஏன் ஸார், திருவள்ளுரிலிருந்து பஸ்ஸில் உங்கள் ஒருவரை மட்டுமா ரூ.15க்குக் கூட்டிவந்தார்கள்? எத்தனை பேரோடு உங்களை அடைத்து வைத்துக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்?’ என்று!

அப்போது மூடிய என் வாய், இப்போதெல்லாம் ஆட்டோக்களில் திறப்பதேயில்லை!

Thursday, April 30, 2009

எல்லாப்புகழும் எனக்கே!

நமது இந்தியத் திருநாட்டில் தனியர்களாக நின்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம். அதே போல,ஒரு துறையில் இரட்டையர்களாக சாதித்தவர்களும் நிறைய உண்டு. கலைத்துறை, அதாவது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், வடக்கே ஹன்ஸ்லால்-பகத்ராம், சங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் போன்ற பலர் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தமிழிலும் அப்படி ஜொலித்தவர்கள்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ்த் திரை இசையின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனக்கொரு வருத்தம் உண்டு. வடக்கில் இருந்தவர்களும் பிரிந்தார்கள் - நம்மவர்களும் பிரிந்தார்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், அங்கிருந்தவர்கள் யாரும் (பிரிவுக்குப்பின்னர்) இருவரில் எல்லாப்பாட்டும் என்னால் மட்டுமே போடப்பட்டது என்று சொந்தம் கொண்டாடவில்லை. கடைசிவரை பட டைட்டில்களில் இருவர் பெயர்களும் போடப்பட்டன. ஆனால் இங்கோ, அந்தப் பெருந்தன்மை ஒருவருக்கில்லை! நான் போட்டேன், நானே போட்டேன் என்று சத்தியம் செய்யாத குறைதான்! இன்றும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அழுது, அரற்றிக் கொண்டு...கண்றாவி! வயலின் வித்தகரான மற்றவர் எல்லாப்பாட்டையும் இருவரும்தான் போட்டோம் என்று சொல்லிவந்தார் என்பது எனக்குத் தெரியும்.இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே முன்னவரிடம், தாங்கள் பிரிந்துவந்தபிறகு ஏன் ஸார் ஒரு பாட்டைக் கூட ஒரு ‘எங்கே நிம்மதி” போலவோ, ஒரு ‘கேள்வி பிறந்தது அன்று’ போலவோ போடவில்லை என்று கேட்கவுமில்லை!

குறிப்பு: திரு.ராமமூர்த்திக்கு அண்மையில், சென்னையில் ஒரு விழா எடுத்துச் சிறப்பித்தார்கள் என்ற செய்தியின் விளைவு இந்தப் புலம்பல்! அவர்கள் இருவரும் பிரிந்து ஏறத்தாழ 43 நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை மக்கள் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறார்கள்!

Sunday, April 26, 2009

இருக்கட்டுமே!

இன்று வந்துள்ள ஓர் செய்தி:

அகண்ட வலையில், சுமாராக 33 மில்லியன் (மூன்று கோடியே முப்பது லட்சம்!) வலைப் பூக்கள் பதிக்கப்படுகின்றனவாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றிற்கு ஒரே ஒரு வாசகர் மட்டுமே இருக்கிறாராம் - அதாவது அதை எழுதியவர் மட்டுமே படிக்கிறாராம்!
இருக்கட்டுமே. நான் எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. அவற்றை மற்றவர்கள் படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம் - அவரவர் அதிர்ஷ்டம்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று வலையைத் தீந்தமிழால் நிரப்புவோம் வாருங்கள், நண்பர்களே!

Saturday, April 25, 2009

என்ன வலையோ?

ஒரு ஆதங்கம்,(வசன)கவிதை(?)யில்:

அகண்டு பரந்த வலையில்
என்னதான் செய்ய முடியாது என்றார்
நம்ப்ப்ப்பி வாங்கி, என்னன்னெமோ செய்து
பார்த்தும், அயல் நாட்டிலிருந்து வலை வழியே
எனைப் பார்த்துச் சிரிக்கும் என் செல்லப் பேத்தியைத்
தூக்கி அவள் அழ, அழ கசக்க
முடியவில்லையே!

Thursday, April 23, 2009

ஏமாற்றாதே, ஏமாறாதே

ஊமைக் கோபங்கள் வெளியே வந்துவிடக்கூடிய அளவுக்கு நம்மைத் தள்ளிவிடுகிறார்கள், நம்முடைய அரசியல்வாதிகள். நினைத்தபோதெல்லாம் பந்த் அறிவிப்பதும், இவற்றை அறிவிக்கவைத்துப் பின்னர் அவற்றைக் கபட நாடகம் என்று வர்ணிப்பதும் இங்கே அடிக்கடி நடக்கின்ற கூத்தாகிவிட்டது. மக்களைப்பற்றி யாருக்கும் கவலையில்லை. அவர்களும் ஒரு நாள் கிடைத்ததே என்று நாள் முழுவதும் டிவி பார்த்து, அறிவிக்கப்பட்ட பந்த்திற்குத் தங்கள் ஆதரவினை அள்ளித்தருகிறார்கள்!
ஒரு தொழிற்சாலையில் பணிபுரிபவனாக, நான் ஒவ்வொரு பந்த்திலும் பார்ப்பது இது: பந்த்திற்கு முதல் நாள் இரண்டு ‘கட்சித்தொண்டர்கள்’ (எப்போதும்!) மோட்டார் பைக்கில் வந்து, ஏதோ திருமணத்திற்கு அழைப்பு வைப்பது போல, மறுநாளைய பந்த் பற்றியும், நாங்கள் தொழிற்சாலையை மூடவேண்டிய அவசியம் பற்றியும் விளக்கிவிட்டுப் போவார்கள், நாங்களும் நல்ல குடிமக்களாக, மறுநாள் அநேகமாக விடுமுறை எடுத்துக் கொள்ளுவோம் (அல்லது, தைரியம் இருந்தால், ஷட்டரை இழுத்து மூடிக்கொண்டு, உள்ளே வேலை செய்வோம்). ஒருவேளை அன்று விடுமுறை எடுத்துக் கொண்டால், அடுத்து வரும் ஞாயிறன்று தவறாமல் வேலை செய்து எங்கள் சம்பளம் வருமாறு பார்த்துக்கொள்வோம்!
தவிரவும், அன்று ஒரு தொலைக்காட்சியிலும் சீரியலோ, சினிமாவோ வராமலில்லை. எப் எம் ரேடியோக்களும் கதறிக்கொண்டுதான் இருக்கின்றன. யாருக்காக, அல்லது யாரை ஏமாற்ற இந்த பந்த் சமாசாரங்கள்? ஒரு வேளை, சாமானியர்களை, புதிய புரட்சிக்குத் தயார்ப்படுத்தும் முயற்சிகளோ இவை?!

Wednesday, April 1, 2009

அரசியல்வாதிகளும் அப்பாவித் தொண்டர்களும்!

நானும் ரொம்ப நாளாகப் பார்த்துக்கொண்டு வருகிறேன். ஒரு விஷயம் மட்டும் எனக்குப் பிடிபடவே மாட்டேன் என்கிறது! இதில், நமது தாய்த்திருநாட்டின் அரசியல்வாதிகள் எல்லாரும் ஒரே மாதிரியாகத்தான் மக்களை (அதாவது தம் தொண்டர்களை) ஏமாற்றிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் விஷயம் புரிந்தும்கூட அந்தத் தொண்டர்கள் மீண்டும், மீண்டும் ஏமாறுவது ஏன்? அதாவது, அரசியல்வாதி, பல்வேறு காரணங்களுக்காக போராட்டங்கள் நடத்தி சிறைக்குள் செல்கிறான்-சென்ற வேகத்திலேயே ஜாமீனில் வெளியேயும் வந்து விடுகிறான். ஆனால் இந்தத் தொண்டனோ, அரசியல்வாதி சிறைக்குச் செல்லும்போதெல்லாம் மறியல் நடத்தி, தடியடி, துப்பாக்கிச்சூடு முதலிய எல்லா கஷ்டங்களையும் பட்டுக்கொண்டு, அடுத்த அரசியல்வாதியின் போராட்டத்தில் கலந்துகொள்ளச் செல்கிறான்! ஒருவேளை, இதற்கும் நூறு ரூபாய், பிரியாணிப் பொட்டலம் எல்லாம் கிடைக்குமோ?!

Monday, March 30, 2009

கைரளியும் அஸ்தமான் பிள்ளையும்!

மதிய நேரங்களில் டிவியில் மேய்வது வழக்கம். கொஞ்ச நாட்களுக்கு முன் கைரளி டிவியில் 'எல்லாரும் பாடணம்' என்ற மலையாள நிகழ்ச்சி சிக்கியது. அதில் நிறைய தமிழ்ப் பாடல்களை மலையாள இளைய தலைமுறையினர் நன்றாகவே பாடிக்கொண்டிருந்ததால் நிகழ்ச்சியில் ஒரு ஈர்ப்பு வந்தது. மூன்றே பேர் கொண்ட இசைக்குழு, இரண்டு நல்ல மலையாள இசையமைப்பாளர்கள் மற்றும் நமது கர்நாடக சங்கீத விற்பன்னர் எஸ்.சௌம்யா ஆகியோர் ஜட்ஜாக அமர்ந்திருக்க, நிகழ்ச்சியின் தரம் நன்றாகவே இருந்தது. முதல் நாளின் ரீ-ப்ளே என்பதால் விளம்பரங்களும் இல்லை. தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். ஒரு நிகழ்ச்சியில், போட்டியாளர்கள் மெல்லிசைப் பாடல்களைப் பாடினர். அன்றுதான் அஸ்தமான் பிள்ளை என்றொருவர் பாட வந்தார். தொடர்ந்து நிமிஷங்கள் போனதே யாருக்கும் தெரியவில்லை! அவர் பாடிக்கொண்டே இருக்கிறார் - கேட்பவர்கள் எல்லாம் மெய் மறந்து விட்டார்கள். நான் உட்பட! பாடி முடித்ததும், எங்கும் ஒரு அமைதி. ஒரு நிமிடம் யாரும் பேசவில்லை, கை தட்டவும் இல்லை. நெஞ்சை உருக்கிய கனத்த மௌனத்தில் காமிரா, செட்டையும் பாடகரையும் மெதுவாக சுற்றி வருகிறது. ஜட்ஜுகள் உள்பட எல்லார் கண்களிலும்நீர்! தொகுப்பாளினி அழுதேவிட்டார். இந்த உணர்ச்சியிலிருந்து விடுபட சற்று நேரமாயிற்று. அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் தான் எத்தகைய கலைஞன்! பாடல் முடிந்தவுடன் அந்த உணர்ச்சிகரமான மௌனத்தைப் பதிவு செய்த அழகை மறக்கமுடியவில்லை. ஒரு மிக நல்ல கவிதையைப்போல மனதினுள்ளே ஆழமாகப் பதிந்துவிட்டது. சொல்ல மறந்துவிட்டேனே! அஸ்தமான் பிள்ளை கண் பார்வையற்றவர்!

Monday, March 23, 2009

அழைத்தால் நீ வருவாயோ?

'ஆயிரம் நாமம் தன்னில் எதைச் சொல்லி அழைத்தால் நீ வருவாயோ' என்கிற ஒரு பாடல் மதுரை சோமு அவர்களால் மிகவும் பிரபலமானது. யோசித்துப் பார்க்கையில், நாம் எல்லோருக்குமே (ஆயிரம் நாமம் இல்லாவிட்டாலும்)குறைந்த பட்சம் சில டஜன் பெயர்களாவது இருப்பது உறுதி. பிறந்தவுடன் குட்டிப்பாப்பா என்று ஆரம்பிக்கிற பேர், எப்படியெல்லாமோ போகும்!
இன்றைய தினம் புதிதாக (அதாவது, நமது நாட்டுக்கு) வந்திருக்கும் வழக்கப்படி, பிறப்பது ஆணாக இருந்தால் இன்ன பெயர், அல்லது, பெண்ணாக இருந்தால் இன்ன பெயர் என்று முன்பே பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு, பிறப்புச் சான்றிதழில் பெயருடனேயே குழந்தைகள் 'பிறக்கிறார்கள்'. நாங்களெல்லாம் அந்தக் காலம்! நான்காவது பாரம் (ஒன்பதாம் கிளாஸ்) வரை எந்தப் பெயரில் இருந்தாலும், அப்போது கூப்பிட்டுக் கேட்பார்கள், உன்னுடைய பெயரும், பிறந்த நாளும் சரியாக இருக்கிறதா, அல்லது மாற்ற வேண்டுமா என்று. ஏனென்றால், ஒருமுறை எஸ்.எஸ்.எல்.சி. புத்தகத்தில் பதிவாகிவிட்டால், மாற்றுவது என்பது சிரமமான காரியம் என்பதால்.
ஆகட்டும், சான்றிதழில் உள்ள பெயர் ஒன்றாகவும், கூப்பிடுவது (அனேகமாக) வேறொன்றாகவும் தான் இருக்கும். இது தவிர, பட்டப்பெயர்கள், காரணப் பெயர்கள், என்று எத்தனையோ!
பெரியவர்களாகி (கேர்ள் அல்லது பாய்) நண்பர்கள் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பெயர்களே வேறு! பன்னிக்குட்டி, நாய் என்று எத்தனையோ, இப்படிப் போய்க்கொண்டே இருக்கலாம்- ஆனால் இப்போது என் நண்பன், 'ஏய், அறிவு கெட்ட முண்டம், எவ்வளவு நேரமாக கூப்பிடுவது' என்று அன்போடு அழைப்பதால், மீண்டும் சந்திப்போம்!

Friday, March 6, 2009

இந்தியாவும் இறையாண்மையும்!

நமக்கு ஆஸ்கர் வாங்கித்தந்திருக்கும் இந்தியர்கள் இருவருமே இஸ்லாமிய சகோதரர்கள் என்பதைக் கவனித்தீர்களா? அவர்கள் ஆஸ்கர் விருது பெற்றதும் மேடையில் கூறியவை, நமது இறையாண்மையைப் பற்றிப் பெருமைப் பட்டு,மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.
’எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று தீந்தமிழில் ஒருவர் நம் கண்ணில் நீர் வரவழைத்தார். இன்னொருவரோ, இன்னும் ஒரு படி மேலே போய், ஓம் எனும் தத்துவத்தை உலகுக்குப் பிரகடனம் செய்திருக்கிறார்!
இதுவல்லவோ நமது கலாசாரம்! நெஞ்சை நிமிர்த்தி,நமது தேசத்தைப் பற்றிப் பெருமை கொள்ள இந்த மாதிரி சந்தர்ப்பங்களின் இடைவெளி அதிகமாகிக் கொண்டே வருகிறதையும் கவலையோடு கவனித்துக் கொண்டு வருகிறேன். எனினும், நம்பிக்கை தானே வாழ்க்கை! ஜெய் ஹிந்த்!

Thursday, March 5, 2009

என்ன கொடுமை சார் இது! - 2

எனக்கு மிகவும் வேண்டிய பையன் ஒருவனுக்கும் சமீபத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். பையன் லண்டனில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவன் அங்கிருந்து வந்து ஒரு இடத்தில் பெண் பார்த்து, இரு தரப்பினரும் பேசி முடித்து, திருமணத்திற்கு நாளும் பார்த்தும் விட்டனர். திருமணத்திற்கு வேண்டியவைகளை மும்முரமாகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். திருமணப் பத்திரிகையை ப்ரூப் பார்க்க வேண்டி, மணமகனுக்கு அனுப்பத் தயாராக இருந்த அவன் தந்தைக்கு, மணமகன் போன் செய்கிறான். அப்போதுதான் அவனுக்கு மணப்பெண்ணிடம் இருந்து போன் வந்ததாம். என்ன சொன்னாளாம்? தனக்கு இந்தத் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்று. இவன், எதனால் என்று கேட்டதற்கு, உன் மேல் ஏதும் வருத்தமில்லை எனக்கு, ஆனால் நான் ஏற்கனவே இன்னொருவனைக் காதலிக்கிறேன் என்றாளாம்! நம்ம பையன், அந்தக் காதல் ஒரு தலையா, இரு தலையா என்று கேட்டானாம். இருதலைதான் என்று கன்பர்ம் செய்த பெண், ஒரு குண்டையும் தூக்கிப் போட்டாளாம், "அண்ணா, இந்த விஷயத்தை என் பெற்றோரிடம் எப்படித் தெரிவிப்பது என்று எனக்கு அச்சமாக இருக்கிறது, தாங்கள் தான் எப்படியாவது அவர்கள் சம்மதத்தை வாங்கித் தரவேண்டும்" என்று! உடனே நம்ம பையன் , அம்மா, இந்த வேலையெல்லாம் பார்க்க எனக்குத் தெரியாது, நீயாச்சு, உன் அப்பனாச்சு, என்னை ஆளை விடம்மா என்று கழண்டு கொண்டானாம்! இதைத்தன் தந்தையிடம் சொல்லி, நாகரீகமாக இந்த பந்தத்தில் இருந்து வெளியே வரவைத்தான். பின்னர், அவன் சொந்தத்திலேயே பெண் கிடைத்து, திருமணமும் நடந்து, இருவரும் இப்போது ஜாம்ஜாமென்று லண்டனில் தனிக்குடித்தனம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி இருக்கு!

Wednesday, March 4, 2009

தருணங்கள்!

தருணங்கள்!
-1-

நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பிவிட்டோம்! - பாரதி

நானும் அண்ணாவும்!

எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத சில தருணங்கள் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. என் வாழ்விலோ, அப்படிப்பல, விலை மதிக்கமுடியாத தருணங்கள்! ஒரு வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நான் வளர வந்த இடத்தின் பெருமையால் விளைந்தன அவை. சம்பவங்களின் வலிமை, பெருமையால் அறுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் அச்சடித்தாற்போல நினைவில் நிற்கின்றன. என்னோடு அவை போவதில் எனக்கு உடன்பாடில்லாததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்.

-0-

அரசியல் என்பது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தும், பொது வாழ்க்கையில் தன்னலத்தை அறியாதவர்களைக் கொண்டதுமாக இருந்த பொற்காலம் அது! நான் மூன்று மாதக் குழந்தையாக 1941ல் என் தாயுடன் திண்டுக்கல் வந்தேன்.அங்கே என் தந்தை வேலை செய்து கொண்டிருந்த அட்வகேட் கணேச அய்யர் வீட்டில் சமீபத்தில் தான் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்திருந்தது. எனவே நான் அந்த வீட்டில் சுலபமாக எல்லாருடைய செல்லமுமானேன். அப்போதே, செவிகளில் விழுந்த பாடல்களை அப்படியே திரும்பவும் பாடுவேன்.....

-0-

திண்டுக்கல் என்பது ஒரு சிறிய அழகான பெருங்கிராமமாக அப்போது இருந்தது. அதன் அமைவிடம், திருச்சி, மதுரை, பழனி என்கிற முக்கோணத்தின் நடுவிலே இருப்பதால் எல்லா திசைகளிலிருந்தும் கடந்துசெல்ல (முக்கியமாக ரயிலில்) ஒரு பாலம் போன்றிருக்கிறது. நான் குறிப்பிட்ட கணேச அய்யர், பின்னாளில் முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். சுதந்திரப்போராட்டத் தியாகியாகவும், திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக இருந்த அவர் வீட்டிற்கு, (திண்டுக்கல் பக்கம் வரும்) அரசியல் தலைவர்கள் வந்து போவது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று.

கட்சி, கொள்கை பேதங்களெல்லாம் மேடைகளில் மட்டுமே இருந்த பொற்காலமது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி (இவர்கள் எப்போது திண்டுக்கல் வந்தாலும் இந்த வீட்டிற்கு வராமல் இருக்கமாட்டார்கள்) மற்றும் இதே ஊரில் அக்கட்சியின் தலைவர்களான ஏ.பாலசுப்பிரமணியம், (எனக்கு “பாலு மாமா”) தோழர்கள் எஸ்.ஏ.தங்கராஜ், என்.வரதராஜன் முதலியவர்கள் எனக்குஅண்ணாச்சிகள். திண்டுக்கல்லுக்கு அருகில் இருக்கும் காந்தி கிராமத்துக்கு வருகை தரும் பல தலைவர்களும் இங்கே வருவார்கள். இந்த வீட்டில், ஜே.பி.கிருபளானி அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியது நினைவிருக்கிறது. அவ்வை சண்முகம், பகவதி, கல்கி, செளந்தரம் ராமச்சந்திரன், அம்மு சுவாமிநாதன் (இவர்கள் இருவருடைய தேர்தல் மேடைகளிலும் நான் தேசபக்திப் பாடல்கள் பாடியிருக்கிறேன்) இப்படிப் பல தலைகள் வருவார்கள்! இது போக, கணேச அண்ணா (என்று தான் அவரை அனைவரும் அறிவார்கள்) திண்டுக்கல்லில் எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும் அடியேன் கூடவே செல்வதும், அவர் சொல்லும் போதெல்லாம் மேடையில் பாடுவதும் உண்டு. ஏறத்தாழ நான்கு வயதிலே, நான் பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே’ மேடையில் பாடியது நினைவிருக்கிறது.

கணேச அண்ணா, ராஜாஜி அவர்களின் பரம சிஷ்யர். அவர்கள் இருவரிடையே கடிதப் போக்குவரத்து உண்டு. அவரையும், அவரைப்போலவே நன்கு பழக்கமாக இருந்த காமராஜ் அவர்களையும் பெரும்பாலும் திண்டுக்கல் ரயில் நிலையத்திலோ அல்லது வேறு எங்காவதோ சந்திப்பது வழக்கம். (மாண்பு மிகு ராஜாஜி அவர்களுடன் என்னுடைய சொந்த அனுபவங்கள், பிறிதொரு இடத்தில்.)

முதல் சுதந்திர தினத்தன்று (1947) ஒரு காரில் அவருடன் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்து, திண்டுக்கல் நகரைச் சுற்றி இருக்கும் பட்டி, தொட்டியெல்லாம் அவர் மூவர்ணக் கொடியைக் கொடியை ஏற்றியதைப் பார்த்த நினைவிருக்கிறது.

அதற்கும் முன்னர், மகாத்மா காந்தி தமிழ் நாடு சுற்றுப்பயணம் வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், என் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து,ஒரு பெரிய கூட்டத்தின் நடுவிலே இருந்து, ரயில் பெட்டி வாயிலில் காட்சி அளித்த அவரைப் பார்த்த நினைவு மசமசவென்று இருக்கிறது. அவர் சுடப்பட்ட அந்த வெள்ளிக் கிழமை மாலை வேளையில் கணேச அண்ணா தன் தலையில் கை வைத்துக் கொண்டு, இடிந்து போய் ரேடியோ அருகிலேயே அமர்ந்திருந்ததும் கண் முன்னே நிற்கிறது. நகர் முழுவதும் எத்தனை பேர் மொட்டை போட்டுக் கொண்டு, தங்கள், நெருங்கிய உறவினரை இழந்தது போல வாடி இருந்தனர்! அதன் பின்னர், ஒரு வருடத்திற்கு (கணேச அண்ணாவின் அறிவுரைப் படி) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அபிராமி அம்மன் கோவில் மண்டபத்தில் மாலை 5 லிருந்து 6 மணி வரை படையல் வைத்து, கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பஜனைப்பாடல்களும், ’ரகுபதி ராகவ’ வும் பாடி, கடைசியில் ‘அஸதோமாம்...’ என்ற பிரார்த்தனையுடன் முடிவடையும். அதில் வைக்கப்பட்டிருக்கும் காந்திஜியின் உருவப்படத்திற்கு ஏராளமான புஷ்ப அலங்காரமும், பொரி, கடலை, தேங்காய், பழம் முதலியவை களும் திண்டுக்கல் கடைவீதி வியாபாரிகளின் உபயம். இதில் பாடுவதற்காக, நாகல் நகரிலிருந்து, பூர்ணையா என்ற ஸெளராஷ்ட்ர அன்பர் வருவார். துணைப் பாட்டு அடியேன். பூர்ணையா வரமுடியாத ஓரிரு வெள்ளிக்கிழமைகளில் என்னையே பிரார்த்தனையை வழி நடத்தச் சொல்லியிருக்கிறார், அண்ணா. (அப்போது எனக்கு வயது 7!).

நேருஜியை சில முறைகள் பார்த்திருக்கிறேன். அவற்றில், ஒரு முறை காந்தி கிராமத்தில் நடந்த விழாவில் மிக அருகில் (இரண்டடி தூரத்தில்) பார்த்தேன். இவர் மகள் இந்திராவுடன் பயணித்த என் அனுபவங்கள் வேறு இடத்தில்.

-0-

அண்ணா, திண்டுக்கல் நகர முனிசிபல் கவுன்ஸிலராக 3ம் வார்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். நகர சேர்மனாகவும் பதவியேற்றார். அப்போதெல்லாம், திண்டுக்கல் மாப்பிள்ளைகளுக்கு திருமணத்திற்குப் பெண் கொடுக்க வேற்றூரார் தயங்குவார்களாம்! அவ்வளவு தண்ணீர்ப் பஞ்சம்! இதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில் திட்டம் தீட்டி, அருகிலுள்ள குடகனாற்றில் ஒரு தடுப்பு அணை கட்டவேண்டும் என்று முனிசிபல் கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, அப்போது மானில முதல்வராக இருந்த ராஜாஜி அவர்களிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. அப்போது அண்ணாவைப் பார்க்கும் போதெல்லாம் ராஜாஜி அவர்கள், “என்னப்பா, ஒரு லட்சம்” என்று அழைப்பாராம்! ஆனால் அந்தத் திட்டம், ராஜாஜிக்கு அடுத்ததாக முதலமைச்சரான காமராஜ் அவர்கள் ஆட்சியில் தான் சாத்தியமானது. எனவே, ‘காமராஜ் சாகர்’ என்று பெயரிடப்பட்ட அந்த அணையின் ஆரம்ப விழாவில், அப்போதைய கவர்னர் மாண்புமிகு ஸ்ரீபிரகாசா அவர்கள் முன்னிலையில் அடியேன் (ஜெமினி ஓளவையாரில் வரும்) “வேழ முகத்து வினாயகனைத் தொழ” என்ற பாடலைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினேன். நகராட்சியின் சார்பில், மதுரையில் இருந்து வந்து புகைப்படம்கூட எடுத்தார்கள் - இப்போது திண்டுக்கல் நகராட்சியில் எங்காவது கிடக்கிறதோ, இல்லை ‘போயே போச்சோ’!

-0-

பல முறை நான் தனியே சென்று, திண்டுக்கல் வழியாகச்செல்லும் ரயிலில் ராஜாஜி அவர்களைப் பார்த்து வந்திருக்கிறேன். அப்போது பெரும்பாலும் மாலை வேளை என்பதால் அவருக்கு இந்த வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு போய்க் கொடுப்பேன். ஒரு முறை அவர்கள் ரவா உப்புமா வேண்டுமென்றும், அவருக்குப் பல் இல்லாததால் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை தாளிக்காமல் எப்படிச் செய்து அனுப்ப வேண்டும் என்று ‘ரெஸிபி’ யுடன் கடிதம் எழுதியிருந்தார்கள்! மற்றொரு முறை என்னை, ’நீ கணேசனின் பிள்ளையா?’ என்று கேட்டார். நான் விளக்கியவுடன், ’ஓ, சுப்பிரமணியனின் பிள்ளையா’ என்றார். இந்த (அவர்கள்) நெருக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பின்னாளில் ஆர்வக் கோளாறினால் ஒரு காரியம் செய்தேன்:

இப்போதைப் போலவே, பள்ளிப் படிப்பிலும் நான் மரமண்டைதான்! கவனச் சிதறல்கள் ஏராளம். நான் 5வது ஃபார்மில் படித்துக் கொண்டிருந்தபோது என் படிப்பை (படிப்பின்மையை?) ப் பற்றி வீட்டில் திட்டி விட்டார்கள். அது வழக்கமானது என்றாலும், நமக்கு ரோஷம் (மட்டும்) அதிகமல்லவா,அதனால் (வீட்டில் உள்ளவர்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு) உடனே பெரியவருக்கு ஒரு கார்டில், ’நான் ஒழுங்காக முயற்சியெடுத்துப் படித்தாலும் மார்க் வரமாட்டேன் என்கிறது, வீட்டில் அனாவசியமாகத் திட்டுகிறார்கள், நான் இன்னார் வீட்டுப் பையன்’ என்று எழுதி, ரொம்பவும் சாமர்த்தியமாக, பள்ளி விலாசம் கொடுத்துத் தபாலில் அனுப்பி விட்டேன்.மூன்றாவது நாள் பதில் கடிதம் வந்துவிட்டது. அதை ஒரு ஆசிரியர் எடுத்து வைத்துக் கொண்டு, என்னை அழைத்து பலமாக விசாரித்து விட்டுக் கொடுத்தார். அதில் ராஜாஜி அவர்கள், “அடுத்த முறை சரியாகவே செய்வாய், ஆசீர்வாதம்” என்று எழுதியிருந்தார். கொண்டுபோய் வீட்டில் காண்பித்தவுடன் மீண்டும் (அவரைத் தொந்தரவு செய்ததற்கும் சேர்த்து) சரியான அர்ச்சனை நடந்தது! அடுத்த வருடம், 6வது ஃபார்ம், அதாவது எஸ்.எஸ்.எல்.ஸி., விடுவோமா? அப்போதும், ”தங்கள் ஆசியினால் போன வருடம் தேறி விட்டேன், அதனால் இந்த முக்கியமான பரிட்சைக்கும் தங்கள் ஆசி தேவை” என்று எழுதிவிட்டேன். இப்போதும் பள்ளி விலாசம் தான்! உடனே வந்த பதிலில், ஆசீர்வாதத்தோடு, “வீட்டு விலாசம் தந்திருக்க வேண்டும்” என்று ஒரு குட்டு! இந்த இரு கடிதங்களையும் இப்போதும் என்னிடம் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

பள்ளிப்படிப்படிப்பு ஒருவாறாக முடிந்தது. யாருமே எதிர்பாராத வகையில் மொத்தத்தில் 52% வாங்கித் தேறியது, கடவுள் அருளாலா அல்லது, ராஜாஜி அவர்களின் ஆசியாலா தெரியவில்லை! இந்த அழகில், நான் மேற்படிப்பு, அதுவும் பாலிடெக்னிக்கில் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கு உதவுவதாக ஏற்கனவே வாக்களித்திருந்த (சிங்கப்பூரிலிருந்த) என் சித்தப்பா மாட்டிக்கொண்டார். மாதா மாதம் இந்தியாவிலிருந்த அவர் நண்பர் மணியார்டர் அனுப்ப, நான் மூன்றாண்டுகள் விருதுநகரில் விடுதியிலேயே தங்கிப் ’படித்தேன்’.

நான் மூன்றாம் ஆண்டை முடிக்கும் தறுவாயில், கணேச அண்ணாவிற்கு ஆரோக்கியம் சீரழிய ஆரம்பித்தது. விடுமுறையில் நான் வரும் போதெல்லாம் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். எப்போதுமே என்னை ஒரு தோழனாகவே கருதி, நடத்தியிருக்கிறார். தான் விரைவில் இறந்துவிடுவோம் என்பதை அவர் உணர்ந்திருந்த போது நடந்த அந்த சந்திப்புக்கள், என் வாழ்வில் மிகத் துயரமானவை. 1963ல் நான் படிப்பை முடித்த நிலையில், ”நான் யார் யாருக்கோ வேலை வாங்கித்தர சிபாரிசு செய்திருக்கிறேன், ஆனால் உனக்கு நல்லதொன்றும் நான் செய்ய முடியவில்லையே” என்று பலமுறை கூறி வருத்தப் பட்டார். அதற்குள், என்னுடைய சித்தப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு, சென்னையில் ஒரு தற்காலிக வேலை கிடைத்தது. நான் வேலையில் சேர்ந்த 15 நாட்களில் தந்தி வந்து விட்டது. இப்போது போல போக்குவரத்து வசதி யில்லாத காலம்! சென்னை எழும்பூரில் கூட்டமான கூட்டம். புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் கதவுக்கு வெளியே தொங்கிக்கொண்டு செங்கல்பட்டு வரை சென்று பின் எப்படியோ உள்ளே நிற்க இடம் கிடைத்து, திண்டுக்கல் சேர்ந்து, அவரின் உடலைப் பார்த்த பின்னால் தான் எனக்கு உயிர் வந்தது. பிறகும், வீட்டில் இருந்த மற்றவர்களின் கட்டாயத்தையும் பொருட்படுத்தாமல் எல்லாக் கடன்களும் முடிந்த பிறகு தான் கிளம்பினேன். அதற்குப் பிறகு, ஒரே வருடத்தில் நான் பெங்களூரில் செட்டில் ஆகி விட்டேன். எதனாலோ தெரியவில்லை, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அந்த வீட்டிற்கு நான் (இது வரையிலும்) இரு முறை, என்னை வளர்த்த அண்ணாவின் துணைவி இறந்த மறுநாளும், என்னை அப்போது செதுக்கிய இன்னொருவரான டாக்டர்.சுந்தரம் (அண்ணாவின் ஒரே பெண்ணின் கணவர்) இறந்த போதும் மட்டுமே சென்றிருக்கிறேன்!

இப்படியாக என் பாலகாண்டம் முடிகிறது.


-2-

நானும் அவர்களும்!


பெங்களுரில் வேலையில் சேர்ந்த பின்னர், நண்பர்கள் சேர்ந்தனர். கர்நாடக இசையிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆழ்ந்த ஆர்வம் வந்தது. கச்சேரிகளைக் கேட்டும், நண்பர்கள் வீட்டு விழாக்கள் பலவற்றில் புகைப்படம் எடுத்தும், ஆர்வம் பித்தாக மாறியது! இதைத்தவிர, அகிலன், நா.பார்த்தசாரதி, சுஜாதா, நடிகர் சிவகுமார் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு, உடன் பணிபுரிந்த நண்பர் அமுதவன் மூலம் கிடைத்தது. இந்த சமயத்தில் பலதடவை சிவகுமாருடன் வெளியூர்ப் படப்பிடிப்புக்களுக்கு சென்றிருக்கிறோம்.

மைசூர் அருகில், காவிரி சங்கமத்தில், இரவு முழுகக படப்பிடிப்பு. சிவா, நடிகை லட்சுமி, அமுதவன், இவர்களோடு நானும். இடைவேளைகளில் பழைய, மிகப்பழைய பாடல்களை அசை போட்டுக்கொண்டிருந்தோம். லட்சுமியின் தாயார், குமாரி ருக்மணி,வள்ளி திரைப்படத்தில் பாடிய (வாயசைத்த) பாடல்களை நான் பாட, மற்ற இருவரும் ரசிக்க, லட்சுமி, “ஐயோ, மாமா என்னமா பாடறார்” என்று உருக, படத்தின் இயக்குனர் வந்து, சிவாவிடம், ”சார், கொஞ்சம் படமும் எடுக்கலாமா, சார்?” என்று கேட்டது தனிக்கதை!

கலைஞர் தலைமையில், காரைக்குடியில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், பழ.கருப்பையா. இதில்தான் கலைஞரால் ‘இசைஞானி’ பட்டம் சூட்டப்பட்டார், இளையராஜா. இந்த விழாவில் பங்கேற்ற சிவகுமார், எங்களையும் வரச்சொல்லியிருந்தார். அதிகாலையிலேயே காரைக்குடி சென்றுவிட்டோம். அங்கே. சிவகுமாரும், இளையராஜாவும் தனியாக ஒரு பெரிய பங்களாவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டு அப்போது முதல் அடுத்த நாள் காலைவரை அவர்களோடு இருந்த அனுபவம் இனியது. அப்போது கலைஞரையும் படம் எடுத்தேன்.

சிவகுமாரின் நூறாவது பட விழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோது, எம்ஜிஆரைப்பல படங்கள் எடுக்க முடிந்தது. இதே போல, பெங்களுரில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிவாஜியையும், பிறிதொரு திருமணத்தில் ஜெயலலிதாவையும் படம் எடுத்திருக்கிறேன். எல்லாம் அருமையான கருப்பு-வெள்ளைக் காவியங்கள்!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஸ்ரீ வித்யாவைப் பல கோணங்களில் எடுத்த படங்களை அனுப்பி வைத்திருந்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது என்று புகழ்ந்து கூறியதாக எங்கள் பொது நண்பர் மனோபாலா (அவரேதான்!) கூறினார். பின்னர் ஒரு நாள் மாலை, ஒருவர் என் வீட்டிற்கு வந்து, உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருக்கும் எம்எல்வி அழைத்துவரச்சொன்னதாகச் சொன்னார்.
உடனே போனேன். ஸ்ரீவித்யா அடுத்த வாரம் மீண்டும் பெங்களுர் வருவதாகவும், அவர் நடன நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போக இருப்பதால், அதற்காக மறுபடியும் புகைப்படங்கள் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவர், ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா என்று இரண்டு, மூன்று முறை கேட்டார். நாளைக்கு உங்களுக்கு கச்சேரி இருக்கிறதே அதனால் வேண்டாம் என்றேன். சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள் பேசாமல் சாப்பிடுங்கள், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று, இருவரும் அதைச் சாப்பிட்ட பிறகு தான் அனுப்பினார். பின்னர் ஸ்ரீவித்யாவைப் படங்கள் எடுத்து அவை பத்திரிகைகளில் வந்தன. நடுவில், குமுதம், கல்கி, மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் பல அட்டைப்படங்களும், அமுதவனின் (சரோஜா தேவி, ஜெயந்தி போன்றவர்களின்) பேட்டிகளோடு என் படங்களும் பிரசுரிக்கப்பட்டன.

குமுதம் பால்யு, எங்களுக்கு நெருங்கிய நண்பரானார். ஒரு மதியத்தில் நண்பர் அமுதவனுடன் வீட்டிற்கு வந்தார். “உடனே காமிராவை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள்” என்றார். அப்போதே மூவரும் புறப்பட்டு இரவு சிக்கமகளுர் போய்ச் சேர்ந்தோம். அங்கேதான் இந்திரா காந்தி அவர்கள் ஒரு துணைத் தேர்தலில் நின்றிருந்தார். அவரை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போட்டியிட்டார். இவர்கள் இருவரையும் சுற்றி எந்த பாதுகாப்பு வளையமும் இல்லாத நிலையில், மிக மிக அருகில் படங்கள் எடுக்க முடிந்தது. திருமதி. இந்திராவுக்கு மலர்களால் ஒவ்வாமை (அலர்ஜி) உண்டு என்பதை அவருடன் வந்திருந்த பெண் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டு, அவர் அருகிலேயே நின்று மாலைகள் அவர் கழுத்தில் விழாமல் பார்த்துக் கொண்டதற்காக பல முறை தாங்க்ஸ் வாங்கிப் பரவசப்பட்டோம்.என்ன இருந்தாலும்,(அப்போது) நாட்டின் முன்னாள் பிரதமர் அல்லவா?
மத்திய மந்திரியாக இருந்த ஜார்ஜ் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க முடிந்ததே!

பால்யு, சாதாரண மக்களைப் பேட்டி எடுப்பதையும் படம் எடுத்தேன். அடுத்த வார குமுதம் இதழில் கட்டுரையோடு அவை வெளிவந்தன.

பிறிதொரு முறை, பெங்களுர் ஸிடி ரயில் நிலையத்துக்குப் போயிருந்தபோது, சென்னை செல்லும் வண்டியில் முதல் வகுப்பில் எம் எஸ் (& பார்ட்டி) என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். நடந்து வரும் வழியில், சதாசிவம் அவர்களும் மற்றவர்களும் எதிர் திசையில் பேரைத் தேடிக் கொண்டு போவதைப் பார்த்ததும், அவரிடம் போய், உங்கள் கோச் அந்தப்பக்கம் இருக்கிறது என்று அவர்கள் கூடவே (எம் எஸ் அவர்களின் கையிலிருந்த பெட்டியையும் வாங்கிக்கொண்டு) சென்று உட்காரவைத்தேன். திரும்பி வருமுன் எம் எஸ் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். உடனே, எழுந்து நின்று பதிலளித்தார். அப்படியே விழுந்து அவர்கள் இருவரையும் நமஸ்காரம் செய்தேன். இதற்குச் சில நாட்கள் கழித்து, அவர்களின் கச்சேரி பெங்களுரில் நடக்கப்போவதை அறிந்து, சதாசிவம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அம்மாவைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வேண்டியிருந்தேன். ராஜாஜியின் சீடர் அல்லவா, மூன்றாம் நாளே பதில் வந்தது. கச்சேரி நாள் அன்று, மாலை பசவன்குடியில் ஸ்ரீனிவாசன் அவர்கள் இல்லத்தில் வந்து படம் எடுக்கலாம் என்று. அவ்வாறே நிறையப் படங்கள் எடுத்து, இரண்டு செட் அனுப்பி, ஒன்றில் ஆட்டோகிராப் செய்து அனுப்ப வேண்டியிருந்தேன். அவர்களோ எல்லாப் படங்களையும் தன் ஆட்டோகிராபுடன் அனுப்பி வைத்திருந்தார்கள்!

இந்த மாதிரித் தருணங்களை அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டிய வயதில் இப்போது இருக்கிறேன். நண்பர்களும், இசையும், புகைப்படங்களும் இன்றும் என்னோடிருப்பது பெரிய மகிழ்ச்சி. கணேச அண்ணாவின் மூன்று வாரிசுகளில், மீந்திருக்கும் அவருடைய ஒரே பெண்ணும், பேத்திகளும், அவர்களுடைய குழந்தைகளும் இன்றும் அதே பிரியத்துடனே பழகி வருகிறார்கள். அவர் எனக்கு பல சமயங்களில் எழுதிய கடிதங்களும், ஆரம்ப நாட்களில் எனக்களித்த தமிழார்வமும், ஆங்கில அடிப்படையும் என்னிடம் மிஞ்சியிருக்கின்றன. உலக வழக்கம் போல், திண்டுக்கல்லில் இப்போது வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அண்ணா என்று ஒருவர் இருந்ததே தெரியாது.......

எழுதிச்செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற் செல்லும்!

Sunday, March 1, 2009

என்ன கொடுமை சார் இது!

இப்போது அடிக்கடி காதில், கண்ணில் விழுந்துகொண்டிருக்கும் சொல் மனித நேயம். சமீபத்தில் எங்கள் குடும்பத்தில் நடந்த ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன், கேளுங்கள். என் சிற்றப்பனின் மகன், தன்னுடைய மகனுக்குப் பெண் தேடி, ஜாதகம் முதலியவை பார்த்து நிச்சயமும் செய்து விட்டான். பெண் தன் பெற்றோருடன் ஹைதராபாதில் இருந்தாள். இவர்கள் இருப்பதோ திருச்சியில். நான்கு மாதங்களுக்குப்பின்னர், ஹைதராபாதில் கல்யாணம் என்று நாளும் குறித்தாயிற்று. ஏற்பாடுகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. எங்களுக்கெல்லாம் தகவல் சொல்லி, யாரெல்லாம் வருகிறார்கள் என்று கேட்டு ரயிலில் பதிவு செய்ய லிஸ்ட் தயாராகிக்கொண்டிருந்தது. திருமண அழைப்பிதழ் ரெடி ஆகும் சமயம் ஹைதராபாதில் இருந்து போன் வந்தது: பெண்ணின் உடல் நிலை சரியாக இல்லை என்றும், டாக்டர்களிடம் சோதித்ததில் மோசமான நோய் தாக்கியிருப்பதாகவும், என்ன செய்வது என்று புரியவில்லை என்றும் பெண்ணின் தந்தை கூறினார். என்னுடைய தம்பியும் கொஞ்சம் யோசித்துவிட்டு , பெண்ணின் தந்தையை, அந்தப் பெண்ணின் மெடிக்கல் ரிகார்டுகளை எடுத்துக்கொண்டு திருச்சி வந்தால் இங்கே இருக்கும் இவனுக்குத் தெரிந்த பிரபல மருத்துவரிடம் இரண்டாவது யோசனை கேட்கலாம் என்றான். அடுத்த இரண்டு நாட்களில் பெண்ணின் தந்தையும், தாய் மாமாவும் திருச்சி வந்தடைந்தனர். இந்த டாக்டரும் மீண்டும் நன்றாக ரிக்கார்டுகளை எல்லாம் பார்த்து, அங்கே சொன்ன அதே நோய்தான் என்று முடிவு கூறினாராம். பின்னர், அந்த டாக்டர் என் தம்பியைத் தனியே அழைத்து, உனக்கும் வந்திருப்பவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற விவரம் விசாரித்திருக்கிறார். இவன் சொன்னவுடன், இந்தத் திருமணம் நடக்கக் கூடாது, பெண்ணின் வாழ்நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றது என்று அபிப்பிராயம் தெரிவித்திருக்கிறார். இதை எப்படி பெண்ணின் தந்தையிடம் சொல்வது என்று என் தம்பி தயங்கிக்கொண்டிருக்கும் போதே, அவர் வருத்தத்தோடு சொன்னாராம்: இவ்வளவு நல்லவர்களாக நீங்கள் இருக்கும் உங்களுடன் சம்பந்தம் வைத்துக்கொள்ள எங்களுக்கு கொடுப்பினை இல்லையே என்று! என்ன கொடுமை சார் இது!

Friday, February 27, 2009

ரஹ்மான் ஜாக்கிரதை!

இந்த திண்ணைப் பேச்சு வீரரிடம் - ஒரு
கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி! - பட்டுக்கோட்டை

இந்தியராகிய நம் கனவுகளைத் தன் உழைப்பின் மூலமாகத் தாயகம் கொண்டு சேர்த்திருக்கிறார் சகோதரர் ரஹ்மான். அவருக்கு வாழ்த்துக்கள் கூறவும், பூமாலை போடவும் கூட்டம் சேர்ந்தது, சேரப்போகிறது. என் எதிர்பார்ப்பில், இனிமேலும் அவர் அதே உழைப்போடுதான் பாடல்களைக் கொடுக்கப்போகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒருவேளை அவரின் வருங்காலப் பாடல்கள் மக்களுக்குப் பிடிக்காமல் போயிற்று என்று வைத்துக்கொள்ளுங்கள், அப்போது இதே மக்களும், பத்திரிகைகளும் என்னமாகக் கிழிப்பார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன! நம்முடைய இந்திய கிரிக்கெட் வீரர்கள் இவர்கள் கையில் படும் பாடு நாம் அறியாததா! எனவேதான் இந்த எச்சரிக்கை!

Thursday, February 26, 2009

ஒரு நியாயமான கோபம்!

ஊமைக் கோபத்தைப் பற்றிச் சொன்னேன். நியாயமான கோபம் ஒன்று எனக்குண்டு. எவ்வளவோ இடத்தில் பார்த்துவிட்டேன்-வயதான, முடியாத, முதியவர்களை எனக்குத்தெரிந்த பலபேர் நன்றாகத்தான் வைத்துக் காப்பாற்றி வருகிறார்கள். ஆனாலும் இந்த 'பெரிசுகள்' வசதிகளை அனுபவித்துக்கொண்டு சும்மா இருப்பதில்லை. எதையாவது அல்லது யாரையாவது குறை சொல்லாவிட்டால் இவர்களுக்கு நிம்மதியாகவே இருக்காது. ஓரளவுக்குப் பொறுத்துப் பார்க்கும் 'சிறுசுகள்', "யார் எப்படிப் போனால் உனக்கென்ன, பேசாமல் இரேன்" என்று சொன்னவுடன் பார்க்கவேண்டும். அந்த (திட்டிய) சிறுசின் வாழ்க்கை வரலாறை முழுக்க முழுக்க (முணுமுணுப்பு மூலமாகவே) தெரிந்து கொண்டு விடலாம். இலவச இணைப்பாக திருமணங்களின் மூலம் குடும்பத்தில் ஒருவராகியிருக்கும் பெண்டிரின் பிரதாபங்களையும் அறிய வாய்ப்புண்டு!

ஊமைக் கோபம்!

வயசானாலே ஏகப்பட்ட வியாதிகள் (உடம்பில்) வருவது ஸஹஜம். அதில் மனதுக்குள்ளே பரவும் வியாதிகளில் முக்கியமான ஒன்று ஊமைக் கோபம்! இது எந்த வயதிலும் வரும் என்றாலும் ரிடயர் ஆன பின்னர் இது எல்லாரையும் முழுமையாக ஆக்ரமித்துவிடும். எதைப் பார்த்தாலும் கோபம் வரும் - ஆனா வராது! ஏன்னா உங்கள் கோபத்தை உங்கள் குசுகூட மதிக்காது என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். இப்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்!

Wednesday, February 25, 2009

The Slumdog oscars and aftermath!

இந்தியர்களாகிய நம் அனைவருக்குமே பொதுவானதாக காணப்படும் ஒரே குணம் ஹிப்போக்ரசி (இதற்குச்சரியான தமிழ் வார்த்தை என்ன என்பதைச்சொன்னால் நன்றியுடன் அறிந்துகொள்வேன்!). மும்பை மட்டுமல்லாமல் நம் இந்தியத்திருநாட்டில் எங்கெங்கும் பரவிக்கிடக்கும் சேரிகளையும் குப்பங்களையும் முன்னேற்ற ஒருவரும் (நான் உட்பட!) ஒரு துரும்பையும் தூக்கிப் போட மாட்டோம்! ஆனால், யாரோ ஒருவர் அதை மையமாக வைத்துப் புகைப்படமோ அல்லது திரைப்படமோ எடுத்துவிட்டால் போச்சு! உடனே என்னைப்போன்ற ஒரு தேசபக்தனை நீங்கள் உங்கள் கனவிலும் பார்த்த்திருக்கமாட்டீர்கள்! அப்படி ஒரு ஆவேசம் வந்து சாமியாடி விடுவேன். ஜெய் ஹிந்த்!