Monday, May 9, 2011

அல்லூரும் அமைந்த வாழ்க்கையும்!

’அமையுமா அல்லூர் வாழ்க்கை?’ என்று நான் ஆதங்கப் பட்டு எழுதி எட்டு மாசமாயிற்று! அதற்கு முந்தைய 50 வருடங்களுக்கும் மேலான என் வாழ்க்கை நகரங்களிலேயே கழிந்துவிட்டது. இங்கே குடியேறிய இந்த எட்டு மாதங்களில் தான் நமது கலாசாரம், சம்பிரதாயங்கள் பற்றி எனக்கு எவ்வளவு மேலோட்டமாகத் தெரிந்திருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். இங்கே சுற்று வட்டத்தில் குடியிருக்கும் சகல ஜாதியினரும் காலங்காலமாக எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைக் காணும்போது இத்தகைய வாழ்க்கை முறையினை அமைத்துத் தந்த நமது முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள் என்பதையும் புரிந்து கொண்டேன். இப்போது நானும் மெல்ல மெல்ல இந்த ஜோதியிலே மகிழ்ச்சியோடு கலந்து விட்டேன்!

அல்லூருக்குக் குடிபெயர்ந்த முதலே அன்போடு அரவணைத்து, கிராமத்தில் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்வித்தவர் எதிர் வீட்டு திரு.பிச்சை மாமா (இவருக்கு வயது 86. இப்போதும் கண்ணாடியில்லாமல் பேப்பர் படிக்கிறார்!). அல்லூரிலே பிறந்து, திருச்சியில் படித்து, அல்லூரிலேயே ரயில்வேயில் வேலை செய்து ரிடையர் ஆனவர். கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி இன்றும் இவர்தான் எனக்கு ‘கைட்’. மாமியும் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் கூன் போட்டிருக்கும் இவரும் மாமாவும் எவ்வளவு காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை (எதிர் வீட்டிலிருப்பதால்) நான் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.

தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) இரவு 10 மணிக்கு, தெருவில் ஒரு மாமாவும் அவர் மனைவியும் சற்று உரக்கப் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தேன். அந்த மாமாவின் ஒரு கால் சற்று ஊனம். திருச்சியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் போது விபத்தில் ஊனமாகி இருக்கிறது. இருப்பினும் கடை முதலாளியின் நல்ல மனத்தால் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அல்லூரில் குடியிருப்பதால் பஸ்ஸில் தினமும் திருச்சி போய்வருகிறார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டிருந்தேன்.

ஒரு இரவு அந்த மாமா வந்த அதே பஸ்ஸில் நானும் வர நேர்ந்தது. நாங்கள் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அவர் மனைவி பஸ் நிறுத்தத்தில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவர், இவரைப்பார்த்ததும் ஓடி வந்து அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு, மாமாவின் கையைத் தன் தோளில் போட்டு உடன் நடந்து வந்ததைப் பார்த்தபோதுதான் காதலின் இன்னொரு பரிமாணமும் எனக்குப் புலப்பட்டது. இதைப்போல இன்னமும் எத்தனையோ மனிதர்கள்.....

ஊரை நான்கு தெய்வங்கள் காவல் காத்து வருகிறார்கள். காவிரிக் கரையை ஒட்டிப் பிடாரியும், இளங்குடிச்சி ஆச்சியும், அக்ரஹாரத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்ரீனிவாசப் பெருமாளும், இவர்களுக்கெல்லாம் ஏறத்தாழ நடு சென்டரில் (ஐயாரப்பன் என்ற பெயரோடு) சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பிடாரி வருடத்தில் ஒரு பூச்சொரிதலோடும், பெருமாள் அவ்வப்போது பால் அல்லது புஷ்ப அபிஷேகம் செய்வித்துக் கொண்டும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிவனோ, பிரதோஷம் போன்ற நாட்களில் (நான்கு கோவில்களில் சற்றே பெரிய) தனது கோவிலின் உள்ளேயே வலம் வந்து கொண்டிருக்கிறார். இளங்குடிச்சி ஆச்சி மட்டும் ஊரில் வரி வசூலித்துக் கொண்டு, வருடத்தில் ஒரு வாரத்திற்கு இரவிலும் பகலிலுமாக ஊரெல்லாம் எழுந்தருளிக்கொண்டிருக்கிறாள். இந்த சமயத்தில் ஊரின் எல்லா வீதிகளிலும் உலவி, கணிசமாக ஆடு, கோழிகளையும் பலி வாங்கிக் கொள்கிறாள். கடைசி நாள் இரவில் ‘வையாலி’ என்ற பெயரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மனைச் சுமந்துகொண்டு, கோவில் முன் சாலையில் தாறுமாறாக ஓடி, மேலே கீழே ஏற்றி இறக்கி.... பார்க்கவே பயமாக இருக்கிறது! வாணவேடிக்கையும் உண்டு.


இளங்குடிச்சி ஆச்சியின் தேர்

இதைத்தவிர அக்ரஹாரத்தின் மத்தியில் ஒரு வீடு பஜனை மடமாகச் செயல் படுகிறது. அதில் தினசரி பஜனையும் நடக்கிறது. ராமநவமி போன்ற பண்டிகைகளின் போது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘ராதா கல்யாணம், சீதா கல்யாணம்’ என்று பிரசித்தமான பாகவதர்களைக் கொண்டு உபன்யாசங்களும் ஏற்பாடு செய்யப் படுகிறது. இந்த சமயங்களில் ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் மூன்று வேளை (கல்யாண) சாப்பாடும் உண்டு. (சாப்பாட்டிற்கு வரமுடியாத வயதானவர்கள் வீட்டிற்கே பார்சல் போய்விடுகிறது!)அம்மனை வரவேற்கத் தயாராக அக்ரஹாரம்


விழாக்களை, உள்ளூர் வாசிகள் தவிர சென்னை, பெங்களூருவிலிருக்கும் அல்லூரைச் சேர்ந்தவர்களும் முன்னின்று நடத்துகிறார்கள். பஜனை மடத்தின் முன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விமரிசையாக நடக்கும். தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்தைப் போலவே அக்கறையோடு வீட்டுக்கு வீடு அழைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதும், மற்ற கோவில் முக்கிய திருநாட்களிலும் வெளியூரில் வசித்துவரும் அல்லூர்க்காரர்கள் எல்லாரையும் இங்கே பார்க்கலாம்.

வீட்டு விசேஷங்களில் கூட ஊர் முழுவதும் அக்கரையோடு கலந்து கொள்கிறது. இன்று கூட இங்கே ஒரு பூணூல் கல்யாணம். காலையிலேயே ஒருவர் வந்து காலைச் சிற்றுண்டிக்கும், மதியம் சாப்பாட்டுக்கும் அழைத்துவிட்டுப் போனார். மீண்டும் இருமுறை சாப்பாடு தயார் என்றும் அறிவித்துப் போனார்கள். மாலையில் புதிதாகப் பூணூல் போட்டுக் கொண்ட இரண்டு பையன்களையும் யானை மேல் ஏற்றி, மேளம், பாண்டு வாத்தியங்களுடன் தெருவில் ஊர்வலம் வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி கரைத்து ஊற்றி, பதில் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்கள்….

-000-


அல்லூரில் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்க்கலாமா?

காலை 5.30க்கு எழுந்து வாசல் பக்கம் போனால், பெரும்பாலான வீடுகளின் முன்னர் கழுவி விடப்பட்டு, கோலமும் போட்டிருக்கும். (இதை, ‘முறை வாசல்’ என அழைக்கிறார்கள்). அனேகமாக எல்லாருமே அந்த நேரம் துயில் எழுந்து விடுகிறார்கள். நானும் எழுந்து, கணினிமுன் உட்கார்ந்து 8 மணிக்குத் தான் குளிக்கச் செல்வேன். (வேறொன்றுமில்லை, இளங்காலை 2 மணி முதல் 8 மணி வரை வலை உபயோகம் இலவசம், அதுதான்!) அனேகமாக ஆண் பெண் எல்லாருக்குமே காவிரிக்குளியல் தான். பகலில் 10 மணிக்குத் தெருவில் சென்றால் பெரும்பாலான இல்லங்கள் பூட்டியிருக்கும். வேலைக்கோ அல்லது எதற்காகவோ ‘டவுனு’க்குச் சென்றிருப்பார்கள். ஊரே அப்படி ஒரு அமைதியாக இருக்கும்.

இது, மாலை வரை நீடிக்கும். மாலையில், தெருவிலுள்ள வேத பாடசாலை (இரண்டு உண்டு) யைச் சேர்ந்த பையன்களும் மற்றவர்களும் சேர்ந்து தெருவில் வாலிபால் அல்லது கிரிக்கட் ஆடுவதுண்டு. இதை என்னைப் போன்ற ‘பெரிசு’கள் வாசலில் திண்ணையில் அல்லது (ஈஸி) சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். (இப்போது கோடையில், இவர்கள் காவிரிக்குச் சென்று விடுகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் அப்படியே குளித்துவிட்டு மாலை ஜபங்களையும் முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்). வாசலில் அமர்ந்தாலும் சரி, அல்லது, வீட்டின் கொல்லை வரை கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தாலும் சரி, காற்று கொட்டுகிறது. வெளியே தகிக்கும் வெப்பம் அவ்வளவாகத் தெரிவதில்லை. நானும் மாலையில் சிவன் கோவில் சென்று வருகிறேன்.

இடைப்பட்ட நேரங்களில், படிக்கவும் இசை கேட்கவும், டிவி பார்க்கவும், அல்லது தூங்கவும் செய்யலாம். இல்லையென்றால் நாமும் ‘டவுனு’க்குப் போய் வரலாம்.

இந்த அமைதியான, நகரங்களின் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை, (பாரதி சொன்னது போல)

“என்னைப் புதிய உயிராக்கி,
எனக்கேதும் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்து” கொண்டிருக்கிறது.

இங்கே இன்னமும் எவ்வளவோ உண்டு. அவற்றை வேறொரு சமயம் பார்ப்போமா?

-0000-