Monday, May 28, 2012

மகாதேவன் எனும் ஜீனியஸ்!

     கர்நாடக சங்கீதத்திலே திரை இசையைப் போலவே எளிதாக மனதைக் கவரும் ராகங்கள் பல உண்டு. சிந்து பைரவி என்ற ராகத்தை எடுத்துக் கொண்டால் நினைவுக்கு வரும் திரைப்பாடல்கள்:  ’என்னை யாரென்று’ (பாலும் பழமும்); ’செண்பகமே’ (எங்க ஊர்ப் பாட்டுக்காரன்) போன்ற ஏராளமான பாடல்கள்! ஆபேரி என்று இன்னொரு ராகம்: ’நகுமோ’ (படையப்பா); ‘ஏரிக்கரையின் மேலே’ (முதலாளி) இன்னபிற பாடல்கள்! நாம் இன்று ரசிக்கப் போகும் பாடலோ, அத்தகைய சாருகேசி என்ற அற்புதமான ராகத்தில் அமைந்துள்ள மெட்டு.

     அநேகமாக எல்லா கர்நாடக சங்கீத ராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும். நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி ராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.  இந்த அடிப்படை உணர்ச்சிகளை எடுத்துக் காட்டும் லக்ஷணங்களை உள்ளடக்கியது சாருகேசி ராகம். (சீர்காழி கோவிந்தராஜன் திரையில் பாடிய முதல் பாடலான ‘சிரிப்புத் தான் வருகுதையா’ (கல்கி எழுதிய பொய் மான் கரடு நாவலின் திரைவடிவமான ‘பொன்வயல்’ திரைப்படத்தில் வந்தது.) இதே ராகந்தான். இந்தப் பாடலை சீர்காழி ஒரு கச்சேரியில் பாடுவதுபோலத் திரையில் வரும்!) இன்னும் ‘தூது, செல்வதாரடி’ (சிங்காரவேலன்), வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா), ’தூங்காத கண்ணென்று ஒன்று’ (குங்குமம்) என்ற மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்!

     இன்றைய நமது பாடலின் மெட்டு, கே.வி.மகாதேவனால் உருவாக்கப் பட்ட  அருமையான, இனிமையான, சுகமான ஒன்று. 1962ல் வெளிவந்த ‘நீங்காத நினைவு’ படத்திற்காக சுசீலா பாடி மயக்குகிறார். காதலைச் சொல்லுகின்ற ஒரு ராகத்தை, காதலின் சோகத்தைக் குறிக்க மெட்டாக்கிய மகாதேவனின் ஜீனியஸுக்கு இந்தப் பாடல் இன்னுமொரு சான்று.  வயலின்களும், குழல், கிடார், ஸிதார், ட்ரெம்பெட் (Muted - ஒரு அடைப்பானை ட்ரெம்பெட்டின் முகப்பில் பொருத்தி, அதன் ஒலியைப் பெருமளவு குறைத்து விடுவது) இவைகளுடன், பாட்டின் பல்லவிக்கு டேப் எனும் தாளவாத்தியத்தையும், சரணங்களுக்கு தபலாவின் கொஞ்சலையும் உபயோகித்து அசத்துகிறார், கே.வி.எம்.! இதோ, சுசீலாவும் நீங்களும்:
Friday, May 25, 2012

உன் மடியில் நானுறங்க,......      தமிழ் நாடக வரலாறு என்பது, மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்து, இன்று ஏறத்தாழ அழியும் நிலையினை அடைந்திருக்கிறது. தெருக்கூத்து வடிவிலிருந்து நாடக வடிவம் பெற்றதற்கு முக்கிய காரணகர்த்தா, சங்கரதாஸ் சுவாமிகள் எனும் துறவி. பல புராணக் கதைகளை நாடகமாக்கி ஒரு பெரும் புரட்சியை நடத்திக் காட்டினார். ( இவருடைய நாடகமொன்றில் பாடப் பெற்ற ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடல், முதலில் இசைத்தட்டாகவும், பின்னர் திரைப்படத்திலும் கே. பி. சுந்தராம்பாள் மூலம் பிரபலமடைந்தது. சுவாமிகளின் நாடகத்தையும் நீங்கள் சாம்பிள் பார்த்திருக்கிறீர்கள். ஏ.பி.நாகராஜனின் ‘நவராத்திரி’ படத்தில், சிவாஜியும், சாவித்திரியும் அதிஅற்புதமாக நடித்து ஒரு தெருக்கூத்து வருமே, நினைவிருக்கிறதா? அது நாடகத்தந்தை எனப்படும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய படைப்புத்தான்!) அவருக்குப் பின்னர், பல பாய்ஸ் நாடகக் கம்பெனிகள், (நவாப் ராஜமாணிக்கம், கன்னையாபிள்ளை, டி.கே.எஸ் சகோதரர்கள், சக்தி கிருஷ்ணஸ்வாமி, என்.எஸ்.கிருஷ்ணன்) என்று உருவாகி, தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான, அற்புதமான நடிகர்களை வழங்கின.

      இந்த வரிசையில், 1950/60களில், சேவாஸ்டேஜ் என்ற நாடகக் கம்பெனியை, நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்தார். இவர் நடத்திய நாடகங்களில் பல, பின்னர் திரைப்படங்களாக உருவாகி வெற்றிபெற்றன. இவற்றில் ஒன்றான ‘நாலுவேலி நிலம்’ என்ற திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான நாட்டுப் புற மெட்டை திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும், கே.வி.மகாதேவன் இசையில் பாடுகிறார்கள்.  பாடலை, கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

      கே.வி.மகாதேவன், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, இந்தப் பாட்டில் தாளத்திற்கு ‘டேப்’ வாத்தியத்தையும், பியானோவையும் உபயோகித்திருக்கிறார்! சுருதி சுத்தமான, துல்லியமான இரு குரல்களின் இன்னிசை, இனி உங்களுக்கு:
Sunday, May 20, 2012

ஒரு நவீன நாட்டுப் புறப் பாடல்!

     'கவலையில்லாத மனிதன்’ திரைப்படம், 1960ல் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பான இப்படத்திற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்திருந்தனர்.

     இதில் ராஜசுலோசனா, எம்.ஆர்.ராதாவைக் காதலித்துக் கைவிடப்பட்ட பெண்ணாக வருவார். இவர்களின் காதலை வெளியிடும் பாடலாக வருவதுதான் நமது இன்றைய ரசனைக்கான பாடல்! படகில் போய்க்கொண்டே பாடும் பாடல் என்பதை, படத்தைப் பார்க்காமல், பாடலைக் கேட்டாலே விளங்கிக் கொள்ளும்படியான ஒரு அழகான மெட்டு, துணைக்கு பல ஆண்கள், பெண்களின் குரல்கள், இவற்றோடு, குழலும், வயலின்களும், டபிள் பேஸும் சேர்ந்து உங்களை மறக்கச் செய்யும்! இந்தக் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடலைக் கேட்கும் போது, பின்னாளில், ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிவாஜியும், தேவிகாவும் படகில் பாடி நடிக்கும் (படத்தில் இரண்டு முறை வரும்) ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாட்டு நினைவுக்கு வருகிறதல்லவா?!

     பாடலும் மெட்டும் என்னவோ ஒரு நாட்டுப்புறப் பாடலைப் போல உணர்வு கொடுத்தாலும், இசைக் கோர்ப்பினால் ஒரு மாடர்ன் பாடலாக ஒலிக்கும் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடல், ஜமுனாராணியின் தங்கக் குரலில் இதோ,

Friday, May 18, 2012

கண்ணன் மனநிலை!

          ’தெய்வத்தின் தெய்வம்’ என்ற திரைப்படம், 1962ல் வெளிவந்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர். ராதா நடித்திருந்தனர். படத்தின் இசையை மாமேதை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். ஆனால், அதுபோது அவர் நோய்வாய்ப் பட்ட காரணத்தினால், பாடல்களின் மெட்டை மட்டுமே அவர் உருவாக்க, இசைக்கோர்ப்பு முதலியவை வேறொருவரால் செய்யப்பட்டு ஒலிப் பதிவானது. (’கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் ஜி.ஆர். இசையில் வரும் ‘காற்றுவெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலும் அவ்வாறே ஒலிப்பதிவானது!)

          இந்த ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் தான் பிரமீளா என்ற நடிகை (அரங்கேற்றம், தங்கப்பதக்கம்) அறிமுகமானார். நமது இன்றைய பாடலுக்கும் திரையில் அவர்தான் நடனமாடினார்.

          ஒரு நல்ல மனதை உருக்கும் மெட்டுக்கு, அளவுக்கதிகமான அலங்காரங்கள் தேவையில்லை என்பது இந்தப் பாடலின் மூலம் உங்களுக்குத் தெரியவரும். மகாகவி பாரதியின் பாடலுக்கு, ‘ராகமாலிகை’ எனப்படும் முறையில் (ஒரே பாடலில் இரண்டுக்கும் மேற்பட்ட ராகங்கள் இருந்தால் அது ’ராகமாலிகை’ எனப்படும். உதாரணம்: திருவிளையாடல் படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா பாடல்) அமைந்திருக்கும் இன்றைய பாடலில் மெயின் ராகம் ‘பீம்ப்ளாஸ்’ என்றழைக்கப்படும் வட இந்திய இசையைச் சேர்ந்த ராகம். இரண்டாவது சரணத்தில் ராகம் மாறுகிறது - பாடலின் இனிமை கூடுகிறது! அது மட்டுமா? முழுப் பாடலுக்கும் வீணை, மிருதங்கம், தபலா - மற்றும் இரண்டே இடங்களில் குழலும் ஷெனாயும் வருகின்றன. பாடல் முழுவதிலும், முக்கியமாக இறுதிப் பகுதியில் வரும் மிருதங்கத்தின் சுநாதம், கேட்கக் கேட்க இனிமை!

           எஸ்.ஜானகியின் குரல் ஆரம்பகாலகட்டத்தில் எப்படி இருந்தது, கேட்டீர்களா? இந்தக் கீச்சுக் குரலினாலேயே தமிழில் சில பாடல்களையே பாடினார், அவர்!

           இதோ, பாரதியின் ‘கண்ணன் மனநிலையை’ என்ற அருமையான பாடல், உங்களுக்காக:       


Wednesday, May 16, 2012

நான் நன்றி சொல்வேன்.....!

நன்றி, நண்பர்களே!

 இது, தமிழ்த் திரையிசை பாடலைத் தாங்கிவரும் என்னுடைய ஐம்பதாவது பதிவு.

இந்தப் பதிவுகளின் மூலம் எனக்கு இரண்டு பெரிய பலன்கள்! என்னுடைய ரசிகத்தன்மை மேம்பட்டது என்பதோடு, முக்கியமாக வலைத்தளத்தில் நிறைய நண்பர்களிடம் என்னை அடையாளம் காட்டியிருக்கிறது! மீண்டும் நன்றி!!

இன்றைய பாடல், வெளிவந்த நாளிலிருந்து என்னுடைய ’பேஃவரைட்’ இந்த ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாரதிதாசனின் பாடல், 1954ல் வெளிவந்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பி.ஆர்.பந்துலு தயாரித்த இந்தப் படத்துக்கு, இயக்குனர் பி.நீலகண்டன்.சிவாஜி, பத்மினி, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்க,  டி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருந்தார். .(இவருடைய இயற்பெயர், பார்த்தசாரதி! இந்தப் பெயரில் இசையமைக்க விருப்பப் படாததால், பந்துலு, தனது தாய்மொழியான கன்னடதேசப் பெயரான ‘லிங்கப்பா’ என்று மாற்றினாராம்.) ஆனால், நமது இன்றையப் பாடலுக்கு லிங்கப்பா இசையமைக்கவில்லை! அந்தத திரைப்படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தண்டபாணி தேசிகர் என்ற கர்நாடக சங்கீத விற்பன்னர் இசையமைத்திருக்கிறார். (பந்துலுவின் ‘முதல் தேதி’ படத்திலும் தேசிகர், ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார்!)  இன்றைய நமது பாடலை ராதா (ஜெயலக்ஷ்மி) பாடியிருக்கிறார். அருமையான மெட்டு, பாரம்பரிய இசை கேட்டு ரசிக்க வாருங்கள்!Monday, May 14, 2012

ஒரு அருமையான காதல் பாடல்!


எம்.எம்.ஏ.சின்னப்பதேவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். அவரைக் கதாநாயகனாக வைத்துப் படம் எடுப்பதாக செய்தி வந்த உடனேயே எல்லா ஏரியாக்களுக்கும் வியாபாரம் முடிந்து, அந்தந்த வினியோகஸ்தர்களிடமிருந்து வசூலான முழுப் பணத்தையும், படத்தின் பூஜையன்று முருகன் படத்தின் முன் கட்டுக் கட்டாகக் குவித்து வைப்பார், தேவர்! அத்தோடு மட்டுமின்றி, படத்தின் பூஜையன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, ஒரு முறை கூடத் தவறாமல் செய்து காட்டியவர் அவர். எம்ஜிஆரை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்பது வியப்புக்குறிய செய்தி! தேவரின் முதல் சொந்தப் படம், ‘தாய்க்குப் பின் தாரம்’. 1956ல் வெளிவந்த இந்தப் படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி நாயகியாக நடித்திருந்தார். மாமா கே.வி.மகாதேவன் இசையில் பல அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் தா.பி.தா! இதில் பானுமதி, நாம் ரசிக்க விருக்கும் இன்றையப் பாடலைத்தவிர, ஏ.எம்.ராஜாவுடன் ஒரு சோகப் பாடலும், தனியே ’அசைந்தாடும் தென்றலே’ என்ற பாடலையும் பாடியிருந்தார். 'ஆஹா நம் ஆசை நிறைவேறுமா’ எனும் இந்த அருமையான மெட்டிற்கான பாடலை லக்ஷ்மணதாஸ் என்பவர் எழுத, பானுமதியின் உயர் ஸ்ருதிக்கேற்ப கொஞ்சம் அடக்கமாகவே பாடியிருக்கிறார், டிஎம்எஸ்! பியானோ கார்ட்ஸ்களும், ‘தொம், தொம்’ என்று தாளம் மற்றும் ஸ்ருதியோடு ஒலிக்கும் டபிள் பேஸ் (பெரீய்ய வயலின் போலிருக்கும்) வாத்தியமும் ஒலிப்பதிவின் துல்லியத்தைப் பறைசாற்றுகின்றன. இப்போது பாடலை ரசிப்போமா, நண்பர்களே!

Saturday, May 12, 2012

இரண்டு புதிய குரல்கள்!


1949ம் வருடம் என்பது, தமிழ்த் திரைப்பட இசை, முழுமையான கர்நாடக சங்கீதத்திலிருந்து மெல்லிசை நோக்கி நகரத்தொடங்கிய காலமென்று கொள்ளலாம். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நாடகக் கலைக்கு மிகுந்த வரவேற்பிருந்தது. பல் ‘பாய்ஸ்’கம்பெனிகள் ஊரூராகச் சென்று நாடகங்கள் நடத்தி வந்தனர். இவர்களைத்தவிர, ‘ஸ்பெஷல் நாடகங்கள்’ என்றும் ஒன்றிருந்தது. இவற்றில், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.தியாகராஜபாகவத்ர், பி.யு. சின்னப்பா, கே.பி சுந்தராம்பாள் இவர்களெல்லாம் தனியாகவும் ஜோடியாகவும் நாடகங்களில் நடித்துவந்தனர். இரவெல்லாம் நடக்கும் இந்த நாடகங்களில், எல்லா நடிகர்களுமே பாட்டுப் பாடி நடிப்பார்கள். பக்கவாத்தியங்களில், ’கால் ஹார்மோனியம்’ என்ற வாத்தியத்தில் இசைமேதை ஜி.ராமனாதன் போன்றவர்கள் நடிகர்களின் பாட்டுக்கு ஈடாகவும், போட்டியாகவும் இசைப்பார்கள். (நாம் பார்க்கும் ஹார்மோனியத்தில், ஒரு கையால் (‘Bellows') தனைக் காற்றை அழுத்தவும், இன்னொரு கையால் ‘கட்டை’களை வாசிக்கவும் பார்க்கிறோம். ஆனால், கால் ஹார்மோனியத்தில், இரு கால்களால் காற்றழுத்தம் கொடுத்து இருகை விரல்களாலும் கட்டைகளை வாசிப்பது. இப்போது இது அநேகமாக அருகிவிட்டது!) இவ்வகை நாடகங்கள், கதை, நடிப்பைப் பற்றிய கவலையில்லாமல், பாட்டுத் திறமையைக் காண்பிக்கவும் போட்டிகளுக்காகவும் மட்டுமே இருந்ததால் அடிக்கடி நடப்பதில்லை. அதனாலேயே திருவிழாக் கூட்டம் இவற்றிற்குச் சேரும். நமது இன்றைய பாட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்தக் காலத்திய நிகழ்வுகளையும் பதிவிடும் நோக்கில் இதைச் சொல்லவந்தேன்! இதே 1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவின் ‘பொன்முடி’ என்ற படம் வெளியானது. இதன் கதை, பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘பொன்முடி அல்லது எதிர்பாராத முத்தம்’ என்ற புத்தகத்தைத் தழுவியது. நரசிம்ம பாரதி, மாதுரிதேவி (கலைஞரின் ‘மந்திரிகுமாரி’ படக் கதாநாயகி - அந்தக் காலத்திலேயே சற்று ‘தைரிய’மான பெண் என்பதால் இவரை ‘ஒரு மாதிரி தேவி’ என்றும் கிண்டலாகச் சொல்வதுண்டு!) இவர்கள் நடித்திருந்தனர். இன்றைய நமது பாட்டைப் பாடியவர்கள் இருவருமே இங்கே புதிதாக வருகை தருகிறார்கள். ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருந்தும், இசைமேதையான ஜி.ராமநாதன், படங்களில் பாடியது மிகச்சில பாடல்களே! இவருடன், சற்றே ஆண்மை கலந்த இனிய குரல் வளமும் இசைத்திறனும் கொண்ட டி.வி.ரத்னம் பாடுகிறார். (இவர் ‘மனோகரா’ படத்திலும் பாடியிருக்கிறார்.) ’பொன்முடி’ படம், பெரிதாக வெற்றி பெறவில்லையானாலும் இன்றும் ரசிக்கும்படியான இந்தப் பாடலும், பாடியவர்களின் குரலும், ஒரே சீரான மெட்டும், பூரணமான துணையிசையும் இதோ இப்போது, உங்களுக்காக:

Thursday, May 10, 2012

இன்னுமொரு காலங்கடந்த பாடல்!

1959ல் வெளிவந்த ‘மாதவி’ எனும் குறைந்த பட்ஜெட் திரைப் படத்தில், இன்று எஞ்சியிருப்பது, இன்று நீங்கள் ரசிக்கப்போகும் இந்தப் பாடல் ஒன்று மட்டுமே. அதனாலேதான் இது, ’காலங்கடந்த பாடல்கள்’ வரிசையில் சேருகிறது! இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர், ஒரிஜினல் நாட்டுப்புறப் பாடல்களை அள்ளி வழங்கிய, திரையிசைத்திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, கே.வி.மகாதேவன். இந்த அற்புதமான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை! ஒரு பியானோ, இரண்டு குழல்கள் (ஒன்று சாதாரணம், மற்றொன்று மெட்டல் - உச்சஸ்தாயியில் ’கீச்’ என்று ஒலிப்பது), ஓரிரு இடங்களில் வயலின்கள், மற்றும் தாளத்திற்கு இரண்டு டேப்கள் (டேப் என்ற தாள வாத்தியத்தைத் தமிழில் ‘பறை’ என்பார்கள். ‘பாவமன்னிப்பு’ படத்தில் சிவாஜி அறிமுகமாகும் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலுக்கு இந்த வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு அற்புதமாக நடிப்பாரே அதேதான்!) இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார், மகாதேவன்! இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். தபலாவின் தாளத்திற்குப் பேர் போன மகாதேவன், இந்தப் பாடலுக்கு அதை உபயோகப்படுத்தவே இல்லை! இத்தனைக்கும், எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு தபலாவின் ஒலியே போதும் (அல்லது அதிகம்) என்று கருதிய வேளையில், அநேகமாக அவர் மெட்டமைத்த எல்லாப் பாடல்களுக்கும் இரண்டு தபலாக்களை அநாயாசமாக உபயோகித்து வெற்றிகண்டவர், மகாதேவன். (இப்போது தெரிகிறதா, அவர் தபலா தாளத்தின் ரகசியம்?!) பியானோ வாத்தியம், இந்தப் பாடலில், பின்னணியில் தாளத்திற்கான ‘கார்ட்ஸ்’ ஒலிக்காக மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. நாட்டுப் புறப் பாடலுக்கான முக்கிய லக்ஷணமான ஒரே சீரான மெட்டிற்குக் தகுந்த அணைப்பாக டேப்பும், பாட்டின் முதலிலும் நடுவிலும் அடிக்கடி வரும் இரு குழல்களின் ’பிட்’டும், துல்லியமாக, சுருதி சுத்தமாக ஒலிக்கும் ஒரு அசல் ஆண் குரலும், குழைவான பெண்குரலும்..... பாடலை எழுதியவரையும், மெட்டுப் போட்டுப் பாடலை முழுமையாக்கியிருக்கும் இசையமைப்பாளரையும் எப்படிப் பாராட்டுவது என்ற பெரிய தர்மசங்கடத்தில் உங்களை ஆழ்த்தவில்லையா? அப்படி என்றால், இன்னும் சில முறைகள், - இரவில் - தனியே இந்தப் பாடலைக் கேளுங்கள்! பிறகு அந்த மேன்மையான படைப்பாளிகளுக்கு நன்றி சொல்வீர்கள்! இதோ, நீங்களும், தோட்டக்காரச் சின்ன மாமனும்:

Sunday, May 6, 2012

கனிந்த மரம்!


நடிகை, இயக்குனர்,பாடகி என்று தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் 1950-60களில் வலம் வந்தவர், பி.பானுமதி. அவரின் நடை, உடை, பாவனைகளைப் போலவே அவருடைய பாடல்களிலும் கம்பீரமும் அலட்சியமும் கலந்திருப்பதைக் காணலாம். காதல் டூயட் பாடும்போதுகூட இந்த ’டாமிநேஷன்’ தெரிந்துவிடும்! அவருடைய கணீரென்ற குரல் அப்படிப்பட்ட தனித்தன்மையுடையது! அவருக்கு முன்னும் பின்னும் யாரிடமும் நாம் கேளாதது! நாம் இன்று ரசிக்கப் போகும் பானுமதியின் பாடல், தாலாட்டில் கதை சொல்லுகிற வகை. ‘அன்னை’ எனும் ஏவிஎம் திரைப்படம் 1962ல் வெளிவந்தது. இரு சகோதரிகளின் கதையில், ஒருத்தி, ஏழைக்காதலனோடு ஓடிப்போகிறாள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. மற்றவளோ, செல்வந்தர் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாலும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு கட்டத்தில் சகோதரிகள் சேருகிறார்கள்....என்று போகிறது. சகோதரியின் குழந்தையைத் வண்டியில் தள்ளிக் கொண்டே பானுமதி பாடும் பாடல் இது. இந்தத் திரைப்படத்திலேயே அவர் இன்னுமொரு அருமையான பாடலைப் பாடியிருக்கிறார். அதை அவசியம் இன்னொரு பதிவில் கேட்போம். இன்றைய பாடலின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் இசையில் முன்பே பல பாடல்கள் கேட்டிருக்கிறோம். இன்றைய பாடலின் ஆரம்ப இசை, நமது மேதை கே.வி.மகாதேவனின் பாணியிலிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்! இந்தப் பாடலின் இன்னொரு விசேஷம், பானுமதியின் கம்பீரக் குரலுக்கு ஈடு கொடுக்கும் தபலாவின் அழுத்தமான வாசிப்பு. ஸிதாருடன் வீணையும், இவை இரண்டுடன் குழலும் சேர்ந்து பல இடங்களில் ஒரு புது ஒலியாக மயக்குகின்றன. இதோ,கண்ணதாசனும், சுதர்சனமும் பானுமதியும், நீங்களும்!:

Wednesday, May 2, 2012

நாளை நமதே - 1953 பதிப்பு!


’நாளை நமதே’ என்றொரு தமிழ்த்திரைப்படம், எம்ஜிஆரும் லதாவும் நடித்து 1975ல் வெளிவந்து, வெற்றியைப் பெற்றது. அதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதற்கு முன் இந்தியில் வெளிவந்து, தமிழகத்திலும் மாபெரும் வெற்றிபெற்றிருந்த ‘யாதோந் கி பாரத்’ என்ற திரைப்படத்தின் கதையைத் தமிழுக்குகேற்ப மாறுதல்கள் செய்து உருவாக்கியிருந்தார் பிரபல மலையாள இயக்குனர் சேது மாதவன். இவை இரண்டிலும் அடிப்படைக் கதை, சிறு வயதில் பிரிந்து போன சகோதரர்களும் குடும்பமும் ஒரு ‘குடும்பப் பாட்டு’ மூலமாகக் கடைசியில் ஒன்று சேருவதுதான். (இப்படிக் கதை சொல்வதை, திரைப்பட மொழியில் ‘ஒன் லைன் ஸ்டோரி’ என்பர்) இருக்கட்டும்! இதற்கும் நமது தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? 1953ல் ‘என் வீடு’ என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. அதனுடைய ’ஒன் லைன் ஸ்டோரி’யும் அஃதே! எம்ஜிஆரின் படத்தைக் ’காப்பி’ என்று சொன்னால் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதனுடைய ‘முதல் பதிப்பு’ என்று தப்பித்துக் கொள்கிறேன்! ‘நாளை நமதே’ படத்தில் அதே பல்லவியுள்ள பாடல் இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படுவது. நம்முடைய இன்றைய ‘என் வீடு’ படப் பாடலான ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற பாடலும் படத்தில் இரண்டு/மூன்று முறை வரும். படத்தின் க்ளைமாக்ஸில், பிள்ளைகள் (சகோதரி உட்பட) பாடகர்களாகப் பிரபலமாகித் தாங்கள் நடத்தும் கச்சேரிகள் எல்லாவற்றிலும் கடைசிப் பாட்டாக இதைப் பாடுவார்கள். அதற்கு முன், தங்கள் தந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்குக் காணிக்கையாக இதைப் பாடுவதாக அறிவிப்பார்கள். க்ளைமாக்ஸ் ஆயிற்றே, படம் முடிய வேண்டாமா? தந்தை நாகையா ஆடியன்ஸில் உட்கார்ந்து, முகத்தில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் கலந்து, வரிக்கு வரி (உதடுகளால் மட்டும்!) தொடர்ந்து......இப்படியே போய் முடியும் அந்த ஸீனும், கதையும்! அந்தகாலத்தில் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தத இந்த இனிமையான பாடல், ஏ.ராமராவ் என்கிற திறமையான இசையமைப்பாளர் கைவண்ணம். இந்தப் பாடலை, நமக்குத் தெரிந்த எம்.எல்.வசந்த குமாரியும், நமக்கு இதுவரை அறிமுகமாகாத டி.ஏ.மோதி என்ற பாடகரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சிவாஜி ரசிகராக இருந்தால், உங்களுக்கு மோதியை நினைவுபடுத்த முடியும்! ’சபாஷ் மீனா’வை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் சிவாஜியும், மாலினி என்ற நடிகையும் மழையில் உருண்டு புரண்டு, ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ என்று வட இந்திய இசையில் பாடுவார்களே, அதில் ஆண்குரல் மோதியுடையதுதான். அக்காலக் கதாநாயகர்கள் யாருக்குமே ஒன்றாத குரல் கொண்டிருந்ததால் இவர் அதிகம் ஜொலிக்கவில்லை. பின்னாளில் கிறித்துவப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற இந்த இனிமையான, அருமையான பாடல், கர்நாடக சங்கீத ராகமான ‘சாரங்கா’வைத் தழுவியது. எம்.எல்.வியின் மேல் ஸ்தாயி (ஸ்ருதி), மோதியின் (Bass) எனப்படும் கீழ்ஸ்தாயியுடன், பாடலின் தொடக்கத்திலிருந்தே கூடவே வரும் பியானோ கார்ட்களும் பாடலை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றது. வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்று பரிந்துரைக்கும் ஒரு மிக நல்ல பாடலை ரசிக்க வாருங்களேன்!