Tuesday, June 2, 2009

வங்கியில் ஒரு அனுபவம்!

என்னுடைய புலம்பல்களை இரண்டு வகைப்படுத்தலாம். (இரண்டுமே படுத்தல்தான் என்கிறீர்களா?!) தற்காலிகம் மற்றும் சிலகாலம் தொடர்வது என்று. ஒரு ஓய்வு பெற்ற மனிதனுக்கு அன்றாடம் புலம்ப ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. என்னுடைய அண்மைக்காலப் புலம்பலை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

ஐயா, என்னுடைய ஏடிஎம் அட்டைக்குப் படக்கூடாத இடத்தில் விரிசல் விழுந்ததால் அதனால் (என்னைப்போலவே) ஒரு பயனுமில்லை என்றாகிவிட்டது. உடனே ஒரு விண்ணப்பம் எழுதி, அதனுடன் பழுதான அட்டையையும் இணைத்து வங்கியில் கொடுத்துவிட்டேன். நல்லவேளையாக ஒரு நகலில் வங்கியில் அத்தாட்சியும் பெற்றுவிட்டேன். பதினைந்து நாட்களில் புதிய் அட்டை வந்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார்கள். இது நடந்து ஏறத்தாழ பத்து மாதங்களாகின்றன. நானும் விடாது கருப்பு என்பது போல வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் அனுப்புகிறார்கள்.அவரோ, எப்போதும் பிஸியோ பிஸி. காலை பத்து மணிக்குப் போனால் மதியம் வரச்சொல்லுவார். மதியம் போனால் சற்று இருங்கள் என்பார். ஓரு நாள் கேட்டேவிட்டார்: ”ஏன் ஸார், எப்போதும் பிஸி டைமிலேயே வருகிறீர்கள்?” என்று. எப்போது அவருக்கு சமயம் கிடைக்குமோ, எப்போது எனக்கு அட்டை கிடைக்குமோ, நானறியேன் பராபரமே!

குறிப்பு: நீங்கள் ஏன் வங்கி மேலாளரைப் பார்க்கவே இல்லை என்கிறீர்களா? எனக்கும் தோன்றாதா இந்த யோசனை? இவ்வளவு நாளில் ஒரு முறையாவது அவர் இருக்கையிலோ அல்லது வங்கியிலோ இருந்திருந்தால் விட்டிருப்பேனா அவரையும்?!

உபதேசம்!

ரொம்ப நாளாகிறது, எழுதி! உடன்பிறந்த சோம்பேறித்தனம் ஒரு முக்கியமான காரணம் என்பதுடன், தவிர்க்க முடியாத அலைச்சல்களும், (வயதானதினால் மட்டுமே வரும்) நிஷ்டூரமும் கூடுதலான, உண்மையான காரணங்கள் தான்.

ஒரு நல்ல பாடம் கிடைத்ததைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டும்: சமீபத்தில், திருவள்ளுரிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்து கிண்டியில் இறங்கினேன். அங்கிருந்து ஈக்காட்டுத்தாங்கல் செல்லவேண்டும். அதற்காக ஒரு ஆட்டோ பிடித்து, ரூ.70 கொடுத்து வந்தேன். இது போல ஒவ்வொருமுறை வரும்போதும், ஆட்டோ ஓட்டிகளிடம், ‘என்னப்பா, திருவள்ளுரிலிருந்து சென்னைக்கே பஸ்ஸில் ரூ.15 கட்டணம் செலுத்தி வந்திருக்கிறேன், நீ ரூ.70 கேட்கிறாயே?’ என்று புலம்புவேன். அவர்கள் எல்லோருமே ஒருவரைப் போல, ‘என்ன ஸார் செய்வது, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, சவாரி கிடைப்பது கஷ்டம்’ என்று பதிலுக்குப் புலம்புவார்கள்!

ஆனால், இந்த முறை ஆட்டோ ஓட்டி வந்தவர், எனக்காகவே அனுப்பப்பட்டவர்! என் வழக்கமான புலம்பலைக்கேட்டதுமே போட்டார் ஒரு போடு! ‘ஏன் ஸார், திருவள்ளுரிலிருந்து பஸ்ஸில் உங்கள் ஒருவரை மட்டுமா ரூ.15க்குக் கூட்டிவந்தார்கள்? எத்தனை பேரோடு உங்களை அடைத்து வைத்துக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்?’ என்று!

அப்போது மூடிய என் வாய், இப்போதெல்லாம் ஆட்டோக்களில் திறப்பதேயில்லை!