Saturday, August 4, 2012

ஒரு Perfect மெலடி!

     இந்தப் பாடலை முதல் முறை கேட்கும்போது, ஜமுனாராணியின் குரலும், துணையாக வரும் தபலாவும் மட்டும் உங்கள் கவனத்தைக் கவர்ந்து, உயிரை ஆக்ரமித்துக் கொண்டுவிடும். பின்னர், அதனின்று ஒருவழியாக விடுபட்டுக் கவனித்தோமானால் மட்டுமே, வயலின், மாண்டலின், மகுடி, டபிள்பேஸ் போன்ற இன்னபிற வாத்தியங்களும் கவனத்துக்கு வரும்!

     எத்தனை வாத்தியங்கள் இருந்தாலும் அவற்றை சுவாரஸ்யமாகக் கோர்க்கும் வித்தையில் (மெல்லிசை) மன்னர்களுக்கு நிகரேது?

     1957ல் வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்தில் பட்டுக்கோட்டையின் எழுத்தில், ஜமுனாராணியின் ஒரு சோகமான Perfect மெலடியை, இன்றைய இசையமைப்பாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தை, ரசிக்கலாம் வாருங்கள்!

Sunday, July 29, 2012

ஒரு ’புதிய’ பாடல்!

      எதையோ தேடப்போய் எதுவோ கிடைத்தது என்பார்களே, அதைப்போல் வேறொரு பாடலைத் தேடும்போது, இந்த நல்ல பாடல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் எப்படி?!

     1970ம் வருடம், இயக்குனர் ஸ்ரீதரின் நிறுவனத்திலிருந்து ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டது! ஸ்ரீதரின் சிஷ்யரான என்.ஸி.சக்ரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த ‘உத்தரவின்றி உள்ளே வா’ என்ற அந்த முழுநீள நகைச்சுவைப் படத்தில் நாகேஷ், ரவிசந்திரன், காஞ்சனா, ரமாபிரபா முதலிய அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைப்பில் அருமையான பாடல்கள் பல இடம் பெற்றிருந்தன.

     நாம் இன்று ரசிக்கவிருக்கும் ‘காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ’ என்ற பாடலை (எஸ்.பி.பியின் ஹம்மிங்குடன்) சுசீலா அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலில் ஒரு விசேஷம், தாளத்துக்கு பாடலின் பெரும் பகுதிக்கு கிடாரின் கார்ட்களும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தபலா மற்றும் பாங்கோ டிரம்ஸ் தாளமாகவும்  உபயோகப்படுத்தியிருப்பதுதான். கிடாரின் துணை, சுசீலாவின் குரலை எவ்வளவு இனிமையாக்கியிருக்கிறது, கேளுங்கள்! இடை இசையில் வயலின்களும், குழலும் ஒரே ஒரு இடத்தில் சிதாரும் பாடல் முழுவதும் டபிள் பேஸின் ‘தொம், தொம்’ சத்தமும் ஒரு நல்ல மெலடியை முழுமையாக்கி இருக்கின்றன. இப்போது, சுசீலா, உங்களுக்காக:

Saturday, July 21, 2012

அந்தக்கால ஜீனியஸ்கள்!

        முன்னர் இந்தப் பதிவுகள் ஒன்றில் கே.வி.மகாதேவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எவ்வளவு உண்மையானது என்பதைச் சமீபத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் ‘இன்னிசை மழை’ எனும் நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திரு.அப்துல் ஹமீதுடன்  உரையாடும்போது சில விஷயங்களைச் சொன்னார், திரு பஞ்சு அருணாசலம்:

        தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னர்கள் சக்ரவர்த்திகளாக இருந்தபோது, மகாதேவன் மன்னராகக் கோலோச்சினார் என்றாலும் அப்போது தெலுங்குத் திரையில் மகாதேவன் மட்டுமே சக்ரவர்த்தியாக இருந்தாரென்று சொன்னவர், இன்னொரு முக்கியமான வித்தியாசத்தையும் குறிப்பிட்டார். மன்னர்களால் பெரும்பாலும் மெட்டுக்களே முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னரே பாடல்கள் எழுதப்பட்டன என்றும், ஆனால் மகாதேவனோ, முழுக்க முழுக்க (எழுதப்பட்ட) பாடல்களுக்கே இசையமைத்தார் என்றும் தெரிவித்தார். அதாவது, கவிஞர்களை, படத்தின் கதையை இயக்குனர்களிடம் கேட்கும்போது மட்டும்தான் அவர் சந்திப்பாராம்!

       சரி, இன்றைய பாடலுக்கு வருவோம்!

       ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் கேட்டிருக்கிறோம். இன்று நாம் ரசிக்கப்போகும் பாடலை, கம்பீரமான குரலில் சீர்காழியும், அதற்கு நேரெதிரான மென்மையான குரலில் ஜமுனாராணியும் பாடியிருக்கிறார்கள். கிராமத்து அண்ணன் - தங்கை பாசத்தை அழகாகச் சொல்லி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’.  பாடலின் ’மூடு’க்கேற்ப பாடகர்கள் இருவரும் தங்கள் குரலில் எத்தனை கிண்டலையும் கேலியையும் காண்பிக்கிறார்கள், கவனியுங்கள்! வழக்கமான தபலா, டோலக்கின் உருட்டல்கள் மகாதேவனை இனம் காட்டுகின்றன. பாடல் உண்மையில் துல்லியமாக இருந்தபோதிலும், என்னுடைய ஒலிப்பதிவு சுகமாக இல்லை. இருப்பினும் பாடல் இவற்றையெல்லாம் மீறி ரசிக்கத் தூண்டுகிறது - வாருங்கள்!


Wednesday, July 18, 2012

ஒரு இடைவெளிக்குப் பிறகு!

    சில பல தவிர்க்கமுடியாத காரணங்களால்  இந்தப் பதிவுகளின் ரசிகர்களைக் காக்கவைத்தமைக்காக மன்னிக்கவேண்டுகிறேன்!

    இன்று, நமக்காக மீண்டும் பாடவருகிறார், பானுமதி. ஏவிஎம்மின் ’அன்னை’ திரைப்படத்திற்காக சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார் அவர். இந்தப் பாடலைக் கேட்கும்போது, (சரணத்தில் ஒரே ஒரு இடத்தைத் தவிர) தபலாவையும் பானுமதியின் குரலையும் மட்டுமே ரசிப்பீர்கள். அவ்வளவு இனிமையான மெட்டு. படத்தில் பின்னணியாக ஒலிக்கும் குரலில் மயக்கவைக்கும் இனிமை.  ஆரம்பத்தில் வரும் வரிகளான, “பெறும் சிரமமின்றி, பிள்ளை பெற்ற’ என்ற இடத்தில் ஒரு தேர்ந்த பாடகி, நடிகை என்பதை ஒரு சிறிய நக்கலைக் குரலில் காண்பித்து, நிரூபிக்கிறார், பானுமதி!

   அந்தக் காலத்திய நாடகப்பாடல்களின் மெட்டு, அமைப்பைக் கொண்டு, தொகையறாவில் (ஆரம்பத்தில் தாளம் இல்லாமல் ஒலிக்கும் பாட்டு - இதுவே முழுப்பாடலாக இருந்தால் விருத்தம் எனப்படும்!)  தொடங்கிக் கடைசியில் உச்ச ஸ்தாயியில் முடியும் பாட்டு இது. கவிஞர் கண்ணதாசனும் விளையாடி இருக்கிறார், கவனியுங்கள்:
        “தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை
         ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
         வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
         தாங்கிய தாயின் உறவென்ன?”

   இனிமேலும் குறுக்கே நிற்க விரும்பவில்லை - ரசியுங்கள், நண்பர்களே!



  

Monday, June 25, 2012

நன்றி, ஆனந்த (திருச்சி) விகடன்!

இந்த வாரம் (27.06.2012) வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடன் இதழின் இலவச இணைப்பான ‘திருச்சி விகடனில்’ வலையோசை என்ற தலைப்பில் இந்த ’விட்டு விடுதலையாகி நிற்பாய்!’ எனும் என்னுடைய வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை அழகான லே-அவுட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

குறையென்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்?! இற்றைய பதிவுகளில் நாம் ரசித்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பழந்தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள வில்லை - நிச்சயமாக அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். எனவே, மீண்டும் என் நன்றிகள், திருச்சி விகடனுக்கு!

Tuesday, June 12, 2012

சரச ராணி, கல்யாணி!

     எம்ஜிஆரும் பானுமதியும், பத்மினியும் இணந்து நடித்த ’மதுரைவீரன்’ எனும் தமிழக நாடோடிக் கதை ஒரு மகத்தான வெற்றிப் படமாக உருவாகி ஓடியதல்லவா? மதுரைவீரன் படத் தயாரிப்பாளரான லெட்சுமணன் என்கிற ‘லேனா’ செட்டியார், உடனேயே இன்னொரு நாடோடிக் கதையான ‘தேசிங்கு ராஜா’வை, அதே வெற்றிக் கூட்டணியோடு தயாரிப்பதாக முடிவு செய்து, முதன் முதலில் ஜி.ராமநாதன் இசையில் இரண்டு டூயட் பாடல்களை மட்டும் பதிவுசெய்து வெளியிட்டார். அந்தக் காலத்திய 78 RPM - அரக்கு ரெகார்டாக வெளிவந்த அந்த இரு பாடல்களில் ஒன்றை சீர்காழி-ஜிக்கியும், இன்று நாம் ரசிக்கவிருக்கும் மற்றொன்றை சி.எஸ்.ஜெயராமனும் பானுமதியும் பாடியிருந்தார்கள்.

     ‘லேனா’ செட்டியார் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட பைனான்ஷியர். இந்தத் துறையில் பெருமதிப்போடு வாழ்ந்தவர்.  எம்ஜிஆரின் சொந்த விருப்பு, வெறுப்புகளால் ’ராஜா தேசிங்கு’ படம் தயாரிப்பினை நீண்ட நாட்கள் இழுத்ததனால், லேனா நொந்து நூலாகி திரும்பவும் எழுந்திருக்க முடியாதபடி திரைத்துறையை விட்டே ஒதுங்கிப் போனார். (இந்த மாதிரியாக எம்ஜிஆரால் ஒதுக்கப் பட்டவர்கள் லிஸ்டில் சந்திரபாபு, அசோகன், கடைசியாக ஏ.பி நாகராஜன் போன்ற நமக்குத் தெரிந்த/தெரியாதவர்கள் பலருண்டு!)

      நமது இன்றைய பாட்டான ‘சரசராணி கல்யாணி’ யை உடுமலை நாராயண கவி எழுத, ‘சுரடி’ எனும் ராகத்தில் அமைத்திருக்கிறார், ராம்நாதன். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகத்தில் பல பாடல்கள் இருப்பினும், நடனத்திற்கான விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களே அநேகம். பாட்டு முழுவதும் ராமநாதனின் ஹார்மோனியம் பாடகர்களைத் தொடர்ந்துவருவதையும், இன்று அருகிவரும் ’மோர்சிங்’ வாத்தியம் (’ட்ஜொய்ங், ட்ஜொய்ங்’ என்று தாளத்தோடு ஒலிக்கிறதே, அதையும்) கவனியுங்கள். தொடக்கத்திலிருந்து ஒரே சீரான, நிதானமான மெட்டும், அதை அருமையாகப் பாடியிருக்கும் ஜெயராமன், பானுமதி குரல்களும்........அமைதியான சூழ்நிலையில் ரசித்துக்கேட்கவேண்டிய பாட்டு, இதோ உங்களுக்காக:



Monday, May 28, 2012

மகாதேவன் எனும் ஜீனியஸ்!

     கர்நாடக சங்கீதத்திலே திரை இசையைப் போலவே எளிதாக மனதைக் கவரும் ராகங்கள் பல உண்டு. சிந்து பைரவி என்ற ராகத்தை எடுத்துக் கொண்டால் நினைவுக்கு வரும் திரைப்பாடல்கள்:  ’என்னை யாரென்று’ (பாலும் பழமும்); ’செண்பகமே’ (எங்க ஊர்ப் பாட்டுக்காரன்) போன்ற ஏராளமான பாடல்கள்! ஆபேரி என்று இன்னொரு ராகம்: ’நகுமோ’ (படையப்பா); ‘ஏரிக்கரையின் மேலே’ (முதலாளி) இன்னபிற பாடல்கள்! நாம் இன்று ரசிக்கப் போகும் பாடலோ, அத்தகைய சாருகேசி என்ற அற்புதமான ராகத்தில் அமைந்துள்ள மெட்டு.

     அநேகமாக எல்லா கர்நாடக சங்கீத ராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும். நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி ராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.  இந்த அடிப்படை உணர்ச்சிகளை எடுத்துக் காட்டும் லக்ஷணங்களை உள்ளடக்கியது சாருகேசி ராகம். (சீர்காழி கோவிந்தராஜன் திரையில் பாடிய முதல் பாடலான ‘சிரிப்புத் தான் வருகுதையா’ (கல்கி எழுதிய பொய் மான் கரடு நாவலின் திரைவடிவமான ‘பொன்வயல்’ திரைப்படத்தில் வந்தது.) இதே ராகந்தான். இந்தப் பாடலை சீர்காழி ஒரு கச்சேரியில் பாடுவதுபோலத் திரையில் வரும்!) இன்னும் ‘தூது, செல்வதாரடி’ (சிங்காரவேலன்), வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா), ’தூங்காத கண்ணென்று ஒன்று’ (குங்குமம்) என்ற மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்!

     இன்றைய நமது பாடலின் மெட்டு, கே.வி.மகாதேவனால் உருவாக்கப் பட்ட  அருமையான, இனிமையான, சுகமான ஒன்று. 1962ல் வெளிவந்த ‘நீங்காத நினைவு’ படத்திற்காக சுசீலா பாடி மயக்குகிறார். காதலைச் சொல்லுகின்ற ஒரு ராகத்தை, காதலின் சோகத்தைக் குறிக்க மெட்டாக்கிய மகாதேவனின் ஜீனியஸுக்கு இந்தப் பாடல் இன்னுமொரு சான்று.  வயலின்களும், குழல், கிடார், ஸிதார், ட்ரெம்பெட் (Muted - ஒரு அடைப்பானை ட்ரெம்பெட்டின் முகப்பில் பொருத்தி, அதன் ஒலியைப் பெருமளவு குறைத்து விடுவது) இவைகளுடன், பாட்டின் பல்லவிக்கு டேப் எனும் தாளவாத்தியத்தையும், சரணங்களுக்கு தபலாவின் கொஞ்சலையும் உபயோகித்து அசத்துகிறார், கே.வி.எம்.! இதோ, சுசீலாவும் நீங்களும்:




Friday, May 25, 2012

உன் மடியில் நானுறங்க,......



      தமிழ் நாடக வரலாறு என்பது, மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்து, இன்று ஏறத்தாழ அழியும் நிலையினை அடைந்திருக்கிறது. தெருக்கூத்து வடிவிலிருந்து நாடக வடிவம் பெற்றதற்கு முக்கிய காரணகர்த்தா, சங்கரதாஸ் சுவாமிகள் எனும் துறவி. பல புராணக் கதைகளை நாடகமாக்கி ஒரு பெரும் புரட்சியை நடத்திக் காட்டினார். ( இவருடைய நாடகமொன்றில் பாடப் பெற்ற ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடல், முதலில் இசைத்தட்டாகவும், பின்னர் திரைப்படத்திலும் கே. பி. சுந்தராம்பாள் மூலம் பிரபலமடைந்தது. சுவாமிகளின் நாடகத்தையும் நீங்கள் சாம்பிள் பார்த்திருக்கிறீர்கள். ஏ.பி.நாகராஜனின் ‘நவராத்திரி’ படத்தில், சிவாஜியும், சாவித்திரியும் அதிஅற்புதமாக நடித்து ஒரு தெருக்கூத்து வருமே, நினைவிருக்கிறதா? அது நாடகத்தந்தை எனப்படும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய படைப்புத்தான்!) அவருக்குப் பின்னர், பல பாய்ஸ் நாடகக் கம்பெனிகள், (நவாப் ராஜமாணிக்கம், கன்னையாபிள்ளை, டி.கே.எஸ் சகோதரர்கள், சக்தி கிருஷ்ணஸ்வாமி, என்.எஸ்.கிருஷ்ணன்) என்று உருவாகி, தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான, அற்புதமான நடிகர்களை வழங்கின.

      இந்த வரிசையில், 1950/60களில், சேவாஸ்டேஜ் என்ற நாடகக் கம்பெனியை, நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்தார். இவர் நடத்திய நாடகங்களில் பல, பின்னர் திரைப்படங்களாக உருவாகி வெற்றிபெற்றன. இவற்றில் ஒன்றான ‘நாலுவேலி நிலம்’ என்ற திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான நாட்டுப் புற மெட்டை திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும், கே.வி.மகாதேவன் இசையில் பாடுகிறார்கள்.  பாடலை, கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

      கே.வி.மகாதேவன், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, இந்தப் பாட்டில் தாளத்திற்கு ‘டேப்’ வாத்தியத்தையும், பியானோவையும் உபயோகித்திருக்கிறார்! சுருதி சுத்தமான, துல்லியமான இரு குரல்களின் இன்னிசை, இனி உங்களுக்கு:




Sunday, May 20, 2012

ஒரு நவீன நாட்டுப் புறப் பாடல்!

     'கவலையில்லாத மனிதன்’ திரைப்படம், 1960ல் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பான இப்படத்திற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்திருந்தனர்.

     இதில் ராஜசுலோசனா, எம்.ஆர்.ராதாவைக் காதலித்துக் கைவிடப்பட்ட பெண்ணாக வருவார். இவர்களின் காதலை வெளியிடும் பாடலாக வருவதுதான் நமது இன்றைய ரசனைக்கான பாடல்! படகில் போய்க்கொண்டே பாடும் பாடல் என்பதை, படத்தைப் பார்க்காமல், பாடலைக் கேட்டாலே விளங்கிக் கொள்ளும்படியான ஒரு அழகான மெட்டு, துணைக்கு பல ஆண்கள், பெண்களின் குரல்கள், இவற்றோடு, குழலும், வயலின்களும், டபிள் பேஸும் சேர்ந்து உங்களை மறக்கச் செய்யும்! இந்தக் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடலைக் கேட்கும் போது, பின்னாளில், ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிவாஜியும், தேவிகாவும் படகில் பாடி நடிக்கும் (படத்தில் இரண்டு முறை வரும்) ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாட்டு நினைவுக்கு வருகிறதல்லவா?!

     பாடலும் மெட்டும் என்னவோ ஒரு நாட்டுப்புறப் பாடலைப் போல உணர்வு கொடுத்தாலும், இசைக் கோர்ப்பினால் ஒரு மாடர்ன் பாடலாக ஒலிக்கும் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடல், ஜமுனாராணியின் தங்கக் குரலில் இதோ,

Friday, May 18, 2012

கண்ணன் மனநிலை!

          ’தெய்வத்தின் தெய்வம்’ என்ற திரைப்படம், 1962ல் வெளிவந்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர். ராதா நடித்திருந்தனர். படத்தின் இசையை மாமேதை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். ஆனால், அதுபோது அவர் நோய்வாய்ப் பட்ட காரணத்தினால், பாடல்களின் மெட்டை மட்டுமே அவர் உருவாக்க, இசைக்கோர்ப்பு முதலியவை வேறொருவரால் செய்யப்பட்டு ஒலிப் பதிவானது. (’கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் ஜி.ஆர். இசையில் வரும் ‘காற்றுவெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலும் அவ்வாறே ஒலிப்பதிவானது!)

          இந்த ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் தான் பிரமீளா என்ற நடிகை (அரங்கேற்றம், தங்கப்பதக்கம்) அறிமுகமானார். நமது இன்றைய பாடலுக்கும் திரையில் அவர்தான் நடனமாடினார்.

          ஒரு நல்ல மனதை உருக்கும் மெட்டுக்கு, அளவுக்கதிகமான அலங்காரங்கள் தேவையில்லை என்பது இந்தப் பாடலின் மூலம் உங்களுக்குத் தெரியவரும். மகாகவி பாரதியின் பாடலுக்கு, ‘ராகமாலிகை’ எனப்படும் முறையில் (ஒரே பாடலில் இரண்டுக்கும் மேற்பட்ட ராகங்கள் இருந்தால் அது ’ராகமாலிகை’ எனப்படும். உதாரணம்: திருவிளையாடல் படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா பாடல்) அமைந்திருக்கும் இன்றைய பாடலில் மெயின் ராகம் ‘பீம்ப்ளாஸ்’ என்றழைக்கப்படும் வட இந்திய இசையைச் சேர்ந்த ராகம். இரண்டாவது சரணத்தில் ராகம் மாறுகிறது - பாடலின் இனிமை கூடுகிறது! அது மட்டுமா? முழுப் பாடலுக்கும் வீணை, மிருதங்கம், தபலா - மற்றும் இரண்டே இடங்களில் குழலும் ஷெனாயும் வருகின்றன. பாடல் முழுவதிலும், முக்கியமாக இறுதிப் பகுதியில் வரும் மிருதங்கத்தின் சுநாதம், கேட்கக் கேட்க இனிமை!

           எஸ்.ஜானகியின் குரல் ஆரம்பகாலகட்டத்தில் எப்படி இருந்தது, கேட்டீர்களா? இந்தக் கீச்சுக் குரலினாலேயே தமிழில் சில பாடல்களையே பாடினார், அவர்!

           இதோ, பாரதியின் ‘கண்ணன் மனநிலையை’ என்ற அருமையான பாடல், உங்களுக்காக:



       


Wednesday, May 16, 2012

நான் நன்றி சொல்வேன்.....!





நன்றி, நண்பர்களே!

 இது, தமிழ்த் திரையிசை பாடலைத் தாங்கிவரும் என்னுடைய ஐம்பதாவது பதிவு.

இந்தப் பதிவுகளின் மூலம் எனக்கு இரண்டு பெரிய பலன்கள்! என்னுடைய ரசிகத்தன்மை மேம்பட்டது என்பதோடு, முக்கியமாக வலைத்தளத்தில் நிறைய நண்பர்களிடம் என்னை அடையாளம் காட்டியிருக்கிறது! மீண்டும் நன்றி!!

இன்றைய பாடல், வெளிவந்த நாளிலிருந்து என்னுடைய ’பேஃவரைட்’ இந்த ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாரதிதாசனின் பாடல், 1954ல் வெளிவந்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பி.ஆர்.பந்துலு தயாரித்த இந்தப் படத்துக்கு, இயக்குனர் பி.நீலகண்டன்.சிவாஜி, பத்மினி, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்க,  டி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருந்தார். .(இவருடைய இயற்பெயர், பார்த்தசாரதி! இந்தப் பெயரில் இசையமைக்க விருப்பப் படாததால், பந்துலு, தனது தாய்மொழியான கன்னடதேசப் பெயரான ‘லிங்கப்பா’ என்று மாற்றினாராம்.) ஆனால், நமது இன்றையப் பாடலுக்கு லிங்கப்பா இசையமைக்கவில்லை! அந்தத திரைப்படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தண்டபாணி தேசிகர் என்ற கர்நாடக சங்கீத விற்பன்னர் இசையமைத்திருக்கிறார். (பந்துலுவின் ‘முதல் தேதி’ படத்திலும் தேசிகர், ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார்!)  இன்றைய நமது பாடலை ராதா (ஜெயலக்ஷ்மி) பாடியிருக்கிறார். அருமையான மெட்டு, பாரம்பரிய இசை கேட்டு ரசிக்க வாருங்கள்!



Monday, May 14, 2012

ஒரு அருமையான காதல் பாடல்!


எம்.எம்.ஏ.சின்னப்பதேவரைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். அவரைக் கதாநாயகனாக வைத்துப் படம் எடுப்பதாக செய்தி வந்த உடனேயே எல்லா ஏரியாக்களுக்கும் வியாபாரம் முடிந்து, அந்தந்த வினியோகஸ்தர்களிடமிருந்து வசூலான முழுப் பணத்தையும், படத்தின் பூஜையன்று முருகன் படத்தின் முன் கட்டுக் கட்டாகக் குவித்து வைப்பார், தேவர்! அத்தோடு மட்டுமின்றி, படத்தின் பூஜையன்றே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, ஒரு முறை கூடத் தவறாமல் செய்து காட்டியவர் அவர். எம்ஜிஆரை வைத்து எடுத்த எல்லாப் படங்களிலும் இந்தச் சாதனையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்பது வியப்புக்குறிய செய்தி! தேவரின் முதல் சொந்தப் படம், ‘தாய்க்குப் பின் தாரம்’. 1956ல் வெளிவந்த இந்தப் படத்தில் எம்ஜிஆருடன் பானுமதி நாயகியாக நடித்திருந்தார். மாமா கே.வி.மகாதேவன் இசையில் பல அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் தா.பி.தா! இதில் பானுமதி, நாம் ரசிக்க விருக்கும் இன்றையப் பாடலைத்தவிர, ஏ.எம்.ராஜாவுடன் ஒரு சோகப் பாடலும், தனியே ’அசைந்தாடும் தென்றலே’ என்ற பாடலையும் பாடியிருந்தார். 'ஆஹா நம் ஆசை நிறைவேறுமா’ எனும் இந்த அருமையான மெட்டிற்கான பாடலை லக்ஷ்மணதாஸ் என்பவர் எழுத, பானுமதியின் உயர் ஸ்ருதிக்கேற்ப கொஞ்சம் அடக்கமாகவே பாடியிருக்கிறார், டிஎம்எஸ்! பியானோ கார்ட்ஸ்களும், ‘தொம், தொம்’ என்று தாளம் மற்றும் ஸ்ருதியோடு ஒலிக்கும் டபிள் பேஸ் (பெரீய்ய வயலின் போலிருக்கும்) வாத்தியமும் ஒலிப்பதிவின் துல்லியத்தைப் பறைசாற்றுகின்றன. இப்போது பாடலை ரசிப்போமா, நண்பர்களே!

Saturday, May 12, 2012

இரண்டு புதிய குரல்கள்!


1949ம் வருடம் என்பது, தமிழ்த் திரைப்பட இசை, முழுமையான கர்நாடக சங்கீதத்திலிருந்து மெல்லிசை நோக்கி நகரத்தொடங்கிய காலமென்று கொள்ளலாம். அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நாடகக் கலைக்கு மிகுந்த வரவேற்பிருந்தது. பல் ‘பாய்ஸ்’கம்பெனிகள் ஊரூராகச் சென்று நாடகங்கள் நடத்தி வந்தனர். இவர்களைத்தவிர, ‘ஸ்பெஷல் நாடகங்கள்’ என்றும் ஒன்றிருந்தது. இவற்றில், எஸ்.ஜி.கிட்டப்பா, எம்.கே.தியாகராஜபாகவத்ர், பி.யு. சின்னப்பா, கே.பி சுந்தராம்பாள் இவர்களெல்லாம் தனியாகவும் ஜோடியாகவும் நாடகங்களில் நடித்துவந்தனர். இரவெல்லாம் நடக்கும் இந்த நாடகங்களில், எல்லா நடிகர்களுமே பாட்டுப் பாடி நடிப்பார்கள். பக்கவாத்தியங்களில், ’கால் ஹார்மோனியம்’ என்ற வாத்தியத்தில் இசைமேதை ஜி.ராமனாதன் போன்றவர்கள் நடிகர்களின் பாட்டுக்கு ஈடாகவும், போட்டியாகவும் இசைப்பார்கள். (நாம் பார்க்கும் ஹார்மோனியத்தில், ஒரு கையால் (‘Bellows') தனைக் காற்றை அழுத்தவும், இன்னொரு கையால் ‘கட்டை’களை வாசிக்கவும் பார்க்கிறோம். ஆனால், கால் ஹார்மோனியத்தில், இரு கால்களால் காற்றழுத்தம் கொடுத்து இருகை விரல்களாலும் கட்டைகளை வாசிப்பது. இப்போது இது அநேகமாக அருகிவிட்டது!) இவ்வகை நாடகங்கள், கதை, நடிப்பைப் பற்றிய கவலையில்லாமல், பாட்டுத் திறமையைக் காண்பிக்கவும் போட்டிகளுக்காகவும் மட்டுமே இருந்ததால் அடிக்கடி நடப்பதில்லை. அதனாலேயே திருவிழாக் கூட்டம் இவற்றிற்குச் சேரும். நமது இன்றைய பாட்டிற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்றாலும், அந்தக் காலத்திய நிகழ்வுகளையும் பதிவிடும் நோக்கில் இதைச் சொல்லவந்தேன்! இதே 1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவின் ‘பொன்முடி’ என்ற படம் வெளியானது. இதன் கதை, பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ‘பொன்முடி அல்லது எதிர்பாராத முத்தம்’ என்ற புத்தகத்தைத் தழுவியது. நரசிம்ம பாரதி, மாதுரிதேவி (கலைஞரின் ‘மந்திரிகுமாரி’ படக் கதாநாயகி - அந்தக் காலத்திலேயே சற்று ‘தைரிய’மான பெண் என்பதால் இவரை ‘ஒரு மாதிரி தேவி’ என்றும் கிண்டலாகச் சொல்வதுண்டு!) இவர்கள் நடித்திருந்தனர். இன்றைய நமது பாட்டைப் பாடியவர்கள் இருவருமே இங்கே புதிதாக வருகை தருகிறார்கள். ஏராளமான படங்களுக்கு இசையமைத்திருந்தும், இசைமேதையான ஜி.ராமநாதன், படங்களில் பாடியது மிகச்சில பாடல்களே! இவருடன், சற்றே ஆண்மை கலந்த இனிய குரல் வளமும் இசைத்திறனும் கொண்ட டி.வி.ரத்னம் பாடுகிறார். (இவர் ‘மனோகரா’ படத்திலும் பாடியிருக்கிறார்.) ’பொன்முடி’ படம், பெரிதாக வெற்றி பெறவில்லையானாலும் இன்றும் ரசிக்கும்படியான இந்தப் பாடலும், பாடியவர்களின் குரலும், ஒரே சீரான மெட்டும், பூரணமான துணையிசையும் இதோ இப்போது, உங்களுக்காக:

Thursday, May 10, 2012

இன்னுமொரு காலங்கடந்த பாடல்!

1959ல் வெளிவந்த ‘மாதவி’ எனும் குறைந்த பட்ஜெட் திரைப் படத்தில், இன்று எஞ்சியிருப்பது, இன்று நீங்கள் ரசிக்கப்போகும் இந்தப் பாடல் ஒன்று மட்டுமே. அதனாலேதான் இது, ’காலங்கடந்த பாடல்கள்’ வரிசையில் சேருகிறது! இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பவர், ஒரிஜினல் நாட்டுப்புறப் பாடல்களை அள்ளி வழங்கிய, திரையிசைத்திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட, கே.வி.மகாதேவன். இந்த அற்புதமான பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை! ஒரு பியானோ, இரண்டு குழல்கள் (ஒன்று சாதாரணம், மற்றொன்று மெட்டல் - உச்சஸ்தாயியில் ’கீச்’ என்று ஒலிப்பது), ஓரிரு இடங்களில் வயலின்கள், மற்றும் தாளத்திற்கு இரண்டு டேப்கள் (டேப் என்ற தாள வாத்தியத்தைத் தமிழில் ‘பறை’ என்பார்கள். ‘பாவமன்னிப்பு’ படத்தில் சிவாஜி அறிமுகமாகும் ‘எல்லோரும் கொண்டாடுவோம்’ பாடலுக்கு இந்த வாத்தியத்தைக் கையில் வைத்துக் கொண்டு அற்புதமாக நடிப்பாரே அதேதான்!) இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு சாம்ராஜ்யம் நடத்தியிருக்கிறார், மகாதேவன்! இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள். தபலாவின் தாளத்திற்குப் பேர் போன மகாதேவன், இந்தப் பாடலுக்கு அதை உபயோகப்படுத்தவே இல்லை! இத்தனைக்கும், எல்லா இசையமைப்பாளர்களும் ஒரு தபலாவின் ஒலியே போதும் (அல்லது அதிகம்) என்று கருதிய வேளையில், அநேகமாக அவர் மெட்டமைத்த எல்லாப் பாடல்களுக்கும் இரண்டு தபலாக்களை அநாயாசமாக உபயோகித்து வெற்றிகண்டவர், மகாதேவன். (இப்போது தெரிகிறதா, அவர் தபலா தாளத்தின் ரகசியம்?!) பியானோ வாத்தியம், இந்தப் பாடலில், பின்னணியில் தாளத்திற்கான ‘கார்ட்ஸ்’ ஒலிக்காக மட்டுமே உபயோகிக்கப் படுகிறது. நாட்டுப் புறப் பாடலுக்கான முக்கிய லக்ஷணமான ஒரே சீரான மெட்டிற்குக் தகுந்த அணைப்பாக டேப்பும், பாட்டின் முதலிலும் நடுவிலும் அடிக்கடி வரும் இரு குழல்களின் ’பிட்’டும், துல்லியமாக, சுருதி சுத்தமாக ஒலிக்கும் ஒரு அசல் ஆண் குரலும், குழைவான பெண்குரலும்..... பாடலை எழுதியவரையும், மெட்டுப் போட்டுப் பாடலை முழுமையாக்கியிருக்கும் இசையமைப்பாளரையும் எப்படிப் பாராட்டுவது என்ற பெரிய தர்மசங்கடத்தில் உங்களை ஆழ்த்தவில்லையா? அப்படி என்றால், இன்னும் சில முறைகள், - இரவில் - தனியே இந்தப் பாடலைக் கேளுங்கள்! பிறகு அந்த மேன்மையான படைப்பாளிகளுக்கு நன்றி சொல்வீர்கள்! இதோ, நீங்களும், தோட்டக்காரச் சின்ன மாமனும்:

Sunday, May 6, 2012

கனிந்த மரம்!


நடிகை, இயக்குனர்,பாடகி என்று தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் 1950-60களில் வலம் வந்தவர், பி.பானுமதி. அவரின் நடை, உடை, பாவனைகளைப் போலவே அவருடைய பாடல்களிலும் கம்பீரமும் அலட்சியமும் கலந்திருப்பதைக் காணலாம். காதல் டூயட் பாடும்போதுகூட இந்த ’டாமிநேஷன்’ தெரிந்துவிடும்! அவருடைய கணீரென்ற குரல் அப்படிப்பட்ட தனித்தன்மையுடையது! அவருக்கு முன்னும் பின்னும் யாரிடமும் நாம் கேளாதது! நாம் இன்று ரசிக்கப் போகும் பானுமதியின் பாடல், தாலாட்டில் கதை சொல்லுகிற வகை. ‘அன்னை’ எனும் ஏவிஎம் திரைப்படம் 1962ல் வெளிவந்தது. இரு சகோதரிகளின் கதையில், ஒருத்தி, ஏழைக்காதலனோடு ஓடிப்போகிறாள். அவளுக்குக் குழந்தையும் பிறக்கிறது. மற்றவளோ, செல்வந்தர் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டாலும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு கட்டத்தில் சகோதரிகள் சேருகிறார்கள்....என்று போகிறது. சகோதரியின் குழந்தையைத் வண்டியில் தள்ளிக் கொண்டே பானுமதி பாடும் பாடல் இது. இந்தத் திரைப்படத்திலேயே அவர் இன்னுமொரு அருமையான பாடலைப் பாடியிருக்கிறார். அதை அவசியம் இன்னொரு பதிவில் கேட்போம். இன்றைய பாடலின் இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் இசையில் முன்பே பல பாடல்கள் கேட்டிருக்கிறோம். இன்றைய பாடலின் ஆரம்ப இசை, நமது மேதை கே.வி.மகாதேவனின் பாணியிலிருப்பதைக் கவனித்திருப்பீர்கள்! இந்தப் பாடலின் இன்னொரு விசேஷம், பானுமதியின் கம்பீரக் குரலுக்கு ஈடு கொடுக்கும் தபலாவின் அழுத்தமான வாசிப்பு. ஸிதாருடன் வீணையும், இவை இரண்டுடன் குழலும் சேர்ந்து பல இடங்களில் ஒரு புது ஒலியாக மயக்குகின்றன. இதோ,கண்ணதாசனும், சுதர்சனமும் பானுமதியும், நீங்களும்!:

Wednesday, May 2, 2012

நாளை நமதே - 1953 பதிப்பு!


’நாளை நமதே’ என்றொரு தமிழ்த்திரைப்படம், எம்ஜிஆரும் லதாவும் நடித்து 1975ல் வெளிவந்து, வெற்றியைப் பெற்றது. அதில் எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். அதற்கு முன் இந்தியில் வெளிவந்து, தமிழகத்திலும் மாபெரும் வெற்றிபெற்றிருந்த ‘யாதோந் கி பாரத்’ என்ற திரைப்படத்தின் கதையைத் தமிழுக்குகேற்ப மாறுதல்கள் செய்து உருவாக்கியிருந்தார் பிரபல மலையாள இயக்குனர் சேது மாதவன். இவை இரண்டிலும் அடிப்படைக் கதை, சிறு வயதில் பிரிந்து போன சகோதரர்களும் குடும்பமும் ஒரு ‘குடும்பப் பாட்டு’ மூலமாகக் கடைசியில் ஒன்று சேருவதுதான். (இப்படிக் கதை சொல்வதை, திரைப்பட மொழியில் ‘ஒன் லைன் ஸ்டோரி’ என்பர்) இருக்கட்டும்! இதற்கும் நமது தலைப்புக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? 1953ல் ‘என் வீடு’ என்று தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரு திரைப்படம் வெற்றி பெற்றது. அதனுடைய ’ஒன் லைன் ஸ்டோரி’யும் அஃதே! எம்ஜிஆரின் படத்தைக் ’காப்பி’ என்று சொன்னால் கோபம் வந்துவிடுமோ என்ற பயத்தில் அதனுடைய ‘முதல் பதிப்பு’ என்று தப்பித்துக் கொள்கிறேன்! ‘நாளை நமதே’ படத்தில் அதே பல்லவியுள்ள பாடல் இன்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் விரும்பப்படுவது. நம்முடைய இன்றைய ‘என் வீடு’ படப் பாடலான ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற பாடலும் படத்தில் இரண்டு/மூன்று முறை வரும். படத்தின் க்ளைமாக்ஸில், பிள்ளைகள் (சகோதரி உட்பட) பாடகர்களாகப் பிரபலமாகித் தாங்கள் நடத்தும் கச்சேரிகள் எல்லாவற்றிலும் கடைசிப் பாட்டாக இதைப் பாடுவார்கள். அதற்கு முன், தங்கள் தந்தையை எங்கு தேடியும் கிடைக்காததால், அவருக்குக் காணிக்கையாக இதைப் பாடுவதாக அறிவிப்பார்கள். க்ளைமாக்ஸ் ஆயிற்றே, படம் முடிய வேண்டாமா? தந்தை நாகையா ஆடியன்ஸில் உட்கார்ந்து, முகத்தில் சோகத்தையும் மகிழ்ச்சியையும் கலந்து, வரிக்கு வரி (உதடுகளால் மட்டும்!) தொடர்ந்து......இப்படியே போய் முடியும் அந்த ஸீனும், கதையும்! அந்தகாலத்தில் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தத இந்த இனிமையான பாடல், ஏ.ராமராவ் என்கிற திறமையான இசையமைப்பாளர் கைவண்ணம். இந்தப் பாடலை, நமக்குத் தெரிந்த எம்.எல்.வசந்த குமாரியும், நமக்கு இதுவரை அறிமுகமாகாத டி.ஏ.மோதி என்ற பாடகரும் பாடியிருக்கிறார்கள். நீங்கள் ஒருவேளை சிவாஜி ரசிகராக இருந்தால், உங்களுக்கு மோதியை நினைவுபடுத்த முடியும்! ’சபாஷ் மீனா’வை மறந்திருக்க மாட்டீர்கள். அதில் சிவாஜியும், மாலினி என்ற நடிகையும் மழையில் உருண்டு புரண்டு, ‘காணா இன்பம் கனிந்ததேனோ’ என்று வட இந்திய இசையில் பாடுவார்களே, அதில் ஆண்குரல் மோதியுடையதுதான். அக்காலக் கதாநாயகர்கள் யாருக்குமே ஒன்றாத குரல் கொண்டிருந்ததால் இவர் அதிகம் ஜொலிக்கவில்லை. பின்னாளில் கிறித்துவப் பாடல்கள் பாடிக்கொண்டிருந்தார். ‘கொஞ்சு மொழி மைந்தர்களே’ என்ற இந்த இனிமையான, அருமையான பாடல், கர்நாடக சங்கீத ராகமான ‘சாரங்கா’வைத் தழுவியது. எம்.எல்.வியின் மேல் ஸ்தாயி (ஸ்ருதி), மோதியின் (Bass) எனப்படும் கீழ்ஸ்தாயியுடன், பாடலின் தொடக்கத்திலிருந்தே கூடவே வரும் பியானோ கார்ட்களும் பாடலை வேறொரு தளத்துக்கு எடுத்துச் செல்கின்றது. வாழ்க்கையில் அன்பே பிரதானம் என்று பரிந்துரைக்கும் ஒரு மிக நல்ல பாடலை ரசிக்க வாருங்களேன்!

Monday, April 30, 2012

மதுரை சோமுவும் சிவாஜியும்!


உலகிலேயே மனிதக் குரலை ஒத்த ஒலி உடைய ஒரே இசைக் கருவி, வீணை என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு உண்மை. வீணையை வாசித்து, சிவபெருமானையே கவர்ந்தவன் ராவணன்! இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டில் (தாள இசைக்கருவிகள் தவிர) வீணை மட்டுமே உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. அதனுடன் சேர்ந்து பாடுபவர், ஸி.எஸ்.ஜெயராமன். நான் முதலில் கூறிய தகவல் எவ்வளவு உண்மையானது என்பதை இன்றைய பாட்டில் நீங்கள் (கேட்டுத்) தெரிந்துகொள்ளலாம். பாடலைப் பாடிய ஸி.எஸ்.ஜெயராமனும் ஒரு இசையமைப்பாளரே! ’ரத்தக் கண்ணீர்’ திரைப்படத்தில் வரும் பிரபல பாடலான ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ என்ற பாடலின் மெட்டு, இவருடையதுதான்! ’இன்று போய் நாளை வாராய்’ என்ற நமது இன்றையப் பாடலின் மெட்டிலே, மகாகவி பாரதியின் ‘நல்லதோர் வீணை செய்தே’ என்ற பாடலை ஸி.எஸ்.ஜெயராமன் தனது மேடைக் கச்சேரிகளில் பாடிக் கொண்டிருந்தார். சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் அந்தக் குறிப்பிட்ட காட்சிக்குப் பொருத்தமாக இருக்கும் என்று மாமா கே.வி.மகாதேவன் உபயோகப்படுத்திக்கொண்டார்! (இதே போலப் பின்னாளில், ‘கந்தன் கருணை’ திரைப்படத்திலும் குன்னக்குடி வைத்தியநாதன் ஏற்கனவே அமைத்திருந்த மெட்டில் வெளிவந்திருந்த ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்’ என்ற பாட்டையும் மாமா உபயோகப்படுத்திக்கொண்டார்.) இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தில் ஸி.எஸ்.ஜெ., நமது இன்றைய பாடல் உட்பட இரண்டு பாடல்கள் பாடியிருப்பார். அவை இரண்டையும் முதலில் மதுரை சோமுவைப் பாடவைத்துப் பதிவும் செய்திருந்தார்கள். (அந்தப் பாடல் பதிவின் போது அங்கிருந்த சிவாஜி, சோமுவின் பாடலில் மனதைப் பறிகொடுத்து, தன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைக் கழற்றி சோமுவுக்கு அணிவித்தார்! அப்போதைய ’பேசும் படம்’ திரைப்பட மாத இதழில் புகைப்படம் கூட வந்தது.) ஆனால், திரைப்படத்தில் ராவணனாக நடித்திருந்த டி.எஸ்.பகவதியின் குரலுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதால் மீண்டும் ஸி.எஸ்.ஜே குரலில் பதிவு செய்யப் பட்டது. (இந்தத் தகவலை, பின்னாளில் ஒரு கச்சேரியின்போது மதுரை சோமுவிடமிருந்தே அறிந்துகொண்டேன்.) இனி, இன்றைய பாடலைப் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்! இந்த அற்புதமான பாடல், ’திலங்’ எனும் கர்நாடக ராகத்தில் அமைந்துள்ளது. (மெல்லிசை மன்னர்களின் இசையமைப்பில் சுசீலா பாடியிருக்கும் ‘அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்’ எனும் ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படப் பாடலும் இதே ராகந்தான்) பாடல் சோகமாக இருந்தாலும், பாடலில், (ராவண மாமன்னனின்) கம்பீரத்தை இசையமைப்பாளர் எப்படி வெளிக் கொணர்ந்திருக்கிறார், பாருங்கள்! வீணை, தபலா, கடம் இவை மூன்றை மட்டும் வைத்துக் கொண்டு நம்மை எப்படி சோகத்தில் ஆழ்த்துகிறார், மாமா! (அதீத ரசனையில் சில சமயம் கெட்ட வார்த்தைகளில் கூடத் திட்டத் தோன்றுகிறதல்லவா! அதுதான் ஒரிஜினல் இசை, ஒரிஜினல் ரசிப்பு!) இனி, நம் பதிவுக்கு முதன் முறையாக வந்திருக்கும் ஸி.எஸ்.ஜெயராமனின் காலங்கடந்த பாடல், உங்கள் ரசனைக்கு:

Saturday, April 28, 2012

போறவளே, போறவளே!


ஏர் உழவனுக்கும் அவனுடைய முறைப்பெண்ணுக்குமான உறவு, பழைய தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒரு வரப்ரசாதம் என்றே சொல்லலாம்! இந்த உறவில், கேலியுண்டு, கெஞ்சலுண்டு, மோகமுண்டு இன்னும் என்னென்னவோ உண்டு! நமது இன்றைய பாடலில், நாயகன், நாயகியைக் கெஞ்சலோடு கொஞ்சுகிறான். அதற்கு முன், இன்றைக்கு ஊடகங்களிலே, கோவைத்தமிழ் சிறப்புப் பெற்றிருக்கிறதே, அது, 1957லேயே ‘மக்களைப்பெற்ற மகராசி’ எனும் திரைப்படத்தில் ஏ.பி.நாகராஜன் எழுத்தில் படம் முழுவதிலும் கையாளப்பட்டிருக்கிறது! சிவாஜி, பானுமதி,நம்பியார், எம்.என்.ராஜம், கண்ணாம்பா ஆகியோர் நடித்துப் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை, சோமு இயக்கியிருந்தார். இன்றைய நமது பாடலுடன், ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’‘மணப்பாறை மாடுகட்டி’ என்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன-ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ‘மணப்பாறை மாடுகட்டி’ எனும் பாடல் உருவான கதை தெரியுமா உங்களுக்கு? இயக்குனர், கதை-வசனகர்த்தா, பாடலாசிரியர் (மருதகாசி) மற்றும் இசையமைப்பாளர் (கே.வி.மகாதேவன்) இவர்கள் அமர்ந்திருக்க, பாடல் இடம் பெறும் காட்சி விளக்கப் பட்டதாம். சற்று யோசித்த மருதகாசி, பத்து நிமிடங்களில் பாடலை எழுதி முடித்துவிட்டாராம்! பின்னர் மகாதேவனிடம், ’நான் எழுதிய இந்தப் பாடலுக்கு எவ்வளவு விரைவில் உங்களால் இசையமைக்க முடியும்?’ என்று சவால் விட்டாராம்! மாமா என்ன லேசுப்பட்டவரா? இன்னுமொரு கால்மணி நேரத்தில் அவரும் இசையமைத்துக் கொடுத்து விட்டாராம்! இவ்வாறு அரை மணி நேரத்தில் உருவான பாடல், இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பது விந்தையல்லவா! ஆனால் இன்றோ, ஒரு படத்தில், ’அவ என்(னை) என்ன தேடி வந்த அஞ்சலை’ என்று ஒரு பாடல் போட்டு, கொஞ்ச நாள் கழித்து வேறொரு படத்திற்காக அதே பாட்டையே ‘வேணாம், மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு’ என்று மெட்டுப் போட வெளிநாடு பறக்கிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது! சரி, சரி நமக்கெதற்கு அதெல்லாம்! (இது எப்படி இருக்கு!) வாருங்கள், மருதகாசி எழுத, மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்-பானுமதியின் அற்புதமான நாட்டுப் புறப் பாட்டில் நம்மைக் கரைப்போம்!

Sunday, April 22, 2012

வராமல், வந்து, வராமலே போன பாடல்!


இன்றைக்கு 47 வருடங்களுக்கு முன்னர் (1964ல்) வெளிவந்த ‘கர்ணன்’ தமிழ்த் திரைப்படம், இப்போது மறு வெளியீடாக வந்து மற்ற புதிய படங்களையும் ஓரம் கட்டிக்கொண்டிருப்பதைப் பற்றி நேற்றுப் பார்த்தோம். அந்தப் பதிவில் இன்னொரு ’வராமல் வந்த பாடல்’ ஒன்றை உங்களுக்கு அளிப்பதாய்க் கூறியிருந்தேன். அதாவது, நீங்கள் இன்று ரசிக்கப் போகும் பாடல், ‘கர்ணன்’ முதலில் வெளியானபோது படத்தில் இடம் பெறவில்லை! சில வாரங்கள் படம் ஓடியபின்னர் சேர்க்கப் பட்டது. (இதே போல ஒரு மிக நல்ல மெலடியான ‘தென்றல் வரும்’ என்ற சுசீலாவின் பாடல், படத்தின் நீளம் காரணமாக, ‘பாலும் பழமும்’ படத்திலிருந்து நீக்கப் பட்டது!) இப்போது, நேற்றுப் பார்த்த ‘கர்ணன்’ படத்திலும் நமது இன்றைய பாடலான ‘மகாராஜன் உலகை ஆளுவான்’ என்ற அருமையான டூயட் நீக்கப் பட்டிருக்கிறது! (அப்பாடா, தலைப்பு, புரிந்ததா?!) கர்நாடக சங்கீதத்தில் ஒரு முக்கியமான ராகமான கரகரப்ரியா எனும் ராகத்தில் புனையப் பட்ட மெட்டு இது. இந்தப் பாடலைக் கேட்டதும், உங்களுக்குத் தானாகவே இன்னொரு பாட்டு நினைவுக்கு வரும், வரவேண்டும்! ‘இருமலர்கள்’ படத்திற்காக எம்.எஸ்.வி இசையமைக்க, டி.எம்.எஸ். பாடியிருக்கும் ‘மாதவிப் பொன்மயிலாள்’ என்ற பாட்டும் இதே ராகத்தைத் தழுவியதுதான். இதற்குப் பல ஆண்டுகள் முன்னரே மன்னர்களின் ஆரம்பகாலத்தில் ‘பாசவலை’ படத்திலும் ‘அன்பினாலே உண்டாகும் இன்பநிலை’ என்று ஸி.எஸ்.ஜெயராமன் இதே ராகத்தில் பாடியிருக்கிறார்! கண்ணதாசன் எழுத, டி.எம்.எஸ்-சுசீலா பாட, நீங்கள் ரசியுங்கள்!

Saturday, April 21, 2012

இரவும் நிலவும்....


தமிழ்த் திரைப்படத் துறை இன்றிருக்கும் கால கட்டத்தில், கணினியின் உதவியால் புதுப்பிக்கப் பட்ட பழைய படமான சிவாஜியின் ‘கர்ணன்’ ஓஹோ என்று ஓடி கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிற நேரமிது! இதற்குப் பல வருடங்களுக்கு முன்னர், இதேபோல, நீண்ட இடைவெளிக்குப் பின்னர், சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’யும் வெளியிடப்பட்டு இப்படித்தான் (மீண்டும்) மகத்தான வெற்றியடைந்தது நினைவுக்கு வருகிறது. (அப்போது ஒருநாள், வேறொரு படப்பிடிப்பில் சிவாஜி இருந்தபோது, அவ்வழியே வந்த நாகேஷ், சிவாஜியின் பக்கத்தில் வந்து, ‘யப்பா, நேத்து நீ நடிச்ச பராசக்தி பார்த்தேன், பரவாயில்லை, நல்லாவே பண்ணிருக்கே, முன்னுக்கு வருவே’ என்று சொல்லிவிட்டு அவசரமாக இடத்தைவிட்டு நகர்ந்தாராம்!) நல்ல கதைகள், இனிமையான பாடல்கள், அருமையான கலைஞர்களின் நடிப்பு என்று எல்லாத் துறைகளும் கொடிகட்டிப் பறந்த காலமது! இன்றுபோல் அல்லாமல், (வாருங்கள், வாருங்கள் என்று அழைக்காமலே) படம் பார்க்கத் திரையரங்கிற்கு மக்கள் வருகிறார்கள் என்றால் அதற்கு மேற்கூறியவைதான் முக்கிய காரணம் அல்லவா? ’கர்ணன்’ படம், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கு ஒரு உச்சமான பீரியட் என்றே சொல்லலாம். எல்லாப் பாடல்களும் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் மிகச் சில படங்களில் கர்ணனும் ஒன்று. நாமும் அதிலிருந்து ஒரு டூயட்டை ரீ-ரிலீஸ் செய்யலாம் என்று ‘இரவும் நிலவும்’ என்ற பாடலைத் தேர்ந்தெடுத்தேன். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில், ஒரே மெட்டில் அமைந்த பாடல்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான காரியம்! ஏதேதோ ஜாலங்கள் செய்து எந்த மெட்டையும் புதிதாகத் தோன்றும்படி செய்துவிடுவார்கள்! ஆனாலும், இந்தப் பாட்டுக்கும், நாம் ஏற்கனவே கேட்டிருந்த (‘கவலை இல்லாத மனிதன்’ படத்திலிருந்து) ஜமுனாராணி பாடியிருந்த ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ என்ற பாடலுக்கும் இசைக் கோர்வையில் சில ஒற்றுமைகள் தென்பட்டன. ஜமுனாராணியின் பாடலில் மெட்டும் ஷெனாய் வாத்தியமும் சோகமாக ஒலித்தாலும், தாளம் (தபலாவும் டோலக்கும் சேர்ந்து) மிக உற்சாகமாக ஓடும். கர்ணன் பாடலில் மெட்டு சுகமான டூயட்டாக இருந்தாலும் ஷெனாய்கள் சோகமாகவும் தாளம் பழைய பாடலைப்போல் குதூகலமாகவும் அமைக்கப் பட்டிருக்கும். (இன்றைய பாட்டில் ஷெனாய்’கள்’ என்று குறிப்பிட்டிருக்கிறேன், கவனித்தீர்களா?) ஆமாம், சாதாரணமாக ஒரு ஷெனாய் உபயோகித்தாலே பாடலுக்கு அழுத்தம் அதிகம் என்பார்கள். இங்கோ, மன்னர்கள் இரண்டு வாத்தியங்களை உபயோகித்து மெலடியை மேம்படுத்தியிருக்கிறார்கள்! பாடலின் ஆரம்பத்திலும், ‘இரவும் பகலும்’ என்று வரும் ஒவ்வொரு இடத்திலும் டோலக், ‘கும்க்’ என்று தாளத்தை ஆரம்பிப்பது எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்பதையும் கேளுங்கள். இன்னொரு பதிவில், ‘கர்ணன்’ படத்தில் வராமல்.....வந்த பாடலைப்பற்றிச் சொல்கிறேன். இப்போது கண்ணதாசன் எழுத, மன்னர்கள் இசையமைக்க, டி.எம்.எஸ்-சுசீலா இதோ:

Sunday, April 8, 2012

நண்பர்களே,

கொஞ்ச நாளாயிட்டுதே, ஒரு நல்ல மாஜிக் ஷோ பாக்கலாமா இன்னிக்கி?

ஜீ ஹூன் லிம் என்று ஒரு தென் கொரிய இளைஞர். இவர் பிரான்ஸ் நாட்டில் நிகழ்த்திக் காட்டிய மாஜிக் ஷோ, இது. அநாயாசமாக ஏராளமான புறாக்களை மேடையில் வரவழைத்துக் காண்பிக்கிறார் இவர். எங்கே எப்படி என்பதுதான் வியப்பே! நீங்களும் வியக்க வருகிறீர்களா?


Saturday, April 7, 2012

இன்னொரு காலங்கடந்த பாடல்!

சென்றமுறை ஒரு மகிழ்ச்சியான பாடலை நமக்காகக் கொடுத்த சீர்காழியும் சுசீலாவும் உங்களைச் சோகத்திலும் ஆழ்த்தமுடியும் என்று நிரூபிக்கவிருக்கிறார்கள், இன்றைய பாடலில்!

எம்ஜிஆரின் கருப்பு-வெள்ளைப் படங்களில் ஒன்று, ’சபாஷ், மாப்ளே’. இதில் அவருடன், மாலினியும் எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்தனர். இதே காலகட்டத்தில் சிவாஜி, மாலினியுடன் ‘சபாஷ் மீனா’ எனும் காமெடிப் படத்திலும் நடித்திருந்தார்!(இதில் இடம் பெற்ற ’சித்திரம் பேசுதடி’ என்ற அருமையான பாடலை நீங்கள் மறக்க வாய்ப்பே இல்லை!)

’சபாஷ் மாப்ளே’யும் காமெடிப் படந்தான். இதில் பாடல்களை மருதகாசி எழுதியிருந்தார்.

இன்றைய பாடலைக் கேளுங்கள். துல்லியமான குரல்கள், துல்லியமான ஒலிப்பதிவு, அமைதியான இசை (ஹார்மோனியத்தையும் புல்லாங்குழலையும் இணைத்து ஒரு சின்ன பீஸ் உள்ளத்தை அள்ளுகிறது, கவனியுங்கள்!) பாட்டில் ஒரே சரணந்தான். அதில் தபலாவைத்தவிர வேறு துணையில்லை. அதிலும் சுசீலா பாடும் போது, ‘ஏக்கப் பெருமூச்சை’ என்ற இடத்திலிருந்து சுசீலாவின் குரல் கூடவே தபலா கொஞ்சுவதைக் கேட்டவுடனேயே, உங்களுக்கு இந்தப் படத்தின் இசையமைப்பாளர், நமது கே.வி.மகாதேவன் என்பது தெரிந்துவிடுமே!

’சபாஷ் மாப்ளே’ படத்தில் இதே பல்லவியில் ஒரு பாட்டைச் சீர்காழி, எம்.ஜி.ஆருக்காகத் தனியாகக் கதாநாயகியைப் பார்த்துப் பாடுவார். அந்தப் பாட்டில் முழு இசைக்குழுவும் பங்கு கொண்டிருக்கும். சரணங்களில் மெட்டே மாறியிருக்கும்.

இப்போது வாருங்கள், எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, காலத்தைக் கடந்த இந்த சோகமான சுகத்தை அனுபவிக்க!


Tuesday, April 3, 2012

சோலைக்குள்ளே குயிலுக்குஞ்சு!











இன்று சீர்காழியும் சுசீலாவும் ஒரு அருமையான டூயட்டை நமக்காகப் பாடுகிறார்கள்.

’பானைபிடித்தவள் பாக்கியசாலி’ என்றொரு திரைப்படம். அதை, டி.எஸ்.துரைராஜ் என்ற காமெடி நடிகர் தயாரித்து, இயக்கி, நடித்திருந்தார். (சந்திரபாபுவின் ‘கோவா மாம்பழமே’ பாடல் நினைவிருக்கிறதா? அதில் அவருடன் நடித்துப் பாடலையும் கூடப் பாடுவார், இவர்.) என்.எஸ் கிருஷ்ணனின் சம காலக் கலைஞரானதினால் மிகுந்த திறமையிருந்தும் அதிகம் சோபிக்காமல் போனவர், டி.எஸ்.துரைராஜ்.

இந்தப் படத்தில் பாலாஜி, சாவித்திரி நடித்திருந்தனர். மாமேதையான எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற இன்னொரு அருமையான பாடல், ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’. அந்தக் காலத்தில், திருமண வீட்டு ஒலிபெருக்கிகளில் நிச்சயமாக இடம் பெற்ற பாடலிது. திருமணமாகவிருக்கும் தங்கைக்குப் புகுந்த வீட்டில் எப்படி வாழவேண்டுமென்று அண்ணன் அறிவுரைகள் சொல்வது போல் இருக்கும், இன்னமும் எங்கோ ஒலித்துக் கொண்டிருக்கிற பாடல்!

‘நவராத்திரி’ படம் பார்த்திருப்பீர்கள். அதில், சாவித்திரி வீட்டைவிட்டுப் போய்ப் பல சிவாஜிகளைச் சந்திப்பார். அந்தப் படம் வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னரே, ’பானை பிடித்தவள் பாக்கியசாலி’ படத்தில் அண்ணனைப் பிரிந்த பட்டிக்காட்டுப் பெண், வழி தெரியாமல், பலதரப் பட்ட மனிதர்களைச் சந்தித்துக் முடிவில் தனக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த காதலனுடன் சேருவார்!

பாடலைப் பற்றிச் சொல்லவேண்டியதில்லை! அருமையான இசையமைப்பாளர், பாடகர்கள் எல்லாரும் சேர்ந்து படைத்த விருந்திது! கேட்டு ரசிக்கத் தயாரா? இதோ, பாடல்:

Saturday, March 31, 2012

நிலவோடு வான்முகில்...!

நண்பர்களே,

இன்று நமக்காக சீர்காழியுடன் பாடவந்திருப்பவர், ஒரு ஸ்பெஷல் பாடகி. இவர் குரலை நீங்கள் ஏற்கனவே முன்னொரு பதிவில் (டி.ஆர்.மகாலிங்கத்துடன் இவர் பாடியிருந்த ஒரு அற்புதமான பாடலில்) கேட்டிருக்கிறீர்கள். ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இவர்கள் பாடியிருந்த ‘நானன்றி யார் வருவார்’ என்ற பாடலைக் குறிப்பிடுகிறேன். ஏ.பி.கோமளா, சீர்காழியுடன் இணைந்து பாடியிருக்கும் ’நிலவோடு வான்முகில்’ என்ற பாடலை உங்களுக்கு அளிக்கிறேன். இப்பாடல், எம்ஜிஆர் நடித்த ராஜராஜன் என்ற திரைப் படத்திற்காக, மாமா கே.வி.மஹாதேவன் இசையில் இடம் பெற்றது.

பாடலில், இணைப்பிசையில் ‘ஒரு மாதிரி’யான மேற்கத்திய இசையும், அதன் பின்னால் டபிள்பேஸ் (மிகப் பெரிய வயலின் - தாளம்/கார்ட்ஸ்ஸுக்காக தொம் தொம் என்ற ஒலியுடன்) ஒலிப்பதையும், மாமாவின் ட்ரேட் மார்க் தபலாவையும், அருமையான மெட்டையும், குளுமையான குரல்களையும் கவனியுங்கள். இதோ பாடல்:

Friday, March 30, 2012

சீர்காழி வாஆஆஆஆரம்!



நண்பர்களே,

இப்போதிலிருந்து ’சீர்காழி ‘வாஆஆரம்’ தொடங்க உத்தேசம். அவருடன் நமது பழைய பாடகிகள் இணைந்து பாடியிருக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? இதென்ன கேள்வி, என்கிறீர்களா, எல்லாம் சும்மா ஒரு இதுக்குத்தான்!

இன்றைய கச்சேரியை ஆரம்பித்து வைக்க, ஜிக்கி அவர்களை அழைக்கிறேன். (வேறொன்றுமில்லை, இதற்கு முன்னால் இவரும் சீர்காழியும் அளித்த ‘அன்பே என் ஆரமுதே’ இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது!)

இந்தப் பாட்டும் ’கோமதியின் காதலன்’ படத்திலிருந்து, ஜி.ராமனாதன் இசையில் வருகிறது. இருவரின் கணீரென்ற துல்லியமான குரலில், வாத்தியங்களின் இசையை மீறிக்கொண்டு ஒலிக்கிற சோகப்பாடல்,இது. இருவரும் பாடும்போது, பின்னால் எலக்ட்ரிக் கிடாரின் இசை ஒலிப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, சீர்காழியுடன் யார் பாடுகிறார்கள்? பார்க்கலாம். இப்போது, ‘மின்னுவதெல்லாம்’, சீர்காழி-ஜிக்கியுடன், இதோ:

Wednesday, March 28, 2012

மாமாவிடமிருந்து இன்னொரு வைரம்!

அண்மையில் இந்த அருமையான மெலடியைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தானாகவே உடனே உங்கள் நினைவும் வந்தது. மாமா என்று (திரையுலகில்) எல்லாராலும் அழைக்கப் பட்ட கே.வி. மகாதேவன் 1965ல் இதயகமலம் படத்திற்காகப் போட்ட மெட்டு இது. சுசீலா அருமையாக, அனுபவித்துப் பாடியிருக்க, கண்ணதாசன் எழுதியிருக்கிறார். ரவிசந்திரன், கே.ஆர்.விஜயா, (செம்மீன்) ஷீலா நடித்திருந்தனர். படத்தில் கணிகைமனையில் ஷீலா, ரவிசந்திரனை நோக்கிப் பாட, அவரோ, விஜயாவை நினைத்துக் கொண்டிருப்பது போலப் படமாக்கி யிருப்பார்கள். இந்தப் படத்திலிருந்து ’மலர்கள் நனைந்தன பனியாலே’ மற்றும் ’உன்னைக் காணாத’ என்ற சுசீலாவின் பாடல்கள் இன்றும் உலவி வருகின்றன. அதே அளவு மென்மையான ’என்னதான் ரகசியமோ இதயத்திலே’ என்ற இன்றைய நமது செலக்‌ஷன் ஏனோ அத்தனை பிரபலமாகவில்லை!

வெறும் புல்லாங்குழல், சிதார் இவைகளுடன் மாமாவின் ட்ரேட்மார்க் தபலா கூட மிகவும் அடக்கி வாசிக்கப் பட்டிருக்கும் இப்பாடலை சுசீலாவே முழுக்க சொந்தம் கொண்டாடிவிட்டார்! நீங்களே கேட்டுவிட்டுச் சொல்லுங்களேன்!

Tuesday, March 27, 2012

ஒரு வித்தியாசமான கலை!

இந்தியாவில், நாடகங்களிலும் பெரிய மற்றும் சிறிய திரைகளிலும் காமெடி என்பதை, சம்பாஷனைகள் மூலமாகவும் ஆக்‌ஷன் மூலமாகவும் மட்டுமே செய்துவந்திருப்பதைப் பார்த்து வருகிறோம்.

மேலை நாடுகளில் மைம் (Mime) என்றவகைக் காமெடி ஷோக்கள் மிகவும் பிரபலம். இத்தகைய ஷோக்களில், ஒரு நடிகர்தான் இருப்பார், அவரும் ஒரு வார்த்தைகூடப் பேச மாட்டார்! தனது நடத்தையிலும் செய்கையிலும் பெரும் சிரிப்பை வரவழைத்து விடுவார். இன்றைய விடியோவைப் பார்த்தால் உங்களுக்கு மைம் என்பது எத்தனை கஷ்டமான, பெரும் உழைப்பை உறிஞ்சிடும் கலை என்பது விளங்கிவிடும். தமிழ்நாட்டில், அண்மையில் கோகுல்நாத் எனும் இளைஞர் தொலைக்காட்சியில் (கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியில்) நன்றாகவே மைம் காட்சிகள் செய்திருந்தார். இதோ உங்களுக்காக ஒரு மைம் ஷோ!


Sunday, March 25, 2012

ரசிகர்களை ஏமாற்றும் கணினி வித்தைகள்!

வெள்ளித்திரையில் இரு சிவாஜிகளோ அல்லது இரு எம்ஜிஆர்களோ தோன்றினாலே போதும், ரசிகர்களின் விசிலிலும் கூச்சலிலும் திரையரங்கே இடிந்து விழுந்துவிடுமோ என்ற பயம் தோன்றிவிடும். இது, கணினியின் காலத்துக்கு முன்பு!

இந்தக் கணினி யுகத்தில், ஒரு திரைப்படத்தில் அதன் ஆக்ரமிப்பு எவ்வளவு என்பதை விளக்குவதே இன்றைய நமது விடியோ. (அது சரி, கணினி கலைச் சொல்லான ‘மோஷன் காப்ச்சர்’ என்ற வார்த்தை இன்றைய கடைக்கோடி ரஜினி ரசிகனுக்கும் தெரிந்திருக்கிறது என்பது தமிழனுக்குப் பெருமையா அல்லது!!!!!!!)

இந்த விடியோவைப் பொறுத்தமட்டில், இந்த மாதிரித் திரைப் படங்களை உருவாக்க எவ்வளவு அசுரத்தனமான கற்பனையும் உழைப்பும் பொதிந்திருக்கிறது என்பதையும் யோசியுங்கள்!


Boardwalk Empire VFX Breakdowns of Season 2 from Brainstorm Digital on Vimeo.

Saturday, March 24, 2012

மனிதனும் மிருகமும்!





நண்பர்களே,

மேலே உள்ள படங்களைப் பார்த்தீர்களா? இவை ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் உள்ள வெர்ரிபீ ஓபன் ஜூவில் எடுக்கப் பட்டவை. சிங்கத்துடன் இவ்வளவு அருகில் அமர்ந்தும் சற்றும் பயமின்றிச் சிரிக்கிறார்களே என்று வியக்கிறீர்களா? இப்போது கீழே உள்ள படத்தையும் பாருங்கள்!



அந்த மனிதர்கள் அமர்ந்திருக்கும் ஜீப்பின் முன்புறம் மட்டும் கெட்டியான கண்ணாடியின் உள்ளே (சிங்கம் உணவை உண்ணும் வகையில்) அமைந்திருக்கிறது! எப்பூடி?!

காய்கறி ஸ்பெஷல்-2

இதோ இன்னும் ஐந்து படங்கள்:






காய்கறி ஸ்பெஷல்-1

நண்பர்களே,

இன்னொரு காய்கறி ஸ்பெஷலோடு உங்களைச் சந்திக்கிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? இதோ வாருங்கள்.

உங்களில் அனேகம் பேர், சில ஆடம்பரமான திருமண மண்டபங்களின் முகப்பில் சமையலுக்கான் காய்களைச் சீவி பலவித சிற்பங்களை உருவாக்கி வைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இங்கே தர்பூசணியை மட்டுமே செதுக்கி வைத்திருக்கும் அற்புதமான கற்பனையை ரசிக்கவிருக்கிறீர்கள். ஏற்கனவே முன்னர் ஒருமுறை குறிப்பிட்டிருந்தபடி, ஐந்து படங்களை மட்டுமே ஒரு பதிவில் இணைக்கமுடியும் என்பதால் இந்தப் பதிவின் தொடர்ச்சியாக இன்னும் ஐந்து படங்களை இணைத்திருக்கிறேன். கருத்து ஒன்று, பதிவுகள் இரண்டு! பார்த்து ரசியுங்கள்!






Thursday, March 22, 2012

ஒலி(வி)சித்திரங்கள்!

பல இசைக்கருவிகள் மூலமாக எழுப்பப்படும் குழுவிசை(Orchestra)களை நிறையப் பார்த்திருக்கிறோம். மனிதனின் கற்பனைக்கு அளவேயில்லை என்பதை நிரூபிக்க இங்கே சிலர் குழுவிசை நடத்துகிறார்கள், பாருங்கள்! என்ன, இவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் தத்தம் இசைக்கருவிகளை வீட்டுக்குக் கொண்டுபோய் சமைத்துச் சாப்பிடலாம்! நாளை மற்றொரு நிகழ்ச்சிக்கு வேறு புதிய இசைக்கருவிகளை உருவாக்கி உபயோகிக்க வேண்டியிருக்கும். ஆமாம் நண்பர்களே, இக்குழுவினர் இசைப்பது காய்கறிகளை உபயோகித்து. பார்த்து, கேட்டு ரசியுங்கள். நாளை இன்னொரு காய்கறி அதிசயத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.




Saturday, March 17, 2012

மலைக்க வைக்கும் உறவு!

இன்று நீங்கள் காணவிருக்கும் படங்கள் உங்களை மலைக்கவைக்கும் என்பது உறுதி!

கம்போடிய நாட்டைச் சேர்ந்த இந்தச் சிறுவனும், ஆறடி நீளமும் 100 கேஜி எடையும் கொண்ட ஒரு மலைப்பாம்பும் சகோதர சகோதரி போலப் பழகி வருகிறார்களாம்!

இந்தச் சிறுவன் மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது, அவனுக்கு அருகில் சுமார் இரண்டு அடி நீளத்தில் இந்த மலைப்பாம்பு படுத்திருந்ததைப் பார்த்திருக்கிறார், அவன் தந்தை. அவர், பாம்பைக் கொல்லாமல் அருகிலிருந்த காட்டில் கொண்டு போய் விட்டிருக்கிறார். மறுநாள் மீண்டும் அந்தச் சிறுவன் அருகே பாம்பு காணப்பட்டதாம். இப்படி மூன்று முறைகள் அதே இடத்திற்கு வந்த பாம்பை வளர்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒரு பையனையோ அல்லது ஒரு குதிரையையோ விழுங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்தப் பாம்பின் ஆகாரம், கோழிகளும் வாத்துகளும் தானாம். வாரத்திற்கு 10 கேஜி உணவு உட்கொள்ளும் இது மிகவும் சாதுவானதாம்! நீங்களே படங்களைப் பாருங்களேன்.




Friday, March 16, 2012

குமிழில் கலை!

இன்றைய விடியோவில், பாரிஸ் நகர வாசியான ஸில்வெய்ன் நிகழ்த்திக் காட்டும் அற்புதப் படைப்பைக் காணும் போது,கண்ணதாசன் சொன்னதுபோல, ‘படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்பது மிகவும் உண்மை என்று நினைக்கத் தோன்றுகிறது!

சிறு வயதில் அனேகமாக நாமெல்லோருமே சோப்புக் குமிழ்கள் ஊதிக் களித்திருக்கிறோம். ஆனால் ஸில்வெய்ன் உண்டாக்குவது, ராட்சதக் குமிழ்கள்! இரு நீண்ட குச்சிகளிடையே ஒரு நூலைக் கட்டி, இதை நிகழ்த்திக் காட்ட எத்தனை பயிற்சி செய்திருக்க வேண்டும் அவர் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது, அல்லவா? வாருங்கள் நண்பர்களே, ராட்சதக் குமிழ்களைக் கண்டு வியக்க!


Giant soap bubbles - Bulles de savon géantes from Ebullitions on Vimeo.

Tuesday, March 6, 2012

சிற்பி செதுக்காத பொற்சிலையே!

சற்று இடைவெளிக்குப் பிறகு, ஒரு நல்ல தமிழ்த் திரையிசைப் பாட்டில் மனதை லயிக்க விடலாம் என்று தோன்றியது.

இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டினை, அது வெளிவந்த காலத்தில் ஊரே பாடிக் கொண்டிருந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்! ஆணாகப் பிறந்தவர்கள் எல்லாம் தங்களை ஏ.எம்.ராஜாவாகவும், பெண்களெல்லாம் ஜிக்கியாகவும் நினைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள்!

ஆமாம், எதிர்பாராதது என்ற திரைப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் இந்தப் பாடலைத் தனித்தனியே பாடுவது போல காண்பித்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தவர், அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு ஸ்ரீதர். (அதாங்க, நம்ம ஸ்ரீதர்!.) படத்துக்கு இசையமைத்தது C.N.பாண்டுரங்கன் என்கிற (வெளிச்சத்துக்கு வரத்தவறிய) மேதை.

இது (அந்தக் காலகட்டத்தில்) ஒரு புரட்சிகரமான கதை. காதலி வேறொருவனை மணந்து விதவையான பின்னர் காதலனை மறுமணம் செய்துகொள்வார்.

இந்தப் பாடலைத்தவிர இன்னும் சில பாடல்களும் பிரபலமடைந்தன.

ஒரு கூடுதல் தகவல்: எதிர்பாராதது படத்தில், சிவாஜியை, பத்மினி உணர்ச்சிவசப்பட்டுக் கன்னத்தில் அறைவார். பின்னாளில் சிவாஜி சொல்லும்போது, ‘சரியான சமயத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தவறியதால், பலமான அறை பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கன்னம் வீங்கி, படப்பிடிப்பே ரத்தானது’ என்று கூறியிருந்தார்!
(இவர் மட்டும் என்ன? நடிகர் சிவகுமார், உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியிடம் வாக்கிங் ஸ்டிக்கால் அடிவாங்குவார். அந்தக் காட்சி படமான அன்று, படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவகுமார், ஒரே மாதிரியான வாக்கிங் ஸ்டிக்குகள் பல அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தாராம். ’எதுக்கு ஸார், இத்தனை?’ என்று கேட்ட போது இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), ‘அது வேறொண்ணுமில்லே தம்பி, சிவாஜி யாரையாவது அடிக்கற ஸீன்ல மட்டும் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிடுவார், கம்பு உடைந்துவிடும். அதனால், அடுத்த டேக்குக்கு வேணுமில்லே, அதுக்காகத் தான் வெச்சிருக்கோம்’ என்று கூலாக பதிலளித்தாராம்.) சிரித்து முடித்து விட்டு, கீழே இருக்கும் லிங்க்கைச் சொடுக்கி, இந்த நல்ல பாட்டை ரசிக்கலாமே!


Sirpi sedhukkatha Porchilaye

Friday, March 2, 2012

தெருச் சித்திரங்கள்!

நமது சாலைகளில் சுண்ணாம்புக்குச்சியால் (சாக்பீஸ்) திருப்பதி பெருமாளோ அல்லது யேசுபிரானோ சித்திரமாகி, வரைந்தவருக்கு (மறைமுகமாக) வருமானம் பெற்றுத் தருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த மாதிரிப் படங்களை, 2-D (அதாவது இருபரிமாணப்) படங்கள் என்று கூறுவார்கள். அயல் நாடுகளில் தெருக்களில் 3-D, அதாவது முப்பரிமாணப் படங்களை வரையும் விற்பன்னர்கள் பலருண்டு.

இன்று நீங்கள் காணப் போகும் படமும் அத்தகையதே. சாலையின் நடுவில் ஒரு பெரும் பள்ளம் உருவாவதை (time lapse) முறையில் கண்டு களிக்கப் போகிறீர்கள். ஒரு ஓவியனின் கற்பனையை நிஜமாக்க எத்தனை பேரின் உழைப்பு! வாருங்கள் நண்பர்களே, மனிதனின் இன்னுமொரு விந்தையான படைப்பு, இதோ:




street art 'The crevasse-making in time lapse

குடிக்கவும் தோன்றுமோ!

உலகில் நமக்குத் தெரியாத விஷயங்கள் கடலளவு உண்டல்லவா? என்னுடைய தேடுதலில் தென்படும் அத்தகைய சமாசாரங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் தான் எத்தனை மகிழ்ச்சி!

இன்றைய விடியோக்களில் நீங்கள் பார்க்கப் போவது ஒரு தனித்தன்மை வாய்ந்த சித்திர வடிவம். நீங்கள் இதைப் பார்த்து ரசித்த பின்னர் மனதில்லாமல் குடிக்க வேண்டி வரும்! நான் குறிப்பிடுவது நாம் அன்றாடம் குடிக்கும் காபியில் பாலைக் கொண்டு வரையப் படும் ஓவியம். இதை Latte art என்று சொல்வார்கள். இந்த (லாட்டெ) என்பது சிறிது கெட்டியான பால்.(இந்த வார்த்தைக்குச் சரியான தமிழ்ப் பதம் அகராதியில் எனக்குக் கிடைக்கவில்லை!)

இன்னொன்று: இந்த ஓவிய வடிவம் எஸ்ப்ரெஸ்ஸோ காபியில் (இது சிறிது குழம்பாக இருக்கும்) மட்டுமே சாத்தியம். மேல் நாடுகளில் தத்தம் காபி ஷாப்புகளைப் பிரபலப் படுத்த இதில் தேர்ந்த விற்பன்னர்களை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். உங்களுக்கு ஒரு நல்ல கருத்துருவம் (ஐடியா!) கிடைக்கவேண்டி, இரண்டு விடியோக்களைக் கொடுத்திருக்கிறேன். இவையல்லாமல் இன்னும் ஏதேதோ ஓவியங்களை உருவாக்குகிறார்கள்!





Wednesday, February 29, 2012

மரத்திலே ஒரு மாணிக்கம்!

சிற்பம் என்பதை கல்லிலே மட்டும் நாம் காண்பதில்லை. மணலில் உருவாக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்தோம். இன்று, மரத்திலே அதாவது மொட்டையாக நிற்கும் மரங்களை அற்புதமான சிற்பங்களாக மாற்றியிருப்பது - சாதாரண சிற்பியில்லை! மறைந்து வாழும் ஒரு கெரில்லா வீரன்! யாருமே பார்க்காதபோதும், யார், எப்படி, எப்போது செய்தார்கள் என்பதும் தெரியாமல் திடீரென உருவானவை இந்த மரச் சிற்பங்கள். இதை உருவாக்கியவரை பாராட்டுவதற்குத் தயாராக இருந்தும் கூட, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை அந்தக் கலைஞன்!

வடக்கு யார்க்‌ஷையர் எனும் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியில் சுயம்புவாக (அதாவது தான் தோன்றியாக) உருவாக்கப் பட்டிருக்கும் இந்த அதிசயத்தைப் பார்த்து வியக்க வாருங்கள்!
(நன்றி:பொக்கிஷம்)



விளையாட்டில் விசித்திரம்!

நண்பர்களே,

இன்று நாம் இதுவரை இந்தப் பதிவுகளில் செல்லாத ஒரு துறையில் நிகழ்த்தப் பட்டிருக்கும் சாதனைகளைப் பார்க்கப் போகிறோம்.

அநேகமாக நாமெல்லோரும் அறிந்த கேரம் போர்ட் (Carrom Board) விளையாட்டைப் போன்ற ஒன்று தான் கையில் ஒரு குச்சியை (Cue) வைத்துக் கொண்டு ஆடும் ஸ்னூக்கர் அல்லது பில்லியர்ட்ஸ் எனும் விளையாட்டு.இதை நீங்கள் பல தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.

இந்த விளையாட்டில், ட்ரிக் ஷாட்டுகள் அடித்து, அதனை ஒரு காட்சியாக்கிக் காசு பண்ணும் விற்பன்னர் கூட்டமே வெளிநாடுகளில் இருக்கிறது. அத்தகையவர்களில் ஒருவரின் ஷோவை இன்று கண்டு களிக்க வருகிறீர்களா?


Monday, February 27, 2012

உலகம் சுற்றும் தமிழன்!

பெரிதும் மனமுவந்து, இதைப் படிக்கும் அனைவரையும் ‘உலகம் சுற்றும் தமிழ’னாக மாற்ற விழைகிறேன்!

உலகத்தின் உச்சியிலிருந்து எல்லாத்திசையிலும் நோக்கினால், நீங்களும் உ.சு.தமிழன் ஆகிவிடமாட்டீர்களா, என்ன! வாருங்கள், நண்பர்களே, எவரெஸ்ட் சிகரத்திலிருந்து எடுக்கப் பட்டிருக்கும் ஒரு 360 டிகிரி பனோரமா படத்தை பார்க்கலாம்.

இதை, முழுத்திரையில் பார்ப்பது அற்புதமான அனுபவம். அத்துடன், இதில் மலைகள் மட்டுமே காண்பதில்லையாம். எங்கோ ஒரு மனித உருவமும் இருப்பதாக எழுதியிருக்கிறார்கள். எங்காவது சிகப்பு வண்ணத்தில் அது தெரிகிறதா என்பதையும் பாருங்களேன்!

எவரெஸ்ட் உச்சியை எட்மண்ட் ஹிலரியும் நமது டென்ஸிங்கும் அடைந்து 50 வருடங்கள் நிறைவு பெற்றதை அடுத்து, 271வது ஆளாக உச்சியை அடைந்த ஆஸ்திரேலிய புகைப்பட நிபுணர் ரோட்ரிக் மெகன்ஸி எடுத்த படம் இது.

கீழ்க்கண்ட லிங்க்கை உங்கள் அட்ரஸ் பாரில் copy-past செய்து, மறக்காமல் முழுத்திரையில் காணுங்கள்.

http://www.panoramas.dk/fullscreen2/full22.html#Read-Climbers-story

Monday, February 20, 2012

மீண்டும் கொஞ்சம் இசை!

நண்பர்களே!
கடந்த பல வாரங்களாகக் காணொளிகளிலே மனதைப் பறிகொடுத்தோம். இன்று மீண்டும் நமது தமிழ்த் திரை இசையை ரசிக்கலாமே!

இன்று நீங்கள் கேட்கவிருக்கும் பாட்டு, ஒரு இனிமையான பெண்குரலும் ஒரு உண்மையான ஆண்குரலும் சேர்ந்து அளித்திருப்பது! (என் போன்றவர்களுக்கு,உண்மையான ஆண் குரல் என்பது, பி.யு.சின்னப்பா, டி.எம்.எஸ்., சீர்காழி, திருச்சி லோகநாதன் இவர்களோடு முடிந்து போனது. இப்போது ஒலிக்கும் ஆண்குரல்கள் எல்லாமே எம்.கே.தியாகராஜபாகவதரின் குரல் போலப் பெண் தன்மை கொண்டவைதான்!) பாட்டுக்கு வருவோம்!

இன்றைய பாட்டை சீர்காழியும், ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள். இது, ’கோமதியின் காதலன்’ என்ற திரைப்படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரனும், சாவித்திரியும் பாடுவது போலவரும் டூயட். இசைவித்தகரான ஜி.ராமநாதனின் இசையில், கு.மா.பாலசுப்பிரமணியம் என்ற (அக்காலத்திய) பிரபல கவிஞர் எழுதியது. படத்தின் கதையை ‘தேவன்’ எழுதியிருந்ததாக நினைவு. படம், டி.ஆர்.ஆர் அவர்களின் சொந்தத் தயாரிப்பு.

குரல்களின் இனிமையும் (clarity) எனப்படும் துல்லியமும் கவனிக்கத் தக்கவை. உறுத்தாத பின்னணி இசையும், வால்ட்ஸ் எனும் மேல்நாட்டு நடனத் தாளமும் ஒரு கூடுதல் போனஸ். எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்கவே அலுக்காத பாடல்....ரசியுங்கள்:

Sunday, February 19, 2012

மீண்டும் மாக்ரோ! - பகுதி-2

இந்தப் பதிவிற்கான கடைசிப் பகுதியிது. இதில் இன்னும் சில மிருகங்களின் கண்களின் மிக அண்மைப் புகைப்படங்களை உங்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். முதலாவதாக இருப்பது முதலையின் கண். இரண்டாவதும் மூன்றாவதும் மீன்களின் கண்கள்.அடுத்தது, ஓநாயின் கண். ஐந்தாவது, வீடுகளில் வளர்க்கப்படும் டிஸ்கஸ் எனும் அமேசான் நதி மீனுடையது.





Saturday, February 18, 2012

நிழல் ஆட்டம்!

நண்பர்களே,
இந்த விடியோ உங்களை வியப்பில் ஆழ்த்தவில்லை என்றால் உங்கள் ரசனை மீதுதான் சந்தேகம் வரவேண்டும்!

நிழல் ஆட்டம் பார்த்திருப்போம். சாதாரணமாக ஒருவர் வெளிச்சமிடப்பட்ட திரைக்குப் பின்னால் இருந்து, மனிதன், பறவை, முயல், மான் என்று விரல்களாலேயே நிழலாக உருவாக்கிக் காட்டுவார். ஆனால் இந்த (கொல்கத்தாவில் தயாராகியிருக்கும்) ’கொல்கத்தாவை ரசிக்க வாருங்கள்’ என அழைக்கும் இந்த விடியோவில், மனிதனின் மூளைக்குள்தான் எத்தனை யோசனை, எத்தனை திறமை என்று வியப்பை வெளிப்படுத்தவும் மறந்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்! கொல்கத்தாவின் பிரபல இடங்களான காளி கோவில், ஹௌரா பாலம், அதன் கீழே நீரில் மிதக்கும் படகு, தலைமைச்செயலகம் (பின்னணியில் நமது தேசீயகீதத்துடன்)என்று அந்த நகரத்தோடு ஒன்றிய எல்லாவற்றையும் மட்டுமல்ல, மக்கள் கூட்டத்தையும் கூட விடவில்லை! அருமையான பின்னணி இசையோடு வரும் இந்த அசாதாரண விடியோ, இதோ, உங்களுக்காக!

கடலுக்குள் ஒரு உலகம்!

நமது பூமித்தாயின் அழகான பன் முகங்களை இயற்கைக் காட்சிகளாகவும், பூமியின் மேற்பரப்பில் அமைந்த பல்வேறு அதிசயக் காட்சிகளாகவும் பார்த்து ரசித்திருக்கிறோம். பூமிப்பந்தின் பெரும் பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் கடல்களின் கீழே ஒரு தனி உலகமே இயங்கிக் கொண்டிருப்பதுபற்றியும் கேள்வியுற்றிருக்கிறோம். அந்த உலகத்திலிருந்து, பிஜி,டோங்கா நாடுகளின் கடல்களுக்குக் கீழே இருக்கும் அழகான பகுதியையும் அதன் பிரஜைகளான எண்ணற்ற ஜீவராசிகளையும் காண உங்களை அழைக்கிறேன். வியப்பின் எல்லைக்கே உங்களை அழைத்துச் செல்லும் காட்சிகள் இவை! முழுத்திரையில் கண்டு அனுபவியுங்கள்!


Friday, February 17, 2012

கருவறைப் பயணம்!

இன்று நாம் காணப்போகும் விடியோ, இந்த உலகில் பிறந்திருக்கும், பிறக்கப் போகும் எல்லாருக்கும் வாய்த்த அனுபவம். இதைக் காணும்போது கடவுளின் பெருமை விளங்கும். இந்த அனிமேஷன் படத்தை அழகாக எடுத்த மானுடனின் திறமையையும் பாராட்டத் தோன்றும். ஏறத்தாழ மூன்று லட்சம் பேருக்குமேல் பார்த்திருக்கும் இந்த விடியோவை நீங்களும் பார்த்து, அறிந்து கொள்ள வாருங்கள், நண்பர்களே!

Thursday, February 16, 2012

மீண்டும் மாக்ரோ! - பகுதி-1

சில பதிவுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ‘மாக்ரோ’ எனப்படும் மிக அண்மைப் புகைப்படங்களை மறந்திருக்க மாட்டீர்கள் எனக் கருதுகிறேன். இப்போது ‘பொக்கிஷம்’ எனும் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் சில மிருகங்களின் கண்களின் மிக அண்மைப் படங்களைப் பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்!
முதலாவது மலைப்பாம்பு; இரண்டாவது நீல க்ரே மீன்; மூன்றாவது குதிரை; நான்காவது நீல முயல், ஐந்தாவது முதலை.





கடலின் சீற்றம்!

இந்தத் தலைப்பு பொருத்தமானதா என்பதில் எனக்கு ஐயமுண்டு! ஆனால் இதைவிடவும் சிறப்பான ஒரு தலைப்பு தோன்றாததினால் இதையே வைக்க வேண்டியதானது!

இன்று நீங்கள் காணப்போகும் விடியோ, ஒரு வாழ்க்கையின் அனுபவம். கடலின் மூர்க்கத்தனத்தை, அலைகளின் சீற்றத்தைக் காணும்போது சுனாமிகளின் பிடியில் சிக்கியவர்கள் அனுபவம் எத்தனை கொடியது என்பதை நினைவு கூறாமல் இருக்கமுடியாது. தண்ணீரின் வேகத்தில் மீன்பிடிக் கப்பல்கள் காற்றில் வீசப்படும்போது, நம் குடல்களும் தானாகவே மேலெழும்புகின்றன! ஒரே திருப்தி, கடவுளின் சீற்றத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் மனிதன் தயாரித்த கப்பல்கள் என்பதே!

நான்கு நிமிடங்கள் ஓடும் இந்த விடியோவினை அனுபவிக்க நீங்கள் கீழ்க்கண்ட லிங்க்கை காபி செய்து உங்கள் அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்து பார்க்கவேண்டும். தவறவிடாதீர்கள் - பார்த்தே தீரவேண்டிய ஒரு மிக நல்ல முயற்சி! முழுத்திரையில் (Full screen) காண்பது சிறப்பு.


http://www.youtube.com/watch?v=T4FIS1FnOQg

Saturday, February 11, 2012

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

ஊடகங்களில் எவ்வளவோ விளம்பரங்களைப் பார்க்கிறோம். அவற்றில் சில மட்டுமே மனதில் ஒட்டிக் கொள்ளுகின்றன. ’எப்போதும் சேர்ந்தே பயணியுங்கள்’ எனும் செய்தியை விளக்க ஒரு பஸ் கம்பெனியின் அனிமேஷன் விளம்பரங்கள் மிகப் பிரபலமானவை. அவற்றில் ஒன்றை இங்கே பாருங்களேன்.

Friday, February 10, 2012

மனிதனின் படைப்பும் கடவுளின் படைப்பும்!

நண்பர்களே!

இன்று உங்களுக்கு மனிதனின் கண்டுபிடிப்பான புகைப்படக் கருவி (Camera) வின் மூலம் செய்யப் படும் ஒரு புதிய தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

புகைப்படம் எடுப்பதற்கும், சினிமா எடுப்பதற்கும் தனித் தனி காமெராக்கள் இருப்பதை அறியாதார் இலர். நீங்கள் இன்று பார்க்கப் போகும் விடியோக் காட்சி, புகைப்படத்திறகான காமிராவினால், Time lapse எனும் முறையில் சுடப்பட்ட நகரும் படம். இது எப்படி சாத்தியமாகும்? புகைப்படக் காமெராவை உபயோகித்து, 3 அல்லது 4 செகண்டுகளுக்கு ஒரு படம் என்று எடுத்து, அதனைக் கணினியின் உதவியால் நகரும் படமாக்கியிருக்கிறார்கள்.

இன்று இம்மாதிரியான இரண்டு மிகு அடர்த்தி (HD)விடியோக்களைப் பார்த்து வியக்கப் போகிறீர்கள்! முதலாவது விடியோ,அனைத்துலக விண்வெளி ஸ்டேஷன் என்னும் செயற்கைக்கோளிலிருந்து புகைப்படக் காமெராவால் சுடப்பட்டது. இதில் ஏறத்தாழ 18 வகையான கடவுளின் படைப்பை மனிதனின் படைப்பின் மூலம் கண்டு வியக்கலாம், வாருங்கள்!



இன்னொரு விடியோ, கனடா நாட்டிலுள்ள அழகிய நகரமான வான்கூவரில் எடுக்கப்பட்டது. இதில் மேகக் கூட்டங்களின் நடுவே நகரத்தின், நதியின் அழகு அற்புதமாகப் படமாக்கப் பட்டிருக்கிறது.

Thursday, February 9, 2012

உதய பூமி!!

எவ்வளவோ நாட்களில் நிலவு உதயமாவதைப் பார்த்திருப்போம். ஆனால், நிலவிலிருந்து பூமிப்பந்து உதயமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்று பார்க்கலாம்!

ஜப்பானிய விண்கலமான காகுயா (Kaguya) நிலவைச் சுற்றிவரும்போது எடுத்த மிகுஅடர் விடியோ இது. கடந்த ஏப்ரல் 5, 2008 அன்று (நமது அமாவாசை தினத்தில்) இந்த விண்கலம் நிலவின் வெளிச்சமான பகுதியிலிருந்து இருட்டான பகுதிக்கு வரும்போது எடுக்கப்பட்டிருக்கிறது! கீழே கொடுக்கப் பட்டிருக்கும் ’லிங்க்’ கைச் சொடுக்கி,ஒரு நிமிடத்திற்குச் சற்று அதிகம் ஓடும் இந்த விடியோவைப் பார்த்து அனுபவிக்க வாருங்கள்!

A spectacular view of Earth from Japanese lunar orbiter Kaguya [VIDEO]

Saturday, January 28, 2012

சாலைகள், சாலைகள்! பகுதி -2

அழகான சாலைகளின் படங்கள் - இரண்டாம் பகுதி. படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.






சாலைகள், சாலைகள்! பகுதி -1

சாலைகள் எல்லா ஊரிலும், ஊர்களை இணைக்கவும் இருக்கும். இங்கே, அத்தகைய சாலைகளில் சில அழகானவற்றின் படங்களை இரண்டு பகுதிகளாகப் பாருங்கள். படத்தின் மீது சொடுக்கினால், பெரிதாகப் பார்க்க முடியும்.





கொசுவை விரட்ட மூன்று வழிகள்!

என் இனிய நண்பர்களே!

கடவுளும் கொசுவும் ஒன்றென்பார்கள். இருவரும் வியாபிக்காத இடமே உலகில் கிடையாது! நாமும், கொசுவத்தி,சுருள்,பில்லை என்று என்னென்னவோ செய்தும் நம்முடனான தனது பந்தத்தை அறுப்பதாக இல்லை கொசுவார்!

இன்று எனக்குக் கிடைத்த தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. கொசுக்களை விரட்ட, விலை குறைவான, அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடிய வழிகள் ஒன்றல்ல, மூன்று சொல்லப் போகிறேன், கவனியுங்கள்! வீட்டில் அனேகமாக சூடம் (கற்பூரம்) இருக்குமல்லவா? அதில் இரண்டு பில்லைகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

முதல் வழி: வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் (படத்தில் உள்ளதுபோல்) அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்...கொசு போயே போச்சே!



அடுத்தது: கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.

மூன்றாவதாக, (அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

இலவச இணைப்பாக: வீட்டில் யாருக்கேனும் நெஞ்சில் சளி கட்டியிருந்தால், கற்பூர எண்ணையைக் கொஞ்சம் மார்பில் தேய்த்துவிடுங்கள். சளியும், மூக்கடைப்பும் அகன்றுவிடும்.

செய்துதான் பாருங்களேன்!

Friday, January 27, 2012

நம்பமுடிகிறதா??? (மணல் ஓவியங்கள்!)

நமது நாட்டைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் எனும் ஒடீசியக் கலைஞர் மணல் சிற்பங்கள் வடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர். இவரின் கடற்கரை ஓர மணல் சிற்பங்கள் பரிசு வாங்காத இடமே உலகில் இல்லை எனலாம்.பல ஊடகங்களில் இவரின் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், இன்று நீங்கள் பார்க்கப் போகும் விடியோ, மணல் ஓவியம் பற்றியது.இலானா யாஹவ் எனும் பெண் கலைஞர் தீட்டியது.

'ஒரு மனிதனின் கனவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்த ஒவியத்தைத் தீட்ட, இவர், வண்ணங்களையோ, பிரஷ்களையோ உபயோகிக்கவில்லை! ஒரு கண்ணாடிப் பலகையின் மேலே மணலைத் தூவிவிட்டுத் தன் வலது கையையும் விரல்களையும் உபயோகித்து எத்தனை விதமாக உங்களைக் கவர்கிறார், பாருங்கள்! இந்தக் கலை, உங்களை உண்மையில் வியப்பின் உச்சிக்குக்கொண்டுபோகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை! இதோ, இலானா யாஹவ்:

Tuesday, January 24, 2012

சீனப் பெருஞ்சுவரும் மாயாஜாலமும்!

’யூ ட்யூப்’ (www.youtube.com) என்ற இணையதளம் மிகப் பிரபலமானது. இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் விடியோ படைப்புக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இந்தத் தளத்தில், சில செகண்டுகள் ஓடும் நிகழ்ச்சிகள் முதல், தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்கள், , முழுத் திரைப்படங்கள் உள்பட கேட்டதெல்லாம் கிடைக்கும்! யூட்யூபிலிருந்து தினம் ஒரு விடியோவை உருவினால் போதும், வருடக் கணக்கில் ‘நானும் சிறந்த ப்ளாக் எழுத்தாளன்’என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும். (ஹி,ஹி, நீ இப்போதும் அதைத் தானே செய்துகொண்டிருக்கிறாய்? என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் கலைச் சேவை செய்து கொண்டிருக்கும் போது குறுக்கே வரக்கூடாது, ஓ கே?!)

இன்று அமெரிக்காவின் மிகப் பிரபலமான மாயாஜால நிபுணர் (மேஜிஷியன்) டேவிட் காப்பர்பீல்ட், சீனப் பெருஞ் சுவரின் குறுக்கே, அதாவது ஒருபக்கம் நுழைந்து மறு பக்கம் வெளியே வந்து செய்த சாதனையைப் பற்றிய யூட்யூப் விடியோவைப் பார்க்கப் போகிறீர்கள். இந்த நிகழ்ச்சி, உண்மையான் சீனப் பெருஞ்சுவரில், உண்மையான மக்கள் கூட்டத்தினர் முன்னே நடந்தது!

டேவிட், தனது ஐந்து வயதிலிருந்தே இந்தக் கலையில் ஈடுபட்டிருக்கிறார். நியூயார்க்கில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலை, உலகின் மிகச் சிறந்த ரயிலான ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு விமானம் போன்றவைகளை, பெரும் மக்கள் கூட்டத்தினர் கண் முன்னே நொடியில் மறைத்துத் திரும்பவும் காட்சியளிக்கச் செய்திருக்கிறார்! இவற்றில் பலவற்றை நீங்கள் யூ ட்யூப் தளத்திற்குச் சென்று ‘David Copperfield' என்று தேடச்சொன்னால் பார்க்க முடியும். இப்போது, வாருங்கள், வியப்பின் உச்சிக்கே போகலாம்!