Monday, October 31, 2011

திலகம் பாடுகிறார்!


இசையமைப்பாளர்கள் பாடுவது புதிதல்ல. மன்னர்களில் ஒருவரான எம்.எஸ்.விசுவநாதன் பாடகராகவே மாறியதை அறிவீர்கள். அவரோடு ராமமூர்த்தி ரேடியோ சிலோனில் பாடியது பற்றி நான் எழுதியிருந்ததும் நினைவிருக்கும். இன்னும், அந்தக் காலத்திய ஜி.ராமநாதனும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்காலத்தில், இளையராஜா, தேவா போன்ற பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று நாம் ரசிக்கப் போகும் பாடல், மிகவும் அரியது. இந்த இசையமைப்பாளர், இந்தப் பாடலைப் பாடும் போது அவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லை! இசையமைப்பாளராகப் புகழ் பெற்ற பிறகோ, அவர் மைக்கின் பக்கமே வரவில்லை! திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனைப் பற்றித் தான் சொல்கிறேன். திரைக்காக அவர் பாடியிருக்கும் ஒரே பாடலை இன்று கேட்கப் போகிறோம். அவருடன் இணைந்து, பி.லீலா பாடியிருக்கிறார். கேட்கும் படியான குரல் இருந்தும் ஏனோ கே.வி.எம் தொடர்ந்து பாடவில்லை!

பழைய பாடல் ரசிகராகிய உங்களுக்கு, இந்தப் பாட்டைக் கேட்கும் போதே, ‘இதே மெட்டை வேறு எங்கோ கேட்டிருக்கிறோமேஎன்று ஒரு சந்தேகம் வரும்! பி.லீலாவின் குரல் செய்யும் ஜாலமிது!

1950களில் வெளிவந்த இந்தப் பாடலும், 1970களில் வெளிவந்த ஜெமினியின் ‘இரும்புத்திரைபடத்தில் எஸ்.வி.வெங்கடராமன் இசையில் பி.லீலாவும் டி.எம்.சௌந்திரராஜனும் இணைந்து பாடியிருக்கும்

‘நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

என்ற பாடலும், திரை இசைத் திலகத்தின் இசையில் ‘தில்லானா மோகனாம்பாள்படத்தில் இடம் பெற்ற

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

எனும் சுசீலாவின் பாட்டும் ஒத்த மெட்டைக் கொண்டவை. இந்த மூன்று பாடல்களுமே ஷண்முகப்ரியா எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவியவை!

இருபது வருட இடைவெளியிலும் பி.லீலாவின் குரலில் மாற்றம் தெரியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்! அயராத சாதகத்தின் (பயிற்சியின்) விளைவு, அது! அதனால்தான் அந்தக் கால பின்னணிப் பாடகர்களால் எவ்வளவு பெரிய, கஷ்டமான பாட்டாக இருந்தாலும் ஒரே மூச்சில், ஒரே டேக்கில் பாடமுடிந்தது.

வழக்கமான திலகத்தின் இசையைப் போலவே, பாரம்பரிய வாத்தியங்கள், பாரம்பரிய இசை! இனியும் தாமதப் படுத்தாமல் பாடலை ரசிக்க உங்களை அழைக்கிறேன்:

Kannodu Kannai Rahasiam - K.V.Mahadevan & P.Leela.mp3 by Krishnamurthy80

இன்னொரு பாடலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம், நண்பர்களே!

Saturday, October 29, 2011

எம்ஜிஆரும் சீர்காழியும் இரு பாடல்களும்!


எம்ஜிஆரின் படங்கள், வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவற்றில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் வெற்றிபெறத் தவறியதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முக்கிய காரணம், அவருக்கிருந்த இசை ஞானம்! (கலைஞர் கருணாநிதியைப் போலவே) ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகரான அவர் தன் படங்களுக்கான பாடலின் மெட்டை எப்போதும் அவரே தேர்ந்தெடுத்தனால் இது சாத்தியமானது.

டி.எம்.சௌந்திரராஜனின் குரல் தான் எம்ஜிஆருக்கும் (சிவாஜிக்கும்) பொருத்தமானது என்று எல்லாரும் கூறிக் கொண்டிருந்த காலத்தில், எம்ஜிஆருக்கான பாடல்களை அன்றைக்கிருந்த எல்லாப் பின்னணிப் பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். (அடிமைப் பெண்படம் வெளிவரும் போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக இசைத்துறையில் அறிமுகமான சமயம். கே.வி.மகாதேவன் இசையில் ‘ஆயிரம் நிலவே வாபாடலை எஸ்.பி.பி பாடியிருந்ததைக் கேட்ட எம்ஜிஆரின் நெருக்கமான ஒருவர், “அதிகம் பிரபலமாகாத அறிமுகப் பாடகரின் இந்தப் பாடல் வெற்றி பெறுமா?என்ற சந்தேகத்தைக் கிளப்பினாராம். அதற்கு எம்ஜிஆர், “நமக்குப் பாடிவிட்டாரல்லவா, இனி தானாகவே அவர் (எஸ்.பி.பி) பிரபலமாகிவிடுவார், பாருங்கள்என்றாராம்!)

இன்று நாம் ரசிக்கப் போவது ஒரு வெண்கலக் குரலை என்று சொல்லி விட்டால், இந்தப் பாடலை, சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார் என்றும் சொல்லத் தேவையில்லை, அல்லவா?! 1959ல் வெளியான ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலிஎன்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலுக்கு இசை டி.ஆர்.பாப்பா. சீனியர் இசையமைப்பாளரான இவர் மல்லிகா (ஜெய்சங்கரின் அறிமுகப் படமான) ‘இரவும் பகலும்போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தாய் மகளுக்குக் கட்டிய தாலிதிரைப்படத்திற்கு அறிஞர் அண்ணா கதை, திரைக் கதை மற்றும் வசனமும் எழுதியிருந்தார். இருப்பினும், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்ததினால் ஏற்பட்ட குறைகளினால் படம் மோசமான தோல்வியைத் தழுவியது. அப்போது வெளி வந்த இந்தப் படத்தின் குமுதம் விமரிசனம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பையே உருவாக்கியது. ஒன்றுமில்லை, அந்த வார இதழில்இரண்டு பக்கம் விமரிசனம். ஒரு முழுப் பக்கத்தில், படத்தின் ஒரு ஸ்டில். இன்னொரு பக்கம், நடுவில், சின்னதாக, (வேறெதுவுமே எழுதாமல்) கண்ணறாவி என்று போட்டிருந்தார்கள்! குமுதத்தில் ஒரே வார்த்தை விமரிசனம் பெற்றுச் சாதனை படைத்தது தா.ம.க.தாலி மட்டுமே!

ஆனால், சீர்காழியும் (கீச்சுக் குரலில்) ஜானகியும் பாடியிருந்த ‘ஆடிவரும் ஆடகப் பொற் பாவையடி நீ மற்றும் டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருந்த சின்னஞ்சிறு வயது முதல் போன்ற பாடல்களோ, இன்று கூடப் பிரபலம்! பாடல்களை கே.டி.சந்தானம் (இவர் பாடலாசிரியர், நடிகர்) மற்றும் உடுமலை நாராயண கவியும் எழுதியிருந்தார்கள். சீர்காழி பாடியிருக்கும் இந்த ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் பெரும் புகழ் சேர்த்தத்துடன், எம்ஜிஆரையும் முற்றாகக் கவர்ந்து விட்டது.

எந்த அளவிற்கு என்றால், பின்னாளில் அவர் தயாரித்து, இயக்கி இருவேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘நாடோடி மன்னன்‘ திரைப் படத்தில் இதே போல ஒரு பாடலை இடம் பெறச் செய்தார்! எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில் ‘உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம்‘ என்ற அந்தப் பாடலையும் சீர்காழியே பாடினார்! அந்தப் பாடலும் சீர்காழியின் மகுடங்களில் ஒன்றானது!

ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், தமிழ்நாட்டின் சிறப்புகளை யெல்லாம் வரிசைப்படுத்துகிறது. எம்.கே.டி.பாகவதரின் பிரசித்தி பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ, மற்றும் சிவாஜியின் ‘வசந்த முல்லை போலே வந்துபாட்டுக்களின் ராகமாகிய சாருகேசியில் ஆரம்பித்து, சிவாஜியின் மகாராஜன் உலகை ஆளுவான், மற்றும் மாதவிப் பொன் மொழியாள் பாட்டுக்களின் ராகமான கரகரப்ரியாவை இணைத்து, இரண்டு ராகங்களின் கோர்வையாக (‘ராக மாலிகையாக) அமைந்திருக்கிறது. இந்தப் பாட்டின் தாளம் தபலாவுடன் (குதிரையின்) குளம்புச் சத்தமும் சேர்த்து பாடல் முழுவதும் ஒரே கதியில் (அதாவது வேகத்தில்) பயணிக்கும்.

கோர்விசையிலும், சில சமயம் பாடகருடனும் சேர்ந்து ஒரு சீழ்க்கை (விஸில்) சத்தம் வருகிறதல்லவா அதற்கு Metal flute என்ற காற்று வாத்தியம் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. மரத்தாலான புல்லாங்குழலைப் பார்த்திருப்பீர்கள். இந்த மெட்டல் ப்ளூட் என்பது உலோகத்தால் ஆனது. மொத்தமே அரை அடி நீளத்தில் (நாதசுரம் போல) நேர் வாக்கில் வாசிப்பார்கள். குளம்புச் சத்தம் எப்படி வருகிறது தெரியுமா? ஒரு அரைக் கொட்டாங்கச்சியையும் ஒரு சிறு (தடியான) குச்சியையும் முறைப்படி உபயோகப் படுத்துவதனால் வரும் ஒலி அது!

காதிலும், கருத்திலும் நெஞ்சத்தை நிறைக்கும் இந்த அருமையான பாடலை இப்போது கேட்போமா?

Ondralla Irandalla Thambi by Krishnamurthy80

இன்னொரு பதிவில் சந்திக்கலாம், நண்பர்களே!

Thursday, October 27, 2011

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!



(நண்பர்களே! மேலே இருக்கும் படத்திற்கும் இன்றைய பாட்டுக்கும் சம்பந்தமில்லாத சீர்காழி கோவிந்தராஜன், மெல்லிசை மன்னர்களோடு அமர்ந்திருக்கிறார். இவர்கள் மூவரும் தத்தம் துணைவியருடன் இருக்கும் ஒரு அரிதான புகைப்படம் என்பதால் இதை இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன்!)

சோகத்திலும் ஒரு சுகமிருக்கிறது என்று கண்ணதாசன் சொல்லியது மிகவும் உண்மை! நாம் ரசித்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் சோகமாகவே அமைந்திருப்பது தற்செயல் அல்ல!

இன்று, நமக்காக ஜமுனாராணி ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்என்ற கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு சோகப் பாடலைப் பாடுகிறார்.

கவலை இல்லாத மனிதன், கண்ணதாசனின் சொந்தப் படம். மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தார்கள். சந்திரபாபு கதாநாயகனாக நடித்திருந்தார். (இவர் கதாநாயகனாக நடித்த இன்னொரு படம் ‘குமார ராஜா’. அந்தக்காலத்திலேயே ஒரு படத்துக்கு ரூ.ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர், சந்திரபாபு!) இவரைத் தவிர, எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, டி.ஆர்.மகாலிங்கம் முதலியவர்கள் கவலை இல்லாத மனிதன் படத்தில் நடித்திருந்தார்கள். பாடல்கள் எல்லாமே அற்புதமானவை. பாருங்களேன், நமது இன்றைய பாடலைத் தவிர,

‘காட்டில் மரம் உறங்கும்,

கழனியிலே நெல் உறங்கும், என்ற ஜமுனாராணியின் இன்னொரு பாட்டும்,

‘சிரிக்கச் சொன்னார், சிரித்தேன்,

பார்க்கச் சொன்னார் பார்த்தேன்என்ற சுசீலாவின் பாட்டும்,

இந்தப் படத்திலேயே மிகவும் பிரபலமான,

‘பிறக்கும் போதும் அழுகின்றாய்மற்றும்,

‘கவலையில்லாத மனிதன்என்ற

சந்திரபாபுவின் பாட்டுக்களும் கேட்கும் போதெல்லாம் இனிப்பவை!

இவை போதாதென்று, டி.ஆர்.மகாலிங்கமும் தன் பங்குக்கு,

‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா

என்ற நல்லதொரு பாடலையும் பாடியிருப்பார்!

இதெல்லாம் சரி, நீங்கள் எல்லாரும் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியதைக் கேட்டிருக்கிறீர்கள். ராமமூர்த்தி பாடியதைக் கேட்டதுண்டோ?!

இந்தக் ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக (படம் வெளிவரும் முன்) ரேடியோ சிலோனில் மன்னர்கள் இருவரையும் பேட்டி கண்டார் மயில்வாகனன் என்ற புகழ் பெற்ற அறிவிப்பாளர். பேட்டியின் முடிவில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்னர்கள் இருவரும் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்பாடலின் சில வரிகளைப் பாடினார்கள்! தொடர்ந்து சந்திரபாபுவின் பாட்டும் முதல் முறையாக ஒலிபரப்பானது!

இன்றைய பாடலுக்கு வருவோம்!

ஜமுனாராணி, மன்னர்கள் இசையில் தனியாகப் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். (மகாதேவி திரைப்படத்தில் ‘காமுகர் நெஞ்சில் ஈரமில்லைஎன்ற பாட்டும், குலேபகாவலி படத்தில் ‘ஆசையும் என் நேசமும்என்று போதையில் பாடும் பாட்டும் இங்கே இடம் பெறத் தகுந்த சிறந்த பாடல்கள்).

காதலன் இருக்க, வேறொருவன் தன்னைப் பெண் பார்க்க வந்த போது, தந்தையின் வற்புறுத்தலால் ஒரு பெண் (எம்.என்.ராஜம்) பாடும் பாடல் இது. அவளைப் பெண் பார்க்க வந்திருப்பவர்களின் உற்சாகத்தைத் தாளத்தில் (தபலா, டோலக்) அழகாகக் காட்டும் மன்னர்கள், பெண்ணின் சோகத்தை, பாடுபவரின் குரலிலும், அவள் பாடும் வார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் (ஸாரங்கி, ஷெனாய், கிடார்) அற்புதமான மெட்டிலும், கோர்விசைப் பின்னலிலும் கொடுத்திருப்பார்கள்! இந்தப் பாடலில் வயலின் கூட மிகவும் சிறிதளவே உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது, தெரிகிறதா?

ஜமுனாராணியின் குரல் விசேஷமானது. பாடும் போதே குரலில் ஒரு சிறு உடைப்பு தெரியும். (சீர்காழியின் குரலிலும் இது உண்டு!). முக்கியமாகச் சோகப் பாடல்களில் இந்த உடைப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் பாடலுக்குத் தனி மெருகூட்டும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Penn paarkka maappillai by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Tuesday, October 25, 2011

பொன் என்பேன், சிறு பூவென்பேன்!






மன்னர்களின் இன்னொரு பரிபூரண மெலடியை ரசிக்க வருகிறீர்களா?

போலீஸ்காரன் மகள்திரைப்படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. (அதற்கு முன்னர், நடிகர் சகஸ்ரநாமத்தின் ஸேவாஸ்டேஜ் நாடகக் கம்பெனியினரால் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடிக்கப் பட்டது). இந்தப் படத்திற்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் கூட்டுதான்! ஸ்ரீதரின் படங்கள் எல்லாமே பாடல்களுக்குப் பெயர்பெற்றவை. அதிலும் (நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, கலைக்கோவில் போல) இந்தக் கூட்டணியும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? (கேட்கத்தான் வேண்டும்!!!)

இந்தப் படத்தில் (ஒரு பாடலைத் தவிர) எல்லாப் பாடல்களையும் பின்னணியில் பாடியவர்கள், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜானகி! அந்த ஒரே ஒரு பாடலை (கண்ணிலே நீர் எதற்கு?’) ஜானகியோடு சேர்ந்து சீர்காழி பாடினார். சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பின்னணிப் பாடல் உலகையே தங்கள் வசம் வைத்திருந்த காலத்தில், இந்த மாதிரி வேறு பாடகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து இசையமைப்பாளர் தான் எஜமானர் என்று அவ்வப்போது பறை சாற்றிக் கொண்டிருந்தனர் நமது மன்னர்கள்! (இன்னொன்று நினைவுக்கு வருகிறது: ‘கற்பகம் படத்தில் நான்கே பாடல்கள், நான்கையும் சுசீலாவே பாடினார்! ‘பாலும் பழமும் படத்தின் எல்லாப் பாடல்களையும் டி.எம்.எஸ் சுசீலா பாடினார்கள்!)

சாதாரணமாக, ஒரு பாடகரின் ‘ரேஞ்ச் (வீச்சு) என்பது, அவர்கள் கீழ்ஸ்த்தாயிலிருந்து மேல்ஸ்தாயி வரை கஷ்டப் படாமல், (கஷ்டப் படுத்தாமலும்!) சுலபமாக சஞ்சாரம் (போக்கு வரத்து!) செய்யும் திறமை ஆகும். (ஸ்தாயி என்பது எந்த நிலையிலும் ஸ்ருதியை விட்டு விலகாமல் இருப்பது). இன்று நாம் ரசிக்கப் போகும் பாடலைக் கேட்டால் இது உங்களுக்குச் சுலபமாக விளங்கிவிடும்.

பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் மிக மென்மையானது. இந்தப் பாடலுக்கு முன்னர் அவர் பாடியிருந்த எல்லாப் பாடல்களும் அவருக்குச் சௌகரியமான ஸ்ருதி மற்றும் ரேஞ்சிலேயே இருந்தது. ஜானகிக்கும் (அந்த நாட்களில்) மேலே போகப் போக, குரல் சற்று க்ரீச்சிட ஆரம்பிக்கும். இங்கேதான் இசையமைப்பாளரின் திறமையும் அவதானிப்பும் வருகிறது!

தர்பாரி கானடா என்கிற வட இந்திய ராகத்தை வைத்துப் பின்னப் பட்ட இந்தப் பாடலில் எல்லோரும் சேர்ந்து நமது ரசிப்பையே வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்! (இதே ராகம், நமது கர்நாடக சங்கீதத்தில் கானடா என்று அழைக்கப் படுகிறது. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் பிரபலமான பாடல் ‘முல்லை மலர் மேலேஇந்த ராகந்தான்! இசையமைப்பாளர் ஜி.ராமநாதனுக்கு இந்த ராகம் ரொம்பவும் பிடித்தது. நிறைய மெட்டுக்கள் கானடா ராகத்தில் அமைத்திருக்கிறார்).

இவ்வளவு தூரம் நமது கவனத்தைக் கவர்ந்த, கண்ணதாசனின் ‘பொன் என்பேன், சிறு பூ என்பேன் பாடல், பொன் என்பேன்என்று மிகக் கீழ்ஸ்தாயியில் ஆரம்பிக்கும். பாட்டின் பல்லவியை மட்டும் கேட்டால், பாடுவது பி.பி.எஸ். ஜானகியா என்று சந்தேகமே வரும்! அவ்வளவு கீழே தொடங்கும் பாட்டு, சரணத்தில் ‘உனை நானறிவேன், எனை நீ அறிவாய்என்று மிக மேலே போகும்.

பாடகர்களோடு குழலும், ஸிதாரும் தபலாவும் இசைந்து இன்பமூட்டுகின்றன. முதல் சரணம் ஆரம்பிக்குமுன் வீரிட்டு எழும் வயலின்களின் ஒலி நிச்சயமாகச் சிலிர்க்க வைக்கும். பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் போது ராமமூர்த்தியின் ஒற்றை வயலின் அவர் கூடவே வருவதையும் கவனியுங்கள்!

பி.பி.எஸ் ஜானகி இருவருக்கும் இந்தப் பாடல் அவர்கள் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்!

பாடலைக் கேளுங்களேன்:

Pon enbean siru poo enbean by Krishnamurthy80

மற்றொரு பாடலோடு மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Sunday, October 23, 2011

அபூர்வ சகோதரர்கள்!

இங்கே பல பதிவுகளில் நாம் வித்தியாச மான குரல்களைப் பற்றிப் பேசும் போது பானுமதியின் குரலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அவர் பாடிய ஒரு மென்மையான காதல் பாடலை இன்று கேட்போமா?

1949 ல் வெளிவந்த ஜெமினியின் ’அபூர்வ சகோதரர்கள்’, ஒரு பிரபலமான ஆங்கில நாவல் மற்றும் திரைப்படத்தைத் தழுவி ஆச்சார்யா என்பவரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் சூப்பர் ஹிட் ஆனது. (பின்னாளில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து, நீரும் நெருப்பும் என்ற பெயரில் அதே கதையை மீண்டும் எடுத்தார்கள்).

பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், இசை. ஜெமினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் களான எஸ்.ராஜேஸ்வர ராவ், எம்.டி.பார்த்தசாரதி ஆகியோர் இசை யமைத்திருந்தார்கள். சரித்திரக் (கற்பனைக்) கதையான இதில், ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவர்களில் ஒருவரைக் காதலிப்பார் கதாநாயகி பானுமதி. படத்தில் ஒரு காட்சியில் ராணுவ வீரர்களை ஏமாற்றிவிட்டு வெளியேற, பானுமதி,

‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா,

ரவா லாடு பூரியும் வேணுமா

என்று ஒரு பாடல் பாடி ஆடுவார்.இந்தப் பாட்டில், தமிழோடு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் பாடிடுவார். அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

’அபூர்வ சகோதரர்கள்’ படம் முழுவதும் முடிந்து, வெளியிடத் தயாராகிவிட்ட நிலையில், வேறொரு இந்திப் படத்திற்காக ஜெமினியில் ஒலிப்பதிவு செய்யப் பட்ட (நமது இன்றைய) பாடலின் மெட்டைக் கேட்டாராம் எஸ்.எஸ்.வாசன். அந்த மெட்டினால் முற்றிலும் கவரப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் அதை இடம் பெறச் செய்தாராம்.

அந்த மெட்டை, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் பானுமதி மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். பானுமதியின் குரலோடு மதுரமான பியானோ இசையும் பாடல் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப இசையில் பியானோ வாசித்திருப்பது கேட்க எவ்வளவு சுகமாக இருக்கிறது பாருங்கள்! அது மட்டுமில்லை, பானுமதி பாடும் போது வாசிக்கப் படும் பியானோவின் கார்ட்ஸ் எவ்வளவு அழகாக இணைகிறது! தபலாவும், குழலும் இருந்தாலும் அவை வெறும் துணை மட்டும் தான். பியானோ என்கிற மேற்கத்திய வாத்தியத்தை நமது சங்கீதத்திற்கேற்ப ராஜேஸ்வர ராவ் எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார், என்பதையும், அத்துடன் (1948-49ல்) எவ்வளவு துல்லியமாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கூடக் கவனியுங்கள்! படத்திலும் இந்தக் காட்சியை அழகாகப் படம் பிடித்திருப்பார்கள். பானுமதியின் கைகள் மேல் ராதாவின் கைகளை வைத்து இரண்டு பேரும் இணைந்து பியானோ வாசிப்பது போல காட்டுவார்கள். அந்தக் காலத்தில் இது மிகவும் செக்ஸியான சமாசாரம்! பாடலைக் கேளுங்கள்:

Apoorva Sagotharargal -Maanum Mayilum.mp3 by Krishnamurthy80


மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Friday, October 21, 2011

பாரதியும், மன்னர்களும், சக்கரவர்த்தியும்!










மூன்றுக்கு மேற்பட்ட தலைமுறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

கவியரசு கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போலத் தரமான பாட்டுகள் எழுதலாம். அல்லது, ஒரு எஸ்.வி.வெங்கட்ராமன், ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், மெல்லிசை மன்னர்கள், திரை இசைத் திலகம் போல காலத்தால் அழிக்க முடியாத மெட்டுக்களைக் காற்றில் உலவ விடலாம். அல்லது, எக்காலத்திலும் அழியாப் புகழ் பெற பாரதியைப் போல கவியாகிடலாம்!

இவை யாதும் கைகூடவில்லை என்றால் இருக்கும் திறமையை நான்கு ஆட்களை வைத்தாவது வெளிச்சம் போட்டுக் காட்டி, ‘நான் மும்மூர்த்திகளை விட உயர்ந்தவன் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம்! பொய்யையும் திரும்பத் திரும்பச் சொல்லியே அதை மெய்யென்று நம்ப வைத்து விடுகிற உலகம் தானே, இது!

ஆகட்டும், நாம் நமது வேலையைப் பார்ப்போம்! நாம் எடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் ஏகப்பட்ட ஜீனியஸ்கள் உலா வந்தனர். பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களும் அருமையான தொழில்நுட்ப வல்லுனர்களும், நடிக, நடிகையரும், பாடகர்களும் இவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமைக்காகவே ஒரு படத்தைப் பல முறைகள் பார்க்க வைத்தனர். அதைத் தமிழ்த் திரையின் பொற்காலமென்றே சொல்ல வேண்டும்! (பல தடவைகள் பார்த்த ‘பாவமன்னிப்புபடத்தை, சில முறைகள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே பார்த்தது நினைவுக்கு வருகிறது!)

இன்று, சற்று வித்தியாசமான விருந்தொன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. பல ஜீனியஸ்கள் ஒன்று சேர்ந்தால் என்ன கிடைக்கும்? நமக்கு நல்ல செமத்தியான படைப்பு ஒன்று கிடைக்கும்!

பாரதியின் கற்பனைகள் வானத்தை விஞ்சியவை. இல்லாவிட்டால், அன்னியரின் இருண்ட ஆட்சியிலே, ஒரே சமயம் தேசபக்திப் பாடல்களையும் கண்ணன் பாட்டுகளையும், காணி நிலம் வேண்டும்’, ‘சிந்து நதி மிசை நிலவினிலே போன்ற கற்பனைப் பாடல்களையும் போன்ற பல காவியங்களை உருவாக்கியிருக்க முடியுமா?

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கதை மற்றும் பாடலாசிரியராகிப் பின்னர் இயக்குனரானவர். அதாவது, இயக்குனர் ஸ்ரீதரின் வழி வந்தவர். பெரும் வெற்றி பெற்ற சாரதா, பணமா, பாசமா’, குலமா, குணமா படங்களை எழுதி, இயக்கியவர். இவரின் இன்னொரு படைப்புத்தான் ‘கை கொடுத்த தெய்வம்’. சிவாஜி, சாவித்ரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா நடித்திருந்தார்கள். கண்ணதாசன், பாரதியார் பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசை யமைத்திருந்தார்கள்.

படத்தில் சிவாஜி உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் போது அவர் கனவில் இந்தப் பாடல் வரும். அவரே பாரதியாராகி, ‘சிந்து நதியின் மிசை நிலவினிலேஎன்று பாட ஆரம்பிப்பார்.

சிவாஜி எத்தகைய அற்புதமான கலைஞன், என்பதில் யாருக்கேனும் சந்தேகம் (!) வந்தால், இந்தப் பாடல் காட்சியையும், ‘திருவிளையாடல்படத்தில் வரும் (கெளரிமனோகரி ராகத்தில் அமைந்த) ‘பாட்டும் நானேபாடல் காட்சியையும் போட்டுக் காண்பியுங்கள்! சிவாஜிதான் நடிப்புலகச் சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொண்டு விடுவார்! தேஷ் என்ற ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த ‘சிந்து நதியின் மிசைபாட்டில், தன்னுடைய முகம், இடதுகை (வலது கை கூட பாட்டின் பிற்பகுதியில் தான் தெரியும்!) இவற்றை வைத்தே நமது கண்களில் நீரை வரவழைத்திருக்கும் உத்தமக் கலைஞன் சிவாஜி!

இந்தப் பாடலைப் படத்தில் இணைக்க வேண்டும், அதை இந்த இடத்தில் சேர்க்கவேண்டும், இப்படித்தான் படமாக்க வேண்டும், என்று எண்ணிச் செயல் படுத்தியிருக்கும் கே.எஸ்.ஜியும் சாதாரணமானவரில்லை!

எல்லாவற்றிற்கும் மேலாக, பாடலுக்கு ஆரவாரமில்லாத பாரம்பரிய இசையமைத்திருக்கும் மன்னர்களின் பணி, மகத்தானது. பாடியிருக்கும் டி.எம்.எஸ் கூட ஒரு ஜீனியஸ்தானே! இந்த பாடலில் வரும் தெலுங்கு வரிகளை ஜே.எல்.ராகவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள்.

இது தேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சி. இதில், இசையமைத்த மன்னர்களுக்கும் பாடியவர்களுக்கும் மட்டும் மரியாதை செய்வது சரியென்று படவில்லை. அதனால் பாட்டின் விடியோவை உங்களுக்கு அளிக்கிறேன். பார்த்து, கேட்டு இன்புறுங்கள்!

இன்னொரு பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!

Wednesday, October 19, 2011

வளரும் பிறையே, நீ போதும்!












ஒரு குளுமையான தாலாட்டைச் சென்ற பதிவில் ரசித்தீர்கள் அல்லவா? இன்று, 1960களில் வெளியான ‘பதிபக்திபடத்திலிருந்து மற்றொரு பிரபலமான சோகத் தாலாட்டை ரசிக்கவிருக்கிறோம். இதே படத்திலிருந்து சுசீலா பாடிய ‘இரை போடும் மனிதருக்கேஎன்ற துள்ளல் பாடலை வேறொரு பதிவில் ரசித்ததை மறந்திருக்க மாட்டீர்கள்.

பதிபக்திபடத்தின் அனைத்துப் பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதியிருந்தார். பீம்சிங்கின் இயக்கத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜி.என்.வேலுமணி. இவர் சரவணா பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றிப் படங்களை நமக்குக் கொடுத்தவர்.

இவரைப் பற்றி மேஜர் சுந்தரராஜன் ஒரு முறை குறிப்பிட்டார். மேஜர் சென்னையில் காரில் சென்று கொண்டிருக்கும் போது சாலையில் வேலுமணி வறுமையான தோற்றத்துடன் நடந்து வந்து கொண்டிருந்ததைப் பார்த்தாராம். உடனே காரை நிறுத்தி, ‘என்னண்ணே, எப்படிப் பட்டவர் நீங்கள், நடந்து செல்கிறீர்களே, வாருங்கள், எனது காரிலேயே செல்லலாம்என்று அழைத்தாராம். அதற்கு வேலுமணி அளித்த பதில்: ‘வேண்டாம், தம்பி! இப்போது எனக்கு நடந்து செல்லவேண்டும் என்பதுதான் விதி!காலம் என்பது எப்பேர்ப்பட்டவனையும் சுழற்றி அடிக்கும் என்கிற வாழ்க்கைத் தத்துவத்தை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறார் பாருங்கள்!

இன்றைய பாடலின் கதையிலும் அத்தகைய சூழ்நிலைதான்! மகன் காதலித்துத் திருமணம் புரிந்த பெண்ணை, அவள் கணவன் வெளியூரில் இருக்கும் போது, குழந்தையுடன் ஊரை விட்டே துரத்துகிறார்,அவன் பணக்காரத் தந்தை. அவள் ஒரு குடிசையில் தன் குழந்தையைத் தாலாட்டிப் பாடுகிறாள்:

‘பாப்பா உன் அப்பாவைப் பார்க்காத ஏக்கமோ,

பாய்ந்தே மடிதனில் சாய்ந்தால் தான் தூக்கமோ,

தப்பாமல் வந்துன்னை அள்ளியே அணைப்பார்,

தாமரைக் கன்னத்தில் முத்தங்கள் விதைப்பார்,

குப்பை தன்னில் வாழும் குந்துமணிச் சரமே,

குங்குமச் சிமிழே, ஆராரோ!

அப்பா, முத்தங்களை ‘விதைப்பாராம்’! அடடா, என்ன ஒரு அழகான கற்பனை! தற்போது அருகில் இல்லாத அப்பாவைப் பற்றிக் கூறிய பின்னர், பட்டுக்கோட்டையார் தன் வழக்கம் போல, குழந்தைக்கு (நமக்கும்!), தன்னம்பிக்கை யையும் ஊட்டத் தவறவில்லை!

‘ஏழை நம் நிலையை எண்ணி நொந்தாயோ,

எதிர்கால வாழ்வில் கவனம் கொண்டாயோ,

நாளை உலகம் நல்லோர்கள் கையில்,

நாமும் அதிலே உயர்வோம் உண்மையில்

என்று கூறும் அவர், எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு தாய்க்கு வேண்டியது தம் மக்களைத் தவிர வேறில்லை என்பதையும் விடவில்லை!

‘மாடி, மனை வேண்டாம், கோடிச் செல்வம் வேண்டாம்,

வளரும் பிறையே, நீ போதும்.....

என்று முடிக்கிறார்! சில சாதாரண வரிகள், ஒரு சாதாரணத் தாலாட்டு, இவை ஒரிரு வித்தகர்கள் கையில் கிடைத்ததும் அது எப்படி எட்டமுடியா உயரத்துக்குச் சென்றுவிடுகிறது என்பதற்கு இந்தப் பாடலே சான்று!

இப்படி ஒரு அழகான பாடலை எழுதிக் கொடுத்துவிட்டார் கவிஞர். இதற்கு இசையமைத்திருக்கிறார்கள் பாருங்கள் மன்னர்கள்! இவர்களை ஏன் மன்னர்கள் என்று அழைத்தார்கள், அதற்கும் மேலே எங்கேயோ உலாவுபவர்கள் அல்லவா இவர்கள் என்று ஆச்சரியப்பட வைக்கும் மெட்டையும், கோர்விசையையும், (பாட்டின் பாவத்தை உள்வாங்கி, கதையின் போக்குக் கேற்ப சோகத்தையும்) வாத்தியங்களின் வாசிப்பில் கலந்து கொடுத்தால்.......உங்கள் திறமைகளுக்கு என்னுடையதும் சளைத்ததில்லைஎன்று மிக மிக உணர்ந்து, அருமையாகப் பாடியிருக்கிறார், சுசீலா!

இந்தப் பாடலும், சிட்டுக்குருவி, முத்தம் கொடுத்துஎன்கிற ‘புதியபறவைப் பாடலும் சுசீலாவின் சாகாவரம் பெற்ற பல பாடல்களில் இரு பாடல்கள் என்பதில் சந்தேகமில்லை!

இந்த இடத்தில் இன்னொரு சமாசாரத்தையும் உங்களுக்குச் சொல்லியே தீரவேண்டும்! ஒரு முறை, நானும் நண்பர் அமுதவனும், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனிடம் மெல்லிசைமன்னர்களைப் பற்றிக் குறிப்பிட்ட போது அவர் சொன்னார்:ஸார், அவங்களோட எல்லாம் எங்களை கம்பேர் பண்ணாதீங்க! அவங்க போட்டிருக்கிற ஒவ்வொரு ‘பாக் ரவுண்ட் ம்யூஸிக், ரீ ரெகார்டிங் ம்யூசிக்கை வச்சு நாங்கள்ளாம் பல பாடல்களே போட்டுடுவோம்என்று. இப்படி ஒரு பெயர் வாங்க எத்தனை இசை ஞானம், எத்தனை உழைப்பு வேண்டியிருந்திருக்கும்!

சுசீலாவின் குரலும், வயலின்களின் ஆட்சியும் இந்தப் பாட்டில் பரிபூரணம்! சிதாரும் கிடார் கார்ட்ஸும், தபலாவும், டபிள் பேஸும், (பாட்டின் கட்டக் கடைசியில் மிகச்சிறு இணைப்பு பிட் டாக ஒலிக்கும்) (muted) ட்ரெம்பட்டும்......இப் பாடல், மன்னர்களின் மற்றும் பல பாடல்களைப் போலவே ஒரு முழுமையான மெலடியாக மலர்ந்திருக்கிறது!

(ட்ரம்பெட் என்பது கட்டையான தொனி உடைய ஒரு மேற்கத்திய காற்று வாத்தியம். புதையல் படத்தில் சந்திரபாபு ‘உனக்காகஎன்ற பாட்டில் பின்னிசையில் இதை வாசிப்பார். இந்த வாத்தியத்தின் முன்னால் ஒரு அடைப்பானைப் பொருத்தி, அதன் சப்தத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது எங்கோ தூரத்திலிருந்து கேட்பது போலிருக்கும். இதை muted trumpet என்பார்கள். இதே பதி பக்தி படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘கொக்கர கொக்கரக்கோ சேவலே என்ற பாட்டிலும், ஜெமினியின் லோகோவின் signature tune னிலும் இந்த ம்யூடட் ட்ரம்பெட் வாத்தியத்தின் தொனியைக் கேட்கலாம்).

இப்போது இந்த இனிமையான தாலாட்டைக் கேட்கலாமா?

Chinnanjiru kan malar by Krishnamurthy80

தொடர்ந்து சில தாலாட்டுகளைக் கேட்டு ரசித்தோம். அடுத்த பதிவில் வேறு வகையான ஒரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Monday, October 17, 2011

பராசக்தியில் தாலாட்டு!

நாம் கேட்கவிருக்கும் தாலாட்டிற்கு, இன்று ஒரு முக்கியமான தினம். இன்றைக்குச் சரியாக 59 வருடங்களுக்கு முன்னர், 17-10-1952ல் வெளிவந்த மிகப் புகழ் வாய்ந்த பராசக்தி திரைப்படத்தில் இப் பாடல் இடம் பெற்றது. பின்னர் நடிகர் திலகமான சிவாஜி கணேசன் அறிமுகமான இந்தப் படத்திற்கு இசை ஆர்.சுதர்சனம். இவர் நீண்ட காலம் ஏவிஎம் ஸ்டுடியோஸின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். சில காலம் அவர்கள் திரைப் படங்கள் எடுப்பதை நிறுத்தியிருந்த போது அங்கிருந்து வெளியேறிப் பின்னர் ‘பூம்புகார், ‘அன்புக்கரங்கள்போன்ற பல வெற்றிப் படங்களுக்கும் இசையமைத்தார்.

ஏவிஎம் நிறுவனத்தினரின் திரைப்படங்களிலும், சின்னத்திரையில் அவர்களின் தொடர்களிலும் முதலில் அவர்களின் முத்திரை தோன்றும் போது கிளாரிநெட்டில் ஒரு அறிமுக இசை வருமல்லவா, அதற்கு மோகனம் என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் இசையமைத்தவரும் சுதர்சனம் தான். (இதே போல ஜெமினி நிறுவனத்தின் இரட்டைச் சிறுவர் லோகோவிற்கும் மோகன ராகத்தில் தான் (ட்ரம்பெட் வாத்தியத்தில்) மெட்டு அமைக்கப் பட்டிருக்கும்).

இந்த முகப்பு மெட்டு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல்: சின்னத்திரையும், வானொலி நிலையங்களும் 24 மணி நேரத் தொல்லைகளாக மாறுவதற்கு முன்னால், ஒவ்வொரு நிலையத்துக்கும் தனித் தனியே அறிமுக இசை உண்டு. அந்த மெட்டைக் கேட்ட உடனேயே நீங்கள், அது இன்ன ரேடியோ ஸ்டேஷன் அல்லது இன்ன டிவி சானல் என்று சொல்லிவிட முடியும். அத்தகைய மெட்டை, ஆங்கிலத்தில் Signature tune என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் அந்த மெட்டு ஒலிக்கும். ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம்.

சின்னத்திரையில் தூர்தர்ஷனுக்காகப் போடப்பட்ட பிரத்தியேக மெட்டுக்கு வட இந்திய ஸிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இசையமைத்தார். இது ஷெனாய் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும். அதற்கு மிகவும் முந்தைய ஸ்தாபனமான அகில இந்திய வானொலிக்காக போடப் பட்ட மெட்டுக்கு, (இது வயலின் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும்) ரவிசங்கரின் தந்தைதான் இசையமைப்பாளர்! இரண்டுமே சிவரஞ்சனி என்ற ராகத்தில் (பாலும் பழமும்படத்தில் வரும் ‘நான் பேச நினைப்பதெல்லாம்பாடலின் ராகம்) அமைந்தவை.

ஏவிஎம் படங்களில் பாரதியாரின் (தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற) பல பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைக் கர்நாடகக் கச்சேரி மேடைகளுக்கும் கொண்டு சென்ற திறமையாளர் சுதர்சனம். அத்தோடு 1940களிலேயே டி.கே.பட்டம்மாள் என்கிற பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியை திரை இசைக்கு அறிமுகப் படுத்தியவரும் இவர்தான். இந்த டி.கே.பியின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன் தான் (ஜீன்ஸ்படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்(பீம்ப்ளாஸ் ராகம்). படையப்பா படத்தில் மின்சாரக் கண்ணா’ (வசந்தா ராகம்) முதலிய பாடல்களைப் பாடியவர்.

இசையமைப்பாளர் சுதர்சனத்தின் தம்பி தான் ஆர்.கோவர்தனம். இவர், மெல்லிசை மன்னர்களிடமும், இளையராஜாவிடமும் ‘இசை நடத்துனர் (Orchestra Conductor) ஆக இருந்தவர். தனியே, கைராசி,பட்டணத்தில் பூதம் போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.

பராசக்தி படத்தின் பாடலுக்கு வருவோம். படத்தில் ஸ்ரீரஞ்சனி என்கிற நடிகை சிவாஜி சகோதரர்களின் தங்கையாக வருவார். இயற்கையாகவே மிகச் சோகமான தோற்றம் கொண்ட இவர், பராசக்தி படத்தில் விதவையாக, தன்னுடைய குழந்தையைத் தாலாட்ட இந்தப் பாடலைப் பாடுவார். பாடுவது தங்கை என்ற உண்மையை அப்போதுதான் தெரிந்து கொள்ளும் சிவாஜி வீட்டின் வெளியே நின்று கேட்பது போலக் காட்சி.

இந்தக் காட்சிக்கான பாடலை எழுதியிருப்பவர் கலைஞர். வெளியில் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் குழந்தையின் சின்ன மாமன் என்று தெரியாமலேயே, அவன் என்னென்ன சீதனம் கொண்டு வருவார் என்று எதிர் நோக்கும் பாடலை அற்புதமாக எழுதியிருக்கிறார். பாடியிருப்பவரோ நமக்கு ஏற்கனவே அறிமுகமான (தென்றல் வந்து வீசாதோ’) டி.எஸ்.பகவதி. இவர் குரலின் முழு இனிமையை இந்தப் பாட்டில் சுகமாக அனுபவிக்கலாம்! மிகவும் ஸிம்பிளான கோர்விசை. (மெட்டின் மீது எவ்வளவு நம்பிக்கை, பாருங்கள்!) சில வயலின்கள், அவற்றிற்கேற்ப கிடாரின் கார்ட்ஸ், மற்றும் வீணை, தபலா இவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை எங்கோ அழைத்துச் செல்லும் அமைதியான பாடலிது. இந்தப் பாடலின் தாளமும் waltz வகைதான் என்பதோடு, 60 வருடங்களுக்கு முந்தைய துல்லியமான ஒலிப்பதிவையும் கவனியுங்கள்!

இந்தப் பாடல் என் நெஞ்சில் நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. என் அன்னைக்கு மிகவும் பிடித்த பாடல் இது. என்னை அடிக்கடி பாடச்சொல்லிக் கேட்டதுண்டு. (சிரிக்காதீர்கள், அப்போதெல்லாம் நான் நன்றாகவே பாடுவேன், ஸ்வாமி!) பாடலைக் கேட்போமா?

Konjum mozhi sollum by Krishnamurthy80

அடுத்து வரும் தாலாட்டில் சந்திக்கலாமா நண்பர்களே!

Sunday, October 16, 2011

அன்பில் மலர்ந்த தாலாட்டு!


இன்று நீங்கள் ரசிக்கப் போகும் தாலாட்டு, அப்போது தான் புதிதாகத் தமிழ்த்திரையில் காலூன்றிய சுசீலாவின் இளமையான, சுகமான குரலில் வருகிறது. 1950களில் வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்திரைப்படத்தில், இவர் பாடியிருந்த உன்னைக் கண் தேடுதே’, ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோஎன்ற பாடல்களுடன், இன்றைய தாலாட்டான ‘அன்பில் மலர்ந்த நல் ரோஜாஎன்ற அற்புதமான பாடலும் சேர்ந்து, சுசீலாவை எங்கோ உயரத்தில் கொண்டுபோய் உட்கார வைத்தன. அன்று ஆரம்பித்த அவருடைய புகழ், அவரின் தனித் திறமையினாலும் கொஞ்சும் குரலினாலும் இன்றும் கொஞ்சம் கூடக் குறையாமல் அப்படியே இருக்கிறது.
க.க.தெய்வம் திரைப் படத்திற்கு ஏ.ராமாராவ் இசையமைத்திருந்தார். தெலுங்கு, தமிழ்ப் படங்களுக்கு நிறைய நல்ல இசையைக் கொடுத்திருக்கிறார், இவர். இந்த க.க.தெய்வம் படத்தில் முதலில் பானுமதி தான் வில்லியாக நடிப்பதாக இருந்தது. படத்தில் மிகப் பிரபலமான ‘உன்னைக் கண் தேடுதேஎன்ற பாடலை முதலில் அவ்ரைப் பாட வைத்துப் பதிவும் செய்து விட்டிருந்தார்களாம். பின்னர், ஏதோ காரணங்களுக்காக பானுமதி வெளியேற, லலிதா (பத்மினியின் மூத்த சகோதரி) தான் வில்லி என்று முடிவானது. எனவே, இந்தப் பாடலைப் பாட சுசீலாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது.
இந்தப் பாடல், நாக லோக இளவரசி குடித்துவிட்டு நாயகனான ஜெமினிகணேசனைப் பார்த்துப் பாடுவது போலப் படத்தில் வருகிறது. பாடலின் நடு நடுவே விக்கல் ஓசை வரும். அந்த ஓசை, தன்னுடையது என்று பானுமதி பின்னாளில் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.
நம்முடைய தாலாட்டுக்கு வருவோம்! படத்தின் கதாநாயகியான இளவரசி அஞ்சலிதேவி, சாபம் ஒன்றினால் குரூரமாக மாறியிருக்கும் ஜெமினி கணேசனின் மனைவியாக ஆகிறார். காட்டில் குடிபுகும் அவர்களின் குழந்தையைத் தாலாட்ட அஞ்சலிதேவி இந்தப் பாடலைப் பாடுகிறார்.
பாடலின் ஆரம்ப இசையில் எலக்ட்ரிக் கிடார் என்கிற வாத்தியத்தை (நான் முன்பு குறிப்பிட்டிருந்த) டபிள் பேஸுடன் சேர்த்து உபயோகித்திருக்கிறார்கள். முன்பெல்லாம் இந்த வகை கிடாரை, படுக்கைவசத்தில் வைத்து, ஒரு கையால் மீட்டி, இன்னொரு கையில் கட்டையினால் அதே தந்தியைத் தழுவுவார்கள். அதனால் ஒரு தொடர்ந்த சோகமான சப்தம் கிடைக்கும். படங்களில் சோக ரசத்தை எடுத்துக் காண்பிக்க இந்த வாத்தியத்தை உபயோகிப்பார்கள். (இப்போது இதையே (எலக்ட்ரிக் கிடாரில்) கையில் வைத்துக் கொண்டு மீட்டும் படி வந்துவிட்டது). இன்னும் மற்ற வாத்தியங்களின் கோர்வையும் இருந்தாலும், இந்தப் பாடலின் தாளமும் Walz வகை என்பதையும் சுசீலாவின் குரலில் ஹம்மிங் ஆரம்பித்தவுடன் எப்படி அவை பின்னே போய்விடுகின்றன என்பதையும் கவனியுங்கள்:
இன்னொரு அருமையான தாலாட்டில் சந்திப்போம், நண்பர்களே!

Friday, October 14, 2011

தாலாட்டும் தியாகராஜபாகவதரும்!

மனிதர்கள் தங்களுடைய எந்த வயதிலும் தயங்காமல், சலிக்காமல் அன்பு செலுத்துவது, தங்கள் அன்னையிடம்! அதைப் போலவே, எந்த வயதிலும் ரசிக்ககூடியது தாலாட்டை! இரண்டும் நினைக்கவே இனிப்பவை.

நமது திரைப் படங்களில் (இப்போது புறந்தள்ளப் பட்டு வழக்கொழிந்து வரும்) தாலாட்டுப் பாடலை,(மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்போல) வெறும் தாலாட்டாக மட்டும் உபயோகித்திருப்பது மிகவும் அரிது. பெரும்பான்மையான தாலாட்டுகள், நீங்கள் ஏற்கனவே ரசித்த ‘தென்றல் வந்து வீசாதோபோல, அல்லது வரப்போகும் இன்றைய பாடல் போல சோகம் கலந்ததாகவே காணப்படுகின்றன. இது தற்செயலா அல்லது வேண்டுமென்றே கடைப்பிடிக்கப் படுகிறதா யானறியேன்!

அதே போல, பெரும்பாலான திரைத் தாலாட்டுகளும், (இந்தப் பாடல் உட்பட) ‘வால்ட்ஸ்’ (Waltz) என்ற ஆங்கிலேய நடனத்தின் தாளத்தையே ஒட்டி இருக்கின்றன. (இந்தத் தாளம் (டுண், டக்டக்) என்று தொடரும் ஒன்றில் மூன்று தாளம்).

நண்பர்களே, இன்றும், வரும் சில பதிவுகளிலும் சில சுகமான தாலாட்டுப் பாடல்களை நீங்கள் கேட்கவிருக்கிறீர்கள். 1940 70க்கு இடைப் பட்ட முப்பது ஆண்டுகளில், தாலாட்டின் கோர்விசையமைப்பில் எத்தனை மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் உயர்ந்த ரசனைக்கென்றே உருவாக்கப் பட்டவை என்பது (இவற்றைக் கேட்கும்போது) உங்களுக்கு விளங்கும்.

இந்தப் பதிவுகளில் (கூடிய மட்டிலும்) வேறு வேறு வித்தியாசமான குரல்களில் பாடல்களை ரசித்து வருகிறோம், அல்லவா? இன்றைய பாடகரின் குரலோ, சாதாரணமான குரல்களிலிடமிருந்து மிகவும் வேறுபட்டது. இவருடைய குரலைப் போல, இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி யாருக்கும் அமையவில்லை. அவ்வளவு தனித்தன்மை கொண்ட அற்புதமான, இதமான, சுகமான குரல்,இது!

இவருக்கு மட்டுமில்லை, நமது சமகாலத்தில் கோலோச்சிய டி.எம். செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கம்பீரமான ஆண் குரல்களைக் கொண்டவர்களுக்கு ஈடாகவும் இன்று வரை வேறு குரல்கள் கிடைக்க வில்லையே! கிடைக்கவில்லையா, அல்லது இன்றைய இசையமைப்பாளர்கள் வர விடுவதில்லையா என்பது விவாதத்துக்குறியது! (மற்றொன்று, டி.எம்.எஸ், என்றவுடன் நினைவுக்கு வருவது, அவர் பாடியவற்றிலேயே உன்னதமான தாலாட்டான ‘ஏன் பிறந்தாய் மகனேஎன்ற ‘பாகப் பிரிவினைபாடல்!சரிதானே?)

சரி, இதோ, இன்றைய பாடலைப் பாட வருகிறார், தமிழ்த் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவருடைய குரலில் ஒலிக்கும் மணி ஓசையைப் போன்ற ஒரு மயக்கும் ரீங்காரம் அடடா, அதைக் கேட்டுத்தான் ரசிக்க வேண்டுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க நிச்சயம் முடியாது.

இன்றைய அவருடைய பாடல், (1940களில் வெளி வந்த) ‘அசோக்குமார்என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. இசையமைத்தவர் பாகவதரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

படத்தில், இளவரசனான நாயகன் ஏழையாகி, அவனுக்குக் கண் பார்வையும் போய்விடுகிறது. அப்போது தன்னுடைய குழந்தையைத் தூளியில் போட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார். பாடலில் பியானோ முக்கிய இடம் வகிக்கிறது. தாளமோ பாடல் முழுவதையும் ஒரே கதியில் தொடருகிறது. இருப்பினும், எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, பாகவதரின் மற்ற பாடல்களைப் போல, இதிலும் அவரின் குரலுக்கும், மெட்டுக்கும் தான் முதலிடம். பாடலைக் கேளுங்கள்:

Unnaiye anbudan by Krishnamurthy80

மீண்டும் சந்திக்கும் முன்னர்: சென்ற பதிவில் இணைத்திருந்த (யாரடி வந்தார்’) பாடலின் நல்ல ஒலிப்பதிவு இப்போது கிடைத்தது. மாற்றியிருக்கிறேன். அனுபவியுங்கள் நண்பர்களே, அடுத்த பதிவில் சந்திக்கும் வரை!