Sunday, July 29, 2012

ஒரு ’புதிய’ பாடல்!

      எதையோ தேடப்போய் எதுவோ கிடைத்தது என்பார்களே, அதைப்போல் வேறொரு பாடலைத் தேடும்போது, இந்த நல்ல பாடல் கிடைத்தது. அதை உங்களுடன் பகிர்ந்துகொள்ளாமல் எப்படி?!

     1970ம் வருடம், இயக்குனர் ஸ்ரீதரின் நிறுவனத்திலிருந்து ஒரு திரைப்படம் வெளியிடப்பட்டு சக்கைபோடு போட்டது! ஸ்ரீதரின் சிஷ்யரான என்.ஸி.சக்ரவர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த ‘உத்தரவின்றி உள்ளே வா’ என்ற அந்த முழுநீள நகைச்சுவைப் படத்தில் நாகேஷ், ரவிசந்திரன், காஞ்சனா, ரமாபிரபா முதலிய அன்றைய முன்னணி நகைச்சுவை நடிகர்கள் பலர் நடித்திருந்தனர். கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் இணைப்பில் அருமையான பாடல்கள் பல இடம் பெற்றிருந்தன.

     நாம் இன்று ரசிக்கவிருக்கும் ‘காதல், காதல் என்று பேச கண்ணன் வந்தானோ’ என்ற பாடலை (எஸ்.பி.பியின் ஹம்மிங்குடன்) சுசீலா அருமையாகப் பாடியிருக்கிறார். பாடலில் ஒரு விசேஷம், தாளத்துக்கு பாடலின் பெரும் பகுதிக்கு கிடாரின் கார்ட்களும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தபலா மற்றும் பாங்கோ டிரம்ஸ் தாளமாகவும்  உபயோகப்படுத்தியிருப்பதுதான். கிடாரின் துணை, சுசீலாவின் குரலை எவ்வளவு இனிமையாக்கியிருக்கிறது, கேளுங்கள்! இடை இசையில் வயலின்களும், குழலும் ஒரே ஒரு இடத்தில் சிதாரும் பாடல் முழுவதும் டபிள் பேஸின் ‘தொம், தொம்’ சத்தமும் ஒரு நல்ல மெலடியை முழுமையாக்கி இருக்கின்றன. இப்போது, சுசீலா, உங்களுக்காக:

Saturday, July 21, 2012

அந்தக்கால ஜீனியஸ்கள்!

        முன்னர் இந்தப் பதிவுகள் ஒன்றில் கே.வி.மகாதேவனை ஜீனியஸ் என்று குறிப்பிட்டிருந்தேன். அது எவ்வளவு உண்மையானது என்பதைச் சமீபத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் வந்துகொண்டிருக்கும் ‘இன்னிசை மழை’ எனும் நிகழ்ச்சியில் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. திரு.அப்துல் ஹமீதுடன்  உரையாடும்போது சில விஷயங்களைச் சொன்னார், திரு பஞ்சு அருணாசலம்:

        தமிழ்த் திரையிசையில் மெல்லிசை மன்னர்கள் சக்ரவர்த்திகளாக இருந்தபோது, மகாதேவன் மன்னராகக் கோலோச்சினார் என்றாலும் அப்போது தெலுங்குத் திரையில் மகாதேவன் மட்டுமே சக்ரவர்த்தியாக இருந்தாரென்று சொன்னவர், இன்னொரு முக்கியமான வித்தியாசத்தையும் குறிப்பிட்டார். மன்னர்களால் பெரும்பாலும் மெட்டுக்களே முதலில் உருவாக்கப்பட்டுப் பின்னரே பாடல்கள் எழுதப்பட்டன என்றும், ஆனால் மகாதேவனோ, முழுக்க முழுக்க (எழுதப்பட்ட) பாடல்களுக்கே இசையமைத்தார் என்றும் தெரிவித்தார். அதாவது, கவிஞர்களை, படத்தின் கதையை இயக்குனர்களிடம் கேட்கும்போது மட்டும்தான் அவர் சந்திப்பாராம்!

       சரி, இன்றைய பாடலுக்கு வருவோம்!

       ’தை பிறந்தால் வழி பிறக்கும்’ திரைப்படத்திலிருந்து ஏற்கனவே ஒரு பாடல் கேட்டிருக்கிறோம். இன்று நாம் ரசிக்கப்போகும் பாடலை, கம்பீரமான குரலில் சீர்காழியும், அதற்கு நேரெதிரான மென்மையான குரலில் ஜமுனாராணியும் பாடியிருக்கிறார்கள். கிராமத்து அண்ணன் - தங்கை பாசத்தை அழகாகச் சொல்லி வெற்றி பெற்ற படங்களில் ஒன்று, ’தை பிறந்தால் வழி பிறக்கும்’.  பாடலின் ’மூடு’க்கேற்ப பாடகர்கள் இருவரும் தங்கள் குரலில் எத்தனை கிண்டலையும் கேலியையும் காண்பிக்கிறார்கள், கவனியுங்கள்! வழக்கமான தபலா, டோலக்கின் உருட்டல்கள் மகாதேவனை இனம் காட்டுகின்றன. பாடல் உண்மையில் துல்லியமாக இருந்தபோதிலும், என்னுடைய ஒலிப்பதிவு சுகமாக இல்லை. இருப்பினும் பாடல் இவற்றையெல்லாம் மீறி ரசிக்கத் தூண்டுகிறது - வாருங்கள்!


Wednesday, July 18, 2012

ஒரு இடைவெளிக்குப் பிறகு!

    சில பல தவிர்க்கமுடியாத காரணங்களால்  இந்தப் பதிவுகளின் ரசிகர்களைக் காக்கவைத்தமைக்காக மன்னிக்கவேண்டுகிறேன்!

    இன்று, நமக்காக மீண்டும் பாடவருகிறார், பானுமதி. ஏவிஎம்மின் ’அன்னை’ திரைப்படத்திற்காக சுதர்சனம் அவர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார் அவர். இந்தப் பாடலைக் கேட்கும்போது, (சரணத்தில் ஒரே ஒரு இடத்தைத் தவிர) தபலாவையும் பானுமதியின் குரலையும் மட்டுமே ரசிப்பீர்கள். அவ்வளவு இனிமையான மெட்டு. படத்தில் பின்னணியாக ஒலிக்கும் குரலில் மயக்கவைக்கும் இனிமை.  ஆரம்பத்தில் வரும் வரிகளான, “பெறும் சிரமமின்றி, பிள்ளை பெற்ற’ என்ற இடத்தில் ஒரு தேர்ந்த பாடகி, நடிகை என்பதை ஒரு சிறிய நக்கலைக் குரலில் காண்பித்து, நிரூபிக்கிறார், பானுமதி!

   அந்தக் காலத்திய நாடகப்பாடல்களின் மெட்டு, அமைப்பைக் கொண்டு, தொகையறாவில் (ஆரம்பத்தில் தாளம் இல்லாமல் ஒலிக்கும் பாட்டு - இதுவே முழுப்பாடலாக இருந்தால் விருத்தம் எனப்படும்!)  தொடங்கிக் கடைசியில் உச்ச ஸ்தாயியில் முடியும் பாட்டு இது. கவிஞர் கண்ணதாசனும் விளையாடி இருக்கிறார், கவனியுங்கள்:
        “தூக்கி வளர்த்தவள் தாய் என்றால் அதை
         ஆக்கிக் கொடுத்தவள் பேரென்ன?
         வாங்கிய தாய்க்கே மகனென்றால் அதைத்
         தாங்கிய தாயின் உறவென்ன?”

   இனிமேலும் குறுக்கே நிற்க விரும்பவில்லை - ரசியுங்கள், நண்பர்களே!