Tuesday, April 13, 2010

அமையுமா அல்லூர் வாழ்க்கை?

மனித மனங்களிலே மண்டிக்கிடக்கின்றன ஏராளமான ஆசைகள். என் ஆசைகளில் முக்கியமான ஒன்று பாரதியின் ‘காணி நிலம் வேண்டும்’ என்ற பாடலில் அவன் தெரிவித்திருந்த அத்தனை சமாசாரங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது!

அதற்கும், மேற்கண்ட தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பொறுங்கள்! பாரதியின் பாடல் மட்டுமல்ல, கவிதையிலே பாரதியும், எழுத்திலே தி.ஜா., (உயிர்த்தேன், மோகமுள், அம்மா வந்தாள்), தேவன் (மிஸ்டர் வேதாந்தம்), கி.ராஜநாராயணன் போன்ற சிலரின் பல படைப்புகளிலே ஒன்றினால் உண்டாகுமல்லவா? அந்த அமைதியான கிராம வாழ்க்கையினை அனுபவிக்கும் ஏக்கத்துடன் இருந்தபோது பாடலின் ஒரு பகுதி நிறைவேறும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது!

எவ்வளவோ இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் மனம் லயிப்பது என்னவோ சில இடங்களில் தான், சில இதயங்களுடன் தான்! அப்படி எனைக் கவர்ந்த இடங்களில் முதன்மையான ஒன்று திருச்சியின் அருகே, காவிரிக்கரையில் அமைந்திருக்கும் அல்லூர் கிராமம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சென்றிருந்தபோது அந்த ஊரின் மேல் ஏற்பட்ட காதல் என்னுள்ளேயே கனன்று கொண்டிருந்தது என்றாலும் அது நிறைவேறும் வேளை இப்போதுதான் வந்தது!

இன்று வரை பார்த்துக்கொண்டிருந்த உத்தியோகத்திலும், அங்கே எனக்களிக்கப்பட்ட மரியாதையிலும் எந்தவிதக் குறைபாடும் இல்லாத நிலையில், என்னுடைய சுகாதாரமும் அதனால் ஏற்படும் சோர்வும் என்னைக் கட்டாய ஓய்வை நோக்கித் தள்ளிவிட்டன. அருமை நண்பர் ரவிகுமாரும் பெருந்தன்மையோடு என்னை விடுவிக்க ஒப்புக்கொண்டார். 2010 ஏப்ரல் 1ந் தேதி முதல் நான் விலகிக் கொள்வதாக முடிவானது. (இந்த இடத்தில், ரவி மற்றும் அவர் குடும்பத்தினரின் மூலம் எனக்கு இதுவரை கிடைத்த சலுகைகளையும் நன்மைகளையும் நான் குறிப்பிட மறந்தால், நன்றி கொன்றவனாவேன்.)

இடம் மாற வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டுமல்லவா? ஏப்ரல் 5ந் தேதி புறப்பட்டேன், அல்லூர் நோக்கி. அங்கே தற்போது குடியிருக்கும் சாந்தி-குஞ்சிதம் தம்பதியினரின் உதவியுடன் எனக்கான வீடு தேடும் பணி தொடங்கியது. அல்லூரைப் பொறுத்த வரையில், அந்த அக்ரஹாரத்தில் இருந்த சாலை மட்டுமே கான்க்ரீட் ஆக மாறியிருந்தது. தெருவிலிருந்த வீடுகளில் எந்தவித குறிப்பிடத்தக்க மாறுதல்களும் தெரியவில்லை. அதே அமைதியான, 40 ஆண்டுகளுக்கு முந்தைய, ஏதும் பெரிதான மாறுதல்கள் இல்லாத அல்லூர் தான்! அதே பழைய சிவன், பெருமாள், பிடாரி கோவில்கள்தான்! அதே காவிரியும், அதே ‘மேக்குடி’ ரயில் நிலையமும் தான்!

அல்லூர் என்கிற (ஒரு அக்ரஹாரமும், மற்றும் சில வீடுகளும் கொண்ட) அழகான சிறு கிராமம், முன்பே குறிப்பிட்டதுபோல காவிரிக்கரைக்கும், ’மேக்குடி’ என்கிற ரயில் நிலையத்திற்கும் நடுவே அமைந்திருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீடுகள் எல்லாமும் அநேகமாக 30 அடி அகலமும் 100 அடிக்குக் குறையாத நீளமும் கொண்டவை. திண்ணை, ரேழி, கூடம், இரண்டாம் கட்டு என்கிற சமையலறை, பின்னர் (அளவில்) கூடத்துக்கு நிகரான வானம் பார்த்த முற்றம், மூன்றாம் கட்டு தவிர மரம், செடி கொடிகளுடன் கூடிய பின் கட்டு என்று போய்க்கொண்டே இருக்கிறது. தினமும் சில முறை வீட்டில் மேலும் கீழும் நடந்தால் போதும், வேறு நடைப்பயிற்சியே தேவையில்லை! அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு மாடியும் ஊஞ்சலும் உண்டு. வாசலிலிருந்து பார்த்தால் புழக்கடை வரை தெரிகிறது. கூடத்தில் வாசலைப்பார்த்து உட்கார்ந்தால் காற்று கொட்டுகிறது. வீடுகளின் மேற்கூறை நல்ல உயரத்தில் இருப்பது இதற்குத் துணை செய்கிறது.........

எனது நல்ல நேரமோ அல்லது வேறே ஏதாவதோ, அதே அக்ரஹாரத்தில் ஒரு வீடு காலியாகப் போகிறது என்கிற தகவல் அறிந்ததும் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் பார்த்தேன். என்னுடைய சரித்திரத்தை விலாவாரியாகத் தெரிந்துகொண்டவர், தற்போது குடியிருப்பவர் இந்த மாத முடிவிற்குள் காலி செய்ய இருப்பதாகவும், அதன் பின்னர், நான் குடி வருவதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும் கூறியிருக்கிறார். இனி, ஆண்டவன் விட்ட வழி! படங்களைப் பாருங்களேன்....