Saturday, January 28, 2012

சாலைகள், சாலைகள்! பகுதி -2

அழகான சாலைகளின் படங்கள் - இரண்டாம் பகுதி. படத்தின் மீது சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.






சாலைகள், சாலைகள்! பகுதி -1

சாலைகள் எல்லா ஊரிலும், ஊர்களை இணைக்கவும் இருக்கும். இங்கே, அத்தகைய சாலைகளில் சில அழகானவற்றின் படங்களை இரண்டு பகுதிகளாகப் பாருங்கள். படத்தின் மீது சொடுக்கினால், பெரிதாகப் பார்க்க முடியும்.





கொசுவை விரட்ட மூன்று வழிகள்!

என் இனிய நண்பர்களே!

கடவுளும் கொசுவும் ஒன்றென்பார்கள். இருவரும் வியாபிக்காத இடமே உலகில் கிடையாது! நாமும், கொசுவத்தி,சுருள்,பில்லை என்று என்னென்னவோ செய்தும் நம்முடனான தனது பந்தத்தை அறுப்பதாக இல்லை கொசுவார்!

இன்று எனக்குக் கிடைத்த தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. கொசுக்களை விரட்ட, விலை குறைவான, அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடிய வழிகள் ஒன்றல்ல, மூன்று சொல்லப் போகிறேன், கவனியுங்கள்! வீட்டில் அனேகமாக சூடம் (கற்பூரம்) இருக்குமல்லவா? அதில் இரண்டு பில்லைகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

முதல் வழி: வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் (படத்தில் உள்ளதுபோல்) அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்...கொசு போயே போச்சே!



அடுத்தது: கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது.

மூன்றாவதாக, (அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம்.

இலவச இணைப்பாக: வீட்டில் யாருக்கேனும் நெஞ்சில் சளி கட்டியிருந்தால், கற்பூர எண்ணையைக் கொஞ்சம் மார்பில் தேய்த்துவிடுங்கள். சளியும், மூக்கடைப்பும் அகன்றுவிடும்.

செய்துதான் பாருங்களேன்!

Friday, January 27, 2012

நம்பமுடிகிறதா??? (மணல் ஓவியங்கள்!)

நமது நாட்டைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் எனும் ஒடீசியக் கலைஞர் மணல் சிற்பங்கள் வடிப்பதில் உலகப் புகழ் பெற்றவர். இவரின் கடற்கரை ஓர மணல் சிற்பங்கள் பரிசு வாங்காத இடமே உலகில் இல்லை எனலாம்.பல ஊடகங்களில் இவரின் கைவண்ணத்தைப் பார்த்திருப்பீர்கள்.

ஆனால், இன்று நீங்கள் பார்க்கப் போகும் விடியோ, மணல் ஓவியம் பற்றியது.இலானா யாஹவ் எனும் பெண் கலைஞர் தீட்டியது.

'ஒரு மனிதனின் கனவு’ என்று தலைப்பிடப்பட்ட இந்த ஒவியத்தைத் தீட்ட, இவர், வண்ணங்களையோ, பிரஷ்களையோ உபயோகிக்கவில்லை! ஒரு கண்ணாடிப் பலகையின் மேலே மணலைத் தூவிவிட்டுத் தன் வலது கையையும் விரல்களையும் உபயோகித்து எத்தனை விதமாக உங்களைக் கவர்கிறார், பாருங்கள்! இந்தக் கலை, உங்களை உண்மையில் வியப்பின் உச்சிக்குக்கொண்டுபோகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை! இதோ, இலானா யாஹவ்:

Tuesday, January 24, 2012

சீனப் பெருஞ்சுவரும் மாயாஜாலமும்!

’யூ ட்யூப்’ (www.youtube.com) என்ற இணையதளம் மிகப் பிரபலமானது. இதில் யார் வேண்டுமானாலும் தங்கள் விடியோ படைப்புக்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.இந்தத் தளத்தில், சில செகண்டுகள் ஓடும் நிகழ்ச்சிகள் முதல், தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்கள், , முழுத் திரைப்படங்கள் உள்பட கேட்டதெல்லாம் கிடைக்கும்! யூட்யூபிலிருந்து தினம் ஒரு விடியோவை உருவினால் போதும், வருடக் கணக்கில் ‘நானும் சிறந்த ப்ளாக் எழுத்தாளன்’என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியும். (ஹி,ஹி, நீ இப்போதும் அதைத் தானே செய்துகொண்டிருக்கிறாய்? என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. ஆனால் கலைச் சேவை செய்து கொண்டிருக்கும் போது குறுக்கே வரக்கூடாது, ஓ கே?!)

இன்று அமெரிக்காவின் மிகப் பிரபலமான மாயாஜால நிபுணர் (மேஜிஷியன்) டேவிட் காப்பர்பீல்ட், சீனப் பெருஞ் சுவரின் குறுக்கே, அதாவது ஒருபக்கம் நுழைந்து மறு பக்கம் வெளியே வந்து செய்த சாதனையைப் பற்றிய யூட்யூப் விடியோவைப் பார்க்கப் போகிறீர்கள். இந்த நிகழ்ச்சி, உண்மையான் சீனப் பெருஞ்சுவரில், உண்மையான மக்கள் கூட்டத்தினர் முன்னே நடந்தது!

டேவிட், தனது ஐந்து வயதிலிருந்தே இந்தக் கலையில் ஈடுபட்டிருக்கிறார். நியூயார்க்கில் இருக்கும் சுதந்திர தேவியின் சிலை, உலகின் மிகச் சிறந்த ரயிலான ஓரியண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு விமானம் போன்றவைகளை, பெரும் மக்கள் கூட்டத்தினர் கண் முன்னே நொடியில் மறைத்துத் திரும்பவும் காட்சியளிக்கச் செய்திருக்கிறார்! இவற்றில் பலவற்றை நீங்கள் யூ ட்யூப் தளத்திற்குச் சென்று ‘David Copperfield' என்று தேடச்சொன்னால் பார்க்க முடியும். இப்போது, வாருங்கள், வியப்பின் உச்சிக்கே போகலாம்!

Monday, January 23, 2012

வாழைப் பழச் சோம்பேறிகள்!

சோம்பேறிகளில் பல வகை! ஒருத்தன் எழுதவே மாட்டானாம், எழுத ஆரம்பித்தாலோ நிறுத்தவே மாட்டானாம்! அவ்வளவு சோம்பேறித்தனம்!

ஆனாலும், ஒரு ஆங்கிலப் பழமொழி சொல்கிறது, ‘சோம்பேறித்தனம் தான் கண்டுபிடிப்புக்களின் தாய்’ என்று! இன்றைய விடியோ காட்சியில் படித்துக் கொண்டிருக்கும் தினசரியின் பக்கத்தைத் திருப்புவதற்கு என்னவெல்லாம் நடக்கிறது, பார்த்து ரசியுங்கள்!

Sunday, January 22, 2012

மின்சாரக் கண்ணன்!

நம்மில் எவ்வளவு பேரால் மின் அழுத்தத்தைத் (ஷாக்) தாங்க முடியும்? தற்செயலாக ஏற்படுவதையே பொறுக்க முடிவதில்லை, அல்லவா? இதோ, இங்கே நமது அண்டை நாடான (மன்னிக்க!) மாநிலமான கேரளாவில் ஒரு அன்பர் இருக்கிறார். ராஜ் மோகன் நாயர் என்ற பெயர் கொண்டவர். மின் சக்தியைத் தாங்கும் சக்தி இவருக்கு எப்படிக் கிடைத்தது என்று தெரியவில்லை. இவரைப் பற்றிக் கேள்வியுற்ற அமெரிக்கத் தொலைக்காட்சியான ‘ஹிஸ்டரி சானல்’ (History Channel), இவரைத் தகுந்த முறையில் பரிசோதித்து, அதை ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பினார்கள். அதைத்தான் இன்று நீங்கள் பார்த்து வியக்கப் போகிறீர்கள்.


Saturday, January 21, 2012

விளம்பர(மே) உலகம்!

எல்லா ஊடகங்களுக்கும் விளம்பரங்கள்தானே உயிர்நாடி! இப்போது நம் நாட்டில் பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களையும் குழந்தைகளையும் மையமாக வைத்து உருவாகி வருகின்றன. இவற்றில் பல முத்துக்களும் கிடைப்பதுண்டு! உதாரணமாக, ஒரு கேபிள் (wire) நிறுவனத்துடையது, ஒரு அருமையான கவிதை போலிருந்தது. அவர்களின் தயாரிப்பு நெருப்பில் வேகாதது என்பதை நிரூபிக்க தொலைக்காட்சிக்காக எடுத்த விளம்பரம்: ஒரு (கட்டிடத் தொழிலாளியான) தாய், சப்பாத்தி சுடும்போது கையைச் சுட்டுக் கொள்ளுவாள். அவளுடைய (7 அல்லது 8 வயதுடைய) மகன் அதைப் பார்த்துவிட்டு அங்கே கிடக்கும் அந்த கேபிள் துண்டை முறுக்கி, ஒரு கிடுக்கி போல் அமைத்துக் கொடுப்பான். இதுவரையில் சாதாரணமாகப் போகும் விளம்பரம், அந்தத் தாய், தன் மகனைப் பார்க்கும் பார்வையிலே ஒரு கவிதையாகிவிடும்! மகனைப் பற்றின அவ்வளவு எதிர்பார்ப்புகளையும் அந்த நடிகை கண்ணிலே காட்டியிருப்பார்! இது ஒரு வகை.

மேல் நாடுகளில் பல விளம்பரங்கள் எப்படி கண்ணையும் கருத்தையும் கவருகிறது பார்க்கலாமா? இவை வியப்பாக மட்டுமல்ல, எவ்வளவு உழைப்பையும், சிந்தனையையும், பணத்தையும் கொண்டு உருவாக்கப் பட்டிருக்க வேண்டும் என்பதையும் சிந்தியுங்கள்! இவை எந்தப் பொருளுக்கான விளம்பரம் என்பது உங்களுக்குத் தானாகவே புரியும்.





Friday, January 20, 2012

மறக்கமுடியாத பருவகாலப் படங்கள்!

நம்மில் பலர் இணையப் பதிவுலகில் பங்கேற்றுக்கொண்டு வேண்டியது, வேண்டாதது என்கிற பாகுபாடின்றித் தகவல்களையும் படைப்புகளையும் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். பல சமயங்களில் ‘Blogger' தளத்தில் நான் பகிரும் போது, ஒரு இயலாமையை உணருவதுண்டு. எவ்வளவோ நல்ல புகைப்படங்களைப் பகிர வரும் போது, பல தொகுப்புகளில் ஐந்து படங்களுக்கு மேல் இணைக்க முடியாமல் ஆதங்கப் பட்டிருக்கிறேன்.

இன்று நான் உங்களோடு பகிரப் போகும் படங்களில் எந்த ஐந்தைச் சேர்ப்பது, எதை விடுவது என்ற தர்ம சங்கடத்தின் விளைவாக, உங்களுக்கு ஒரு உரலியைக் கொடுத்து, அதன் மூலம் சுமார் இருபது அருமையான புகைப்படங்களைக் கண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த உத்தேசம்.

இனி படங்களுக்கான ஒரு பரிச்சயம்:

பருவகாலப் படங்கள் என்று நான் குறிப்பிட்டது ‘Seasons' பற்றி! (குசும்பு?!)

இன்றைக்கு இணையத்திலும், ஊடகங்களிலும் வெளிவரும் பெரும்பாலான புகைப்படங்கள் டிஜிடல் முறையிலே எடுக்கப் பட்டவை. அதாவது, பிலிம் சுருள்களில் எடுத்து, கழுவி, பிரிண்ட் போடுவது அனேகமாக ஒழிந்து போன சமசாரம்! இந்த டிஜிடல் படங்களும் எடுத்து முடித்த பிறகு ‘போட்டோஷாப்’ போன்ற மென்பொருள்கள் மூலம் பல வகைகளிலும் மெருகேற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. அதாவது எடுக்கப் பட்ட படத்துக்கும் வெளியிடப்படும் படத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்! இருட்டை வெளிச்சமாக்க, வண்ணங்களைக் கூட்டவோ குறைக்கவோ செய்ய, என்று கணினிகளில் ஏராள வசதிகளுண்டு.

ஆனால், நீங்கள் பார்க்கப் போகும் இந்த இயற்கைக் காட்சிகளின் படப்பிடிப்பாளரான லார்ஸ் வான் டி கூர் எனும் ஹாலந்து நாட்டு நண்பர், கணினியின் பக்கம் போனது ‘composition' (அதாவது படத்தை அழகுபடுத்த சில பகுதிகளை வெட்டுவது - frame வைப்பது என்று திரைத்துறையில் சொல்வார்கள்!)போன்ற மிகச் சிறிய வேலைகளைச் செய்ய மட்டுமே என்று கூறுகிறார். புகைப்படம் எடுப்பவர்களுக்குத் தெரியும் - இது எவ்வளவு பெரிய சாதனை என்று!

இன்னும் ஒன்றே ஒன்று: இந்தப் படங்களும், இந்த மாதிரிப் படங்களையும் பெங்களூரைச் சேர்ந்த சிவகுமார் எனும் இளைஞர் ‘பொக்கிஷம்’ என்ற வலைத்தளத்தில் பதிவு செய்கிறார். உங்களுக்கு ஆர்வம் இருந்தால், பொக்கிஷத்தில் இணைந்து, உங்கள் மின்னஞ்சலிலேயே இவற்றைப் பெற்று அனுபவிக்கலாம். அவருக்கு நன்றியுடன் மீள் பிரசுரம் செய்கிறேன். கீழ்க் காணும்உரலியை உங்கள் address bar ல் copy / paste செய்து, பதிவைப் பார்க்கக் கோருகிறேன்.

http://blog.pokkisam.com/content/lovely-lane-pictures-lars-van-de-goor

Thursday, January 19, 2012

படகில் மாளிகை!






சமீபத்தில் தொலைக்காட்சிகளில் ஒரு விளம்பரம் பார்த்திருப்பீர்கள். அமெரிக்க நாசா விண்வெளி நிலயத்தில் ஜூபிடர் கிரகத்துக்குச் செல்லத் தயாரித்திருக்கும் ராக்கெட் பற்றி ஒரு விஞ்ஞானி விளக்குவார். முடிந்ததும் ’ஏதேனும் கேள்விகள் உண்டா?’ என்று கேட்பார். ஒரு இந்தியர், ’இதனை என்ன விலைக்குக் கொடுப்பீர்க்ள்?’ என்று சர்வ சாதாரணமாகக் கேட்பார்! அதே நிறுவனத்தின் இன்னொரு விளம்பரத்தில் ஒரு உல்லாசப் படகை விலை பேசுவார், இன்னொருவர்! இப்போது நான் உங்களுக்கு, ஒரு உல்லாசப் படகில் என்னென்ன வசதிகள் என்று விவரிக்கப் போகிறேன். இதை வாங்க இருப்பவர் ஒரு இந்தியக் கோடீஸ்வரர். (இது நமக்குப் பெருமையா, அல்லது வேறேதாவதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்!)

முதலில் இதன் விலை: 20 மில்லியன் யூரோ-அதாவது 2 கோடி யூரோ - அதாவது இன்றைய இந்தியமதிப்பீட்டில் சுமார் 130 கோடி ரூபாய்கள்! ஒரு குதிரை லாடம் போன்ற அமைப்பில் இருக்கும் இந்தப் படகு, பிரெஞ்ச் மற்றும் மொனாகோ கூட்டில் தயாரானது. 58 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமும் கொண்டு (36600 சதுர அடி பரப்பில்) மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. இதில்,12 பயணிகளும் 20 பணியாளர்களும் பயணிக்கலாம். சுற்றுச் சூழலை மனதில் கொண்டு 500 கி.வா.மின்சாரத்தைச் சூரிய ஒளியிலிருந்து தயாரிக்கிறார்கள்! இதில், உடற்பயிற்சிக்கான ஜிம், மசாஜ் அறை, உணவருந்த அறை, திரைப்படம் பார்க்க ஒரு அறை என்று என்னென்னவோ! மூன்று அடுக்குகளும் படிகளாலும், உரிமையாளரின் அறை, எஸ்கலேடர் என்னும் தானியங்கிப் படியாலும் இணைக்கப் பட்டிருக்கின்றன. இதைத் தவிர ஒரு 25மீட்டர் நீளமுள்ள் ஒரு நீச்சல் குளமும் உண்டு. போதுமா?!

இதை வாங்கவிருக்கும் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி, ஆரம்பகாலத்தில் வளைகுடா நாடுகளில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தவர். திருமணமாகி மும்பையில் வசித்தபோது, வாரம் ஒரு நாள் குடும்பத்தோடு மசால் தோசை உண்பதை வாரம் முழுவதும் எதிர்நோக்கிக் கொண்டிருப்பார்களாம்! இதை அவரே தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்!

Wednesday, January 18, 2012

சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்!

இதை நான் செய்ததாக நினைவில்லை! அதாவது ஒரே நாளில் இரண்டு பகிர்வுகள்! ஆனால், கீழே கொடுத்திருக்கும் ரத்தினத்தை உடனடியாக உங்களோடு பகிராமல் பின் யாரோடு?! ஒரு பொறுப்புள்ள எழுத்தாளரின் சிந்தனைகள் உங்கள் முன்:



சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.

2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.

எங்கெங்கு காணினும் அன்னையடா!

தாயைப்போன்ற அழகானவள் யாரேனும் உண்டோ? அதிலும் நமது பூமித்தாய்தான் எத்தனை அழகு! பத்து ஆண்டுகளுக்கு முன் நாம் நேரில் பயணித்து மட்டும் கண்டுகொண்டிருந்த இயற்கையின் அழகை, இன்று மனிதன் கண்டுபிடித்த கணினியும் வலையும் எவ்வளவு வசதியாக வீட்டிலிருந்தே ரசிக்க வைத்திருக்கிறது!

பி.பி.ஸி., தனது தொலைக்காட்சியில் நடத்திவரும் ’அதிசய உலகம்’ (Wonderful World) என்ற நிகழ்ச்சிக்காக ஒரு முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர், நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான ரிச்சர்ட் அட்டன்பரோ. என்ன, புரியவில்லையா? இவர்தான் ‘காந்தி’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர்!

இரண்டு நிமிடங்கள் நம்மை மெய்மறக்க வைக்கும் இந்த விடியோவைக் காண வாருங்கள்!

Monday, January 16, 2012

விரல் ஓவியம்!!!!

விரல்களால் என்னென்ன செய்யலாம்?

என்னால் சாப்பிட மட்டும்தான் முடியும்!

உங்களில் பலரால் இசைக் கருவிகளை இசைக்கவும், மீட்டவும், பிரஷ் பிடித்து ஒவியம் வரையவும், புகைப்படம் எடுக்கவும், ஏன், ஒரு விரலால் மிரட்டவும் செய்ய முடியலாம்! இங்கே, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு தெருக்கலைஞர், கண்ணாடித் தட்டில் வண்ணங்களைக் குழைத்து அப்பிவிட்டுத் தனது விரல்களாலேயே தட்டித் தட்டி அற்புதமான ஓவியங்களை உருவாக்குகிறார். ஒவ்வொரு ஓவியம் தீட்டுவதற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் அதிக பட்ச கால அவகாசம்....வெறும் மூன்று நிமிடங்கள் மட்டுமே!

Sunday, January 15, 2012

தொழிற்சாலையா, அருங்காட்சியகமா?!

நண்பர்களே,

இன்று நாம் பார்க்கவிருக்கும் விடியோ, ஜெர்மனியில்,ட்ரெஸ்டன் என்ற ஊரில் இருக்கும் ஒரு தொழிற்சாலையைப் பற்றியது.அங்கே,‘வோக்ஸ்வாகன்’ என்ற உலகப் புகழ் பெற்ற கார் எப்படித் தயாரிக்கப் படுகிறது என்பதை விளக்குகிறது. ஒரு நவீன ஆர்ட் காலரி போலத் தோற்றும் இந்தத் தொழிற்சாலை, எவ்வளவு சுத்தமாக வைக்கப் பட்டிருக்கிறது என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். யார் வேண்டுமானாலும் சென்று பார்க்க முடியும் அந்த தொழிற்சாலையைப் பார்க்கலாமா?

Saturday, January 14, 2012

பெண்டுலங்களின் நாட்டியம்!

நண்பர்களே!

மென் கலைகளிலிருந்து சற்றே விலகி, கண்களுக்கு விருந்தான ஒரு பௌதிகப் பரிசோதனையைப் பார்க்கலாமா?

சுவர்க் கடிகாரங்களில் எப்போதும் ஆடிக்கொண்டிருக்கும் பெண்டுலங்களை எல்லோரும் பார்த்திருக்கிறோம். அதையே வெவ்வேறு நீளங்களில் அமைத்துச் செய்யப்பட்ட ஒரு அழகான சோதனைதான் இது. உங்கள் ரசனைக்காக இதோ:

கடவுளும் மனிதனும்!

கடவுள் படைத்த மனிதன் தனது ஆறறிவினால் உலகத்தைக் கலக்கிக் கொண்டிருக்கிறான். அவனுடைய வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகளில் ஒன்று புகைப்படக்கலை. இந்தப் பதிவின் மூலமாக நாம் ஏற்கனவே சில (’மாக்ரோ’ எனப்படும்) மிக அண்மைப் படங்களைக் கண்டோம்.(காண்க: நீர்த்துளியும் புகைப்படமும் பகுதி 1 & 2). இன்று, உங்களுக்கு ஒரு விடியோவை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

இதில் என்ன விசேஷம்? மகரந்தச்சேர்க்கை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கூட்டுப் புழுவிலிருந்து பட்டாம்பூச்சி உருவாவதும் தெரியும். வௌவால் மலர்களிலிருந்து தேன் உறிஞ்சுவதைப் பார்த்திருக்கிறீர்களா? காய்கள் கனியாவதை மிக அருகிலிருந்து ரசித்திருக்கிறீர்களா? இவை அனைத்தையும் மட்டுமின்றி இன்னும் பல காட்சிகளையும் இந்த மாக்ரோ விடியோ உங்களுக்குத் தந்து, உங்களை வியப்பின் உச்சிக்கே கொண்டுசெல்லப் போகிறது! வாருங்கள், இந்த உலகம் எவ்வளவு அழகானது என்பதையும், நாம் ஏன் அதை பாதுகாக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்வோம்!

Wednesday, January 11, 2012

மதுரை மீனாக்ஷி கோவில் - ஒரு 360 டிகிரி பனோரமா!

ஆல் இந்தியா ரேடியோவில் ஒரு நிகழ்ச்சியை நேரடி ஒலிபரப்பு செய்யும்போது, ‘நேயர்களே, இப்போது உங்களை (திருவையாறுக்கு) அழைத்துச் செல்கிறோம்’ என்று அறிவிப்பார்கள்! அது போல, உங்களை இன்று நான், மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் சென்று, கோவில் முழுவதையும் சுற்றிக்காட்டப் போகிறேன்!

கீழே உள்ள உரலியை உங்கள் கணினியில் மறு பதிவு (copy, paste) செய்து சொடுக்கினால், நீங்கள் அந்தக் கோவிலுக்குள் இருப்பீர்கள்! ஆமாம்,நண்பர்களே, இதுவும் ஒரு 360 டிகிரி பனோரமா படம். இதில் இன்னொரு விசேஷம், உங்கள் mouse தனை, நீங்கள் அசைக்கும் திசை எல்லாம் (அதாவது, பக்கவாட்டில் மட்டுமின்றி, மேலேயும் கீழேயும்) என்ன இருக்கிறதோ அதை எல்லாம் பார்க்க முடியும். தனியே, மேலே இடது மூலையில் Lay out என்ற இடத்தில் சொடுக்கினால், கோவிலில் நீங்கள் விரும்பும் இடங்களுக்கு எல்லாம் ஒரு சொடுக்கில் செல்லலாம். கூடவே,அருமையான (த்வஜாவந்தி எனும் ராகத்தில், க்ளாரிநெட் வாத்தியத்தில்) ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி என்னும் முத்துஸ்வாமி தீக்ஷிதரின் கீர்த்தனையும் துணைவரும்! முக்கியமாக, மேல் விதானங்களில் இருக்கும் சித்திரங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.

இத்தகைய சுற்றுலாவுக்கு, VIRTUAL TOUR என்று சொல்வார்கள். இப்போது இந்த புது அனுபவத்தைக் காண உங்களை மதுரை மீனாக்ஷி கோவிலுக்கு அழைத்துச் செல்கிறேன்!

view360.in/virtualtour/madurai/

Tuesday, January 10, 2012

லண்டன் பனோரமா!

புகைப் படங்கள் எனும்போது, நமக்குத் தெரிந்ததெல்லாம் கருப்பு-வெள்ளை அல்லது வண்ணம் என்பதே. இப்போது கணினிகள் காலம்! எங்கள் காலத்தில் இருட்டறையில் மணிக்கணக்கில் நாங்கள் செய்தவற்றைத் தவிர, சாதாரணம், மிகு அடர்த்தி என்று பிலிம் இல்லாமல் என்ன வேன்ண்டுமானாலும் ஒரு சொடுக்கில் செய்ய முடிகிறது. இந்தத் தொழில் நுட்பத்தில் (panorama)எனப்படும் 360 டிகிரி (அதாவது முழு வட்ட திசைகளில்) நாம் பார்ப்பவைகளை எல்லாம் ஒரே படத்தில் கொண்டுவந்து, உங்கள் கணினியின் எலி (mouse!) மூலமாக நாம் பார்க்கும் வேகத்தையும் கட்டுப் படுத்தி படத்தை அனுபவிக்க முடிகிறது. அனேகமாக எல்லா ஐரோப்பிய சுற்றுலாத்தளங்களுக்கும் இத்தகைய படங்கள் வலையில் கிடைக்கின்றன. இன்று நான் உங்களுக்குத் தருவது லண்டன் மாநகரத்தின்
மிகுஅடர்த்தி பனோரமா. கீழே கொடுத்திருக்கும் வலைத்தளத்தைச் சொடுக்கினால் நீங்கள் அனுபவிக்கலாம்.


London in Detail | Gigapixel London Panorama | London Photographer

Sunday, January 8, 2012

அல்லூரில் திரு ஆதிரை!

நண்பர்களே! இன்று (8.1.12) திருவாதிரை என்றழைக்கப் படும் (சிதம்பரம்) நடராஜரின் ’ஆர்த்ரா தரிசனம்’ நடைபெறும் நன்னாள். இன்று காலையில் திருச்சிக்கு அருகிலுள்ள அல்லூரில் நடைபெற்ற விழாவின்போது நான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்து, ஐயனின் அருள் பெறுவீர்!

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Posted by Picasa

Friday, January 6, 2012

ஒரு புதிய கலை!

”கொம்பிலே பழம் பழுத்துத் தொங்குறதும் கலை,
லவ்விலே மனம் மயங்கிப் பொங்குறதும் கலை,
வீதியிலே கர்ணம் போட்டு ஆடுறதும் கலை,
மேடையிலே குந்திக்கிட்டுப் பாடுறதும் கலை” என்று
சந்திரபாபுவின் குரல் மூலம் ‘பதிபக்தி’ படத்தில் சொன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அதாவது, கலையின் வடிவங்கள் எண்ணிறந்தவை. மேல் நாடுகளில் அப்படிப்பட்ட கலைகளில் ஒன்றுதான் 'BOOK CARVING' என்பது. பழைய, பெரிய புத்தகங்களைக் கலையழகோடு ’குடைந்து’ தயார் செய்யும் ஒரு சிற்ப வடிவம். அத்தகைய வடிவங்களில் பொறுக்கியெடுத்த ஐந்து சிற்பங்களின் படத்தைப் பார்த்து வியக்கலாம், வாருங்கள்,நண்பர்களே! படங்களின் மேலே சொடுக்கினால் பெரிதாகப் பார்க்கலாம்.