Tuesday, August 30, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (நான்கு)


உங்களுக்கும் எனக்கும் இன்றைய தினம் ஆனந்தமான நாளாக மலரப் போகிறது! இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடல் அத்தகையது!

தலைவியின் மனதிற்கேற்ப அவளின் காதல் கைகூடினால், பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தவிர வேறென்ன உணருவாள்? அந்த உணர்ச்சிகளை அப்படியே கொணர்ந்து மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இசை அமைத்திருக்கிறார்கள். அதன் முழுப் பரிமாணமாக, பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயலின்களும், பியானோவும், டோலக்கும், தபலாவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக சுசீலாவின் தேன் குரலும் நம் உயிரைச் சுண்டி இழுக்கிறது பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் வெற்றி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இப் பாடல் ‘தங்கப் பதுமை’ திரைப்படத்தில் வருகிறது. (இதே படத்தில் பிரபலமான இன்னும் இரு பாடல்கள்: டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருக்கும் ’இன்று நமதுள்ளமே’ மற்றும் சிதம்பரம் ஜெயராமன் பாடி, பத்மினி இடையே பேசியிருக்கும் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே”).

’என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ என்கிற இந்தப்பாடல், படத்தில் இன்னொரு முறை நெஞ்சைப் பிழியும் சோகத்தோடும் ஒலிக்கும்! அதையும் சுசீலாதான் பாடியிருக்கிறார். நான் தெரிவு செய்திருப்பது (இசைக் கோர்வைக்காக) மகிழ்ச்சியான பாடல். அதன் ஆரம்பத்திலும், சரணங்களின் இடையிலும் வரும் வயலின்களின் விளையாட்டையும், அதற்குப் பியானோவின் ‘கார்டுகள்’ (Chords) தரும் அரவணைப்பையும், இரண்டாவது சரணத்தின் முன்னிசையில், வயலின்கள் மற்றும் பியானோவோடு பின்னால் புல்லாங்குழல் இசை பின்னிப் பிணைந்து கொண்டு வருவதையும் தவற விட்டு விடாதீர்கள்! இப்போது பாடல் இதோ:

En vaazhvil pudhup paadhai by Krishnamurthy80


மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே?




Friday, August 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!

(மூன்று)

ஓரு இனிமையான செய்தி! கடந்த இரு பதிவுகளுக்கான பாடல்களின் ஒலிப்பதிவுகள் அந்தந்தப் பதிவுகளில் இணைக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் பாடல்களுக்கும் இணைப்பு (கிடைத்த வரை!) உண்டு. கேட்டு மகிழுங்கள்.

நான் முதலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்ற சூழ்நிலையில் கேட்டால் இன்னும் இனிக்கும். நல்ல கருவிகளில் கேட்கும் போதுதான், அற்றை நாளிலேயே, (அதாவது, இன்று போல நவீன ஒலிப்பதிவுக் கருவிகள், கணினிகள் இல்லாத போதிலேயே) நமது ஒலிப்பதிவாளர்கள் எவ்வளவு அருமையாகப் பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியும். உதாரணமாக, பல பாடல்களில் டபிள் பேஸ் என்கிற (மகா பெரிய வயலினைப் போல இருக்கும் இதை, நின்று கொண்டு தான் இசைப்பார்கள்) வாத்தியத்தை தாளத்திற்கேற்பவும், அந்தந்த ஸ்வரத்திற்கேற்பவும் மீட்டியிருப்பார்கள். உங்கள் காதுகளில், அதன் தொனி ‘தொம், தொம்’ என்று தாளத்தோடு அதிரும்! பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் எல்லா வாத்தியங்களின் தொனியும் செவிகளில் அளவாக, அமுதமாக விழும். ஆனாலும் எந்த வாத்தியமும் பாடுபவரின் குரலையோ, உச்சரிப்பையோ என்றும் அமுக்கியதே இல்லை!

இன்னொன்று! நான் இணைத்திருக்கும் சில பாடல்களின் ஒலிப்பதிவு, மெச்சத்தகுந்ததாக இல்லை என்றால், அது என் ஒலிப்பதிவு அல்லது இணைப்பின் குறையே!

-0-

இனி இன்றைய பாடல்: ’மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னைக் கவர்ந்த மூன்றாவது பாடல், ‘நானன்றி யார் வருவார்?’. இந்தப் பாடலை, டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி. கோமளாவும் பாடியிருக்கிறார்கள். பாடல், ’ஆபோகி‘ என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது. (இதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில், ‘கலைக்கோவில்’ படத்தில் வந்த, பாலமுரளீகிருஷ்ணாவும் சுசீலாவும் பாடிப் பிரபலமான ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. இளையராஜாவும், இதே ராகத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’ என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார்).

இந்தப் பாடலின் சிறப்பு என்ன? நீங்கள் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பல பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நாடக மேடையிலிருந்து வந்தவர் என்பதால் கணீர்க் குரலில் உச்சஸ்தாயியில் பாடும் வழக்கம் உள்ளவர். (கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல் கூட, கணீரென்றுதான் இருக்கும்!) ஆனால், இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரை, மென்மையான குரலில் எவ்வளவு அழகாகப் பாட வைத்திருக்கிறார்கள் என்பதை! மனதைத் தழுவி, உள்ளே புகுந்து பாடலோடு ஒன்றச் செய்யும் வித்தை அது!

உடன் பாடியிருக்கும் ஏ.பி.கோமளா பழைய பாடகி. அருமையான குரல் வளம் கொண்டவர். ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், போன்ற அனைத்துப் பழம்பெரும் இசையமைப்பாளர்களிடமும் நிறையப் பாடியிருக்கிறார். (சிவாஜி நடித்த ’நான் பெற்ற செல்வம்’ படத்தில் ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்ற அருமையான பாடலைப் பாடியிருப்பார், கேட்டதுண்டோ?). நான் இன்னமும் விவரிப்பதை விட, நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானே உங்களுக்குப் புரியும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Naanandri yaar varuvaar? by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடல் மூலமாகச் சந்திப்போம், நண்பர்களே!



Monday, August 22, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!(இரண்டு)


கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போல, எனது ரசனையில் இரண்டாவது பாடலும் கவியரசரின் மாலையிட்ட மங்கை படத்திலிருந்து தான். கவியரசரின் இந்தப்பாடலை, மெல்லிசைமன்னர்களின் இசையில் ஜமுனாராணி பாடியிருக்கிறார்.

’மாலையிட்டு மணமுடித்து பொட்டு வச்சு, பூ முடிச்சு
மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே!
மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான், கொஞ்ச நாளிலே!’

இந்தப் பாடலைப் பாடிய ஜமுனாராணி (பானுமதியைப் போல ஒரு வித்தியாசமான குரல் இவருக்கு!) மணமகளை வரவேற்கவும், நையாண்டி செய்யவும் கூடிய உணர்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்தி, அழகாகப் பாடியிருப்பார். பின்னணியில், தாளமும் மற்ற தோழிகளின் குரல்களும் அதற்கு அருமையாகத் துணை போகும். ஆனாலும், கதைப்படி, அந்த மகிழ்ச்சி அந்த மணமகளுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக மகா சோகத்துடன் ஒரு ஷெனாய் பீஸும் பாடலுக்கு முன்னரும் இடையிலும் ஒலிக்கும்!

இரு வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கி, கவியரசரும், மன்னர்களும் உருவாக்கிய இப்பாடல், ஒரு நல்ல பாடலுக்கு ஆரவாரமான இசை தேவையில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. பாடகியின் குரலும், மாண்டலினும் ஷெனாயும் கேட்கும் போதெல்லாம் சொக்க வைக்கும்! அநுபவியுங்கள், அடுத்த பாடல் வரும் வரை!

Malaiyittu manamudiththu by Krishnamurthy80

Wednesday, August 17, 2011

கொஞ்சும் இசையும் கொஞ்சம் ரசனையும்!

பழந்தமிழ்த்திரை இசை பற்றி அடிக்கடி இங்கே அலசலாம் என்கிற உத்தேசம்.அதாவது, (கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளையும் விஞ்சியதாகத் தானே சொல்லிக்கொண்டிருக்கும்) திரு. இளையராஜா அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்து எத்தனையோ இறவாப்பாடல்களை உருவாக்கி, சத்தமே இல்லாமல் சாதனைகள் பல செய்து போனவர்களைப்பற்றி அல்ல, அவர்கள் உருவாக்கிய சில அபூர்வமான, அற்புதமான பாடல்கள் பற்றிப் பேசப்போகிறோம். இதில் பாடல்களைப் பற்றிப் பேசப்போவது குறைவு. ரசிக்கப் போவதுதான் அதிகம். அதுதான் இந்தப் பதிவின் குறிக்கோளும் கூட.

ரசனை என்பது எல்லை கடந்தது. இதில்,பாடல்களை ரசிப்பதில் நம் போல யாருமில்லை. இன்றைய தினத்தில் வேண்டியதெல்லாம் ஒரு கைப் பேசி மட்டுமே.. ஒரே பேருந்தில் நான்கைந்து பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்! யார் அதிகமான சத்ததை உலவவிடுகிறார்கள் என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டி! இதன் தலையாய சோகம், இன்றைய திரைப்பாடல்களும் ரசிப்பதற்காக உருவாக்கப் பட்டவைகள் என்று சொல்லமுடியாது. தப்புத் தாளத்தை (தப்பு என்கிற தாள வாத்தியம்) அடிப்படையாக வைத்தே எல்லா மெட்டுகளும் இருக்கின்றன. ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று இளையராஜா ஆரம்பித்து வைக்க, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’ என்று ரஹ்மான் பின் தொடர, இன்று படத்திற்கு நான்கு பாடல்களாவது அந்த வகைதான்! மெலடி என்று கூறப்படும் மீதி இரண்டு பாடல்களும் (பெரும்பாலானவை) மனதில் நிற்பதில்லை என்பதுதான் நிதரிசனம்.

பாடல்களுக்குப் போகுமுன், அதிகபட்ச ரசனைக்காகச் சில முன்னேற்பாடுகள் தேவை. நான் சிபாரிசு செய்யும் பாடல்களை, (கூடியமட்டிலும்) இரவில், தனிமையில் கேளுங்கள். ஒரு நல்ல ஒலி பெருக்கியில், மிதமான ஒலி அளவில், அல்லது இன்றிருக்கும் கைப் பேசி/ஐ-பாட்டில் (காதுகளுக்குள் கருவியைப் பொருத்தி) இதமான ஒலி அளவில் கேட்டுப் பாருங்கள். இதை நான் கூறவில்லை. திரு.சுஜாதா அவர்கள் சொன்னது. இப்படிக் கேட்டால், பாடல்கள் முடிந்தவுடன் ‘ஐயோ, முடிந்துவிட்டதே’ என்றிருக்கும்! 1950 முதல் 1980 களின் பாடல்கள் இன்றும்கூட அதிகமாக விரும்பிக் கேட்கப்படுபவை. இவைகளிலும் பொறுக்கியெடுத்த சில பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறேன். தேடிப் பிடித்து, கேட்டு அனுபவித்து, யான் பெற்ற(றுக்கொண்டிருக்கும்!) இன்பம், பெறுக இவ்வையகம்!

மாலையிட்ட மங்கை என்ற படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதில் வரும் ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என்கிற பாடலை ஒலிபரப்பாத ஒலிக்கருவியே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்! அதன் பல்லவி(மட்டும்), ஒரு இந்திப் படத்தில் திரு.நெளஷாத் உருவாக்கிய பாடலின் பிரதி. ஆனாலும் நாம் ரசிக்கப் போவது அந்தப் பாடல் இல்லை. அதே படத்திலிருந்து வேறு மூன்று பாடல்கள். அதில் முதலாவதாக வருவது, எம்.எஸ்.ராஜேஸ்வரி, தன் இனிமையான குழந்தைக் குரலில் பாடியிருக்கும்

‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்,
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்,
ஆனாலும் அவையாவும் நீ யாகுமா,
அம்மா என்றைழைக்கின்ற சேயாகுமா!’ என்கிற தாலாட்டைக் கேளுங்கள்.

மனதை வருடும் இசை. குழைவான குரலுக்கிசைந்த வீணை, புல்லாங்குழல், இரண்டு தாள வாத்தியங்கள் மற்றும் கண்ணதாசனின் வரிகள் – இவ்வளவு தான் மொத்தமுமே! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ஏராளமான பாடல்கள் (‘ஆர்கெஸ்ட்ரேஷன்’ எனப்படும்) நிறைய வாத்தியங்களின் இசைக் கோர்வைக்குப் பெயர் போனவை.(இங்கே புதிய பறவை படத்திலிருந்து ’எங்கே நிம்மதி’ நினைவுக்கு வருகிறது) அவர்களிடமிருந்து இத்தகைய அமைதியான பாடல்கள் பல வந்திருக்கின்றன என்பதுதான் அவர்களைச் சிறந்த இசையமைப்பாளர்களாக்குகிறது. இந்தக் காவியத்துக்கு கவியரசின் வரிகள் ஒரு மகுடம்.

நான் கூறிய சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேட்டு ரசியுங்கள் – இசையின் தாக்கம் என்னவென்பது உங்களுக்கு மேலும் புரியும்! மீண்டும் அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்தப் பாடலைக் கேளுங்கள்:

29 MAZHAI KOODA INH100310630 by Krishnamurthy80