’கலைக்கோவில்’ என்ற திரைப்படத்தைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். 1964ல், வெளிவந்த இப்படத்தை இசையமைப்பாளர் விசுவநாதனும் கலை இயக்குனரான கங்காவும் இணைந்து தயாரித்தனர் இயக்குனர் ஸ்ரீதரின் கைவண்ணத்தில் முத்துராமன், ராஜஸ்ரீ, சந்திரகாந்தா (இவர், தொலைக்காட்சிகளில் பெரிதும் நையாண்டி செய்யப்படும் நடிகர் சண்முகசுந்தரத்தின் சகோதரி) நடித்திருந்தனர். மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில், பாடல்கள் எல்லாமே அற்புதமாக அமைந்திருந்தாலும் இன்றளவும் ரசிக்கப்படும் பாடலாக, பாலமுரளிகிருஷ்ணா – சுசீலா பாடிய ’தங்கரதம் வந்தது’ மட்டுமே இருக்கிறது.
ஒரு வீணை இசைக் கலைஞனின் கதையான இப் படத்தில் பிரபல வீணை இசைக் கலைஞர் சிட்டிபாபு அருமையாக வீணை வாசித்திருந்தார்.
இன்று நாம் ரசிக்கவிருக்கும் ‘தேவியர் இருவர்’ என்ற பாட்டுடன், பி.பி. ஸ்ரீநிவாஸ் உடன் சுசீலா பாடியிருந்த ‘நான் உன்னைச் சேர்ந்த செல்வம்’ மற்றும் முத்துராமன் குடித்துவிட்டுப் பாடுவது போல வரும் ‘முள்ளில் ரோஜா’ (இதில் வரும் விஸில் பிட் கூட அருமையாக இருக்கும்) என்ற பாட்டுக்களும் நன்றாக அமைந்திருந்தன.
’தேவியர் இருவர்’ பாட்டுக்காக ஸ்ரீதர் அமைத்திருந்த காட்சியும் பின்னாளில் பாலசந்தர் ‘இருகோடுகள்’ படத்தில் வரும் ‘புன்னகை மன்னன்’ பாட்டுக்காக அமைத்திருந்த காட்சிக்கும் வேறுபாடுகள் கம்மி, சிந்தனைகள் ஒத்தவை. ஏற்கனவே திருமணம் ஆகியிருக்கும் நாயகனின் மனைவியிடம் இடம் கேட்பது போல் இங்கேயும் இருதாரங்கள் சொந்தம் கொண்டாடுவது போல அங்கேயும் அமைந்திருக்கும். இங்கே முருகன் என்றால் அங்கே கண்ணன்! இரண்டுமே கண்ணதாசன் கைவண்ணம்!
சிட்டிபாபு, ஒரு குழந்தை நட்சத்திரம் என்பது தெரியுமா, உங்களுக்கு? நாகேஸ்வர ராவ் – பானுமதி நடித்த லைலா மஜ்னு என்ற படத்தில் (ஸி.ஆர். சுப்பராமன் இசையில் அருமையான பாடல்களைக் கொண்டிருந்த படம் இது!) இளம் மஜ்னுவாக நடித்திருந்தார், பாபு. இன்றைய ‘வாள மீனுக்கும்’ பாட்டின் இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு, சிட்டிபாபுவின் மகன் என்பது கூடுதல் தகவல்!
’தேவியர் இருவர்’ பாட்டு, ஸ்ரீ எனப்படும் ராகத்தைத் தழுவி அமைக்கப் பட்ட மெட்டு. நான் படத்திலிருந்து பதிவு செய்திருப்பதால், வீணையின் அருமையான வாசிப்பையும் சேர்க்க முடிந்தது. சுசீலாவின் இசைப் பயணத்தில் ஒரு மைல் கல் இந்தப் பாட்டு. அவரின் தேன்குரலோடு வீணையும் தபலாவும் போட்டி போடும் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்:
மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!