இன்றைய (சற்றே) பெரிய பதிவில், நாம் வித்தியாசமான மூன்று இசைக் கோர்வைகளைக் கேட்கவிருக்கிறோம். நமது தலைமுறையின் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் தனித்தன்மைகளையும், திரை இசையில் அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ள இவை பெரிதும் உதவும் என்று கருதுகிறேன்.
அதற்கு முன், சில விளக்கங்கள்:
திரைப்படங்களின் இசையமைப்பில் இரண்டு பிரிவுகள் உண்டு என்பதும், அவை, பாடல்கள் மற்றும் படம் நெடுகிலும் வரும் ரீ-ரெகார்டிங் (அதாவது, காட்சிக்கேற்ற இசைக் கோர்வைகள்) என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
இவற்றைத் தவிர, எல்லாப் படங்களின் ஆரம்பத்திலும் (டைடில் ம்யூஸிக் என்கிற) முகப்பிசைக் கோர்வை ஒன்றும் இருக்கும், அல்லவா? இது, வாத்தியங்களின் கோர்வையாகவோ, அல்லது பாட்டாகவோ (’டைடில் ஸாங்!’) இருக்கலாம். ‘குலேபகாவலி’ யின் டைடிலில் வரும் ‘நாயகமே, நபி நாயகமே’ பாடல் போல! எப்படி இருந்தாலும், முகப்பிசை என்பது, படம் பார்க்க வந்தவர்களை படத்தோடு ஒன்றச் செய்ய வேண்டிய வேலையை, டைடிலிலேயே தொடங்கிவிடவேண்டும் என்பதுதான் குறிக்கோள்.
முகப்பிசையிலும், ரீ-ரெகார்டிங்கிலும் ’கருத்திசை’ (தீம் ம்யூஸிக்) என்ற ஒன்றையும் புகுத்துவதுண்டு. இதற்கு உதாரணம், ‘பாவமன்னிப்பு படத்தில் (’வந்தநாள் முதல்’ பாட்டில்) விஸிலிலும், ஹம்மிங்கிலும் வரும் இசை. இங்கே மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி வயலினில் வாசிக்கிறார், கேளுங்களேன்:
Paavamannippu theme by Krishnamurthy80
படம் நெடுகிலும் பல காட்சிகளில் இதே மெட்டை வேறு வேறு வாத்தியங்களிலும் குரல்களிலும், காட்சிகளின் ’மூடு’ க்கேற்ப இசைத்திருப்பார்கள். அதையே முகப்பிசையிலும் அற்புதமாக கோர்த்திருப்பார்கள். இதைத்தவிர, இதே படத்தின் காதலர்கள் சிவாஜி, தேவிகா இருவரும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் வேறொரு கருத்திசையும் ஒலிக்கும்!
திரைப்பட இசையமைப்பில் கடினமான விஷயம் (நான் கேட்டறிந்தபடி), (பாடல்களை விட,) ரீ-ரெகார்டிங்’க்கும், முகப்பிசைக்கும் இசையமைப்பதே என்பது பல இசையமைப்பாளர்களின் கருத்து. முக்கியமாக, இன்றுபோல் இல்லாமல், (கணினிகளின் துணை இல்லாத) அந்தக்காலத்தில் பாடலோ, முகப்பிசையோ எதுவானாலும் ஒரே தடவையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! தவறுகளுக்கும் ஒட்டு வேலைகளுக்கும் இடமேயில்லை! எனவே, இயக்குனர், இசையமைப்பாளர், கவிஞர் எல்லாரும் கூடி மெட்டையும் பாடல் வரிகளையும் முடிவு செய்ததும், பாடுபவர்களும், வாத்தியக் கலைஞர்களும், முழுப் பாடலையும், கோர்விசையையும் வாரக் கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே பதிவு செய்யத் துணிவார்கள்! மேடை நாடகங்களைப் போலத்தான்! (மனோகரா, பக்த மீரா படங்களின் இசையமைப்பாளர் திரு. எஸ்.வி. வெங்கடராமன், ஒரு முறை என்னிடம் சொன்னார்: “எங்க காலத்தில எல்லாம் பாடுகிறவர்களுக்கும், வாத்தியக்காரர்களுக்கும் சேர்த்து ஒரே ’மைக்’ தான்! அதுகிட்ட வந்து தான், பாடியோ, வாசித்தோ செல்ல வேண்டும்! ரெகார்டிங் அப்டிங்கறது, ஒரு ஸர்க்கஸ் மாதிரி நடக்கும் ஸார்”).
ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள், எல்லா வகை இசையமைப்பிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களின் பல டைடில் ம்யூஸிக் கோர்வைகள் மேல் நாட்டு ஸிம்பொனிகளுக்கு ஒப்பானவை என்பதில் ஐயமில்லை!
இங்கே நான் முதலாவதாக இணைக்க நினைத்திருந்தது, மெல்லிசை மன்னர்களின் ‘இது சத்தியம்’ பட முகப்பிசைக் கோர்வை. அதில், ’சத்தியம், இது சத்தியம்’ என்ற (அதே படத்தில் வரும்) பாடலை வைத்து முகப்பிசையைப் பின்னியிருப்பார்கள். தங்களின் எல்லா நேரடி மேடைக் கச்சேரிகளின் ஆரம்பத்திலும் இதையே இசைத்து வந்தார்கள். எனக்குக் கிடைத்த அதன் ஒலிப்பதிவு திருப்திகரமாக இல்லாமல் போனதால், அதே பாணியில் இசையமைக்கப்பட்ட ’பாலும் பழமும்’ திரைப்படத்தின் முகப்பிசைக் கோர்வையைக் கொடுத்திருக்கிறேன்:
இதில் (வாத்தியங்களில்) இசைக்கப்பட்டுள்ள ’பாலும் பழமும்’ என்ற பாடலுக்கு, மாண்டலினையும் வயலினையும் பிரதானமாக உபயோகித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான கோர்வைகள்! சுற்றிச் சுழண்டு வருகிற வயலின்களும், கணீரென்ற மாண்டலின் ஒலியும் கடைசியில் அதே பல்லவியை ஸிதாரில் வாசித்திருப்பதும், சொக்க வைக்கின்றன. மாறுதலுக்காக, முதல் பல்லவியை மாண்டலினிலும் இரண்டாவதை வயலின்களிலும் வாசித்திருக்கிறார்கள். அப்போது (நான் ஏற்கனவே கூறியபடி) மாண்டலினுக்கு வயலின்களையும், வயலின்களுக்கு மாண்டலினையும் ‘ஸெகண்ட்ஸ்’ ஆக வாசித்திருப்பது, பிரமாதமான கற்பனை! இவற்றோடு (கிளாரினெட் சேர்ந்த) குழலிசையும், கிடாரின் ‘கார்ட்’ களும் (பாடலில் அங்கங்கே வரும் ஸ்வரத்திற்கேற்ப ஜங், ஜங் என்று வருகிறதே, அதுதான் ‘கார்ட்ஸ்’) உங்களைத் திரைப்படத்தினைக் காணத் தயார் செய்துவிடும்! இவ்வாத்தியங்களின் கலவையான இந்த இசைக்கோர்வையை, திரையரங்கில், அந்த ஒலி பெருக்கிகளில் கேட்க எப்படி இருக்கும்?!
சொர்க்கந்தான்!
அடுத்து வருவது, ‘திருவிளையாடல்’ படத்தின் முகப்பிசை. இதற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார். ஒரு புராணப் படம் என்பதைக் கருத்தில் கொண்டு, நமது பாரம்பரிய வாத்தியங்களான நாதஸ்வரம், தவில், குழல், மற்றும் தபலா, ஸிதார் போன்ற இசைக் கருவிகள் மூலமாக, கர்நாடக சங்கீத ராகங்களை வைத்து முகப்பிசையைக் கம்பீரமாகக் கொண்டாடி இருக்கிறார். அந்த கம்பீரம், இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களிலும் ஏகமாக எதிரொலிக்கும்! கெளரிமனோகரி ராகத்தில் ‘பாட்டும் நானே’, மாண்ட் என்கிற ராகத்தில் ’ஒரு நாள் போதுமா’,ராகமாலிகையில் ’இல்லாத தொன்றில்லை’, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘இசைத்தமிழ்’ போன்ற பாடல்களை மிஞ்சுவதற்கு இன்று எந்த ராஜாவாலும் முடியாது என்பதுதான் நிதரிசனம்! இந்த சாதனை, மகாதேவனுக்கு இரண்டாவது முறை! ‘சங்கராபரணம்’ படமும் பாடல்களும் நினைவிருக்கிறதா?
இந்த முகப்பிசையின் பிற்பகுதியில், நாதஸ்வர இசைக்குத் துணையாக வயலின்களை உபயோகித்திருப்பது சுவாரஸ்யமான பின்னல். அதுவே தொடர்ந்து குழலாலும் இசைக்கப் படுகிறதையும் கவனியுங்கள். இப்போது இசையைக் கேட்போமா?:
கடைசியாக, மெல்லிசை மன்னர்கள், ‘பாசமலர்’ படத்திற்காக அமைத்திருந்த முகப்பிசைக்கு வருகிறோம். (இத் திரைப் படத்திற்கு ’பாசமலர்’ என்ற பெயரை யார் கொடுத்தார்கள் தெரியுமா உங்களுக்கு? படம் எடுத்து முடித்ததும், (அவர்களுக்குள்) படத்திற்குப் பொருத்தமான தலைப்பைத் தருவோருக்கு, ரூ.ஆயிரம் பரிசு என்று சொன்னார்களாம். கண்ணதாசன் இந்தப் பெயரை நொடியில் சொல்லிப் பரிசைத் தட்டிச் சென்றாராம்!)
இந்த முகப்பிசைப் பாடலை, தாள வாத்தியங்கள் ஏதும் துணை வராமல் தொகையறாவாகப் பாடியிருப்பவர், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் பாடிய முதல் (முழுப்) பாட்டு இது. இதன் ஒலிப்பதிவு முதலில் இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. ஆனாலும், அந்தக் காலத்திய ‘ரேடியோ சிலோனி’ல் இதை அடிக்கடி ஒலிபரப்பி மிகப் பிரபலமாக்கிய பின்னர், பாடல்கள் ஒலிநாடாவாக வெளியிடப் பட்டபோது, இதுவும் சேர்க்கப்பட்டது.
Title music- Pasamalar by Krishnamurthy80
இதிலும், இடையிடையே வரும் வயலின்களின் செழிப்பான ஆட்சியைக் கவனியுங்கள். படக்கதையின் ‘மூடு’க்கேற்றபடி, சோகத்தைப் பறைசாற்றும் இந்தப் பாடலின் (எதிரொலியை ஒத்த) ஒலிப்பதிவும் பாடகருடன் கூடவே துணை வரும் ஹார்மோனியமும் பின்னால் எங்கோ எப்போதோ ஒலிக்கும் (டிரம் வாத்தியத்தோடு ஒரு பெரிய ஜால்ரா போல இருக்குமே, அதன்) ஜல், ஜல் ஒலியும்........ ’பாசமலர்’ படம் வெளிவந்தபோது, (மொத்தம் 15 தடவைகளில்) இந்த இசைக் கோர்வையைக் கேட்பதற்காகவும் சில முறைகள் பார்த்தது இப்போது நினைவுக்கு வருகிறது!
இன்னொரு பாடலில் மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!