சென்ற பதிவில் உங்களைச் சோகத்தில் ஆழ்த்தியதற்கு ஈடாக, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை, சுசீலா இவர்கள் ஒன்று கூடி நமக்களித்த இன்னொரு ‘மாஸ்டர் பீஸ்’ஆன ஓருதுள்ளல் பாடலை இன்று கேட்போமா?
இயக்குனர் பீம்சிங்கின் ‘ப’வரிசை வெற்றிப் படங்களில் முதலாவதான ‘பதிபக்தி’ படத்தில், சிவாஜியின் தங்கையாக வரும் சாவித்திரி, ஆடு மேய்த்துக் கொண்டே இந்தப் பாடலைப் பாடுகிறார்.
‘இரை போடும் மனிதருக்கே, இரையாகும் வெள்ளாடே,
இதுதான் உலகம், வீண் அனுதாபம் கண்டு நீ, ஒருநாளும் நம்பிடாதே!’
என்று ஆரம்பிக்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளின் அழகைப் பாருங்கள்!. பாடல் முழுவதுமே நமக்கெல்லாம் சவுக்கடிதான்! பாடலைக் கேட்கும்போதே அது தெரியும்!
மெட்டின் சிறப்போ, பாடியவரின் திறமையோ, தெரியவில்லை -சுசீலாவின் தேன் குரலைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வளவு இனிமை! அத்துடன் பாடலின் முகப்பு மற்றும் இடையே வரும் கோர்விசையின் கூடவே (தாளமாக) வரும் ‘டபிள் பேஸி’ன் அதிர்வுகளையும் கவனியுங்கள். (இந்த வாத்தியத்தைப் பற்றி என்னுடைய மூன்றாவது பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேன்). எவ்வளவு துல்லியமான ஒலிப்பதிவு!
இதற்கான மெட்டோ, ஒரே வேகம் – நாம் முன்னர் ரசித்த ‘என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ பாடல் போல! இந்தப் பாடலிலும் வயலின்கள், டோலக் மற்றும் தபலா எனும் தாள வாத்தியங்கள், ஸிதார், குழல், மற்றும் (வயலினைப் போலவே வில் வைத்துக் கொண்டு இசைக்கப்படும்) தில்ரூபா எனும் வடநாட்டுத் தந்தி வாத்தியம் இவை எல்லாம் உண்டு. இவற்றை ஒருங்கிணைத்துக் கோர்த்து, மூன்று நிமிடங்களில் ஒரு மந்திர ஜாலமே நடத்திவிடுகிறார்கள், மெல்லிசை மன்னர்கள்! இதன் மத்தியில், ‘காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட’ புத்தர், (ஸிதார்), ’கடல் போலே உள்ளம் கொண்ட காந்தி, யேசுநாதருக்கு’ (வயலின்) என்று ஸ்பெஷல் இசை வேறு!
நான் வர்ணிப்பதை விட, பாடலை அனுபவித்து விட்டு, நீங்களே சொல்லுங்களேன்!
நண்பர்களே! இன்று நாம் கேட்கப்போகும் இந்தப் பாடலை, (நான் ஏற்கனவே என்னுடைய முதல் பதிவில் எழுதியிருந்தபடி) குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்டால், உங்கள் மனது கரைந்து லேசாகிவிடும் என்பதற்கு நான் உத்திரவாதம்! இதை, சோகத்தைக் குரலில் கொண்டுவந்துகொட்டி எஸ்.வரலக்ஷ்மியும், சோகத்தையே குரலாகக் கொண்ட டி.எஸ். பகவதியும் பாடியிருக்கிறார்கள்.
ஆமாம். பகவதியினுடையது, மிக சோகமான குரல். ஆனால் அருமையானது, வித்தியாசமானது! நல்ல பாடகியான இவரின் மெலிதான குரல், கேட்பதற்கு வெகு சுகமானது என்றாலும், அக்காலத்திய பல கதாநாயகிகளுக்கு ஒத்து வராமல் போனது. ஆனாலும் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த குரலானது! இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.
பாடலுக்கு வருவோம்.
தமிழர்களின் தனிச் சிறப்பான தாலாட்டையும், ஒப்பாரியின் சோகத்தையும் கலந்த ஒரு அபூர்வமான விருந்து, இந்தக் கண்ணதாசனின் பாடல். ’சிவகங்கைச் சீமை’ திரைப்படத்திற்கான இந்தப் பாடலை ஒரு காவியமாக்கியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.
ஆங்கிலேயர்களுடன் போருக்குச் செல்லப் போகும் மருது சகோதரர்கள், திரும்பி வரப் போவதில்லை என்கிற தெளிந்த உள்ளுணர்வோடு, அவர்தம் மனைவியர் பாடுவதுபோல அமைந்துள்ளது இப்பாடல். சாதாரணமாக மகுடி ராகம் என்றறியப்படும் புன்னாகவராளி எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவிப் போடப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மெட்டையே பிரதானமாகக் கொண்ட இந்தப் பாடலில், பெண்டிர் இருவரின் குரல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம். பின்னணியில் அடக்கி வாசிக்கப் பட்ட தபலாவும், குழலும், சிதாரும், (கதையின் இறுக்கமான சூழ்நிலையில்), பாடலில் சோகத்தை அதிகமாக்குவதற்கு மட்டுமே உறுதுணையாக இருக்கிறது.
ஒரு அதிசயமாக, மன்னர்கள் இசையில் வயலின் சத்தமே கேட்காத ஒரு அரிய பாடல், இதோ:
அழகான மெட்டும், அருமையான பாடலும், அவற்றைக் கச்சிதமாகக் கோர்த்துக் கொடுக்கப் பட்டுள்ள விதமும், எத்தனை திறமைசாலிகளுக்குப் புகழ் சேர்த்திருக்கின்றது! ’டீம் வொர்க்’ என்பதின் அர்த்தம் புரிகிறதா?!
மனதை உருக வைப்பதில் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முழுப் பாடலையுமே சொல்லலாம் என்றாலும்,
‘போர் மீறிப் புறப்படுவார் -
பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்’
என்ற வரிகளை வீரமாகவும், அடுத்து வரும்
’யார் வருவார், யார் மடிவார்,
யாரரிவார் கண்மணியே!’
என்ற வரிகளைச் சோகமாகவும் வரலக்ஷ்மி பாடும் போது, ஒன்றிக் கேட்கும் ரசிகனாகிய உங்கள் கண்களில் நீர் அரும்பாமலும் போகுமோ?
தமிழ்த் திரைப்படங்களில் டூயட் பாடல்களை டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில், (தமிழில் இவர்கள் இருவர் மட்டுமே 750 பாடல்களைச் சேர்ந்து பாடியிருப்பதாகவும், சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து 250 பாடல்களும், தனியாகச் சுமார் 1700 பாடல்களும் பாடியிருப்பதாகவும் சுசீலாவின் சொந்த வலைப் பூவிலிருந்து ஒரு தகவல்!) ஒரு மாறுதலாக, டூயட் பாடல்களில் ஆண்கள் குரலிலும் (’பொன்னொன்று கண்டேன்’, அவள் பறந்து போனாளே’ பாடல்கள்) மற்றும் பெண்கள் குரலிலும் பதிவான பல பாடல்கள் பிரபலமடைந்தன. (இதற்கு முந்தைய பதிவில் கேட்ட ‘சின்னஞ்சிறு கண்ணன்’ பாடல் போல!) இதைப் போன்ற முரணான குரல்களால் பாடப் பெற்ற பல டூயட் பாடல்கள் கேட்பதற்கு வெகு சுகமாக அமைந்தன.
இன்று போல் அல்லாமல், அந்தக் காலப் பாடகர்களின் குரல்கள் ஒன்றொன்றும் நன்கு வித்தியாசப் பட்டிருந்ததால், ஒரு பாட்டைக் கேட்ட உடனேயே பாடியவர் யார், இசையமைத்தது யார் என்பதையும், பல சமயங்களில், பாடலை எழுதியவரையும் கூடச் சரியாக ஊகிக்கமுடிந்தது!
இந்த இடத்தில், இன்னொரு தகவல்: மன்னர்களின் குருவான ஸி.ஆர்.சுப்பராமனுக்கு, ’இந்திப்பாடல்களைத் தழுவியே இசையமைப்பவர்’ என்றொரு பெயர் இருந்தது. (இத்தனைக்கும் இவர், ’தேவதாஸ்’ படத்தில் வரும் ‘துணிந்தபின் மனமே’ மற்றும் ‘உலகே மாயம்’ போன்ற மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்!) இதனால் மனம் புண்பட்டிருந்த சுப்பராமன், என்.எஸ்.கிருஷ்ணனின் ’மணமகள்’ படத்தில், ஒரு சவாலாக, கர்நாடக ராகப் பாடல்களை மட்டுமே கொடுத்து, அத்தனை பாடல்களையும் பிரபலமாக்கித் தன் திறமையைக் காட்டினார். உதாரணமாக, இந்தப் படத்தில் வந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற (ராகமாலிகை எனப்படும் பல ராகங்களை உள்ளடக்கிய) பாடல், எளிதில் அடைவதற்குக் கடினமான கர்நாடகக் கச்சேரி மேடைகளைச் சென்றடைந்து, இப்போதும், (அதாவது ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னரும்) கச்சேரி ரசிகர்களின் விருப்பப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!
ஆனால், ’மணமக’ளில் நான் எடுத்துக் காட்ட வந்தது, இன்னொரு அற்புதமான ராகமாலிகையான ‘எல்லாம் இன்பமயம்’ என்கிற டூயட் பாடலை. இதை இரண்டு முரண்பட்ட குரல்களையுடைய எம்.எல்.வசந்தகுமாரியும் பி.லீலாவும் பாடியிருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் இசையமைப்பாளருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப்பாடல், இன்றும் சின்னத்திரையில் பல ’சூப்பர் சிங்கர்’களின் செல்லப் பாடலாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது! இந்தப் பாடலின் தேர்ந்தெடுத்த சுகமான ராகங்களையும், அவற்றிற்கு ஈடான ஸ்வர ஜதிகளையும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் நமக்கு சங்கீதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!
இந்த உத்தியை, நமது பிற்கால மன்னர்களும் இன்ன பிற இசையமைப்பாளர்களும், பல பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். முரண்பட்ட குரல்களைக் கொண்ட சுசீலாவையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் வைத்து, ‘உனது மலர் கொடியிலே’, ’மலருக்குத் தென்றல் பகையானால்’ போன்ற எத்தனை தேனான பாடல்களை இன்றும் கேட்டு மகிழ்கிறோம்!
இப்போது, இன்று நாம் கேட்கப் போகிற (மெல்லிசை மன்னர்கள் இசையில்) ஒரு முன்னோடியான பாடலை, ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்திற்காக ஜமுனாராணியும், எல்.ஆர்.ஈஸ்வரியும் மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். கவனமாகக் கேளுங்கள், பாடலோடு இழைந்து வரும் வயலின்களும், தொடர்ந்து வரும் மாண்டலின் இசையும் நடுநடுவே தெளித்திட்ட குழலிசையும், ஒரே சீரான தாளமும் பாடலோடு நம்மையும் எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடும்! இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் கோர்விசையில், மாண்டலினுக்கு இசைவாக இன்னொரு ஸ்ருதியில் குழலை ஓட விட்டிருக்கிறதையும் அனுபவியுங்கள். (அந்தக் குழல் ’பிட்’ டை ஸெகண்ட்ஸ் என்று இசை மொழியில் கூறுவார்கள்):
இன்னொன்று - இங்கே இசையை மட்டுமே ரசிக்க வந்தவர்களை, பாடலின் வரிகளையும் ரசிக்க வைத்திருப்பவர், மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கண்ணதாசனைப் போலவே, இவருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் காம்பினேஷன் அமர்க்களமாக அமைந்தது. (‘இன்று நமதுள்ளமே’ எனும் ’தங்கப் பதுமை’ படப் பாடலில் ஒரு வரி: ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்......‘ இந்த உவமைக்கு ஈடேது, இணையேது?!)
நீங்கள் இப்போது கேட்ட பாடலின் சில வரிகளைத்தான் பாருங்களேன்:
‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்த திறமை தான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி – கொண்ட கடமைதான் நமக்குப் பதவி’
மற்றும்,
‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும் ஏழைகள் நிலைமை – அந்த சாமி மறந்தாலும் பூமி தந்திடும் தகுந்த பலனை’
என்ற வரிகளெல்லாம் (வைரத்தை விடுங்கள்!) சுத்தமான ப்ளாட்டினம் அல்லது (இன்றைய விலையில்) தங்கம் அல்லவா?
நமது இந்தியத் திருநாட்டில் தனியர்களாக நின்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம். அதே போல,ஒரு துறையில் இரட்டையர்களாக சாதித்தவர்களும் நிறைய உண்டு. கலைத்துறை, அதாவது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், வடக்கே ஹன்ஸ்லால்-பகத்ராம், சங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் போன்ற பலர் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தமிழிலும் அப்படி ஜொலித்தவர்கள்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ்த் திரை இசையின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனக்கொரு வருத்தம் உண்டு. வடக்கில் இருந்தவர்களும் பிரிந்தார்கள் - நம்மவர்களும் பிரிந்தார்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், அங்கிருந்தவர்கள் யாரும் (பிரிவுக்குப்பின்னர்) இருவரில் எல்லாப்பாட்டும் என்னால் மட்டுமே போடப்பட்டது என்று சொந்தம் கொண்டாடவில்லை. கடைசிவரை பட டைட்டில்களில் இருவர் பெயர்களும் போடப்பட்டன. ஆனால் இங்கோ, அந்தப் பெருந்தன்மை ஒருவருக்கில்லை! நான் போட்டேன், நானே போட்டேன் என்று சத்தியம் செய்யாத குறைதான்! இன்றும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அழுது, அரற்றிக் கொண்டு...கண்றாவி! வயலின் வித்தகரான மற்றவர் எல்லாப்பாட்டையும் இருவரும்தான் போட்டோம் என்று சொல்லிவந்தார் என்பது எனக்குத் தெரியும்.இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே முன்னவரிடம், தாங்கள் பிரிந்துவந்தபிறகு ஏன் ஸார் ஒரு பாட்டைக் கூட ஒரு ‘எங்கே நிம்மதி” போலவோ, ஒரு ‘கேள்வி பிறந்தது அன்று’ போலவோ போடவில்லை என்று கேட்கவுமில்லை!
குறிப்பு: திரு.ராமமூர்த்திக்கு அண்மையில், சென்னையில் ஒரு விழா எடுத்துச் சிறப்பித்தார்கள் என்ற செய்தியின் விளைவு இந்தப் புலம்பல்! அவர்கள் இருவரும் பிரிந்து ஏறத்தாழ 43 நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை மக்கள் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறார்கள்!