Showing posts with label Jikki. Show all posts
Showing posts with label Jikki. Show all posts

Friday, March 30, 2012

சீர்காழி வாஆஆஆஆரம்!



நண்பர்களே,

இப்போதிலிருந்து ’சீர்காழி ‘வாஆஆரம்’ தொடங்க உத்தேசம். அவருடன் நமது பழைய பாடகிகள் இணைந்து பாடியிருக்கும் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா? இதென்ன கேள்வி, என்கிறீர்களா, எல்லாம் சும்மா ஒரு இதுக்குத்தான்!

இன்றைய கச்சேரியை ஆரம்பித்து வைக்க, ஜிக்கி அவர்களை அழைக்கிறேன். (வேறொன்றுமில்லை, இதற்கு முன்னால் இவரும் சீர்காழியும் அளித்த ‘அன்பே என் ஆரமுதே’ இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது!)

இந்தப் பாட்டும் ’கோமதியின் காதலன்’ படத்திலிருந்து, ஜி.ராமனாதன் இசையில் வருகிறது. இருவரின் கணீரென்ற துல்லியமான குரலில், வாத்தியங்களின் இசையை மீறிக்கொண்டு ஒலிக்கிற சோகப்பாடல்,இது. இருவரும் பாடும்போது, பின்னால் எலக்ட்ரிக் கிடாரின் இசை ஒலிப்பதைக் கவனியுங்கள்.

அடுத்து, சீர்காழியுடன் யார் பாடுகிறார்கள்? பார்க்கலாம். இப்போது, ‘மின்னுவதெல்லாம்’, சீர்காழி-ஜிக்கியுடன், இதோ:

Tuesday, March 6, 2012

சிற்பி செதுக்காத பொற்சிலையே!

சற்று இடைவெளிக்குப் பிறகு, ஒரு நல்ல தமிழ்த் திரையிசைப் பாட்டில் மனதை லயிக்க விடலாம் என்று தோன்றியது.

இன்று நாம் ரசிக்கப் போகும் பாட்டினை, அது வெளிவந்த காலத்தில் ஊரே பாடிக் கொண்டிருந்தது என்றால் நம்ப மாட்டீர்கள்! ஆணாகப் பிறந்தவர்கள் எல்லாம் தங்களை ஏ.எம்.ராஜாவாகவும், பெண்களெல்லாம் ஜிக்கியாகவும் நினைத்துக்கொண்டு பாடிக் கொண்டிருந்தார்கள்!

ஆமாம், எதிர்பாராதது என்ற திரைப்படத்தில் சிவாஜியும், பத்மினியும் இந்தப் பாடலைத் தனித்தனியே பாடுவது போல காண்பித்திருப்பார்கள். இந்தப் படத்தின் கதை வசனத்தை எழுதியிருந்தவர், அப்போது முன்னுக்கு வந்து கொண்டிருந்த செங்கல்பட்டு ஸ்ரீதர். (அதாங்க, நம்ம ஸ்ரீதர்!.) படத்துக்கு இசையமைத்தது C.N.பாண்டுரங்கன் என்கிற (வெளிச்சத்துக்கு வரத்தவறிய) மேதை.

இது (அந்தக் காலகட்டத்தில்) ஒரு புரட்சிகரமான கதை. காதலி வேறொருவனை மணந்து விதவையான பின்னர் காதலனை மறுமணம் செய்துகொள்வார்.

இந்தப் பாடலைத்தவிர இன்னும் சில பாடல்களும் பிரபலமடைந்தன.

ஒரு கூடுதல் தகவல்: எதிர்பாராதது படத்தில், சிவாஜியை, பத்மினி உணர்ச்சிவசப்பட்டுக் கன்னத்தில் அறைவார். பின்னாளில் சிவாஜி சொல்லும்போது, ‘சரியான சமயத்தில் முகத்தைத் திருப்பிக் கொள்ளத் தவறியதால், பலமான அறை பட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு கன்னம் வீங்கி, படப்பிடிப்பே ரத்தானது’ என்று கூறியிருந்தார்!
(இவர் மட்டும் என்ன? நடிகர் சிவகுமார், உயர்ந்த மனிதன் படத்தில் சிவாஜியிடம் வாக்கிங் ஸ்டிக்கால் அடிவாங்குவார். அந்தக் காட்சி படமான அன்று, படப்பிடிப்புத் தளத்திற்கு வந்த சிவகுமார், ஒரே மாதிரியான வாக்கிங் ஸ்டிக்குகள் பல அடுக்கி வைத்திருந்ததைப் பார்த்தாராம். ’எதுக்கு ஸார், இத்தனை?’ என்று கேட்ட போது இயக்குனர் கிருஷ்ணன் (பஞ்சு), ‘அது வேறொண்ணுமில்லே தம்பி, சிவாஜி யாரையாவது அடிக்கற ஸீன்ல மட்டும் உணர்ச்சிவசப்பட்டு நிஜமாகவே அடித்துவிடுவார், கம்பு உடைந்துவிடும். அதனால், அடுத்த டேக்குக்கு வேணுமில்லே, அதுக்காகத் தான் வெச்சிருக்கோம்’ என்று கூலாக பதிலளித்தாராம்.) சிரித்து முடித்து விட்டு, கீழே இருக்கும் லிங்க்கைச் சொடுக்கி, இந்த நல்ல பாட்டை ரசிக்கலாமே!


Sirpi sedhukkatha Porchilaye

Monday, February 20, 2012

மீண்டும் கொஞ்சம் இசை!

நண்பர்களே!
கடந்த பல வாரங்களாகக் காணொளிகளிலே மனதைப் பறிகொடுத்தோம். இன்று மீண்டும் நமது தமிழ்த் திரை இசையை ரசிக்கலாமே!

இன்று நீங்கள் கேட்கவிருக்கும் பாட்டு, ஒரு இனிமையான பெண்குரலும் ஒரு உண்மையான ஆண்குரலும் சேர்ந்து அளித்திருப்பது! (என் போன்றவர்களுக்கு,உண்மையான ஆண் குரல் என்பது, பி.யு.சின்னப்பா, டி.எம்.எஸ்., சீர்காழி, திருச்சி லோகநாதன் இவர்களோடு முடிந்து போனது. இப்போது ஒலிக்கும் ஆண்குரல்கள் எல்லாமே எம்.கே.தியாகராஜபாகவதரின் குரல் போலப் பெண் தன்மை கொண்டவைதான்!) பாட்டுக்கு வருவோம்!

இன்றைய பாட்டை சீர்காழியும், ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள். இது, ’கோமதியின் காதலன்’ என்ற திரைப்படத்தில், டி.ஆர்.ராமச்சந்திரனும், சாவித்திரியும் பாடுவது போலவரும் டூயட். இசைவித்தகரான ஜி.ராமநாதனின் இசையில், கு.மா.பாலசுப்பிரமணியம் என்ற (அக்காலத்திய) பிரபல கவிஞர் எழுதியது. படத்தின் கதையை ‘தேவன்’ எழுதியிருந்ததாக நினைவு. படம், டி.ஆர்.ஆர் அவர்களின் சொந்தத் தயாரிப்பு.

குரல்களின் இனிமையும் (clarity) எனப்படும் துல்லியமும் கவனிக்கத் தக்கவை. உறுத்தாத பின்னணி இசையும், வால்ட்ஸ் எனும் மேல்நாட்டு நடனத் தாளமும் ஒரு கூடுதல் போனஸ். எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்கவே அலுக்காத பாடல்....ரசியுங்கள்:

Wednesday, December 28, 2011

துன்பம் சூழும் நேரம்!





நண்பர்களே! தொடர்ந்து சில நாட்களாக கண்களுக்கு மட்டும் விருந்து படைத்தோம். இன்று, சற்று செவிக்கும் ஈவோமா?!

நம்மிடையே இன்று பாட வந்திருப்பவர், ஜிக்கி. இவர்,இந்தப் பாட்டை, ஸ்ரீதர் எழுதி, பிரகாஷ்ராவ் இயக்கி, டி.சலபதிராவ் என்ற அருமையான இசையமைப்பாளரின் இசையமைப்பில் பாடியிருக்கிறார். சலபதிராவ் இசையமைத்த வெற்றிப் படங்களின் வருசையில், மீண்ட சொர்க்கம், புனர்ஜன்மம் படங்கள் நினைவுக்கு வருகின்றன.

அமரதீபம் படத்தில், சிவாஜி, பத்மினி, சாவித்திரி நம்பியார் முதலியோர் நடித்திருந்தனர். படத்தில், சிவாஜியை சமாதானப்படுத்த பத்மினி பாடுவதுபோல வரும். இதை எழுதியவர், ஆத்மநாதன். பிரபல டி.கே.எஸ். நாடகக் கம்பெனியின் ஆஸ்தானப் பாடகர், இசையமைப்பாளர். பல படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தில்,இந்தப் பாட்டைத்தவிர ஜிக்கி பாடியிருந்த ’பச்சைக் கிளி பாடுது’, சுசீலா - ஏ.எம்.ராஜா பாடியிருந்த ‘தேன் உண்ணும் வண்டு’ டி.எம்.எஸ். பாடியிருந்த ‘நாணயம் மனுஷனுக்கு அவசியம்’ என்ற பாடல்களும் பிரபலமடைந்தன. கடைசியில் குறிப்பிட்ட ‘நாணயம்’ பாட்டை எழுதியவர் யார் தெரியுமா? பின்னாளில் பிரபல கதாசிரியர், இயக்குனராகப் பரிமளித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்!

நமது இன்றைய பாட்டு, சோகமாக இருப்பினும், (தாளத்திற்கு உபயோகித்திருக்கும்) டோலக் வாத்தியம், பாட்டையும், நம்மையும் வேறொரு தளத்திற்குக் கொண்டு செல்கிறது. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத ஜிக்கியின் குரலில் இந்த சிறப்பான பாட்டைக் கேட்டு அனுபவியுங்களேன்! மீண்டும் சந்திப்போமா?

Thunbam soozhum by Krishnamurthy80

Sunday, November 6, 2011

மீண்டும் ஜிக்கி!



இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சில பாடல்களை ஒலிபரப்பும் போது, ‘இந்தப் பாடலை இன்னார் பதுமையாகப் பாடியிருக்கிறார் என்று குறிப்பிடுவார்கள்! நாமெல்லாம் அதை உணர்ந்து பாடியிருப்பதாகவோ அல்லது ‘பாவத்தோடு’ பாடியிருப்பதாகவோ சொல்வோம்.

இதற்கு முன்னர், இந்தப் பதிவுகள் ஒன்றில் ஜிக்கி பதுமையாகப் பாடியிருந்த மூன்று பாடல்களைக் கேட்டோம், ரசித்தோம், வியந்தோம். அதே ஜிக்கி, 1957ல் வெளிவந்த நீலமலைத் திருடன் திரைப்படத்திற்காக, திரை இசைத் திலகத்தின் இசையமைப்பில் பாடியிருக்கும் வேறு வகையிலான பாட்டை இன்று கேட்டு ரசிக்கப் போகிறீர்கள்.

நீலமலைத் திருடன் தேவரின் தயாரிப்பு. இந்தப் படத்தில் நாயகன் ரஞ்சன் குதிரை ஓட்டிக் கொண்டே பாடியிருக்கும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடாஎன்ற டி.எம்.எஸ் பாட்டு மிகப் பிரபலம். இந்த ரஞ்சன் என்பவர் பி.ஏ. படித்துவிட்டு, ஜெமினி நிறுவனத்தினரின் மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற படங்களில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றவர்.

இவரோடு, இந்தப் படத்தில் அஞ்சலிதேவி நாயகியாகவும், ஈ.வி.சரோஜா நாயகியின் தோழியாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் இந்தக் காட்சியில் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு, இன்று நாம் ரசிக்கவிருக்கும்,

‘கொஞ்சு மொழிப் பெண்களுக்கு

அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி

என்ற பாடலைப் பாடுவார்கள்! அடடா! மன்னிக்க வேண்டும், நாம் ரசிக்க வேண்டியது இசையை அல்லவா!

மேலே படத்தில் இருக்கும் ரஞ்சன் மற்றும் நடிகையரைத் தெரிகிறதா? எல்லாரும் அப்போது தெலுங்குத் திரையில் கொடிகட்டிப் பறந்த நாயகிகள். இதில் இருப்பவர்கள் அஞ்சலிதேவி, சாவித்ரி, சாரதா, கிரிஜா (இவர் ‘மனோகரா’ படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி!) ஆகியோர்!

திரை இசைத் திலகத்தின் இசை என்றாலே அதில் தபலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை நீங்கள் (வேறொரு பதிவில்) ‘யாரடி வந்தார்பாடலில் கவனித்தீர்கள். இந்தப் பாட்டிலும் தபலாதான் நாயகன். தபலாவுக்கு இணையாக கூடவே ‘டிக்,டிக்என்ற ஒலியோடு ஒரு வாத்தியமும் ஒலிக்கிறதே, அது என்ன தெரியுமா? ரயிலில் பிச்சைக்காரர்கள் விரலிடுக்கில் இரு சிறு பலகைகளை வைத்துக்கொண்டு இசைப்பார்களே, அதே தான்! (ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி இதை இசைத்துக் கொண்டுதான் ‘அம்மம்மா, தம்பி என்று நம்பிஎன்ற பாட்டைப் பாடுவார்).

இவற்றோடு, ஜிக்கியின் உச்சரிப்பையும் தவரவிடாதீர்கள். இவரின் (துள்ளாத மனமும் துள்ளும்’ (கல்யாணப் பரிசு), ஊரெங்கும் தேடினேன் (தேன்நிலவு) போன்ற பதுமையாகப் பாடிய சில பாடல்களைத் தவிர்த்து) மற்ற பாடல்களில் தமிழை அழுத்தமாக உச்சரித்திருப்பார். பிற்காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் முக்கல், முனகல்களுக்கு ஜிக்கியும் ஒரு முன்னோடி!

பாட்டின் இசையில் மாண்டலின், குழல் வயலின்கள், சிதார் தவிர அகார்டியன் என்கிற (ஹார்மோனியம் போல தொனி வரும்) வாத்தியமும் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கழுத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கையால் மடிப்புக்களை அழுத்திக் காற்றை உள்வாங்கி மற்ற கையால் கட்டைகளை அமுக்கி வாசிப்பார்கள். (‘பாவமன்னிப்புபடத்தின் பிரபல ‘அத்தான்பாட்டில் சரணத்திற்கு முன் இந்த அகார்டியனில் ஒரு மிகச் சிறந்த பீஸ் இசைக்கப்படுகிறது). கூடவே டபிள் பேஸ் அதிர்வுகளும் தனியாகக் கேட்பதையும் கவனியுங்கள்.

தாளத்தில் அமிழலாம், வாருங்கள்!

Konjumozhi pengalukku-Neelamalai thirudan.mp3 by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Sunday, October 2, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பனிரெண்டு)


ஒரு சுகமான, மிகப்பழைய டூயட், உங்கள் ரசனைக்காக இன்று வருகிறது. இதுவரை நாம் கேட்காத இருவர் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தத் தலைமுறையினர் பலருக்கு, கே.ஆர்.ராமசாமியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணீரென்ற குரலுடைய நாடக, திரைப்படக் கதாநாயகன். நேஸல் வாய்ஸ்எனப்படும், (கொஞ்சம் மூக்கால் பாடுவதுபோல் இருக்கும்) சுகமான குரல் கொண்டவர். அறிஞர் அண்ணாவின் இனிய நண்பர். அவரிடமிருந்து ‘நடிப்பிசைப் புலவர்என்ற பட்டம் பெற்றவர். தீவிர முற்போக்காளர். (ஒரு சமயம் கே.ஆர்.ஆருக் காகவே அண்ணா ஒரே இரவில் எழுதிய நாடகந்தான் ‘ஓர் இரவு’! இது பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படமாகவும் வந்தது. நமது ‘குழந்தைஎம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில், துன்பம் நேர்கையில்என்கிற பாரதிதாசனின் அருமையான பாடல் இப்படம் மூலம்தான் பிரபலமடைந்தது.)

நாடகக் கலைமீது தீராப் பற்று கொண்டவர் கே.ஆர்.ஆர். தமிழகம் முழுவதிலும் தன்னுடைய சொந்த நாடகக் கம்பெனியின் மேடை நாடகங்களை நடத்தி (அப்போதுதான் தோன்றியிருந்த) தி.மு.கழகத்தின் கொள்கைகளை விளக்குவதில் தன் வாழ்நாளையும் பொருளையும் செலவிட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுக் கெல்லாம் திரைத்துறையிலும், அரசியலிலும் முன்னோடி.

இவருடன் ஜிக்கி என்றழைக்கப் பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணியும் சேர்ந்து பாடியுள்ள பாடலிது . (இவரைப் பற்றி அடுத்த பதிவில்!). பாடல், மாடர்ன் தியேட்டர்ஸாரின் சுகம் எங்கே? என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. இப் படத்தின் நாயகர்கள்: கே.ஆர்.ராமசாமியும், சாவித்ரியும்! கதை, வசனம்: கண்ணதாசன் மற்றும் ஏ.கே.வேலன். பாடல்கள்: கண்ணதாசனும், மருதகாசியும். (இன்றைய பாடலை, இந்த இருவரில் யார் எழுதியது என்பது குறிப்பாகத் தெரியவில்லை). இசை: அப்போது இன்னமும் ‘மெல்லிசை மன்னர்கள்ஆகாத, விஸ்வநாதன்-ராமமூர்த்தி!

அவர்களின் திரைஇசை வாழ்வின் ஆரம்பகாலத்தில் வந்த படம், ‘சுகம் எங்கே?ஆயினும் பாடல் முழுவதிலும் அவர்களின் பிரத்தியேகக் கற்பனைகள் நிறைய விரவி இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கம் போல மெட்டுக்குத் தான் முதல் இடம். என்றாலும், மாண்டலின், வயலின்கள், கிடாரின் கார்ட்ஸ்,தபலா இவற்றின் பங்களிப்பு, கோர்விசையில் அப்போதே அவர்களின் பாணியை உறுதிப் படுத்தியிருக்கிறது. முதலிலிருந்து முடிவு வரை எந்த வித நெருடலும் இல்லாத மெட்டின் சீரான போக்கு என்கிற (மன்னர்களின்) வெற்றி ரகசியமும் அப்போதே ஆரம்பித்திருக்கிறது! முரண் குரல்களான ராமசாமியின் கம்பீரக் குரலும், ஜிக்கியின் மென்குரலும் பரவசப்படுத்துகின்றன.

இங்கே கொடுத்திருக்கும் பாடலின், ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை யெனினும் பாடலை ரசிக்க முடிகிறது. கேளுங்கள்:

Senthamizh nattu solayile by Krishnamurthy80

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம், நண்பர்களே!