Monday, May 9, 2011

அல்லூரும் அமைந்த வாழ்க்கையும்!

’அமையுமா அல்லூர் வாழ்க்கை?’ என்று நான் ஆதங்கப் பட்டு எழுதி எட்டு மாசமாயிற்று! அதற்கு முந்தைய 50 வருடங்களுக்கும் மேலான என் வாழ்க்கை நகரங்களிலேயே கழிந்துவிட்டது. இங்கே குடியேறிய இந்த எட்டு மாதங்களில் தான் நமது கலாசாரம், சம்பிரதாயங்கள் பற்றி எனக்கு எவ்வளவு மேலோட்டமாகத் தெரிந்திருந்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். இங்கே சுற்று வட்டத்தில் குடியிருக்கும் சகல ஜாதியினரும் காலங்காலமாக எவ்வளவு ஒற்றுமையாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைக் காணும்போது இத்தகைய வாழ்க்கை முறையினை அமைத்துத் தந்த நமது முன்னோர்கள் எவ்வளவு தீர்க்கதரிசிகள் என்பதையும் புரிந்து கொண்டேன். இப்போது நானும் மெல்ல மெல்ல இந்த ஜோதியிலே மகிழ்ச்சியோடு கலந்து விட்டேன்!

அல்லூருக்குக் குடிபெயர்ந்த முதலே அன்போடு அரவணைத்து, கிராமத்தில் மற்றவர்களுக்கு என்னை அறிமுகம் செய்வித்தவர் எதிர் வீட்டு திரு.பிச்சை மாமா (இவருக்கு வயது 86. இப்போதும் கண்ணாடியில்லாமல் பேப்பர் படிக்கிறார்!). அல்லூரிலே பிறந்து, திருச்சியில் படித்து, அல்லூரிலேயே ரயில்வேயில் வேலை செய்து ரிடையர் ஆனவர். கோவில்களில் நடக்கும் திருவிழாக்கள் பற்றி இன்றும் இவர்தான் எனக்கு ‘கைட்’. மாமியும் எழுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். சற்றுக் கூன் போட்டிருக்கும் இவரும் மாமாவும் எவ்வளவு காதலோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை (எதிர் வீட்டிலிருப்பதால்) நான் பார்த்து வியந்து கொண்டிருக்கிறேன்.

தினமும் (ஞாயிற்றுக்கிழமை தவிர) இரவு 10 மணிக்கு, தெருவில் ஒரு மாமாவும் அவர் மனைவியும் சற்று உரக்கப் பேசிக்கொண்டு செல்வதைப் பார்த்திருந்தேன். அந்த மாமாவின் ஒரு கால் சற்று ஊனம். திருச்சியில் ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் போது விபத்தில் ஊனமாகி இருக்கிறது. இருப்பினும் கடை முதலாளியின் நல்ல மனத்தால் அங்கேயே தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அல்லூரில் குடியிருப்பதால் பஸ்ஸில் தினமும் திருச்சி போய்வருகிறார் என்பதையெல்லாம் அறிந்து கொண்டிருந்தேன்.

ஒரு இரவு அந்த மாமா வந்த அதே பஸ்ஸில் நானும் வர நேர்ந்தது. நாங்கள் இருவரும் பஸ்ஸிலிருந்து இறங்கியதும் அவர் மனைவி பஸ் நிறுத்தத்தில் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தவர், இவரைப்பார்த்ததும் ஓடி வந்து அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டு, மாமாவின் கையைத் தன் தோளில் போட்டு உடன் நடந்து வந்ததைப் பார்த்தபோதுதான் காதலின் இன்னொரு பரிமாணமும் எனக்குப் புலப்பட்டது. இதைப்போல இன்னமும் எத்தனையோ மனிதர்கள்.....

ஊரை நான்கு தெய்வங்கள் காவல் காத்து வருகிறார்கள். காவிரிக் கரையை ஒட்டிப் பிடாரியும், இளங்குடிச்சி ஆச்சியும், அக்ரஹாரத்தைப் பார்த்துக்கொண்டு ஸ்ரீனிவாசப் பெருமாளும், இவர்களுக்கெல்லாம் ஏறத்தாழ நடு சென்டரில் (ஐயாரப்பன் என்ற பெயரோடு) சிவனும் கோயில் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பிடாரி வருடத்தில் ஒரு பூச்சொரிதலோடும், பெருமாள் அவ்வப்போது பால் அல்லது புஷ்ப அபிஷேகம் செய்வித்துக் கொண்டும் அருள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சிவனோ, பிரதோஷம் போன்ற நாட்களில் (நான்கு கோவில்களில் சற்றே பெரிய) தனது கோவிலின் உள்ளேயே வலம் வந்து கொண்டிருக்கிறார். இளங்குடிச்சி ஆச்சி மட்டும் ஊரில் வரி வசூலித்துக் கொண்டு, வருடத்தில் ஒரு வாரத்திற்கு இரவிலும் பகலிலுமாக ஊரெல்லாம் எழுந்தருளிக்கொண்டிருக்கிறாள். இந்த சமயத்தில் ஊரின் எல்லா வீதிகளிலும் உலவி, கணிசமாக ஆடு, கோழிகளையும் பலி வாங்கிக் கொள்கிறாள். கடைசி நாள் இரவில் ‘வையாலி’ என்ற பெயரில் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்மனைச் சுமந்துகொண்டு, கோவில் முன் சாலையில் தாறுமாறாக ஓடி, மேலே கீழே ஏற்றி இறக்கி.... பார்க்கவே பயமாக இருக்கிறது! வாணவேடிக்கையும் உண்டு.


இளங்குடிச்சி ஆச்சியின் தேர்

இதைத்தவிர அக்ரஹாரத்தின் மத்தியில் ஒரு வீடு பஜனை மடமாகச் செயல் படுகிறது. அதில் தினசரி பஜனையும் நடக்கிறது. ராமநவமி போன்ற பண்டிகைகளின் போது, இரண்டு, மூன்று நாட்களுக்கு ‘ராதா கல்யாணம், சீதா கல்யாணம்’ என்று பிரசித்தமான பாகவதர்களைக் கொண்டு உபன்யாசங்களும் ஏற்பாடு செய்யப் படுகிறது. இந்த சமயங்களில் ஊரில் இருப்பவர்களுக்கு எல்லாம் மூன்று வேளை (கல்யாண) சாப்பாடும் உண்டு. (சாப்பாட்டிற்கு வரமுடியாத வயதானவர்கள் வீட்டிற்கே பார்சல் போய்விடுகிறது!)



அம்மனை வரவேற்கத் தயாராக அக்ரஹாரம்


விழாக்களை, உள்ளூர் வாசிகள் தவிர சென்னை, பெங்களூருவிலிருக்கும் அல்லூரைச் சேர்ந்தவர்களும் முன்னின்று நடத்துகிறார்கள். பஜனை மடத்தின் முன் தெருவை அடைத்துப் பந்தல் போட்டு விமரிசையாக நடக்கும். தங்கள் வீட்டில் நடக்கும் ஒரு திருமணத்தைப் போலவே அக்கறையோடு வீட்டுக்கு வீடு அழைத்துக் கொண்டாடுகிறார்கள். அப்போதும், மற்ற கோவில் முக்கிய திருநாட்களிலும் வெளியூரில் வசித்துவரும் அல்லூர்க்காரர்கள் எல்லாரையும் இங்கே பார்க்கலாம்.

வீட்டு விசேஷங்களில் கூட ஊர் முழுவதும் அக்கரையோடு கலந்து கொள்கிறது. இன்று கூட இங்கே ஒரு பூணூல் கல்யாணம். காலையிலேயே ஒருவர் வந்து காலைச் சிற்றுண்டிக்கும், மதியம் சாப்பாட்டுக்கும் அழைத்துவிட்டுப் போனார். மீண்டும் இருமுறை சாப்பாடு தயார் என்றும் அறிவித்துப் போனார்கள். மாலையில் புதிதாகப் பூணூல் போட்டுக் கொண்ட இரண்டு பையன்களையும் யானை மேல் ஏற்றி, மேளம், பாண்டு வாத்தியங்களுடன் தெருவில் ஊர்வலம் வந்தார்கள். ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி கரைத்து ஊற்றி, பதில் மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்கள்….

-000-


அல்லூரில் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கிறது, பார்க்கலாமா?

காலை 5.30க்கு எழுந்து வாசல் பக்கம் போனால், பெரும்பாலான வீடுகளின் முன்னர் கழுவி விடப்பட்டு, கோலமும் போட்டிருக்கும். (இதை, ‘முறை வாசல்’ என அழைக்கிறார்கள்). அனேகமாக எல்லாருமே அந்த நேரம் துயில் எழுந்து விடுகிறார்கள். நானும் எழுந்து, கணினிமுன் உட்கார்ந்து 8 மணிக்குத் தான் குளிக்கச் செல்வேன். (வேறொன்றுமில்லை, இளங்காலை 2 மணி முதல் 8 மணி வரை வலை உபயோகம் இலவசம், அதுதான்!) அனேகமாக ஆண் பெண் எல்லாருக்குமே காவிரிக்குளியல் தான். பகலில் 10 மணிக்குத் தெருவில் சென்றால் பெரும்பாலான இல்லங்கள் பூட்டியிருக்கும். வேலைக்கோ அல்லது எதற்காகவோ ‘டவுனு’க்குச் சென்றிருப்பார்கள். ஊரே அப்படி ஒரு அமைதியாக இருக்கும்.

இது, மாலை வரை நீடிக்கும். மாலையில், தெருவிலுள்ள வேத பாடசாலை (இரண்டு உண்டு) யைச் சேர்ந்த பையன்களும் மற்றவர்களும் சேர்ந்து தெருவில் வாலிபால் அல்லது கிரிக்கட் ஆடுவதுண்டு. இதை என்னைப் போன்ற ‘பெரிசு’கள் வாசலில் திண்ணையில் அல்லது (ஈஸி) சேரில் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்போம். (இப்போது கோடையில், இவர்கள் காவிரிக்குச் சென்று விடுகிறார்கள். விளையாட்டு முடிந்ததும் அப்படியே குளித்துவிட்டு மாலை ஜபங்களையும் முடித்துக் கொண்டு வந்து விடுகிறார்கள்). வாசலில் அமர்ந்தாலும் சரி, அல்லது, வீட்டின் கொல்லை வரை கதவுகளைத் திறந்து வைத்துக் கொண்டு இருந்தாலும் சரி, காற்று கொட்டுகிறது. வெளியே தகிக்கும் வெப்பம் அவ்வளவாகத் தெரிவதில்லை. நானும் மாலையில் சிவன் கோவில் சென்று வருகிறேன்.

இடைப்பட்ட நேரங்களில், படிக்கவும் இசை கேட்கவும், டிவி பார்க்கவும், அல்லது தூங்கவும் செய்யலாம். இல்லையென்றால் நாமும் ‘டவுனு’க்குப் போய் வரலாம்.

இந்த அமைதியான, நகரங்களின் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை, (பாரதி சொன்னது போல)

“என்னைப் புதிய உயிராக்கி,
எனக்கேதும் கவலையறச் செய்து – மதி
தன்னை மிகத் தெளிவு செய்து – என்றும்
சந்தோஷம் கொண்டிருக்கச் செய்து” கொண்டிருக்கிறது.

இங்கே இன்னமும் எவ்வளவோ உண்டு. அவற்றை வேறொரு சமயம் பார்ப்போமா?

-0000-

Friday, April 29, 2011

குறுக்கு வழி!

நம்ம சொலவடை (குமுதம் பாணியில்: சா.ஆ.ச.ஆ) மீண்டும் நினைவுக்கு வந்தது. சென்றமாத என்னுடைய தொலைபேசி பில் ரூ.1200/-. ரிடையரான நமக்குக் கட்டுப்படி ஆகவில்லை. ‘வேண்டியும் இருக்கு, வேதனையும் பண்றது’ என்று எதைப்பற்றியோ சொல்வார்களே, அதுபோல தொலைபேசி இல்லாமலும் முடியாது. வலைத்தொடர்பு அவசியமில்லையா? எனவே, ஆராய்ச்சி செய்து (!) ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடிச்சுட்டோம்ல! ராத்திரி (இளங்காலை?) 2 மணிமுதல் 8 மணி வரை வலையில் இலவசத் தேடல் உண்டு என்றறிந்து, விடிகாலையில் எழுந்த மாதிரியும் ஆச்சு, வலையில் மேய்ந்ததாகவும் ஆச்சு என்று, தினமும் காலை 5.30க்கே எழுந்து மேய்ச்சலை ஜோராக நடத்திக்கொண்டிருக்கிறேன்! போனஸாக, அமெரிக்காவிலிருக்கும் என் மருமகளும் என்னுடன் தினமும் சாட்டிக்கொண்டிருக்கிறாள்!

Thursday, April 28, 2011

காலம் ஒரு நாள் மாறும்.....

சமீபத்தில் வாலி அவர்கள் எழுதியிருந்த ஒரு விஷயம் கண்ணில் பட்டது. திரு.டி.எம்.எஸ் அவருடைய வீட்டிற்கு வந்திருந்த போது வாலியின் அன்னை, தன் விருப்பப் பாடலான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாராம். என்னுடைய டாப் 3 டி.எம்.எஸ் பாடல்களில் முதலாவது இடத்தைப் பிடித்திருக்கும் பாடலது. அதன் இசையிலும் பாடியதிலும் ஒரு உண்மையான உணர்ச்சி கொப்பளித்திருக்கும். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் உண்மையான காரணம் தெரிந்தது. தன் சொந்த மகனைக் காலனுக்குப் பறி கொடுத்த வேதனையில் டி.எம்.எஸ் இருந்த போதில், சோகத்தை மறக்கடிக்க வேண்டி, எம்.எஸ். விசுவநாதன் அவரை இழுத்துக் கொண்டு போய்ப் பாட வைத்த பாடலாம் அது! சொந்த வாழ்க்கையின் சோகங்கள் எப்படியெல்லாம் அலைக்கழிக்கிறது, பாருங்கள். எதனாலோ, பாடகி சித்ராவின் சமீபத்திய இழப்பு என்னை அப்படித்தான் உணர வைத்தது. ஆதரவளிக்க நாம் வேண்டும் ஆண்டவனே அந்த சோகத்துக்குக் காரணமானால் யாரால், எப்படித் தன் ஒரே மகளை இழந்து நிற்கும் அந்தத் தாய்க்கு ஆறுதல் சொல்லமுடியும்?
‘காலம் ஒரு நாள் மாறும், நம் கவலைகள் யாவும் தீரும்’ என்று நம்புவோம்.

Wednesday, February 23, 2011

சொலவடை!

ஊர்ப்பக்கம் ஒரு சொலவடை வழக்கத்தில் இருக்கிறது. “சாமிக்கும் ஆச்சு, சட்னிக்கும் ஆச்சு” என்று. அதாவது தேங்காய் உடைத்தால் இரண்டுக்கும் பயன் படணுமாம்!

ஒன்றுமில்லை. 24ந் தேதி பிறந்த நாளுக்கு, 23ந் தேதி பத்திரிக்கைகளில் அறிக்கை விட்டிருக்கிறார், தமிழ்நாட்டை ‘குடும்பத்தின்’ பிடியிலிருந்து காப்பாற்றி, ‘தோழியின்’ கையில் கொடுக்கப் பாடாய்ப் படும் அம்மணி! ஊரெல்லாம் கடந்த ஒரு மாதகாலமாக எங்குபார்த்தாலும் ‘அம்மா, தாயே, அன்னையே’ என்று பெரிய பெரிய ஃப்ளெக்ஸ் தட்டிகளில் சிரித்துக் கொண்டிருக்கும் அந்த அம்மா, முன்னரே அறிக்கை விட்டிருந்தால் எவ்வளவு பணம் விரயமாவது தடுக்கப் பட்டிருக்கும்?

இன்னும் சிலர், மற்றொரு அன்னையின் சாவுக்குத் தொலைபேசியில் துக்கத்தை ஒலிபரப்புச் செய்து ஆதாயம் தேடுகிறார்கள்! இதையெல்லாம் பார்க்கும் போதுதான் மேற்கூறிய சொலவடை நினைவுக்கு வந்தது. கூடவே, தேர்தல் வரப்போவதும் நினைவுக்கு வந்தது!

Monday, February 21, 2011

புதுப் புலம்பல் ஒன்று!

நண்பர் கேட்டார், ‘என்ன ஸார், ரொம்ப நாளா பார்க்கமுடிவதில்லை, எழுதுவதாகவும் தெரியவில்லையே’ என்று. ஒரு தமிழன், அதிலும் தன் எழுத்தை அச்சில் (!) பார்ப்பவன், தனது பதிலை நேரடியாகச் சொல்லிவிட்டால் எப்படி?!

’அது வந்து ஸார், தேவன் எழுத்தாளர்களுக்குக் கூறியது தெரியுமா உங்களுக்கு? ”எதையும் எழுதி முடித்த பின்னர் அதை பெட்டிக்கு அடியில் போட்டுவிட்டு மறந்துவிடு. ஒரு ஆறு மாதம் கழித்து மீண்டும் அதை எடுத்துப் படித்துப் பார் - உனக்கே பிடித்திருந்தால் மட்டும் பிரசுரத்துக்கு அனுப்பு. இல்லையென்றால் குப்பைத்தொட்டியில் வீசு” என்று. நானும் இதுவரை (நான் எழுதிய)கணினிக்குள் கிடந்ததைப் படித்துப் பார்த்தால் அநேகமாக எல்லாமே புலம்பல்களாகவே இருந்தது.(வயதின் கோளாறோ என்னவோ தெரியவில்லை!) அதனால் கொஞ்ச நாள் விட்டுவிடுவோமே என்றுதான் எழுதவில்லை’ என்றேன். இருந்தாலும், புலம்பல் என்கிற தேசீய வியாதி (அல்லது மதம்!) என்னும் நதிப்போக்கில் நானும் பயணிக்க முடிவு செய்துவிட்டேன். எவ்வளவோ ’குப்பைகளில்’ இதுவும் இருக்கட்டுமே!

அதற்குத் தூண்டிய முக்கியமான நிகழ்ச்சிக்கு வருவோம்: இன்று மதியம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரிகள் முடியும் நேரமாதலின் சிறுவர்கள் கூட்டம் பஸ்ஸில் அதிகமாகவே இருந்தது. கடைசி வரிசையில் நான் அமர்ந்து வரும் போது சில சிறுவர்கள் படிக்கு வெளியே தொங்கிக்கொண்டு வருவதைக் கவனித்தேன். அங்கே படியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனிடம் (அவனுக்கு 12 வயதிற்குள் தான் இருக்கும்) ‘உள்ளே இடம் இருக்கிறதே, கொஞ்சம் போனால் என்னப்பா?’ என்றேன். அவனோ, தான் இறங்கப்போவதாகச் சொன்னான். உன்னப்போன்ற சிறுவர்கள் தொங்கிக் கொண்டு வருவது தெரியவில்லையா என்ற என் கேள்விக்கு ‘அதுக்கு என்னை என்னா பண்ணச் சொல்றே’ என்று பதில் வந்தது. சரி, தப்பு நம் மேலே தான் என்று வாயை மூடிக்கொண்டு பயணித்தேன். வரும் வழியிலேயே அவர்களின் (சினிமா வசனம் கலந்த) பேச்சும், நடுநடுவே சரளமாக விழுந்த கொச்சையான வசவுகளும் என்னைத்தவிர யாரையும் நெளிய வைத்ததாகத் தெரியவில்லை! ஒரு நாகரீகமான டயலாக்-(பேசுவது பள்ளிமாணவர்கள்!): ’பேசாம ஒரு ஹாப் (half) வாங்கி, அவனுக்கு ஊத்திட்டு, மீதியை எனக்கும் ஊத்துடா’. என்னத்தச் சொல்ல!

Tuesday, April 13, 2010

அமையுமா அல்லூர் வாழ்க்கை?

மனித மனங்களிலே மண்டிக்கிடக்கின்றன ஏராளமான ஆசைகள். என் ஆசைகளில் முக்கியமான ஒன்று பாரதியின் ‘காணி நிலம் வேண்டும்’ என்ற பாடலில் அவன் தெரிவித்திருந்த அத்தனை சமாசாரங்களையும் அனுபவிக்க வேண்டும் என்பது!

அதற்கும், மேற்கண்ட தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? பொறுங்கள்! பாரதியின் பாடல் மட்டுமல்ல, கவிதையிலே பாரதியும், எழுத்திலே தி.ஜா., (உயிர்த்தேன், மோகமுள், அம்மா வந்தாள்), தேவன் (மிஸ்டர் வேதாந்தம்), கி.ராஜநாராயணன் போன்ற சிலரின் பல படைப்புகளிலே ஒன்றினால் உண்டாகுமல்லவா? அந்த அமைதியான கிராம வாழ்க்கையினை அனுபவிக்கும் ஏக்கத்துடன் இருந்தபோது பாடலின் ஒரு பகுதி நிறைவேறும் வாய்ப்புக் கிட்டியிருக்கிறது!

எவ்வளவோ இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால் மனம் லயிப்பது என்னவோ சில இடங்களில் தான், சில இதயங்களுடன் தான்! அப்படி எனைக் கவர்ந்த இடங்களில் முதன்மையான ஒன்று திருச்சியின் அருகே, காவிரிக்கரையில் அமைந்திருக்கும் அல்லூர் கிராமம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முறை சென்றிருந்தபோது அந்த ஊரின் மேல் ஏற்பட்ட காதல் என்னுள்ளேயே கனன்று கொண்டிருந்தது என்றாலும் அது நிறைவேறும் வேளை இப்போதுதான் வந்தது!

இன்று வரை பார்த்துக்கொண்டிருந்த உத்தியோகத்திலும், அங்கே எனக்களிக்கப்பட்ட மரியாதையிலும் எந்தவிதக் குறைபாடும் இல்லாத நிலையில், என்னுடைய சுகாதாரமும் அதனால் ஏற்படும் சோர்வும் என்னைக் கட்டாய ஓய்வை நோக்கித் தள்ளிவிட்டன. அருமை நண்பர் ரவிகுமாரும் பெருந்தன்மையோடு என்னை விடுவிக்க ஒப்புக்கொண்டார். 2010 ஏப்ரல் 1ந் தேதி முதல் நான் விலகிக் கொள்வதாக முடிவானது. (இந்த இடத்தில், ரவி மற்றும் அவர் குடும்பத்தினரின் மூலம் எனக்கு இதுவரை கிடைத்த சலுகைகளையும் நன்மைகளையும் நான் குறிப்பிட மறந்தால், நன்றி கொன்றவனாவேன்.)

இடம் மாற வேண்டிய ஏற்பாடுகள் செய்யவேண்டுமல்லவா? ஏப்ரல் 5ந் தேதி புறப்பட்டேன், அல்லூர் நோக்கி. அங்கே தற்போது குடியிருக்கும் சாந்தி-குஞ்சிதம் தம்பதியினரின் உதவியுடன் எனக்கான வீடு தேடும் பணி தொடங்கியது. அல்லூரைப் பொறுத்த வரையில், அந்த அக்ரஹாரத்தில் இருந்த சாலை மட்டுமே கான்க்ரீட் ஆக மாறியிருந்தது. தெருவிலிருந்த வீடுகளில் எந்தவித குறிப்பிடத்தக்க மாறுதல்களும் தெரியவில்லை. அதே அமைதியான, 40 ஆண்டுகளுக்கு முந்தைய, ஏதும் பெரிதான மாறுதல்கள் இல்லாத அல்லூர் தான்! அதே பழைய சிவன், பெருமாள், பிடாரி கோவில்கள்தான்! அதே காவிரியும், அதே ‘மேக்குடி’ ரயில் நிலையமும் தான்!

அல்லூர் என்கிற (ஒரு அக்ரஹாரமும், மற்றும் சில வீடுகளும் கொண்ட) அழகான சிறு கிராமம், முன்பே குறிப்பிட்டதுபோல காவிரிக்கரைக்கும், ’மேக்குடி’ என்கிற ரயில் நிலையத்திற்கும் நடுவே அமைந்திருக்கிறது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் வந்து போய்க்கொண்டிருக்கின்றன. வீடுகள் எல்லாமும் அநேகமாக 30 அடி அகலமும் 100 அடிக்குக் குறையாத நீளமும் கொண்டவை. திண்ணை, ரேழி, கூடம், இரண்டாம் கட்டு என்கிற சமையலறை, பின்னர் (அளவில்) கூடத்துக்கு நிகரான வானம் பார்த்த முற்றம், மூன்றாம் கட்டு தவிர மரம், செடி கொடிகளுடன் கூடிய பின் கட்டு என்று போய்க்கொண்டே இருக்கிறது. தினமும் சில முறை வீட்டில் மேலும் கீழும் நடந்தால் போதும், வேறு நடைப்பயிற்சியே தேவையில்லை! அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு மாடியும் ஊஞ்சலும் உண்டு. வாசலிலிருந்து பார்த்தால் புழக்கடை வரை தெரிகிறது. கூடத்தில் வாசலைப்பார்த்து உட்கார்ந்தால் காற்று கொட்டுகிறது. வீடுகளின் மேற்கூறை நல்ல உயரத்தில் இருப்பது இதற்குத் துணை செய்கிறது.........

எனது நல்ல நேரமோ அல்லது வேறே ஏதாவதோ, அதே அக்ரஹாரத்தில் ஒரு வீடு காலியாகப் போகிறது என்கிற தகவல் அறிந்ததும் அந்த வீட்டின் சொந்தக்காரரைப் பார்த்தேன். என்னுடைய சரித்திரத்தை விலாவாரியாகத் தெரிந்துகொண்டவர், தற்போது குடியிருப்பவர் இந்த மாத முடிவிற்குள் காலி செய்ய இருப்பதாகவும், அதன் பின்னர், நான் குடி வருவதில் தனக்கு மகிழ்ச்சிதான் என்றும் கூறியிருக்கிறார். இனி, ஆண்டவன் விட்ட வழி! படங்களைப் பாருங்களேன்....

Saturday, February 20, 2010

திருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்!

சமீபத்தில் திருவையாற்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய எனது குறிப்பைப் படித்திருப்பீர்கள். அதே சுற்றுலாவில் நான் எடுத்த படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. தஞ்சையில் கருவறை தவிர மற்ற எந்த இடத்திலும் படம் எடுத்ததைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை என்பது ஆறுதலளிக்கும் அனுபவம். இத்தனைக்கும் காவலர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இனி, படங்களும், நீங்களும்.....




நன்றி!