Thursday, November 3, 2011

அழகே. அமுதே!


சென்ற பதிவில் கேட்ட ஒரு சுத்தமான கர்நாடக சங்கீதப் பாட்டுக்குப் பின்னர் இன்று இன்னொரு முழுமையான மெலடியை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.

பொதுவாக, ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்ததும் ஒலிப்பதிவிற்குப் போவதற்கு முன், எந்த வாத்தியம் எந்த இடத்தில் எப்படி வரவேண்டும் என்பதை இசைக் குறிப்பாக எழுதிக் கொடுத்துவிடுவது உதவி இசையமைப்பாளர்களின் பணி. இந்தக் குறிப்பை (வாத்தியங்களின்) arrangement என்பார்கள். பின்னர்தான் ஒலிப்பதிவின் போது ஒருவர் நின்றுகொண்டு (தாளம் காண்பிப்பதுபோல) கைகளை வீசி, இந்தக் குறிப்பின் படி பாடல் இருக்கிறதா என்று கவனிப்பார்........

1959ல் ராஜா மலையசிம்மன்என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இது, தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயம் வெளியிடப்பட்டது. வெற்றியடையாத இந்தத் திரைப் படத்திலிருந்து, என்னைப் போன்ற மெல்லிசைமன்னர்களின் உண்மை விசுவாசிகளுக்கு (பயப்படவேண்டாம்! காலையில் தமிழ்த் தினசரியில் விளம்பரங்கள் படித்ததின் விளைவு!) மட்டும் நினைவிருப்பது, இந்தப் படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இசை என்பதும், இன்று நீங்கள் ரசிக்கப் போகும் பாடலும் தான்!

கவிஞர் மருதகாசி எழுதியுள்ள இந்தப் பாடலை, பி.பி.ஸ்ரீநிவாஸ் சுசீலா இருவரும் பாடியிருக்கிறார்கள். இது ஒரு முழுமையான மெலடி என்று ஏன் சொன்னேன்? வாருங்கள் அலசலாம்!

பாடலின் ஆரம்ப இசையை குழல் ஆரம்பித்து வைக்கிறது. (ஒன்று கவனித்திருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் கூடப் பலசமயங்களில், குழல் இசைக்கும்போது கூடவே க்ளாரிநெட் அல்லது சாக்ஸபோன் துணைவரும். செவிக்குச் சுகமாக இருக்க வேண்டி இந்த ஏற்பாடு)

கார்ட்ஸ் (chords) என்றால் என்ன என்பதை இந்த ஆரம்பக் குழல் இசையின் இடையில் வரும் (ஜங், ஜங் எனும்) கிடார் மற்றும் டபிள் பேஸ் தாள ஒலியிலிருந்து புரிந்துகொள்ளலாம். நடுவில் பல வயலின்களும் சேர்ந்து இசைத்து, மாண்டலின் மூலமாகப் பாட்டின் பல்லவியைத் தொட்டு விடுகிறார்கள். இந்த மாண்டலினுக்கும் பாட்டின் பல்லவிக்கும் டோலக் எனும் தாளவாத்தியம் எவ்வளவு அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது, பாருங்கள். அதே சமயம் பாட்டின் சரணத்தில் தபலாவும் சேர்ந்து கொள்கிறது. பாடகர்களும் பல இடங்களில் ‘ஸெகண்ட்ஸ்முறையில் (ஒருவர் மெயின் ஸ்ருதியிலும் மற்றவர் வேறொரு ஸ்ருதியிலும்) பாடியிருக்கிறார்கள். சுசீலாவோ, பி.பி.எஸ்ஸின் குரலை ஒத்துத் தன்மையாகப் பாடியிருக்கிறார். பாட்டின் கோர்விசையோ, எழுத்தை மீறியது!

மொத்ததில், மூன்று நிமிடங்களுக்கும் மேல் போவதே தெரியாமல் அமர (அசர?!) வைக்கும் பாட்டு! கேளுங்கள்:

Azhage Amudhe - Raja Malaya simhan.mp3 by Krishnamurthy80

மீண்டும் மற்றொரு பாட்டுடன் சந்திக்கலாம், நண்பர்களே!

Monday, October 31, 2011

திலகம் பாடுகிறார்!


இசையமைப்பாளர்கள் பாடுவது புதிதல்ல. மன்னர்களில் ஒருவரான எம்.எஸ்.விசுவநாதன் பாடகராகவே மாறியதை அறிவீர்கள். அவரோடு ராமமூர்த்தி ரேடியோ சிலோனில் பாடியது பற்றி நான் எழுதியிருந்ததும் நினைவிருக்கும். இன்னும், அந்தக் காலத்திய ஜி.ராமநாதனும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்காலத்தில், இளையராஜா, தேவா போன்ற பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.

ஆனால் இன்று நாம் ரசிக்கப் போகும் பாடல், மிகவும் அரியது. இந்த இசையமைப்பாளர், இந்தப் பாடலைப் பாடும் போது அவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லை! இசையமைப்பாளராகப் புகழ் பெற்ற பிறகோ, அவர் மைக்கின் பக்கமே வரவில்லை! திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனைப் பற்றித் தான் சொல்கிறேன். திரைக்காக அவர் பாடியிருக்கும் ஒரே பாடலை இன்று கேட்கப் போகிறோம். அவருடன் இணைந்து, பி.லீலா பாடியிருக்கிறார். கேட்கும் படியான குரல் இருந்தும் ஏனோ கே.வி.எம் தொடர்ந்து பாடவில்லை!

பழைய பாடல் ரசிகராகிய உங்களுக்கு, இந்தப் பாட்டைக் கேட்கும் போதே, ‘இதே மெட்டை வேறு எங்கோ கேட்டிருக்கிறோமேஎன்று ஒரு சந்தேகம் வரும்! பி.லீலாவின் குரல் செய்யும் ஜாலமிது!

1950களில் வெளிவந்த இந்தப் பாடலும், 1970களில் வெளிவந்த ஜெமினியின் ‘இரும்புத்திரைபடத்தில் எஸ்.வி.வெங்கடராமன் இசையில் பி.லீலாவும் டி.எம்.சௌந்திரராஜனும் இணைந்து பாடியிருக்கும்

‘நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்

என்ற பாடலும், திரை இசைத் திலகத்தின் இசையில் ‘தில்லானா மோகனாம்பாள்படத்தில் இடம் பெற்ற

‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன

எனும் சுசீலாவின் பாட்டும் ஒத்த மெட்டைக் கொண்டவை. இந்த மூன்று பாடல்களுமே ஷண்முகப்ரியா எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவியவை!

இருபது வருட இடைவெளியிலும் பி.லீலாவின் குரலில் மாற்றம் தெரியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்! அயராத சாதகத்தின் (பயிற்சியின்) விளைவு, அது! அதனால்தான் அந்தக் கால பின்னணிப் பாடகர்களால் எவ்வளவு பெரிய, கஷ்டமான பாட்டாக இருந்தாலும் ஒரே மூச்சில், ஒரே டேக்கில் பாடமுடிந்தது.

வழக்கமான திலகத்தின் இசையைப் போலவே, பாரம்பரிய வாத்தியங்கள், பாரம்பரிய இசை! இனியும் தாமதப் படுத்தாமல் பாடலை ரசிக்க உங்களை அழைக்கிறேன்:

Kannodu Kannai Rahasiam - K.V.Mahadevan & P.Leela.mp3 by Krishnamurthy80

இன்னொரு பாடலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம், நண்பர்களே!

Saturday, October 29, 2011

எம்ஜிஆரும் சீர்காழியும் இரு பாடல்களும்!


எம்ஜிஆரின் படங்கள், வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவற்றில் இடம் பெற்றிருக்கும் பாடல்கள் வெற்றிபெறத் தவறியதில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இதற்கு முக்கிய காரணம், அவருக்கிருந்த இசை ஞானம்! (கலைஞர் கருணாநிதியைப் போலவே) ஆழ்ந்த கர்நாடக இசை ரசிகரான அவர் தன் படங்களுக்கான பாடலின் மெட்டை எப்போதும் அவரே தேர்ந்தெடுத்தனால் இது சாத்தியமானது.

டி.எம்.சௌந்திரராஜனின் குரல் தான் எம்ஜிஆருக்கும் (சிவாஜிக்கும்) பொருத்தமானது என்று எல்லாரும் கூறிக் கொண்டிருந்த காலத்தில், எம்ஜிஆருக்கான பாடல்களை அன்றைக்கிருந்த எல்லாப் பின்னணிப் பாடகர்களும் பாடியிருக்கிறார்கள். (அடிமைப் பெண்படம் வெளிவரும் போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடகராக இசைத்துறையில் அறிமுகமான சமயம். கே.வி.மகாதேவன் இசையில் ‘ஆயிரம் நிலவே வாபாடலை எஸ்.பி.பி பாடியிருந்ததைக் கேட்ட எம்ஜிஆரின் நெருக்கமான ஒருவர், “அதிகம் பிரபலமாகாத அறிமுகப் பாடகரின் இந்தப் பாடல் வெற்றி பெறுமா?என்ற சந்தேகத்தைக் கிளப்பினாராம். அதற்கு எம்ஜிஆர், “நமக்குப் பாடிவிட்டாரல்லவா, இனி தானாகவே அவர் (எஸ்.பி.பி) பிரபலமாகிவிடுவார், பாருங்கள்என்றாராம்!)

இன்று நாம் ரசிக்கப் போவது ஒரு வெண்கலக் குரலை என்று சொல்லி விட்டால், இந்தப் பாடலை, சீர்காழி கோவிந்தராஜன் பாடியிருக்கிறார் என்றும் சொல்லத் தேவையில்லை, அல்லவா?! 1959ல் வெளியான ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலிஎன்ற திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலுக்கு இசை டி.ஆர்.பாப்பா. சீனியர் இசையமைப்பாளரான இவர் மல்லிகா (ஜெய்சங்கரின் அறிமுகப் படமான) ‘இரவும் பகலும்போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

தாய் மகளுக்குக் கட்டிய தாலிதிரைப்படத்திற்கு அறிஞர் அண்ணா கதை, திரைக் கதை மற்றும் வசனமும் எழுதியிருந்தார். இருப்பினும், நீண்ட காலம் தயாரிப்பில் இருந்ததினால் ஏற்பட்ட குறைகளினால் படம் மோசமான தோல்வியைத் தழுவியது. அப்போது வெளி வந்த இந்தப் படத்தின் குமுதம் விமரிசனம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பையே உருவாக்கியது. ஒன்றுமில்லை, அந்த வார இதழில்இரண்டு பக்கம் விமரிசனம். ஒரு முழுப் பக்கத்தில், படத்தின் ஒரு ஸ்டில். இன்னொரு பக்கம், நடுவில், சின்னதாக, (வேறெதுவுமே எழுதாமல்) கண்ணறாவி என்று போட்டிருந்தார்கள்! குமுதத்தில் ஒரே வார்த்தை விமரிசனம் பெற்றுச் சாதனை படைத்தது தா.ம.க.தாலி மட்டுமே!

ஆனால், சீர்காழியும் (கீச்சுக் குரலில்) ஜானகியும் பாடியிருந்த ‘ஆடிவரும் ஆடகப் பொற் பாவையடி நீ மற்றும் டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருந்த சின்னஞ்சிறு வயது முதல் போன்ற பாடல்களோ, இன்று கூடப் பிரபலம்! பாடல்களை கே.டி.சந்தானம் (இவர் பாடலாசிரியர், நடிகர்) மற்றும் உடுமலை நாராயண கவியும் எழுதியிருந்தார்கள். சீர்காழி பாடியிருக்கும் இந்த ‘ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் பெரும் புகழ் சேர்த்தத்துடன், எம்ஜிஆரையும் முற்றாகக் கவர்ந்து விட்டது.

எந்த அளவிற்கு என்றால், பின்னாளில் அவர் தயாரித்து, இயக்கி இருவேடங்களில் நடித்து மாபெரும் வெற்றியடைந்த ‘நாடோடி மன்னன்‘ திரைப் படத்தில் இதே போல ஒரு பாடலை இடம் பெறச் செய்தார்! எஸ்.எம்.சுப்பையாநாயுடு இசையில் ‘உழைப்பதிலா, உழைப்பைப் பெறுவதிலா இன்பம்‘ என்ற அந்தப் பாடலையும் சீர்காழியே பாடினார்! அந்தப் பாடலும் சீர்காழியின் மகுடங்களில் ஒன்றானது!

ஒன்றல்ல இரண்டல்ல தம்பிபாடல், தமிழ்நாட்டின் சிறப்புகளை யெல்லாம் வரிசைப்படுத்துகிறது. எம்.கே.டி.பாகவதரின் பிரசித்தி பெற்ற மன்மத லீலையை வென்றார் உண்டோ, மற்றும் சிவாஜியின் ‘வசந்த முல்லை போலே வந்துபாட்டுக்களின் ராகமாகிய சாருகேசியில் ஆரம்பித்து, சிவாஜியின் மகாராஜன் உலகை ஆளுவான், மற்றும் மாதவிப் பொன் மொழியாள் பாட்டுக்களின் ராகமான கரகரப்ரியாவை இணைத்து, இரண்டு ராகங்களின் கோர்வையாக (‘ராக மாலிகையாக) அமைந்திருக்கிறது. இந்தப் பாட்டின் தாளம் தபலாவுடன் (குதிரையின்) குளம்புச் சத்தமும் சேர்த்து பாடல் முழுவதும் ஒரே கதியில் (அதாவது வேகத்தில்) பயணிக்கும்.

கோர்விசையிலும், சில சமயம் பாடகருடனும் சேர்ந்து ஒரு சீழ்க்கை (விஸில்) சத்தம் வருகிறதல்லவா அதற்கு Metal flute என்ற காற்று வாத்தியம் உபயோகிக்கப் பட்டிருக்கிறது. மரத்தாலான புல்லாங்குழலைப் பார்த்திருப்பீர்கள். இந்த மெட்டல் ப்ளூட் என்பது உலோகத்தால் ஆனது. மொத்தமே அரை அடி நீளத்தில் (நாதசுரம் போல) நேர் வாக்கில் வாசிப்பார்கள். குளம்புச் சத்தம் எப்படி வருகிறது தெரியுமா? ஒரு அரைக் கொட்டாங்கச்சியையும் ஒரு சிறு (தடியான) குச்சியையும் முறைப்படி உபயோகப் படுத்துவதனால் வரும் ஒலி அது!

காதிலும், கருத்திலும் நெஞ்சத்தை நிறைக்கும் இந்த அருமையான பாடலை இப்போது கேட்போமா?

Ondralla Irandalla Thambi by Krishnamurthy80

இன்னொரு பதிவில் சந்திக்கலாம், நண்பர்களே!

Thursday, October 27, 2011

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!



(நண்பர்களே! மேலே இருக்கும் படத்திற்கும் இன்றைய பாட்டுக்கும் சம்பந்தமில்லாத சீர்காழி கோவிந்தராஜன், மெல்லிசை மன்னர்களோடு அமர்ந்திருக்கிறார். இவர்கள் மூவரும் தத்தம் துணைவியருடன் இருக்கும் ஒரு அரிதான புகைப்படம் என்பதால் இதை இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன்!)

சோகத்திலும் ஒரு சுகமிருக்கிறது என்று கண்ணதாசன் சொல்லியது மிகவும் உண்மை! நாம் ரசித்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் சோகமாகவே அமைந்திருப்பது தற்செயல் அல்ல!

இன்று, நமக்காக ஜமுனாராணி ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்என்ற கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு சோகப் பாடலைப் பாடுகிறார்.

கவலை இல்லாத மனிதன், கண்ணதாசனின் சொந்தப் படம். மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தார்கள். சந்திரபாபு கதாநாயகனாக நடித்திருந்தார். (இவர் கதாநாயகனாக நடித்த இன்னொரு படம் ‘குமார ராஜா’. அந்தக்காலத்திலேயே ஒரு படத்துக்கு ரூ.ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர், சந்திரபாபு!) இவரைத் தவிர, எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, டி.ஆர்.மகாலிங்கம் முதலியவர்கள் கவலை இல்லாத மனிதன் படத்தில் நடித்திருந்தார்கள். பாடல்கள் எல்லாமே அற்புதமானவை. பாருங்களேன், நமது இன்றைய பாடலைத் தவிர,

‘காட்டில் மரம் உறங்கும்,

கழனியிலே நெல் உறங்கும், என்ற ஜமுனாராணியின் இன்னொரு பாட்டும்,

‘சிரிக்கச் சொன்னார், சிரித்தேன்,

பார்க்கச் சொன்னார் பார்த்தேன்என்ற சுசீலாவின் பாட்டும்,

இந்தப் படத்திலேயே மிகவும் பிரபலமான,

‘பிறக்கும் போதும் அழுகின்றாய்மற்றும்,

‘கவலையில்லாத மனிதன்என்ற

சந்திரபாபுவின் பாட்டுக்களும் கேட்கும் போதெல்லாம் இனிப்பவை!

இவை போதாதென்று, டி.ஆர்.மகாலிங்கமும் தன் பங்குக்கு,

‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா

என்ற நல்லதொரு பாடலையும் பாடியிருப்பார்!

இதெல்லாம் சரி, நீங்கள் எல்லாரும் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியதைக் கேட்டிருக்கிறீர்கள். ராமமூர்த்தி பாடியதைக் கேட்டதுண்டோ?!

இந்தக் ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக (படம் வெளிவரும் முன்) ரேடியோ சிலோனில் மன்னர்கள் இருவரையும் பேட்டி கண்டார் மயில்வாகனன் என்ற புகழ் பெற்ற அறிவிப்பாளர். பேட்டியின் முடிவில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்னர்கள் இருவரும் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்பாடலின் சில வரிகளைப் பாடினார்கள்! தொடர்ந்து சந்திரபாபுவின் பாட்டும் முதல் முறையாக ஒலிபரப்பானது!

இன்றைய பாடலுக்கு வருவோம்!

ஜமுனாராணி, மன்னர்கள் இசையில் தனியாகப் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். (மகாதேவி திரைப்படத்தில் ‘காமுகர் நெஞ்சில் ஈரமில்லைஎன்ற பாட்டும், குலேபகாவலி படத்தில் ‘ஆசையும் என் நேசமும்என்று போதையில் பாடும் பாட்டும் இங்கே இடம் பெறத் தகுந்த சிறந்த பாடல்கள்).

காதலன் இருக்க, வேறொருவன் தன்னைப் பெண் பார்க்க வந்த போது, தந்தையின் வற்புறுத்தலால் ஒரு பெண் (எம்.என்.ராஜம்) பாடும் பாடல் இது. அவளைப் பெண் பார்க்க வந்திருப்பவர்களின் உற்சாகத்தைத் தாளத்தில் (தபலா, டோலக்) அழகாகக் காட்டும் மன்னர்கள், பெண்ணின் சோகத்தை, பாடுபவரின் குரலிலும், அவள் பாடும் வார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் (ஸாரங்கி, ஷெனாய், கிடார்) அற்புதமான மெட்டிலும், கோர்விசைப் பின்னலிலும் கொடுத்திருப்பார்கள்! இந்தப் பாடலில் வயலின் கூட மிகவும் சிறிதளவே உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது, தெரிகிறதா?

ஜமுனாராணியின் குரல் விசேஷமானது. பாடும் போதே குரலில் ஒரு சிறு உடைப்பு தெரியும். (சீர்காழியின் குரலிலும் இது உண்டு!). முக்கியமாகச் சோகப் பாடல்களில் இந்த உடைப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் பாடலுக்குத் தனி மெருகூட்டும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Penn paarkka maappillai by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Tuesday, October 25, 2011

பொன் என்பேன், சிறு பூவென்பேன்!






மன்னர்களின் இன்னொரு பரிபூரண மெலடியை ரசிக்க வருகிறீர்களா?

போலீஸ்காரன் மகள்திரைப்படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. (அதற்கு முன்னர், நடிகர் சகஸ்ரநாமத்தின் ஸேவாஸ்டேஜ் நாடகக் கம்பெனியினரால் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடிக்கப் பட்டது). இந்தப் படத்திற்கும் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் கூட்டுதான்! ஸ்ரீதரின் படங்கள் எல்லாமே பாடல்களுக்குப் பெயர்பெற்றவை. அதிலும் (நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, கலைக்கோவில் போல) இந்தக் கூட்டணியும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? (கேட்கத்தான் வேண்டும்!!!)

இந்தப் படத்தில் (ஒரு பாடலைத் தவிர) எல்லாப் பாடல்களையும் பின்னணியில் பாடியவர்கள், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜானகி! அந்த ஒரே ஒரு பாடலை (கண்ணிலே நீர் எதற்கு?’) ஜானகியோடு சேர்ந்து சீர்காழி பாடினார். சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பின்னணிப் பாடல் உலகையே தங்கள் வசம் வைத்திருந்த காலத்தில், இந்த மாதிரி வேறு பாடகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து இசையமைப்பாளர் தான் எஜமானர் என்று அவ்வப்போது பறை சாற்றிக் கொண்டிருந்தனர் நமது மன்னர்கள்! (இன்னொன்று நினைவுக்கு வருகிறது: ‘கற்பகம் படத்தில் நான்கே பாடல்கள், நான்கையும் சுசீலாவே பாடினார்! ‘பாலும் பழமும் படத்தின் எல்லாப் பாடல்களையும் டி.எம்.எஸ் சுசீலா பாடினார்கள்!)

சாதாரணமாக, ஒரு பாடகரின் ‘ரேஞ்ச் (வீச்சு) என்பது, அவர்கள் கீழ்ஸ்த்தாயிலிருந்து மேல்ஸ்தாயி வரை கஷ்டப் படாமல், (கஷ்டப் படுத்தாமலும்!) சுலபமாக சஞ்சாரம் (போக்கு வரத்து!) செய்யும் திறமை ஆகும். (ஸ்தாயி என்பது எந்த நிலையிலும் ஸ்ருதியை விட்டு விலகாமல் இருப்பது). இன்று நாம் ரசிக்கப் போகும் பாடலைக் கேட்டால் இது உங்களுக்குச் சுலபமாக விளங்கிவிடும்.

பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் மிக மென்மையானது. இந்தப் பாடலுக்கு முன்னர் அவர் பாடியிருந்த எல்லாப் பாடல்களும் அவருக்குச் சௌகரியமான ஸ்ருதி மற்றும் ரேஞ்சிலேயே இருந்தது. ஜானகிக்கும் (அந்த நாட்களில்) மேலே போகப் போக, குரல் சற்று க்ரீச்சிட ஆரம்பிக்கும். இங்கேதான் இசையமைப்பாளரின் திறமையும் அவதானிப்பும் வருகிறது!

தர்பாரி கானடா என்கிற வட இந்திய ராகத்தை வைத்துப் பின்னப் பட்ட இந்தப் பாடலில் எல்லோரும் சேர்ந்து நமது ரசிப்பையே வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்! (இதே ராகம், நமது கர்நாடக சங்கீதத்தில் கானடா என்று அழைக்கப் படுகிறது. சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தின் பிரபலமான பாடல் ‘முல்லை மலர் மேலேஇந்த ராகந்தான்! இசையமைப்பாளர் ஜி.ராமநாதனுக்கு இந்த ராகம் ரொம்பவும் பிடித்தது. நிறைய மெட்டுக்கள் கானடா ராகத்தில் அமைத்திருக்கிறார்).

இவ்வளவு தூரம் நமது கவனத்தைக் கவர்ந்த, கண்ணதாசனின் ‘பொன் என்பேன், சிறு பூ என்பேன் பாடல், பொன் என்பேன்என்று மிகக் கீழ்ஸ்தாயியில் ஆரம்பிக்கும். பாட்டின் பல்லவியை மட்டும் கேட்டால், பாடுவது பி.பி.எஸ். ஜானகியா என்று சந்தேகமே வரும்! அவ்வளவு கீழே தொடங்கும் பாட்டு, சரணத்தில் ‘உனை நானறிவேன், எனை நீ அறிவாய்என்று மிக மேலே போகும்.

பாடகர்களோடு குழலும், ஸிதாரும் தபலாவும் இசைந்து இன்பமூட்டுகின்றன. முதல் சரணம் ஆரம்பிக்குமுன் வீரிட்டு எழும் வயலின்களின் ஒலி நிச்சயமாகச் சிலிர்க்க வைக்கும். பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் போது ராமமூர்த்தியின் ஒற்றை வயலின் அவர் கூடவே வருவதையும் கவனியுங்கள்!

பி.பி.எஸ் ஜானகி இருவருக்கும் இந்தப் பாடல் அவர்கள் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்!

பாடலைக் கேளுங்களேன்:

Pon enbean siru poo enbean by Krishnamurthy80

மற்றொரு பாடலோடு மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Sunday, October 23, 2011

அபூர்வ சகோதரர்கள்!

இங்கே பல பதிவுகளில் நாம் வித்தியாச மான குரல்களைப் பற்றிப் பேசும் போது பானுமதியின் குரலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அவர் பாடிய ஒரு மென்மையான காதல் பாடலை இன்று கேட்போமா?

1949 ல் வெளிவந்த ஜெமினியின் ’அபூர்வ சகோதரர்கள்’, ஒரு பிரபலமான ஆங்கில நாவல் மற்றும் திரைப்படத்தைத் தழுவி ஆச்சார்யா என்பவரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் சூப்பர் ஹிட் ஆனது. (பின்னாளில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து, நீரும் நெருப்பும் என்ற பெயரில் அதே கதையை மீண்டும் எடுத்தார்கள்).

பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், இசை. ஜெமினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் களான எஸ்.ராஜேஸ்வர ராவ், எம்.டி.பார்த்தசாரதி ஆகியோர் இசை யமைத்திருந்தார்கள். சரித்திரக் (கற்பனைக்) கதையான இதில், ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவர்களில் ஒருவரைக் காதலிப்பார் கதாநாயகி பானுமதி. படத்தில் ஒரு காட்சியில் ராணுவ வீரர்களை ஏமாற்றிவிட்டு வெளியேற, பானுமதி,

‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா,

ரவா லாடு பூரியும் வேணுமா

என்று ஒரு பாடல் பாடி ஆடுவார்.இந்தப் பாட்டில், தமிழோடு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் பாடிடுவார். அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.

’அபூர்வ சகோதரர்கள்’ படம் முழுவதும் முடிந்து, வெளியிடத் தயாராகிவிட்ட நிலையில், வேறொரு இந்திப் படத்திற்காக ஜெமினியில் ஒலிப்பதிவு செய்யப் பட்ட (நமது இன்றைய) பாடலின் மெட்டைக் கேட்டாராம் எஸ்.எஸ்.வாசன். அந்த மெட்டினால் முற்றிலும் கவரப்பட்டு, அபூர்வ சகோதரர்கள் படத்தில் அதை இடம் பெறச் செய்தாராம்.

அந்த மெட்டை, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் பானுமதி மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். பானுமதியின் குரலோடு மதுரமான பியானோ இசையும் பாடல் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப இசையில் பியானோ வாசித்திருப்பது கேட்க எவ்வளவு சுகமாக இருக்கிறது பாருங்கள்! அது மட்டுமில்லை, பானுமதி பாடும் போது வாசிக்கப் படும் பியானோவின் கார்ட்ஸ் எவ்வளவு அழகாக இணைகிறது! தபலாவும், குழலும் இருந்தாலும் அவை வெறும் துணை மட்டும் தான். பியானோ என்கிற மேற்கத்திய வாத்தியத்தை நமது சங்கீதத்திற்கேற்ப ராஜேஸ்வர ராவ் எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார், என்பதையும், அத்துடன் (1948-49ல்) எவ்வளவு துல்லியமாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கூடக் கவனியுங்கள்! படத்திலும் இந்தக் காட்சியை அழகாகப் படம் பிடித்திருப்பார்கள். பானுமதியின் கைகள் மேல் ராதாவின் கைகளை வைத்து இரண்டு பேரும் இணைந்து பியானோ வாசிப்பது போல காட்டுவார்கள். அந்தக் காலத்தில் இது மிகவும் செக்ஸியான சமாசாரம்! பாடலைக் கேளுங்கள்:

Apoorva Sagotharargal -Maanum Mayilum.mp3 by Krishnamurthy80


மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Friday, October 21, 2011

பாரதியும், மன்னர்களும், சக்கரவர்த்தியும்!










மூன்றுக்கு மேற்பட்ட தலைமுறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

கவியரசு கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போலத் தரமான பாட்டுகள் எழுதலாம். அல்லது, ஒரு எஸ்.வி.வெங்கட்ராமன், ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், மெல்லிசை மன்னர்கள், திரை இசைத் திலகம் போல காலத்தால் அழிக்க முடியாத மெட்டுக்களைக் காற்றில் உலவ விடலாம். அல்லது, எக்காலத்திலும் அழியாப் புகழ் பெற பாரதியைப் போல கவியாகிடலாம்!

இவை யாதும் கைகூடவில்லை என்றால் இருக்கும் திறமையை நான்கு ஆட்களை வைத்தாவது வெளிச்சம் போட்டுக் காட்டி, ‘நான் மும்மூர்த்திகளை விட உயர்ந்தவன் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம்! பொய்யையும் திரும்பத் திரும்பச் சொல்லியே அதை மெய்யென்று நம்ப வைத்து விடுகிற உலகம் தானே, இது!

ஆகட்டும், நாம் நமது வேலையைப் பார்ப்போம்! நாம் எடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் ஏகப்பட்ட ஜீனியஸ்கள் உலா வந்தனர். பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களும் அருமையான தொழில்நுட்ப வல்லுனர்களும், நடிக, நடிகையரும், பாடகர்களும் இவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமைக்காகவே ஒரு படத்தைப் பல முறைகள் பார்க்க வைத்தனர். அதைத் தமிழ்த் திரையின் பொற்காலமென்றே சொல்ல வேண்டும்! (பல தடவைகள் பார்த்த ‘பாவமன்னிப்புபடத்தை, சில முறைகள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே பார்த்தது நினைவுக்கு வருகிறது!)

இன்று, சற்று வித்தியாசமான விருந்தொன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. பல ஜீனியஸ்கள் ஒன்று சேர்ந்தால் என்ன கிடைக்கும்? நமக்கு நல்ல செமத்தியான படைப்பு ஒன்று கிடைக்கும்!

பாரதியின் கற்பனைகள் வானத்தை விஞ்சியவை. இல்லாவிட்டால், அன்னியரின் இருண்ட ஆட்சியிலே, ஒரே சமயம் தேசபக்திப் பாடல்களையும் கண்ணன் பாட்டுகளையும், காணி நிலம் வேண்டும்’, ‘சிந்து நதி மிசை நிலவினிலே போன்ற கற்பனைப் பாடல்களையும் போன்ற பல காவியங்களை உருவாக்கியிருக்க முடியுமா?

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கதை மற்றும் பாடலாசிரியராகிப் பின்னர் இயக்குனரானவர். அதாவது, இயக்குனர் ஸ்ரீதரின் வழி வந்தவர். பெரும் வெற்றி பெற்ற சாரதா, பணமா, பாசமா’, குலமா, குணமா படங்களை எழுதி, இயக்கியவர். இவரின் இன்னொரு படைப்புத்தான் ‘கை கொடுத்த தெய்வம்’. சிவாஜி, சாவித்ரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா நடித்திருந்தார்கள். கண்ணதாசன், பாரதியார் பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசை யமைத்திருந்தார்கள்.

படத்தில் சிவாஜி உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் போது அவர் கனவில் இந்தப் பாடல் வரும். அவரே பாரதியாராகி, ‘சிந்து நதியின் மிசை நிலவினிலேஎன்று பாட ஆரம்பிப்பார்.

சிவாஜி எத்தகைய அற்புதமான கலைஞன், என்பதில் யாருக்கேனும் சந்தேகம் (!) வந்தால், இந்தப் பாடல் காட்சியையும், ‘திருவிளையாடல்படத்தில் வரும் (கெளரிமனோகரி ராகத்தில் அமைந்த) ‘பாட்டும் நானேபாடல் காட்சியையும் போட்டுக் காண்பியுங்கள்! சிவாஜிதான் நடிப்புலகச் சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொண்டு விடுவார்! தேஷ் என்ற ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த ‘சிந்து நதியின் மிசைபாட்டில், தன்னுடைய முகம், இடதுகை (வலது கை கூட பாட்டின் பிற்பகுதியில் தான் தெரியும்!) இவற்றை வைத்தே நமது கண்களில் நீரை வரவழைத்திருக்கும் உத்தமக் கலைஞன் சிவாஜி!

இந்தப் பாடலைப் படத்தில் இணைக்க வேண்டும், அதை இந்த இடத்தில் சேர்க்கவேண்டும், இப்படித்தான் படமாக்க வேண்டும், என்று எண்ணிச் செயல் படுத்தியிருக்கும் கே.எஸ்.ஜியும் சாதாரணமானவரில்லை!

எல்லாவற்றிற்கும் மேலாக, பாடலுக்கு ஆரவாரமில்லாத பாரம்பரிய இசையமைத்திருக்கும் மன்னர்களின் பணி, மகத்தானது. பாடியிருக்கும் டி.எம்.எஸ் கூட ஒரு ஜீனியஸ்தானே! இந்த பாடலில் வரும் தெலுங்கு வரிகளை ஜே.எல்.ராகவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள்.

இது தேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சி. இதில், இசையமைத்த மன்னர்களுக்கும் பாடியவர்களுக்கும் மட்டும் மரியாதை செய்வது சரியென்று படவில்லை. அதனால் பாட்டின் விடியோவை உங்களுக்கு அளிக்கிறேன். பார்த்து, கேட்டு இன்புறுங்கள்!

இன்னொரு பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!