Saturday, February 20, 2010

திருச்சி, தஞ்சை, திருவையாறு-ஒரு படக்கண்ணோட்டம்!

சமீபத்தில் திருவையாற்றில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றிய எனது குறிப்பைப் படித்திருப்பீர்கள். அதே சுற்றுலாவில் நான் எடுத்த படங்கள் சில இங்கே உங்கள் பார்வைக்கு. தஞ்சையில் கருவறை தவிர மற்ற எந்த இடத்திலும் படம் எடுத்ததைத் தடை செய்ய யாரும் முன்வரவில்லை என்பது ஆறுதலளிக்கும் அனுபவம். இத்தனைக்கும் காவலர்களின் நடமாட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது. இனி, படங்களும், நீங்களும்.....




நன்றி!

Friday, February 19, 2010

அண்ணலின் சமாதியில் ஆவேசம்!

 
Posted by Picasa


இந்தப்படத்துக்குப் பின்னால் ஒரு சிறிய நிகழ்ச்சியும் பெரிய ஆதங்கமும் இருக்கிறது. கர்நாடக இசை பற்றிக் கொஞ்சம் பரிச்சயம் உள்ளவர்களுக்கு, இது ஸ்ரீ தியாகராஜருடைய சமாதி என்பதும் அவருடைய உருவச்சிலை என்பதும் நிச்சயம் தெரிந்திருக்கும். சமீபத்தில் அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது.முதல் முறையாகச் செல்வதனால் மிகுந்த ஆவலோடு, சற்று நேரம் அமைதியாக அமர்ந்து அஞ்சலி செலுத்தலாம் என்று அங்கு சென்றடைந்தேன். நான் போன சமயம் ஒரு குடும்பத்தினர் அமர்ந்திருக்க, பூஜை நடந்துகொண்டிருந்தது. அது முடிந்தவுடன், அங்கே இருந்த பூஜை செய்பவர்களில் ஒருவரிடம் புகைப்படம் எடுக்கலாமா என்று அனுமதி கேட்டேன். தாராளமாக என்று அவர் கூறியதும் இந்தப்படத்தை எடுத்தேன். உடனே அங்கிருந்த இன்னொரு (சற்று முதிய) அர்ச்சகர்,’படம் எடுத்தது தவறு, இனிமேல் எடுக்க வேண்டாம்’ என்றார். நானோ, அனுமதி கேட்டுத்தான் எடுத்தேன் என்று கூறியவுடன் வந்ததே பாருங்கள் வார்த்தைகள்! ‘யாரைக் கேட்டீர்கள்? இங்கே என்னைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது’ என்று கத்த ஆரம்பித்தார். வருடாவருடம் தொலைக்காட்சியிலும் மற்ற அச்சு மீடியாக்களிலும் இதே படங்கள் வருவது எப்படி? என்று கேட்டதற்கு ‘அது வேறு’ என்று முடித்துக்கொண்டார். நானும் அங்கே சென்றதில் ஏற்கனவே இருந்த அமைதியையும் தொலைத்துவிட்டு உடனே வெளியேறினேன்.இப்படிச் செய்வது,’சாந்தம் இல்லையென்றால் செளக்கியம் இல்லை’ (சாந்தமுலேகா ஸெளக்யமு லேது) என்று பாடிய அந்த தியாகராஜருக்கே பொறுக்குமா என்பது தெரியவில்லை!

Thursday, December 31, 2009

வயதும் வருடங்களும்!

எங்கள் கண் முன்னே வளர்ந்த பெண் பிள்ளைகள், அவர்கள் தம் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டிற்கு வருகைதரும் போதிலெல்லாம் என் சகோதரர் சொல்லுவார்: “இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்கிற நினைவே தோன்றுகிறது” என்று! உண்மையான பேச்சு! மனதளவில் எவ்வளவு இளமையாக உணர்ந்தாலும், சமூக நாகரீகம் கருதி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலோ என்னவோ, அநேகமாக எல்லா சூழ்நிலைகளிலும் நான் போகுமிடங்களில் எல்லாம் என் ஸ்வபாவப்படியே ஜாலியாகத்தான் பழகிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் நேரில் சொல்வது ‘கொடுத்து வைத்தவர் ஐயா, நீர் - உமது வயதே தெரிவ்தில்லை’ என்று. பின்னால் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி, நமக்கேன் கவலை! ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளன்று ”இதுவரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி என்ன சாதித்தோம்? வெறும் ’வேடிக்கை மனிதனாகவே’ வாழ்ந்து விட்டோமே” என்று ஆதங்கப்பட்டே வாழ்வின் விளிம்புக்கு வந்தாயிற்று!

வயது என்றதும் சமீபத்தில் நண்பர் ரவிகுமார் கூறிய ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அவருடைய தந்தையார் வீட்டிலே விழுந்த காரணத்தினால் இடுப்பில் மூட்டுக்கிண்ணப்பந்து உடைந்து மருத்துவமனையிலே படுத்திருந்தார். வைத்தியர்கள் பந்தை மாற்றவேண்டுமென்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த நிலையிலே, ரவிகுமாரின் இளைய மகன் கல்லூரியிலிருந்து நேரே தாத்தாவைப்பார்க்க வந்தான். தன் தந்தையிடம், ’தாத்தாவிற்கு என்னப்பா ஆச்சு?’ என்று விசாரித்தான். ரவி கேட்டார்: ‘தாத்தாவின் வயது என்ன?’ என்று. அவருக்கு 80க்கு மேலே என்ற பதில் வந்தது. அதற்கு இவர், ’80 ஓவராகிவிட்டதல்லவா, அதனால், இப்போது பால் மாற்றச் சொல்லிவிட்டார்கள்’ என்று சொன்னார்! இது எப்படி இருக்கு?

Tuesday, December 8, 2009

காவல் நிலையத்தில்......

என்னுடைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த சமயம் நான் பட்ட பாட்டைப்பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியாக, நான் ஊரிலில்லாத சமயத்தில் என்னைத் தேடி காவல் துறை அன்பர் ஒருவர் (சீருடையில் இல்லாததால் அன்பரானார்!) வந்திருந்ததாகவும் என்னை வந்து காவல் நிலையத்தில் சந்திக்கச் சொன்னதாகவும் தகவல் கிடைத்தது. ஏற்கனவே மூன்று முறை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்ததால் (வீண் கற்பனையும் அற்ப சந்தோஷமும் வேண்டாம் - அந்த சந்திப்புகளும் இதே காரணத்துக்காகத்தான்!) என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்திருந்தது. இன்று காலை வழி கண்டுபிடித்துப் போய்ச்சேர்ந்தேன். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் குடைச்சலான கேள்விகளின் ஊடே புகுந்து புறப்பட்டு வெற்றிகரமாகத் திரும்பினேன். அங்கே இலவச இணைப்பாகக் கிடைத்த காட்சியிது: ஒரு நடுத்தர வயது ஆணைத் தன் இருக்கைக்கு அருகில் (குத்த வைத்து) அமரச்சொல்லி ‘அன்புடன்’ விசாரித்துக் கொண்டிருந்தார் (சீருடையில் இல்லாததால் என் ஊகத்தில்) எழுத்தர். வீட்டு விலாசத்தைப் பற்றிய சில பல கேள்விகளுக்குப் பிறகு ஆரம்பித்தது அசல் விசாரணை. முதலில் கைகளை நீட்டச் சொல்லி, இரண்டடி தூரத்தில் நிற்கவைத்து, ஒரு நான்கடி நீளப் பிரம்பால் அடித்தார்கள் பாருங்கள், குலை நடுங்கிவிட்டது எனக்கு! அடிபட்டவனோ, அனுபவசாலி போலிருக்கிறது. அந்த அடிகளுக்கு நடுவே, முதலில் சொன்ன அண்ணாநகரிலிருந்து கோடம்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்தான். இன்னொரு அன்பர் சட்டையைப்பிடித்து, சுழற்றி அடித்தபோது, திருவள்ளூரின் ஒரு பகுதியான வள்ளுவர் நகரத்தில் மாரியப்பனின் பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டான்! அப்போதும் விடவில்லையே அவர்கள்! மாரிமுத்துவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, அந்த மாரிமுத்து இவனைப் பக்கத்து வீட்டுக்காரன் என்று உறுதியளிக்கும் வரையில் தரையில் அமர்ந்து இரண்டு கைகளையும் (சாணி தட்டுவது போலத்)தட்டிக் கொண்டிருக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள், என் வேலை முடிந்துவிட்டதால் (மனதிற்குள்) அலறி அடித்துக்கொண்டு ஓடி வெளியே வந்துவிட்டேன்! நம் சிறு வயதில் போலீஸைக் காட்டி, ‘பூச்சாண்டி’ என்று பயமுறுத்தியதில் பொய்யேயில்லை!

Sunday, November 8, 2009

நானும், மழையும் மற்றும் என் பாஸ்போர்ட்டும்...

மழைக்கும் எனக்கும் ஒரு போட்டி! அது வரும்போதிலெல்லாம் நான் மரியாதையாக வீட்டில் அடங்கி, ஒடுங்கி இருந்தால் போச்சு. மீறி வெளியே போனால் அது எனக்குச் ‘சொந்தக் காசில் சூனியம்’ வைத்துக் கொண்ட கதையாகத்தான் முடிகிறது! பல வருடங்களுக்கு முன்னர், மழையில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்றபோது விழுந்தேன். இடதுகால் எலும்பை முறித்துக் கொண்டு காலின் உள்ளே காயலான் கடைச் சாமான்களுடன் இப்போதும் வலம் வந்து கொண்டிருக்கிறேன். அதன் பிறகும் பல அனுபவங்கள். அதனாலேயே மிகவும் ஜாக்கிரதையாகப் பயணிக்கும் எனக்கு வந்தது ஒரு சோதனை. என்னுடைய பாஸ்போர்ட் விரைவில் காலவதியாக இருப்பதனால் அதைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. அதைத் தபாலில் அனுப்ப வேண்டுமானால் அதில் சில ‘கெஜட்டட்’ அதிகாரிகளின் கையொப்பம் பெற வேண்டும். அப்படி ஒருவரும் பக்கத்தில் இல்லாததால், கணிணியின் பேச்சை நம்பவேண்டியதாயிற்று. அதில் (அவர்களின் வலைத்தளத்தில்) கூறியிருந்தபடி பதிவு செய்து கொண்டால் அவர்கள் குறிப்பிடும் தேதி, நேரத்தில் சென்று, எந்த வரிசையிலும் நிற்காமலும் பதினைந்து நிமிடங்களில் வேலையை முடித்துக் கொண்டு திரும்பிவிடலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. நம்பினேன். பதிவும் செய்தேன்.

அந்த நாளில் மழை வரலாமோ? வந்தேவிட்டது. ஆட்டோவைப்பிடிக்கச் செல்லுகையில் சேற்றில் காலை வைத்து வழுக்கி விழுந்து, பட்டகாலிலேயே பட்டது. மீண்டும் மனந்தளராத விக்கிரமாதித்யனாக வீடு திரும்பி, உடை மாற்றி ஒரு வழியாக பாஸ்போர்ட் அலுவலகம் அடைந்தால் அப்படி ஒரு கூட்டம் அங்கே! நான் செல்ல வேண்டிய தளம் எது என்பதைத் தெரிந்துகொள்ளவே இருபது நிமிடங்களானது. எப்படியோ நொண்டிக் கொண்டு போனால் அங்கும் பெரும் கூட்டம்,அமளி. எனக்கு எத்தனை மணிக்கு நேர்காணலுக்கு வரச் சொல்லியிருந்தார்களோ, அதே சமயத்தில் இன்னும் ஐந்து பேருக்கு மேல் வரச்சொல்லியிருந்தார்கள்! வரிசையில் நின்று அவதிப்பட்டுக் கடைசியில் அவர்கள் கொடுத்திருந்த சமயத்திற்கு மேல் இரண்டரை மணி நேரம் கழித்து வெளியே வந்தேன்! இதில் வேடிக்கை என்னவென்றால், நான் போனது மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வரிசை, நான் சென்றிருந்த வேலைக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட மொத்த நேரம் 5 நிமிடங்கள்!

இது நடந்து சிலநாட்களாகின்றன. இன்னும் மழை நின்றபாடில்லை, நானும் நொண்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறேன்.

Wednesday, October 7, 2009

என்னுடைய ’வங்கியில் ஒரு அனுபவ’த்தின் தொடர்ச்சியாகும் இது. பத்து நாட்களுக்கு முன் வங்கிக்குச் சென்றிருந்த போது, அவர்கள் இன்னொரு நாள் வரச்சொன்னதும், நான் கடுப்படைந்து, கண்டபடி ஆங்கிலத்தில் திட்டி, அடுத்து நான் போவது வங்கியின் ஆம்பட்ஸ்மேனிடம் புகார் செய்வதற்காக என்றெல்லாம் மிரட்டியதற்குப் பின் காத்திருக்கச் சொன்னார்கள்.ஒரு மணி நேரம் கழித்து என் ’நண்பர்’ வந்து, ‘ஸார், உங்களுக்கான ஏடிஎம் அட்டை தபாலில் அனுப்பப்பட்டு, விலாசம் தெரியவில்லை என்று பெங்களுருக்குத் திரும்பிப் போய்விட்டது, நீங்கள் மீண்டும் ஒரு மனு எழுதிக்கொடுங்கள், நாங்கள் பார்க்கிறோம்’ என்றாரே பார்க்கலாம்!
நான் கோபம் தலைக்கேறியவனாக, ’என்ன ஸார், விளையாடுகிறீர்களா?’ என்று எகிற, மற்றோரு அலுவலர் (எல்லா வங்கிக் கிளைகளிலும் வேலை செய்வதற்கென்றே இருக்கும் இந்த மாதிரி ஒருவரைப் பார்க்கலாம்!) குறுக்கிட்டு, இன்னும் அரைமணி நேரம் காத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.உள்ளே என்ன நடந்ததோ, ஒரு கையெழுத்து வாங்கிக் கொண்டு அட்டையைக் கையில் கொடுத்து, ‘தொலைடா சாமி’ என்று அனுப்பி வைத்தார்கள். விஷயம் இத்தோடு முடிந்துவிடுமா, என்ன? பின்னர் ஒரு நாள், நான் அட்டையின் ரகசியக் குறியீட்டை மாற்ற எண்ணி, இயந்திரத்தில் அட்டையைச் செலுத்தி, அவர்கள் எனக்களித்திருந்த மூல மந்திரச் சொல்லைப் பயன்படுத்தினதும், ‘உன் அட்டையை ஏற்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டது. இப்போது மீண்டும் மனந்தளராத விக்ரமாதித்யனாக நான்.....!

(அன்றைய என்னுடைய கலாட்டாவின்போதும் வங்கி மேலாளர் அங்கிருக்கவில்லை!)

Thursday, September 17, 2009

மனசாட்சியும் பணசாட்சியும்!

பணம் பண்ண, மனசாட்சி இருக்ககூடாது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு. பணமிருந்தால் எல்லாமே கிடைக்கும் - அதாவது அன்பைத்தவிர - என்ற நம்பிக்கையையும் தகர்த்தது அந்த உண்மை.

நன்றாக ஒடியாடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு இப்போது தள்ளாமையினால் ஒரே இடத்தில் வசிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. மகனும் மருமகளும் வேலைக்குச் செல்கிறார்கள்.வீடு திரும்ப இருவருக்கும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இதற்காக, இவரைப் பகல் வேளையில் பார்த்துக் கொள்ள, சென்னையில் இருக்கும் ஏராளமான முகவர்களில் ஒருவர் மூலம் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்தியாயிற்று. இதற்கு ஒரு கணிசமான தொகை செலவாகுமென்பதை அறிவீர்களல்லவா?

சென்னையில் இப்போது பணம் பண்ண இன்னொரு சிறந்த வழியாம் இந்த மாதிரி ஏஜன்ஸி நடத்துவது! இதில், உங்களிடமிருந்தும் கமிஷன் வாங்குவார்கள், அவர்கள் அனுப்பி வைக்கும் அந்த நபரிடமும் கமிஷன் வாங்குகிறார்கள். இதற்கான தொகை கொஞ்சமல்ல - இரண்டு பக்கத்திலும் ஓரோர் மாத சம்பளம்! இத்தோடு போவதில்லை இந்த சமாசாரம். சரியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழிந்ததும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி, நம் வீட்டில் வேலை செய்பவர் கழண்டு கொள்வார் - நீங்கள் மீண்டும் அதே அல்லது வேறே ஏஜண்டிடம் மாட்டிக்கொண்டு மீண்டும் கப்பம் கட்ட ஆரம்பிக்கவேண்டியது தான். இந்த விவகாரம் ஒரு திட்டத்தோடுதான் நடக்கிறது என்பதை இரண்டு மூன்று இடத்தில் என்னால் கவனித்து அனுமானிக்க முடிந்தது. இது ஆயாவேலைக்கு மட்டுமல்ல, எல்லாவிதமான வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜன்ஸிகளிலும் நடக்கிறதாம்! மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது, போங்க ஸார்!