Thursday, September 15, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (எட்டு)

தமிழ்த் திரைப்படங்களில் டூயட் பாடல்களை டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில், (தமிழில் இவர்கள் இருவர் மட்டுமே 750 பாடல்களைச் சேர்ந்து பாடியிருப்பதாகவும், சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து 250 பாடல்களும், தனியாகச் சுமார் 1700 பாடல்களும் பாடியிருப்பதாகவும் சுசீலாவின் சொந்த வலைப் பூவிலிருந்து ஒரு தகவல்!) ஒரு மாறுதலாக, டூயட் பாடல்களில் ஆண்கள் குரலிலும் (’பொன்னொன்று கண்டேன்’, அவள் பறந்து போனாளே’ பாடல்கள்) மற்றும் பெண்கள் குரலிலும் பதிவான பல பாடல்கள் பிரபலமடைந்தன. (இதற்கு முந்தைய பதிவில் கேட்ட ‘சின்னஞ்சிறு கண்ணன்’ பாடல் போல!) இதைப் போன்ற முரணான குரல்களால் பாடப் பெற்ற பல டூயட் பாடல்கள் கேட்பதற்கு வெகு சுகமாக அமைந்தன.

இன்று போல் அல்லாமல், அந்தக் காலப் பாடகர்களின் குரல்கள் ஒன்றொன்றும் நன்கு வித்தியாசப் பட்டிருந்ததால், ஒரு பாட்டைக் கேட்ட உடனேயே பாடியவர் யார், இசையமைத்தது யார் என்பதையும், பல சமயங்களில், பாடலை எழுதியவரையும் கூடச் சரியாக ஊகிக்கமுடிந்தது!

இந்த இடத்தில், இன்னொரு தகவல்: மன்னர்களின் குருவான ஸி.ஆர்.சுப்பராமனுக்கு, ’இந்திப்பாடல்களைத் தழுவியே இசையமைப்பவர்’ என்றொரு பெயர் இருந்தது. (இத்தனைக்கும் இவர், ’தேவதாஸ்’ படத்தில் வரும் ‘துணிந்தபின் மனமே’ மற்றும் ‘உலகே மாயம்’ போன்ற மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்!) இதனால் மனம் புண்பட்டிருந்த சுப்பராமன், என்.எஸ்.கிருஷ்ணனின் ’மணமகள்’ படத்தில், ஒரு சவாலாக, கர்நாடக ராகப் பாடல்களை மட்டுமே கொடுத்து, அத்தனை பாடல்களையும் பிரபலமாக்கித் தன் திறமையைக் காட்டினார். உதாரணமாக, இந்தப் படத்தில் வந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற (ராகமாலிகை எனப்படும் பல ராகங்களை உள்ளடக்கிய) பாடல், எளிதில் அடைவதற்குக் கடினமான கர்நாடகக் கச்சேரி மேடைகளைச் சென்றடைந்து, இப்போதும், (அதாவது ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னரும்) கச்சேரி ரசிகர்களின் விருப்பப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனால், ’மணமக’ளில் நான் எடுத்துக் காட்ட வந்தது, இன்னொரு அற்புதமான ராகமாலிகையான ‘எல்லாம் இன்பமயம்’ என்கிற டூயட் பாடலை. இதை இரண்டு முரண்பட்ட குரல்களையுடைய எம்.எல்.வசந்தகுமாரியும் பி.லீலாவும் பாடியிருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் இசையமைப்பாளருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப்பாடல், இன்றும் சின்னத்திரையில் பல ’சூப்பர் சிங்கர்’களின் செல்லப் பாடலாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது! இந்தப் பாடலின் தேர்ந்தெடுத்த சுகமான ராகங்களையும், அவற்றிற்கு ஈடான ஸ்வர ஜதிகளையும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் நமக்கு சங்கீதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

இந்த உத்தியை, நமது பிற்கால மன்னர்களும் இன்ன பிற இசையமைப்பாளர்களும், பல பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். முரண்பட்ட குரல்களைக் கொண்ட சுசீலாவையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் வைத்து, ‘உனது மலர் கொடியிலே’, ’மலருக்குத் தென்றல் பகையானால்’ போன்ற எத்தனை தேனான பாடல்களை இன்றும் கேட்டு மகிழ்கிறோம்!

இப்போது, இன்று நாம் கேட்கப் போகிற (மெல்லிசை மன்னர்கள் இசையில்) ஒரு முன்னோடியான பாடலை, ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்திற்காக ஜமுனாராணியும், எல்.ஆர்.ஈஸ்வரியும் மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். கவனமாகக் கேளுங்கள், பாடலோடு இழைந்து வரும் வயலின்களும், தொடர்ந்து வரும் மாண்டலின் இசையும் நடுநடுவே தெளித்திட்ட குழலிசையும், ஒரே சீரான தாளமும் பாடலோடு நம்மையும் எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடும்! இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் கோர்விசையில், மாண்டலினுக்கு இசைவாக இன்னொரு ஸ்ருதியில் குழலை ஓட விட்டிருக்கிறதையும் அனுபவியுங்கள். (அந்தக் குழல் ’பிட்’ டை ஸெகண்ட்ஸ் என்று இசை மொழியில் கூறுவார்கள்):

Seyyum Thozhile Dheivam by Krishnamurthy80


இன்னொன்று - இங்கே இசையை மட்டுமே ரசிக்க வந்தவர்களை, பாடலின் வரிகளையும் ரசிக்க வைத்திருப்பவர், மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கண்ணதாசனைப் போலவே, இவருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் காம்பினேஷன் அமர்க்களமாக அமைந்தது. (‘இன்று நமதுள்ளமே’ எனும் ’தங்கப் பதுமை’ படப் பாடலில் ஒரு வரி: ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்......‘ இந்த உவமைக்கு ஈடேது, இணையேது?!)

நீங்கள் இப்போது கேட்ட பாடலின் சில வரிகளைத்தான் பாருங்களேன்:

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்த
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி’

மற்றும்,

‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை – அந்த
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை’

என்ற வரிகளெல்லாம் (வைரத்தை விடுங்கள்!) சுத்தமான ப்ளாட்டினம் அல்லது (இன்றைய விலையில்) தங்கம் அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Sunday, September 11, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஏழு)

மெல்லிசை மன்னர்கள் இசையில் உருவான ஆறு அற்புதமான பாடல்களைக் கேட்டோம். அவர்களுக்கு சமகாலத்தில் கோலோச்சிய இன்னொரு மேதை, கே.வி.மகாதேவன் இசையில் உருவான ஒரு அரிய பாடலை இன்று கேட்கலாமா?

’அரிய’ என்று ஏன் கூறினேன் என்றால், இன்று நாம் கேட்கப் போகும் பாடல் இடம் பெற்ற ‘மகாலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், இன்று எஞ்சியிருப்பதெல்லாம் இந்தப் பாடலின் ஒலி மட்டுமே!

யோசித்துப் பார்த்தால்,அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முன்னரும் இசையமைத்த எல்லாருடைய பலமும் மெட்டில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இசை அமைக்க ஆரம்பித்த பிறகு தான், மெட்டுக்களுக்கு மட்டுமின்றி, வாத்தியங்களின் இசைக் கோர்வைக்கும், பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் வந்தது எனலாம்.

தமிழ்த் திரை இசைத் துறையில் மன்னர்களுக்கும் ஸீனியரான மகாதேவனின் பாடல்களின் வெற்றிக்கு, இசைக்கோர்வையை விடவும் மெட்டுக்களும், தாள வாத்தியங்களுமே பிரதான காரணமானது. (‘வண்ணக்கிளி’ படத்தில் வரும் ‘மாட்டுக்கார வேலா’ மற்றும் ’வண்டி உருண்டோட’ என்கிற நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்! தாள வாத்தியமான தபலாவின் பங்கு விளங்கும்). இந்த வகையில் மகாதேவனிடமிருந்து பல அருமையான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இப்போது மகாதேவன் மெட்டமைத்து, இரண்டு ஈஸ்வரிகள், (எம்.எஸ்.ராஜேஸ்வரியும், எல்.ஆர்.ஈஸ்வரியும்) பாடிய ‘சின்னஞ்சிறு கண்ணன்’ என்கிற இந்தப் பாடலைக் கேளுங்கள்:


Chinnanjiru Kannan by Krishnamurthy80


முதலில், இந்தப் பாடலில் இந்த இரண்டு வித்தியாசமான குரல்களை உபயோகித்த யோசனையே ஒரு அருமையான விஷயம்! அடுத்ததாக, இவ்வளவு காலம் (ஏறத்தாழ 50 வருடங்கள்!) கடந்தும் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது (அதாவது, மொத்தத் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்!) என்பது இன்னும் எவ்வளவு பெரிய விஷயம்! என்ன ஒரு மெட்டு! ‘இனிக்கவே ஒன்று தா’ என்று ராஜேஸ்வரி கேட்கும் போது, அவருடைய குரலின் குழைவில், உலகையே மறந்து, சின்னஞ்சிறு கண்ணனிடம் நாமும் கெஞ்சி நிற்கிறோமல்லவா, அதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு! அவரின் குரலுக்கு (மிகவும்) இளமையான எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் எவ்வளவு அழகாகத் துணை போகிறது! தபலாவும் இந்தப் பாடலின் இன்னொரு ஹீரோ என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒரு பாடலைத் தவிர, ஈஸ்வரிகள் இருவரும் இணைந்து வேறு பாடல்கள் பாடியிருப்பதாக நினைவில்லை – ஆனால், இது ஒன்றே போதுமே!


மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Wednesday, September 7, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஆறு)

இன்று ஒரு வித்தியாசமான குரலில் இன்னுமோர் சோகப் பாடலைக் கேட்கலாமா?.

எஸ்.ஸி.கிருஷ்ணன் என்கிற பின்னணிப் பாடகரைப் பற்றி நம்மில் அதிகமானவர்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால், அவர் பாடிய சில பாடல்களைச் சொன்னால், “ஓ, அவரா?” என்பீர்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில், ’ஏ, தில்லா(ன்) டோமரி’ என்ற பாடல் (படத்தில், மனோரமா நாடகமொன்றில் பாடி ஆடுவது போல) வரும். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். அவரோடு ஒரு ஆண் குரலும் இணைந்து ஒலிக்கும். அது, எஸ்.ஸி.கிருஷ்ணனுடையது. நடிகர் தங்கவேலுவிற்கு நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். நல்ல பாடகர். குரல் கொஞ்சம் ஸி.எஸ்.ஜெயராமனை ஒத்திருக்கும். அவரைப் பல இசையமைப்பாளர்கள் காமெடி பாடல்கள் பாடவைத்தே வீணாக்கிவிட்டார்கள். ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள் அவரின் குரலை, இரண்டு பழைய பாடல்களில் அற்புதமாக உபயோகித்திருக்கிறார்கள். இரண்டுமே அந்தந்தப் படங்களில் அசரீரியாகத்தான் வரும். அதில் ஒன்று, எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படத்தின் டைட்டில் ஒடும் போது வரும் ‘நாயகமே, நபி நாயகமே’ என்ற அருமையான பாடல், இன்னொன்று, இன்று நாம் கேட்கப் போகும், (‘போர்ட்டர் கந்தன்’ படத்தில் வரும்) ’வருந்தாதே, மனமே‘ என்ற பாடல்.

திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட நல்லவனான ஒரு போர்ட்டர், குடும்பத்தோடு ஊரை விட்டு ரயிலில் ஓடும் போது பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கிறது.

”எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும்,
அழுதாலும் தொழுதாலும் அதில் ஓரெழுத்தும் மாறாதே”

என்ற விருத்தத்தோடு ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடலான இதை எழுதியவரின் பெயர் நினைவிலில்லை.

பாட்டிற்குத் தாளம்? முதன்மையாக, ஜிகு,ஜிகு என்கிற ரயில் ஓடும் சத்தந்தான்! இதோடு, மற்ற ஒலிகளையும் கோர்த்திருப்பதைக் கவனமாகக் கேட்டுப் பாருங்கள்:

Varundhathe maname by Krishnamurthy80


இப்போது, ஒரு ஒப்பீட்டிற்காக கீழே இணைக்கப் பட்டிருக்கும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். ’போர்ட்டர் கந்தன்’ படத்திற்குப் பிறகு, (ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர்!) மன்னர்கள் இசையமைத்த ’பச்சைவிளக்கு’ படப் பாடலின் முகப்பு இசை, இது!

Kelvi pirandhadhu indru (Music) by Krishnamurthy80


காலங்கடந்த இசைக் கோர்வையில் என்ன ஒரு சீரான வளர்ச்சி!

அதிக வாத்தியங்களை (முக்கியமாக வயலின்களையும், ட்ரம்பெட் எனப்படும் காற்று வாத்தியத்தையும்) இணைத்து இசைக் கோர்வையில் விளையாடியிருக்கிறார்கள். இரண்டையுமே கேட்கும் அனுபவம் சுகமானது அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Saturday, September 3, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஐந்து)

கர்நாடக இசையில், மனிதனின் ஆதார உணர்ச்சிகளைகப் பிரதிபலிக்கும் ராகங்கள் ஏராளம் உண்டு. நீங்கள், உங்கள் ‘மூடு’க்கேற்ற ராகத்தையும் பாடலாம் – அல்லது ஒரு ராகத்தைப் பாடியும் ‘மூடை’ வரவழைக்கலாம்! நமது திரைப்படங்களின் இசையை, (பாடல்களாகட்டும், பின்ன்ணி இசையாகட்டும்) அந்தந்தப் படத்தின் கதையே முடிவு செய்கிறது என்பதையும், நமது படங்களில் எல்லா ’மூடு’களும் பரவியிருக்கும் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை! இதில், சோகத்தை வெளிப்படுத்தக்கூடிய ராகமாக ‘முகாரி’ என்ற ராகத்தை, சாதாரணமாகக் குறிப்பிடுவார்கள். (இங்கே ஒரு செய்தி: இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், காதலை வெளிப்படுத்தும் விதமாக ’கானடா’என்கிற ராகத்தில் பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘முல்லை மலர் மேலே’ என்கிற உத்தமபுத்திரன் படப் பாடல் நினைவிருக்கிறதா? ‘அம்பிகாபதி’க்காக இசையமைக்க உட்கார்ந்த போது, பாடலாசிரியரின் சவாலை ஏற்றுப் போட்ட மெட்டுத்தான், முகாரி ராகத்தில் அமைந்திருக்கும், ‘வாடா மலரே, தமிழ்த் தேனே’ என்கிற அற்புதமான பாடல்!) முகாரி ராகத்தை விடவும் சோக உணர்வு அதிகம் தென்படும் ராகத்தின் பெயர், சுபபந்துவராளி. இந்த ராகத்தை ஒட்டிய மெட்டுக்களில், மெல்லிசை மன்னர்களிடம் மூன்று அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார், சுசீலா. அவை, ’பாலும் பழமும்’ படத்தில் வரும் ‘இந்த நாடகம், அந்த மேடையில் எத்தனை நாளம்மா’ என்ற பாடலும், ’ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் ‘காலமகள் கண் திறப்பாள், சின்னையா’ என்ற பாடலுமாகும். மூன்றாவது (வரிசையில், முதலாவது?!) பாடல், ’புதையல்’ படத்தில் பத்மினிக்காக சுசீலா பாடியிருக்கும், ‘ஆசைக் காதலை மறந்து போ’ என்பது. காதலனை மறக்க வேண்டிய கட்டாயத்தில் கதாநாயகி பாடுகிறாள். பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல். இதே படத்தில் வரும் ‘விண்ணோடும் முகிலோடும்’ உனக்காக, எல்லாம் உனக்காக, சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்’ என்ற பாடல்கள் போல பிரபலமாகாத பாடல், ‘ஆசைக் காதலை...’. ஆனால் இசையமைப்பில் இந்தப் பாடல்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நல்ல பாடல் என்பதால் இங்கே இடம் பெறுகிறது! பாடலும் இசையும் உங்கள் நினைவலைகளைத் தூண்டுமென்ற நம்பிக்கையோடு இணைத்திருக்கிறேன். கேளுங்கள்:



மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Friday, September 2, 2011

ஸீனியர் ஸிடிஸன்ஸ்!

இன்றைய மொழியில் சொல்வதானால், ‘பெரிசுகள்’! இந்த வயதிற்கு (65+) வந்திருக்கும் எல்லாருக்கும் இந்த நிலையில் உள்ள சிரமங்கள் தெரியும். பிறந்ததில் இருந்து எத்தனையோ கஷ்டங்களுக்குப் பின்னர் மனிதன் அடையும் பதவி இது!. வேலையிலிருந்து மட்டுமல்ல வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று ‘நிம்மதி’யாக இருக்க வேண்டிய பருவம் என்று மற்றவர்களும், ஏன், அரசாங்கமுமே பிரகடனப்படுத்துகிற சமயம் இது! ’நன்றாக வேலை செய்தோம், நல்ல குடும்பத் தலைவனாக இருந்தோம், இனி மேலே நல்ல ஓய்வான, மனதுக்குப் பிடித்த வாழ்வு வாழலாம்’ என்ற நியாயமான ஆசைகளை எதிர்நோக்கும்போது, நடைமுறை வாழ்க்கை, நம்மைப் பார்த்து நகைக்கிறது! ‘வாய்யா, வா, உன்னைப்போல எத்தனை பேரைப் பார்த்துவிட்டோம்’ என்று! ’உனக்கு என்னதானய்யா பிரச்னை? போட்டதைத் தின்றுவிட்டு, கிருஷ்ணா, ராமா என்று கிடக்கவேண்டியது தானே?’ என்கிறீர்களா?! உங்கள் வீட்டு நாய் கூட ‘போட்டதைத்’ தின்பதில்லை, ஐயா! அதற்கும் தனியான உணவும், பணிவிடையும், பராமரிப்பும் அவசியம்! (நாயை ’அதை’ என்று குறிப்பிட்டாலே முறைப்பவர்கள் உண்டு, தெரியுமா உங்களுக்கு? அதன் பெயரைச்சொல்லி மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நீங்கள் தான்!) இன்றைக்கு எத்தனை ஸீ.ஸிக்கள் கண்ணியத்தோடு வாழமுடிகிறது? அப்படியே வாழ்கிறவர்கள் அதற்குக் கொடுக்கும் விலை என்ன? பிள்ளைகள் அயல் நாட்டில் பிழைக்கப் போனால், அவர்களின் திருமணத்திற்குப் பிறகு இவர்களும் கூடவே ‘சம்பளமில்லாத வேலைக்காரர்களாகச்’ செல்ல வேண்டியிருக்கிறதே, இதில் எத்தனை பேர் இந்த ’உத்தியோக’த்தை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதன் இன்னொரு கோடியில், முதியோர் இல்லங்களில் தனியாகவோ, தம்பதிகளாகவோ கிடப்பவர்கள் என்ன மன நிம்மதியோடு வாழ்வார்கள்? முதியோர்களின் சுகாதாரப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு கண்டிருக்கிறோம்? சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல், கிடைத்த காசை, மோசமான முதலீடுகளில் தொலைக்கும் முதியோர்களுக்கு அரசாங்கம் என்ன உதவி செய்கிறது? பிள்ளைகளால் நிராதரவாக விரட்டப் படும் முதியோர்களின் கதி தெரியுமா உங்களுக்கு? ஒரு வங்கியிலோ அல்லது அரசாங்க அலுவலகத்திலோ இவர்கள் அவமானப் படுத்தப் படுவதை அறிவீர்களா? இவைகளைப்போல இன்னும் எத்தனை பதில் இல்லாத கேள்விகள்? இவை எல்லாவற்றிகும் பதில் இருக்கிறது! இன்றைக்கு நாம் வேண்டுமென்றே மறந்திருக்கும் ‘மனித நேயம்’ என்பதை பள்ளிப் பருவத்திலிருந்தே மீண்டும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். மனித நேயம் என்பது உறவுகளிடையேயும் வெளியிலேயும் ஊடுபாவாக இருந்தது, இன்று எங்கே தொலைந்தது? அதைக் கண்டுபிடித்து, நாட்டிற்காகத் தன் வாணாளைத் தியாகம் செய்த முதியோர்களுக்கு மரியாதையை மீட்க வேண்டியது, ஒரு தனி மனிதனின், ஒரு அரசாங்கத்தின் கடமை இல்லையா? இது நடைபெறாத நிலையில், இன்றைய முக்கியமான, யாருக்கும் வேண்டாத, தீண்டத்தகாதவர்களான - முதியோர்கள் எனப்படும் ஸீனியர் ஸிடிஸன்களே, நீங்கள் செய்யக்கூடியது இரண்டு தான்! ’எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்று வாளாவிருக்கலாம், அல்லது, என்னைப் போல,அவரவர் கையறு நிலையை நினைத்து காலன் வரும் வேளையை எதிர் நோக்கிக் காத்திருக்கலாம்!

Tuesday, August 30, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (நான்கு)


உங்களுக்கும் எனக்கும் இன்றைய தினம் ஆனந்தமான நாளாக மலரப் போகிறது! இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடல் அத்தகையது!

தலைவியின் மனதிற்கேற்ப அவளின் காதல் கைகூடினால், பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் தவிர வேறென்ன உணருவாள்? அந்த உணர்ச்சிகளை அப்படியே கொணர்ந்து மெல்லிசை மன்னர்கள் இந்தப் பாடலுக்கு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இசை அமைத்திருக்கிறார்கள். அதன் முழுப் பரிமாணமாக, பாடல் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை வயலின்களும், பியானோவும், டோலக்கும், தபலாவும், எல்லாவற்றிற்கும் சிகரமாக சுசீலாவின் தேன் குரலும் நம் உயிரைச் சுண்டி இழுக்கிறது பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் வெற்றி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இப் பாடல் ‘தங்கப் பதுமை’ திரைப்படத்தில் வருகிறது. (இதே படத்தில் பிரபலமான இன்னும் இரு பாடல்கள்: டி.எம்.எஸ்-ஜிக்கி பாடியிருக்கும் ’இன்று நமதுள்ளமே’ மற்றும் சிதம்பரம் ஜெயராமன் பாடி, பத்மினி இடையே பேசியிருக்கும் ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே”).

’என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ என்கிற இந்தப்பாடல், படத்தில் இன்னொரு முறை நெஞ்சைப் பிழியும் சோகத்தோடும் ஒலிக்கும்! அதையும் சுசீலாதான் பாடியிருக்கிறார். நான் தெரிவு செய்திருப்பது (இசைக் கோர்வைக்காக) மகிழ்ச்சியான பாடல். அதன் ஆரம்பத்திலும், சரணங்களின் இடையிலும் வரும் வயலின்களின் விளையாட்டையும், அதற்குப் பியானோவின் ‘கார்டுகள்’ (Chords) தரும் அரவணைப்பையும், இரண்டாவது சரணத்தின் முன்னிசையில், வயலின்கள் மற்றும் பியானோவோடு பின்னால் புல்லாங்குழல் இசை பின்னிப் பிணைந்து கொண்டு வருவதையும் தவற விட்டு விடாதீர்கள்! இப்போது பாடல் இதோ:

En vaazhvil pudhup paadhai by Krishnamurthy80


மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே?




Friday, August 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!

(மூன்று)

ஓரு இனிமையான செய்தி! கடந்த இரு பதிவுகளுக்கான பாடல்களின் ஒலிப்பதிவுகள் அந்தந்தப் பதிவுகளில் இணைக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் பாடல்களுக்கும் இணைப்பு (கிடைத்த வரை!) உண்டு. கேட்டு மகிழுங்கள்.

நான் முதலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்ற சூழ்நிலையில் கேட்டால் இன்னும் இனிக்கும். நல்ல கருவிகளில் கேட்கும் போதுதான், அற்றை நாளிலேயே, (அதாவது, இன்று போல நவீன ஒலிப்பதிவுக் கருவிகள், கணினிகள் இல்லாத போதிலேயே) நமது ஒலிப்பதிவாளர்கள் எவ்வளவு அருமையாகப் பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியும். உதாரணமாக, பல பாடல்களில் டபிள் பேஸ் என்கிற (மகா பெரிய வயலினைப் போல இருக்கும் இதை, நின்று கொண்டு தான் இசைப்பார்கள்) வாத்தியத்தை தாளத்திற்கேற்பவும், அந்தந்த ஸ்வரத்திற்கேற்பவும் மீட்டியிருப்பார்கள். உங்கள் காதுகளில், அதன் தொனி ‘தொம், தொம்’ என்று தாளத்தோடு அதிரும்! பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் எல்லா வாத்தியங்களின் தொனியும் செவிகளில் அளவாக, அமுதமாக விழும். ஆனாலும் எந்த வாத்தியமும் பாடுபவரின் குரலையோ, உச்சரிப்பையோ என்றும் அமுக்கியதே இல்லை!

இன்னொன்று! நான் இணைத்திருக்கும் சில பாடல்களின் ஒலிப்பதிவு, மெச்சத்தகுந்ததாக இல்லை என்றால், அது என் ஒலிப்பதிவு அல்லது இணைப்பின் குறையே!

-0-

இனி இன்றைய பாடல்: ’மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னைக் கவர்ந்த மூன்றாவது பாடல், ‘நானன்றி யார் வருவார்?’. இந்தப் பாடலை, டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி. கோமளாவும் பாடியிருக்கிறார்கள். பாடல், ’ஆபோகி‘ என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது. (இதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில், ‘கலைக்கோவில்’ படத்தில் வந்த, பாலமுரளீகிருஷ்ணாவும் சுசீலாவும் பாடிப் பிரபலமான ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. இளையராஜாவும், இதே ராகத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’ என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார்).

இந்தப் பாடலின் சிறப்பு என்ன? நீங்கள் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பல பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நாடக மேடையிலிருந்து வந்தவர் என்பதால் கணீர்க் குரலில் உச்சஸ்தாயியில் பாடும் வழக்கம் உள்ளவர். (கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல் கூட, கணீரென்றுதான் இருக்கும்!) ஆனால், இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரை, மென்மையான குரலில் எவ்வளவு அழகாகப் பாட வைத்திருக்கிறார்கள் என்பதை! மனதைத் தழுவி, உள்ளே புகுந்து பாடலோடு ஒன்றச் செய்யும் வித்தை அது!

உடன் பாடியிருக்கும் ஏ.பி.கோமளா பழைய பாடகி. அருமையான குரல் வளம் கொண்டவர். ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், போன்ற அனைத்துப் பழம்பெரும் இசையமைப்பாளர்களிடமும் நிறையப் பாடியிருக்கிறார். (சிவாஜி நடித்த ’நான் பெற்ற செல்வம்’ படத்தில் ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்ற அருமையான பாடலைப் பாடியிருப்பார், கேட்டதுண்டோ?). நான் இன்னமும் விவரிப்பதை விட, நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானே உங்களுக்குப் புரியும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Naanandri yaar varuvaar? by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடல் மூலமாகச் சந்திப்போம், நண்பர்களே!