Thursday, September 17, 2009

மனசாட்சியும் பணசாட்சியும்!

பணம் பண்ண, மனசாட்சி இருக்ககூடாது என்பதைப் புரிந்து கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் கிடைத்தது எனக்கு. பணமிருந்தால் எல்லாமே கிடைக்கும் - அதாவது அன்பைத்தவிர - என்ற நம்பிக்கையையும் தகர்த்தது அந்த உண்மை.

நன்றாக ஒடியாடிக்கொண்டிருந்த ஒரு பெண்மணிக்கு இப்போது தள்ளாமையினால் ஒரே இடத்தில் வசிக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது. மகனும் மருமகளும் வேலைக்குச் செல்கிறார்கள்.வீடு திரும்ப இருவருக்கும் இரவு 10 மணிக்கு மேல் ஆகிவிடும். இதற்காக, இவரைப் பகல் வேளையில் பார்த்துக் கொள்ள, சென்னையில் இருக்கும் ஏராளமான முகவர்களில் ஒருவர் மூலம் வீட்டில் இருந்து கவனித்துக் கொள்ள ஒரு பெண்மணியை அமர்த்தியாயிற்று. இதற்கு ஒரு கணிசமான தொகை செலவாகுமென்பதை அறிவீர்களல்லவா?

சென்னையில் இப்போது பணம் பண்ண இன்னொரு சிறந்த வழியாம் இந்த மாதிரி ஏஜன்ஸி நடத்துவது! இதில், உங்களிடமிருந்தும் கமிஷன் வாங்குவார்கள், அவர்கள் அனுப்பி வைக்கும் அந்த நபரிடமும் கமிஷன் வாங்குகிறார்கள். இதற்கான தொகை கொஞ்சமல்ல - இரண்டு பக்கத்திலும் ஓரோர் மாத சம்பளம்! இத்தோடு போவதில்லை இந்த சமாசாரம். சரியாக இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழிந்ததும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி, நம் வீட்டில் வேலை செய்பவர் கழண்டு கொள்வார் - நீங்கள் மீண்டும் அதே அல்லது வேறே ஏஜண்டிடம் மாட்டிக்கொண்டு மீண்டும் கப்பம் கட்ட ஆரம்பிக்கவேண்டியது தான். இந்த விவகாரம் ஒரு திட்டத்தோடுதான் நடக்கிறது என்பதை இரண்டு மூன்று இடத்தில் என்னால் கவனித்து அனுமானிக்க முடிந்தது. இது ஆயாவேலைக்கு மட்டுமல்ல, எல்லாவிதமான வீட்டு வேலைக்கு ஏற்பாடு செய்யும் ஏஜன்ஸிகளிலும் நடக்கிறதாம்! மனசாட்சியாவது, மண்ணாங்கட்டியாவது, போங்க ஸார்!

Wednesday, August 12, 2009

மீனாவும் சங்கத்தமிழும்!

எனக்கு, ரவிகுமார் என்றொரு நண்பர். அவர் மணந்திருப்பது என் தமக்கையின் மகள் மீனாவை. மீனாவுக்குக் குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு பழக்கம். நாள் தோறும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன்னர், ஓளவையாரின் ‘பாலும் தெளி தேனும்’ என்ற பாடலைச் சொல்லிவிட்டுத் தூங்கச் செல்வாள்.பாடல் தெரியுமல்லவா உங்களுக்கு? முடிவில் ‘சங்கத்தமிழ் மூன்றும் தா’ என்று முடியுமல்லவா? அவர்கள் திருமணமாகிக் கொஞ்ச நாள் இதைப் பார்த்துக் கொண்டிருந்த ரவி, ஒரு நாள் கேட்டார், ‘ஆமாம் மீனா, நானும் தினமும் பார்க்கிறேன், இந்தப் பாடலைச் சொல்லிக்கொண்டிருக்கிறாயே, திடீரென்று ஒரு நாள் அந்த விநாயகனே நேரில் வந்து ‘இந்தாம்மா, நீ கேட்ட சங்கத்தமிழ்’ என்று மூன்று தமிழையும் கொடுத்துச் சென்றால், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வாய்?’ என்று! மீனா இன்னமும் முழித்துக்கொண்டிருக்கிறாள்!

Wednesday, July 15, 2009

உணர்ச்சிகள்!

நம்மில் எல்லாருக்குமே சொந்தங்களோ அல்லது நெருங்கியவர்களோ இருப்பார்கள் அல்லவா? அதிலும், (என்னைப்போலப்)பணியிலிருந்து சில வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு அனேகமாக தினமும் (ஏதாவது ஒரு) கவலைப்படாவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டது போலிருக்கும். ‘வெளியே சென்றவர்கள் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டுமே’ என்பதில் ஆரம்பித்து, போய்க்கொண்டே இருக்கும். ஆனால், இந்தக் கவலைகளை விடுங்கள், சில சமயம் சற்றே பெரிய (அதாவது அசல்) கவலைகள் கூட எங்களைப் போன்றவர்களுக்கு மட்டுந்தானா என்ற சந்தேகம் சமீபத்தில் ஏற்பட்டது எனக்கு. ஒன்றுமில்லை ஸ்வாமி, எனக்கு பேத்தி முறையில் ஒரு பெண், +2 வில் படித்துக்கொண்டிருப்பவளுக்குத் திடீரென அடிக்கடி மயக்கம் வந்து விழுந்துவிடுவதாகவும், பள்ளிக்குச் செல்வதை நிறுத்தியிருப்பதாகவும் செய்தி வந்தது. அவளின் பெற்றோருக்கு ஒரே மகளாகையால் (சற்று அதிகமாகவே) செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டவள். போதாதற்கு, அவள் தாத்தா, பாட்டியும் பக்கத்திலேயே வசித்ததால்,இன்னும் அதிகமாகச் சலுகைகள் கிடைத்தன. அவளின் பெற்றோர்கள் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாகையால் வீட்டில் சண்டை, சச்சரவுக்கும் குறைவேயில்லை!

இந்தப்பெண்ணை, ஏதேதோ டாக்டர்களிடம் காண்பித்ததில், பரிசோதனைகளில் உடம்பில் ஏதொரு குறையும் இல்லை என்றும், பெற்றோரின் அளவுக்கதிகமான செல்லமே அவளின் மன அழுத்ததிற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் சொல்லிவிட்டனர்.

என் அவதியைக் கேளுங்கள்! இந்த ‘அளவுக்கதிகமான செல்லம்’ பற்றி பல வருடங்களாகவே
நானும், குடும்பத்தில் இன்னும் சிலரும் கவலைப்பட்டதுண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் சொன்னதும் உண்டு. எனினும், இப்போது குழந்தை எப்படி இருக்கிறாள் என்று ஒரு தகவலும் இல்லையே என்று நானே தொலைபேசினால், வீட்டில் டிவி ஓடிக்கொண்டிருக்கிற சத்தத்தின் நடுவில், ’இப்போது பரவாயில்லை’ என்று ஒரே வார்த்தை பதில் கிடைக்கிறது! அவதி என்னவென்றால், கவலைப்படாமலும் இருக்க முடியவில்லை, நம் கவலைகளைப்பற்றிக் கவலைப்பட அடுத்த தலைமுறையினருக்கு நேரமுமில்லை என்பதுதான்.......

Tuesday, June 2, 2009

வங்கியில் ஒரு அனுபவம்!

என்னுடைய புலம்பல்களை இரண்டு வகைப்படுத்தலாம். (இரண்டுமே படுத்தல்தான் என்கிறீர்களா?!) தற்காலிகம் மற்றும் சிலகாலம் தொடர்வது என்று. ஒரு ஓய்வு பெற்ற மனிதனுக்கு அன்றாடம் புலம்ப ஏகப்பட்ட விஷயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு. என்னுடைய அண்மைக்காலப் புலம்பலை உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்வேன்?

ஐயா, என்னுடைய ஏடிஎம் அட்டைக்குப் படக்கூடாத இடத்தில் விரிசல் விழுந்ததால் அதனால் (என்னைப்போலவே) ஒரு பயனுமில்லை என்றாகிவிட்டது. உடனே ஒரு விண்ணப்பம் எழுதி, அதனுடன் பழுதான அட்டையையும் இணைத்து வங்கியில் கொடுத்துவிட்டேன். நல்லவேளையாக ஒரு நகலில் வங்கியில் அத்தாட்சியும் பெற்றுவிட்டேன். பதினைந்து நாட்களில் புதிய் அட்டை வந்துவிடும் என்று நம்பிக்கையூட்டினார்கள். இது நடந்து ஏறத்தாழ பத்து மாதங்களாகின்றன. நானும் விடாது கருப்பு என்பது போல வங்கிக்குப் படையெடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னை எப்போதும் ஒரு குறிப்பிட்ட அதிகாரியிடம் அனுப்புகிறார்கள்.அவரோ, எப்போதும் பிஸியோ பிஸி. காலை பத்து மணிக்குப் போனால் மதியம் வரச்சொல்லுவார். மதியம் போனால் சற்று இருங்கள் என்பார். ஓரு நாள் கேட்டேவிட்டார்: ”ஏன் ஸார், எப்போதும் பிஸி டைமிலேயே வருகிறீர்கள்?” என்று. எப்போது அவருக்கு சமயம் கிடைக்குமோ, எப்போது எனக்கு அட்டை கிடைக்குமோ, நானறியேன் பராபரமே!

குறிப்பு: நீங்கள் ஏன் வங்கி மேலாளரைப் பார்க்கவே இல்லை என்கிறீர்களா? எனக்கும் தோன்றாதா இந்த யோசனை? இவ்வளவு நாளில் ஒரு முறையாவது அவர் இருக்கையிலோ அல்லது வங்கியிலோ இருந்திருந்தால் விட்டிருப்பேனா அவரையும்?!

உபதேசம்!

ரொம்ப நாளாகிறது, எழுதி! உடன்பிறந்த சோம்பேறித்தனம் ஒரு முக்கியமான காரணம் என்பதுடன், தவிர்க்க முடியாத அலைச்சல்களும், (வயதானதினால் மட்டுமே வரும்) நிஷ்டூரமும் கூடுதலான, உண்மையான காரணங்கள் தான்.

ஒரு நல்ல பாடம் கிடைத்ததைப்பற்றி உங்களுக்குச் சொல்லவேண்டும்: சமீபத்தில், திருவள்ளுரிலிருந்து சென்னைக்குப் பேருந்தில் வந்து கிண்டியில் இறங்கினேன். அங்கிருந்து ஈக்காட்டுத்தாங்கல் செல்லவேண்டும். அதற்காக ஒரு ஆட்டோ பிடித்து, ரூ.70 கொடுத்து வந்தேன். இது போல ஒவ்வொருமுறை வரும்போதும், ஆட்டோ ஓட்டிகளிடம், ‘என்னப்பா, திருவள்ளுரிலிருந்து சென்னைக்கே பஸ்ஸில் ரூ.15 கட்டணம் செலுத்தி வந்திருக்கிறேன், நீ ரூ.70 கேட்கிறாயே?’ என்று புலம்புவேன். அவர்கள் எல்லோருமே ஒருவரைப் போல, ‘என்ன ஸார் செய்வது, பெட்ரோல் விலை ஏறிப்போச்சு, சவாரி கிடைப்பது கஷ்டம்’ என்று பதிலுக்குப் புலம்புவார்கள்!

ஆனால், இந்த முறை ஆட்டோ ஓட்டி வந்தவர், எனக்காகவே அனுப்பப்பட்டவர்! என் வழக்கமான புலம்பலைக்கேட்டதுமே போட்டார் ஒரு போடு! ‘ஏன் ஸார், திருவள்ளுரிலிருந்து பஸ்ஸில் உங்கள் ஒருவரை மட்டுமா ரூ.15க்குக் கூட்டிவந்தார்கள்? எத்தனை பேரோடு உங்களை அடைத்து வைத்துக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்?’ என்று!

அப்போது மூடிய என் வாய், இப்போதெல்லாம் ஆட்டோக்களில் திறப்பதேயில்லை!

Thursday, April 30, 2009

எல்லாப்புகழும் எனக்கே!

நமது இந்தியத் திருநாட்டில் தனியர்களாக நின்று வரலாறு படைத்தவர்கள் ஏராளம். அதே போல,ஒரு துறையில் இரட்டையர்களாக சாதித்தவர்களும் நிறைய உண்டு. கலைத்துறை, அதாவது திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், வடக்கே ஹன்ஸ்லால்-பகத்ராம், சங்கர்-ஜெய்கிஷன், லக்ஷ்மிகாந்த்-ப்யாரிலால் போன்ற பலர் கொடிகட்டிப் பறந்ததுண்டு. தமிழிலும் அப்படி ஜொலித்தவர்கள்தான் விஸ்வநாதன்-ராமமூர்த்தி.கடந்த 60 வருடங்களுக்கும் மேலாகவே தமிழ்த் திரை இசையின் தீவிர ரசிகன் என்கிற முறையில் எனக்கொரு வருத்தம் உண்டு. வடக்கில் இருந்தவர்களும் பிரிந்தார்கள் - நம்மவர்களும் பிரிந்தார்கள். இதில் வித்தியாசம் என்னவென்றால், அங்கிருந்தவர்கள் யாரும் (பிரிவுக்குப்பின்னர்) இருவரில் எல்லாப்பாட்டும் என்னால் மட்டுமே போடப்பட்டது என்று சொந்தம் கொண்டாடவில்லை. கடைசிவரை பட டைட்டில்களில் இருவர் பெயர்களும் போடப்பட்டன. ஆனால் இங்கோ, அந்தப் பெருந்தன்மை ஒருவருக்கில்லை! நான் போட்டேன், நானே போட்டேன் என்று சத்தியம் செய்யாத குறைதான்! இன்றும் எல்லா தொலைக்காட்சிகளிலும் அழுது, அரற்றிக் கொண்டு...கண்றாவி! வயலின் வித்தகரான மற்றவர் எல்லாப்பாட்டையும் இருவரும்தான் போட்டோம் என்று சொல்லிவந்தார் என்பது எனக்குத் தெரியும்.இதில் வேடிக்கை என்னவென்றால், யாருமே முன்னவரிடம், தாங்கள் பிரிந்துவந்தபிறகு ஏன் ஸார் ஒரு பாட்டைக் கூட ஒரு ‘எங்கே நிம்மதி” போலவோ, ஒரு ‘கேள்வி பிறந்தது அன்று’ போலவோ போடவில்லை என்று கேட்கவுமில்லை!

குறிப்பு: திரு.ராமமூர்த்திக்கு அண்மையில், சென்னையில் ஒரு விழா எடுத்துச் சிறப்பித்தார்கள் என்ற செய்தியின் விளைவு இந்தப் புலம்பல்! அவர்கள் இருவரும் பிரிந்து ஏறத்தாழ 43 நீண்ட வருடங்களுக்குப் பின் அவரை மக்கள் இப்போதுதான் கண்டு கொண்டிருக்கிறார்கள்!

Sunday, April 26, 2009

இருக்கட்டுமே!

இன்று வந்துள்ள ஓர் செய்தி:

அகண்ட வலையில், சுமாராக 33 மில்லியன் (மூன்று கோடியே முப்பது லட்சம்!) வலைப் பூக்கள் பதிக்கப்படுகின்றனவாம். இவற்றில் பெரும்பான்மையானவற்றிற்கு ஒரே ஒரு வாசகர் மட்டுமே இருக்கிறாராம் - அதாவது அதை எழுதியவர் மட்டுமே படிக்கிறாராம்!
இருக்கட்டுமே. நான் எழுதுவது என் ஆத்ம திருப்திக்காக மட்டுமே. அவற்றை மற்றவர்கள் படிப்பதும் படிக்காததும் அவரவர் இஷ்டம் - அவரவர் அதிர்ஷ்டம்! நம் கடன் பணி செய்து கிடப்பதே என்று வலையைத் தீந்தமிழால் நிரப்புவோம் வாருங்கள், நண்பர்களே!