Monday, June 25, 2012

நன்றி, ஆனந்த (திருச்சி) விகடன்!

இந்த வாரம் (27.06.2012) வெளிவந்திருக்கும் ஆனந்தவிகடன் இதழின் இலவச இணைப்பான ‘திருச்சி விகடனில்’ வலையோசை என்ற தலைப்பில் இந்த ’விட்டு விடுதலையாகி நிற்பாய்!’ எனும் என்னுடைய வலைப்பூவிலிருந்து சில பகுதிகளை அழகான லே-அவுட்டில் வெளியிட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

குறையென்றும் ஒன்று இருக்கத்தானே செய்யும்?! இற்றைய பதிவுகளில் நாம் ரசித்துக் கொண்டிருக்கும் காலத்தால் அழியாத பழந்தமிழ்த் திரைப்பாடல்களைப் பற்றி அவர்கள் கண்டுகொள்ள வில்லை - நிச்சயமாக அதற்கு ஏதாவது சரியான காரணம் இருக்கும். எனவே, மீண்டும் என் நன்றிகள், திருச்சி விகடனுக்கு!

Tuesday, June 12, 2012

சரச ராணி, கல்யாணி!

     எம்ஜிஆரும் பானுமதியும், பத்மினியும் இணந்து நடித்த ’மதுரைவீரன்’ எனும் தமிழக நாடோடிக் கதை ஒரு மகத்தான வெற்றிப் படமாக உருவாகி ஓடியதல்லவா? மதுரைவீரன் படத் தயாரிப்பாளரான லெட்சுமணன் என்கிற ‘லேனா’ செட்டியார், உடனேயே இன்னொரு நாடோடிக் கதையான ‘தேசிங்கு ராஜா’வை, அதே வெற்றிக் கூட்டணியோடு தயாரிப்பதாக முடிவு செய்து, முதன் முதலில் ஜி.ராமநாதன் இசையில் இரண்டு டூயட் பாடல்களை மட்டும் பதிவுசெய்து வெளியிட்டார். அந்தக் காலத்திய 78 RPM - அரக்கு ரெகார்டாக வெளிவந்த அந்த இரு பாடல்களில் ஒன்றை சீர்காழி-ஜிக்கியும், இன்று நாம் ரசிக்கவிருக்கும் மற்றொன்றை சி.எஸ்.ஜெயராமனும் பானுமதியும் பாடியிருந்தார்கள்.

     ‘லேனா’ செட்டியார் ஒரு பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட பைனான்ஷியர். இந்தத் துறையில் பெருமதிப்போடு வாழ்ந்தவர்.  எம்ஜிஆரின் சொந்த விருப்பு, வெறுப்புகளால் ’ராஜா தேசிங்கு’ படம் தயாரிப்பினை நீண்ட நாட்கள் இழுத்ததனால், லேனா நொந்து நூலாகி திரும்பவும் எழுந்திருக்க முடியாதபடி திரைத்துறையை விட்டே ஒதுங்கிப் போனார். (இந்த மாதிரியாக எம்ஜிஆரால் ஒதுக்கப் பட்டவர்கள் லிஸ்டில் சந்திரபாபு, அசோகன், கடைசியாக ஏ.பி நாகராஜன் போன்ற நமக்குத் தெரிந்த/தெரியாதவர்கள் பலருண்டு!)

      நமது இன்றைய பாட்டான ‘சரசராணி கல்யாணி’ யை உடுமலை நாராயண கவி எழுத, ‘சுரடி’ எனும் ராகத்தில் அமைத்திருக்கிறார், ராம்நாதன். கர்நாடக சங்கீதத்தில் இந்த ராகத்தில் பல பாடல்கள் இருப்பினும், நடனத்திற்கான விரக தாபத்தை வெளிப்படுத்தும் பாடல்களே அநேகம். பாட்டு முழுவதும் ராமநாதனின் ஹார்மோனியம் பாடகர்களைத் தொடர்ந்துவருவதையும், இன்று அருகிவரும் ’மோர்சிங்’ வாத்தியம் (’ட்ஜொய்ங், ட்ஜொய்ங்’ என்று தாளத்தோடு ஒலிக்கிறதே, அதையும்) கவனியுங்கள். தொடக்கத்திலிருந்து ஒரே சீரான, நிதானமான மெட்டும், அதை அருமையாகப் பாடியிருக்கும் ஜெயராமன், பானுமதி குரல்களும்........அமைதியான சூழ்நிலையில் ரசித்துக்கேட்கவேண்டிய பாட்டு, இதோ உங்களுக்காக:



Monday, May 28, 2012

மகாதேவன் எனும் ஜீனியஸ்!

     கர்நாடக சங்கீதத்திலே திரை இசையைப் போலவே எளிதாக மனதைக் கவரும் ராகங்கள் பல உண்டு. சிந்து பைரவி என்ற ராகத்தை எடுத்துக் கொண்டால் நினைவுக்கு வரும் திரைப்பாடல்கள்:  ’என்னை யாரென்று’ (பாலும் பழமும்); ’செண்பகமே’ (எங்க ஊர்ப் பாட்டுக்காரன்) போன்ற ஏராளமான பாடல்கள்! ஆபேரி என்று இன்னொரு ராகம்: ’நகுமோ’ (படையப்பா); ‘ஏரிக்கரையின் மேலே’ (முதலாளி) இன்னபிற பாடல்கள்! நாம் இன்று ரசிக்கப் போகும் பாடலோ, அத்தகைய சாருகேசி என்ற அற்புதமான ராகத்தில் அமைந்துள்ள மெட்டு.

     அநேகமாக எல்லா கர்நாடக சங்கீத ராகங்களிலும் கடவுளரைப் பற்றிய பலவித உணர்ச்சிகளே மிஞ்சியிருக்கும். நாட்டியத்தில் இடம்பெறும், சிருங்காரம் போன்ற உணர்ச்சிகளைப் பெரும்பாலும் இந்த சாருகேசி ராகத்தில் பாட்டு, மெட்டாக அமைத்திருப்பார்கள்.  இந்த அடிப்படை உணர்ச்சிகளை எடுத்துக் காட்டும் லக்ஷணங்களை உள்ளடக்கியது சாருகேசி ராகம். (சீர்காழி கோவிந்தராஜன் திரையில் பாடிய முதல் பாடலான ‘சிரிப்புத் தான் வருகுதையா’ (கல்கி எழுதிய பொய் மான் கரடு நாவலின் திரைவடிவமான ‘பொன்வயல்’ திரைப்படத்தில் வந்தது.) இதே ராகந்தான். இந்தப் பாடலை சீர்காழி ஒரு கச்சேரியில் பாடுவதுபோலத் திரையில் வரும்!) இன்னும் ‘தூது, செல்வதாரடி’ (சிங்காரவேலன்), வசந்தமுல்லை போலே வந்து (சாரங்கதரா), ’தூங்காத கண்ணென்று ஒன்று’ (குங்குமம்) என்ற மிகச் சிறந்த பாடல்கள் எல்லாம் சும்மா ஒரு சாம்பிள் தான்!

     இன்றைய நமது பாடலின் மெட்டு, கே.வி.மகாதேவனால் உருவாக்கப் பட்ட  அருமையான, இனிமையான, சுகமான ஒன்று. 1962ல் வெளிவந்த ‘நீங்காத நினைவு’ படத்திற்காக சுசீலா பாடி மயக்குகிறார். காதலைச் சொல்லுகின்ற ஒரு ராகத்தை, காதலின் சோகத்தைக் குறிக்க மெட்டாக்கிய மகாதேவனின் ஜீனியஸுக்கு இந்தப் பாடல் இன்னுமொரு சான்று.  வயலின்களும், குழல், கிடார், ஸிதார், ட்ரெம்பெட் (Muted - ஒரு அடைப்பானை ட்ரெம்பெட்டின் முகப்பில் பொருத்தி, அதன் ஒலியைப் பெருமளவு குறைத்து விடுவது) இவைகளுடன், பாட்டின் பல்லவிக்கு டேப் எனும் தாளவாத்தியத்தையும், சரணங்களுக்கு தபலாவின் கொஞ்சலையும் உபயோகித்து அசத்துகிறார், கே.வி.எம்.! இதோ, சுசீலாவும் நீங்களும்:




Friday, May 25, 2012

உன் மடியில் நானுறங்க,......



      தமிழ் நாடக வரலாறு என்பது, மிகவும் குறுகிய காலத்தில் நிகழ்ந்து, இன்று ஏறத்தாழ அழியும் நிலையினை அடைந்திருக்கிறது. தெருக்கூத்து வடிவிலிருந்து நாடக வடிவம் பெற்றதற்கு முக்கிய காரணகர்த்தா, சங்கரதாஸ் சுவாமிகள் எனும் துறவி. பல புராணக் கதைகளை நாடகமாக்கி ஒரு பெரும் புரட்சியை நடத்திக் காட்டினார். ( இவருடைய நாடகமொன்றில் பாடப் பெற்ற ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ பாடல், முதலில் இசைத்தட்டாகவும், பின்னர் திரைப்படத்திலும் கே. பி. சுந்தராம்பாள் மூலம் பிரபலமடைந்தது. சுவாமிகளின் நாடகத்தையும் நீங்கள் சாம்பிள் பார்த்திருக்கிறீர்கள். ஏ.பி.நாகராஜனின் ‘நவராத்திரி’ படத்தில், சிவாஜியும், சாவித்திரியும் அதிஅற்புதமாக நடித்து ஒரு தெருக்கூத்து வருமே, நினைவிருக்கிறதா? அது நாடகத்தந்தை எனப்படும் சங்கரதாஸ் சுவாமிகளுடைய படைப்புத்தான்!) அவருக்குப் பின்னர், பல பாய்ஸ் நாடகக் கம்பெனிகள், (நவாப் ராஜமாணிக்கம், கன்னையாபிள்ளை, டி.கே.எஸ் சகோதரர்கள், சக்தி கிருஷ்ணஸ்வாமி, என்.எஸ்.கிருஷ்ணன்) என்று உருவாகி, தமிழ்த் திரையுலகிற்கு ஏராளமான, அற்புதமான நடிகர்களை வழங்கின.

      இந்த வரிசையில், 1950/60களில், சேவாஸ்டேஜ் என்ற நாடகக் கம்பெனியை, நடிகர் எஸ்.வி.சகஸ்ரநாமம் நடத்திவந்தார். இவர் நடத்திய நாடகங்களில் பல, பின்னர் திரைப்படங்களாக உருவாகி வெற்றிபெற்றன. இவற்றில் ஒன்றான ‘நாலுவேலி நிலம்’ என்ற திரைப்படத்திலிருந்து ஒரு அருமையான நாட்டுப் புற மெட்டை திருச்சி லோகநாதனும், எல்.ஆர்.ஈஸ்வரியும், கே.வி.மகாதேவன் இசையில் பாடுகிறார்கள்.  பாடலை, கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

      கே.வி.மகாதேவன், தன்னுடைய வழக்கமான பாணியிலிருந்து சற்று விலகி, இந்தப் பாட்டில் தாளத்திற்கு ‘டேப்’ வாத்தியத்தையும், பியானோவையும் உபயோகித்திருக்கிறார்! சுருதி சுத்தமான, துல்லியமான இரு குரல்களின் இன்னிசை, இனி உங்களுக்கு:




Sunday, May 20, 2012

ஒரு நவீன நாட்டுப் புறப் பாடல்!

     'கவலையில்லாத மனிதன்’ திரைப்படம், 1960ல் வெளிவந்தது. கவிஞர் கண்ணதாசனின் சொந்தத் தயாரிப்பான இப்படத்திற்கு மெல்லிசைமன்னர்கள் இசையமைத்திருந்தனர்.

     இதில் ராஜசுலோசனா, எம்.ஆர்.ராதாவைக் காதலித்துக் கைவிடப்பட்ட பெண்ணாக வருவார். இவர்களின் காதலை வெளியிடும் பாடலாக வருவதுதான் நமது இன்றைய ரசனைக்கான பாடல்! படகில் போய்க்கொண்டே பாடும் பாடல் என்பதை, படத்தைப் பார்க்காமல், பாடலைக் கேட்டாலே விளங்கிக் கொள்ளும்படியான ஒரு அழகான மெட்டு, துணைக்கு பல ஆண்கள், பெண்களின் குரல்கள், இவற்றோடு, குழலும், வயலின்களும், டபிள் பேஸும் சேர்ந்து உங்களை மறக்கச் செய்யும்! இந்தக் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடலைக் கேட்கும் போது, பின்னாளில், ’ஆண்டவன் கட்டளை’ படத்தில் சிவாஜியும், தேவிகாவும் படகில் பாடி நடிக்கும் (படத்தில் இரண்டு முறை வரும்) ‘அமைதியான நதியினிலே ஓடம்’ பாட்டு நினைவுக்கு வருகிறதல்லவா?!

     பாடலும் மெட்டும் என்னவோ ஒரு நாட்டுப்புறப் பாடலைப் போல உணர்வு கொடுத்தாலும், இசைக் கோர்ப்பினால் ஒரு மாடர்ன் பாடலாக ஒலிக்கும் ‘காட்டில் மரம் உறங்கும்’ பாடல், ஜமுனாராணியின் தங்கக் குரலில் இதோ,

Friday, May 18, 2012

கண்ணன் மனநிலை!

          ’தெய்வத்தின் தெய்வம்’ என்ற திரைப்படம், 1962ல் வெளிவந்தது. கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி, எம்.ஆர். ராதா நடித்திருந்தனர். படத்தின் இசையை மாமேதை ஜி.ராமநாதன் அமைத்திருந்தார். ஆனால், அதுபோது அவர் நோய்வாய்ப் பட்ட காரணத்தினால், பாடல்களின் மெட்டை மட்டுமே அவர் உருவாக்க, இசைக்கோர்ப்பு முதலியவை வேறொருவரால் செய்யப்பட்டு ஒலிப் பதிவானது. (’கப்பலோட்டிய தமிழன்’ படத்திலும் ஜி.ஆர். இசையில் வரும் ‘காற்றுவெளியிடை கண்ணம்மா’ என்ற பாடலும் அவ்வாறே ஒலிப்பதிவானது!)

          இந்த ‘தெய்வத்தின் தெய்வம்’ படத்தில் தான் பிரமீளா என்ற நடிகை (அரங்கேற்றம், தங்கப்பதக்கம்) அறிமுகமானார். நமது இன்றைய பாடலுக்கும் திரையில் அவர்தான் நடனமாடினார்.

          ஒரு நல்ல மனதை உருக்கும் மெட்டுக்கு, அளவுக்கதிகமான அலங்காரங்கள் தேவையில்லை என்பது இந்தப் பாடலின் மூலம் உங்களுக்குத் தெரியவரும். மகாகவி பாரதியின் பாடலுக்கு, ‘ராகமாலிகை’ எனப்படும் முறையில் (ஒரே பாடலில் இரண்டுக்கும் மேற்பட்ட ராகங்கள் இருந்தால் அது ’ராகமாலிகை’ எனப்படும். உதாரணம்: திருவிளையாடல் படத்தில் வரும் ‘ஒரு நாள் போதுமா பாடல்) அமைந்திருக்கும் இன்றைய பாடலில் மெயின் ராகம் ‘பீம்ப்ளாஸ்’ என்றழைக்கப்படும் வட இந்திய இசையைச் சேர்ந்த ராகம். இரண்டாவது சரணத்தில் ராகம் மாறுகிறது - பாடலின் இனிமை கூடுகிறது! அது மட்டுமா? முழுப் பாடலுக்கும் வீணை, மிருதங்கம், தபலா - மற்றும் இரண்டே இடங்களில் குழலும் ஷெனாயும் வருகின்றன. பாடல் முழுவதிலும், முக்கியமாக இறுதிப் பகுதியில் வரும் மிருதங்கத்தின் சுநாதம், கேட்கக் கேட்க இனிமை!

           எஸ்.ஜானகியின் குரல் ஆரம்பகாலகட்டத்தில் எப்படி இருந்தது, கேட்டீர்களா? இந்தக் கீச்சுக் குரலினாலேயே தமிழில் சில பாடல்களையே பாடினார், அவர்!

           இதோ, பாரதியின் ‘கண்ணன் மனநிலையை’ என்ற அருமையான பாடல், உங்களுக்காக:



       


Wednesday, May 16, 2012

நான் நன்றி சொல்வேன்.....!





நன்றி, நண்பர்களே!

 இது, தமிழ்த் திரையிசை பாடலைத் தாங்கிவரும் என்னுடைய ஐம்பதாவது பதிவு.

இந்தப் பதிவுகளின் மூலம் எனக்கு இரண்டு பெரிய பலன்கள்! என்னுடைய ரசிகத்தன்மை மேம்பட்டது என்பதோடு, முக்கியமாக வலைத்தளத்தில் நிறைய நண்பர்களிடம் என்னை அடையாளம் காட்டியிருக்கிறது! மீண்டும் நன்றி!!

இன்றைய பாடல், வெளிவந்த நாளிலிருந்து என்னுடைய ’பேஃவரைட்’ இந்த ‘வெண்ணிலாவும் வானும் போலே’ என்ற பாரதிதாசனின் பாடல், 1954ல் வெளிவந்த ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. பி.ஆர்.பந்துலு தயாரித்த இந்தப் படத்துக்கு, இயக்குனர் பி.நீலகண்டன்.சிவாஜி, பத்மினி, ராகினி, டி.ஆர்.ராமச்சந்திரன் நடிக்க,  டி.ஜி.லிங்கப்பா இசையமைத்திருந்தார். .(இவருடைய இயற்பெயர், பார்த்தசாரதி! இந்தப் பெயரில் இசையமைக்க விருப்பப் படாததால், பந்துலு, தனது தாய்மொழியான கன்னடதேசப் பெயரான ‘லிங்கப்பா’ என்று மாற்றினாராம்.) ஆனால், நமது இன்றையப் பாடலுக்கு லிங்கப்பா இசையமைக்கவில்லை! அந்தத திரைப்படத்தில் இந்த ஒரு பாடலுக்கு மட்டும் தண்டபாணி தேசிகர் என்ற கர்நாடக சங்கீத விற்பன்னர் இசையமைத்திருக்கிறார். (பந்துலுவின் ‘முதல் தேதி’ படத்திலும் தேசிகர், ஒரு பாடலுக்கு இசையமைத்திருந்தார்!)  இன்றைய நமது பாடலை ராதா (ஜெயலக்ஷ்மி) பாடியிருக்கிறார். அருமையான மெட்டு, பாரம்பரிய இசை கேட்டு ரசிக்க வாருங்கள்!