Friday, October 14, 2011

தாலாட்டும் தியாகராஜபாகவதரும்!

மனிதர்கள் தங்களுடைய எந்த வயதிலும் தயங்காமல், சலிக்காமல் அன்பு செலுத்துவது, தங்கள் அன்னையிடம்! அதைப் போலவே, எந்த வயதிலும் ரசிக்ககூடியது தாலாட்டை! இரண்டும் நினைக்கவே இனிப்பவை.

நமது திரைப் படங்களில் (இப்போது புறந்தள்ளப் பட்டு வழக்கொழிந்து வரும்) தாலாட்டுப் பாடலை,(’மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்’ போல) வெறும் தாலாட்டாக மட்டும் உபயோகித்திருப்பது மிகவும் அரிது. பெரும்பான்மையான தாலாட்டுகள், நீங்கள் ஏற்கனவே ரசித்த ‘தென்றல் வந்து வீசாதோ’ போல, அல்லது வரப்போகும் இன்றைய பாடல் போல சோகம் கலந்ததாகவே காணப்படுகின்றன. இது தற்செயலா அல்லது வேண்டுமென்றே கடைப்பிடிக்கப் படுகிறதா யானறியேன்!

அதே போல, பெரும்பாலான திரைத் தாலாட்டுகளும், (இந்தப் பாடல் உட்பட) ‘வால்ட்ஸ்’ (Waltz) என்ற ஆங்கிலேய நடனத்தின் தாளத்தையே ஒட்டி இருக்கின்றன. (இந்தத் தாளம் (டுண், டக்டக்) என்று தொடரும் ’ஒன்றில் மூன்று’ தாளம்).

நண்பர்களே, இன்றும், வரும் சில பதிவுகளிலும் சில சுகமான தாலாட்டுப் பாடல்களை நீங்கள் கேட்கவிருக்கிறீர்கள். 1940 – 70க்கு இடைப் பட்ட முப்பது ஆண்டுகளில், தாலாட்டின் கோர்விசையமைப்பில் எத்தனை மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் உயர்ந்த ரசனைக்கென்றே உருவாக்கப் பட்டவை என்பது (இவற்றைக் கேட்கும்போது) உங்களுக்கு விளங்கும்.

இந்தப் பதிவுகளில் (கூடிய மட்டிலும்) வேறு வேறு வித்தியாசமான குரல்களில் பாடல்களை ரசித்து வருகிறோம், அல்லவா? இன்றைய பாடகரின் குரலோ, சாதாரணமான குரல்களிலிடமிருந்து மிகவும் வேறுபட்டது. இவருடைய குரலைப் போல, இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி யாருக்கும் அமையவில்லை. அவ்வளவு தனித்தன்மை கொண்ட அற்புதமான, இதமான, சுகமான குரல்,இது!

இவருக்கு மட்டுமில்லை, நமது சமகாலத்தில் கோலோச்சிய டி.எம். செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கம்பீரமான ஆண் குரல்களைக் கொண்டவர்களுக்கு ஈடாகவும் இன்று வரை வேறு குரல்கள் கிடைக்க வில்லையே! கிடைக்கவில்லையா, அல்லது இன்றைய இசையமைப்பாளர்கள் வர விடுவதில்லையா என்பது விவாதத்துக்குறியது! (மற்றொன்று, டி.எம்.எஸ், என்றவுடன் நினைவுக்கு வருவது, அவர் பாடியவற்றிலேயே உன்னதமான தாலாட்டான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற ‘பாகப் பிரிவினை’ பாடல்!சரிதானே?)

சரி, இதோ, இன்றைய பாடலைப் பாட வருகிறார், தமிழ்த் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவருடைய குரலில் ஒலிக்கும் மணி ஓசையைப் போன்ற ஒரு மயக்கும் ரீங்காரம் அடடா, அதைக் கேட்டுத்தான் ரசிக்க வேண்டுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க நிச்சயம் முடியாது.

இன்றைய அவருடைய பாடல், (1940களில் வெளி வந்த) ‘அசோக்குமார்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. இசையமைத்தவர் பாகவதரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.

படத்தில், இளவரசனான நாயகன் ஏழையாகி, அவனுக்குக் கண் பார்வையும் போய்விடுகிறது. அப்போது தன்னுடைய குழந்தையைத் தூளியில் போட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார். பாடலில் பியானோ முக்கிய இடம் வகிக்கிறது. தாளமோ பாடல் முழுவதையும் ஒரே கதியில் தொடருகிறது. இருப்பினும், எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, பாகவதரின் மற்ற பாடல்களைப் போல, இதிலும் அவரின் குரலுக்கும், மெட்டுக்கும் தான் முதலிடம். பாடலைக் கேளுங்கள்:

Unnaiye anbudan by Krishnamurthy80

மீண்டும் சந்திக்கும் முன்னர்: சென்ற பதிவில் இணைத்திருந்த (யாரடி வந்தார்’) பாடலின் நல்ல ஒலிப்பதிவு இப்போது கிடைத்தது. மாற்றியிருக்கிறேன். அனுபவியுங்கள் நண்பர்களே, அடுத்த பதிவில் சந்திக்கும் வரை!

Sunday, October 9, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிநான்கு)

சென்ற பதிவில், மூன்று அருமையான, அமைதியான பாடல்களைக் கேட்டீர்கள். இன்று கொஞ்சம் ஆர்ப்பாட்டமான பாடல் ஒன்று கேட்கலாமே!

டூயட்டுகள் என்றால் இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் பாடுவது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் இன்று இங்கே கேட்கவிருக்கும் பாடலில் ஒரு தபலா, நமது எல்.ஆர்.ஈஸ்வரியுடன் டூயட் பாடப் போகிறது!

கவிஞர் கண்ணதாசனிடம் ஒரு நல்ல பழக்கம். தனது சொந்தப் படங்களின் இசைக்கு, மெல்லிசை மன்னர்களையும், திரை இசைத் திலகத்தையும் மாற்றி மாற்றி உபயோகப் படுத்திக் கொள்வார். அவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த) ‘வானம்பாடி’ படத்துக்குப் பின்னவரின் இசை. இந்தப் படத்தில், ‘கங்கைக் கரைத் தோட்டம்’ (சுசீலா), ’கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ (டி.எம்.எஸ்) என்ற பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. அதே படத்தில் தான், ஒரு கணிகை மனையில் (ஜோதிலக்ஷ்மி) நமது இன்றைய பாடலைப் பாடி ஆடுவதாக வருகிறது.

தாளத்திற்கும், தாளத்தினாலும் பெயர் பெற்றவர், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேனே, அதை உறுதிப் படுத்த இந்தப் பாடலைவிடப் பொருத்தமானது வேறில்லை!

இந்தப் பாடலில் இனம் பிரிக்க முடியாத அளவு ஈஸ்வரியின் குரலும், தபலாவும் ஒன்றிக் கிடக்கின்றன! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இரண்டின் கூட்டும் அவ்வளவு இனிமை! இதைத் தவிர (கணிகை மனைக்கே உரிய ஹார்மோனியமும், ஸாரங்கி எனும் வடநாட்டு (வயலின் போன்ற) வாத்தியமும், மணிகளின் ஒலியும், குழலின் துணையும் இசைக்கு இசை சேர்க்கின்றன! இந்தப் பாடலையும் திரையரங்கில் கேட்பது மிக இனிமையான அனுபவம்! இப்போதும் எண்ணி எண்ணி இன்புறுகிறேன்!

இதற்கு மேலும் உங்களுக்கும், இந்த டூயட்டுக்கும் இடையில் நான் நிற்பதை விட, நீங்களே இதோ பாடலைக் கேட்டு அனுபவியுங்களேன்!

Yaaradi vandhar LRE.mp3 by Krishnamurthy80

மற்றொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Wednesday, October 5, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிமூன்று)


சென்ற பதிவில் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட பாடகி ஜிக்கியைப் பற்றி இங்கே கொஞ்சம் பேசுவோமா? அவர் பாடிய மூன்று இனிமையான பாடல்களை இன்று கேட்கப் போகிறீர்களே!

இவருடைய இயற் பெயர், பி.ஜி.கிருஷ்ணவேணி என்றிருந்தாலும், ஜிக்கி என்று சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்! ஜிக்கி, தன்னுடைய மிக இளம் வயதிலேயே திரை இசைத்துறையில் கால் பதித்துவிட்டார்.

இதைக் கேளுங்கள்: ’ஞான சௌந்தரி’ என்ற ஒரு செவிவழிக் கதையை இரண்டு பிரபல நிறுவனத்தவர்கள் படங்களாக (ஏறத்தாழ சமகாலத்தில்) எடுத்து வெளியிட்டனர். அவற்றில், புகழ் மிக்க ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு படுதோல்வியடைந்தது! ஸிடாடெல் ஸ்டுடியோஸ் ஜோஸப் தளியத் (ஜூனியர்) (இவர் தான் பின்னாளில் ஜெய்சங்கரை அறிமுகம் செய்தவர்). தயாரித்து, இயக்கி, டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்து, எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்திருந்த படமோ பிய்த்துக் கொண்டு ஓடியது! இதற்கு ஒரு காரணம், கிறித்துவ மத கோட்பாடுகளைத் தெளிவாகப் படத்தில் காட்டியிருந்தது. இன்னொரு மிக முக்கியமான காரணம்: படத்தின் இசை! இந்தப் படத்தில், பாடகி பி.ஏ.பெரியநாயகி பாடியிருந்த ’ஜீவிய பாக்கியமே’, வெட்டுண்ட கைகள்’ என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்! இப்போது வேண்டுமானால் கூட, சென்ற தலைமுறையைச் சேர்ந்த கிறித்துவ நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள்! ‘ஞானசெளந்தரி’ என்ற உடனே அவர்கள்,

’அருள் தாரும், தேவமாதாவே,

ஆதியே இன்ப ஜோதியே’ என்று

பாடவே ஆரம்பித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்! அவ்வளவு தூரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்தப் பாடல், ’ஞான செளந்தரி’ படத்தில், சிறுமி ஞானம், மங்கையாகுவதைப் பாட்டில் காட்டிடும் காட்சியில் வருகிறது. அதில், மங்கைக்காக பி.ஏ.பியும், சிறுமிக்கான போர்ஷனை இளம் ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள்! திரை இசைத் துறையில் ஜிக்கியின் முதல் பாடல் இது! எஸ்.வி. வெங்கடராமன் என்கிற மோதிரக் கையால் இப்படிக் குட்டுப் பட்ட ஜிக்கி, பின்னாளில் எவ்வளவு புகழ் பெற்றார் என்பது உங்களுக்கே தெரியும்.

(அப்போது புகழின் உச்சியில் இருந்த குமாரி கமலா எனும் பிரபல பரத மற்றும் திரை நாட்டிய தாரகையை ஒரு பாடல் பாட வைக்க வேண்டுமென்று ‘ப்ரஷர்’ வந்தபோது, அவரின் குரல் ’மைக்’குக்கு ஏற்றதில்லை என்று நிராகரித்த தைரியக்காரர், இந்த எஸ்.வி.வி!) அவருடைய இசையமைப்பில் அற்புதமான சில பாடல்களைப் (இன்று நாம் கேட்கவிருக்கும் மூன்று பாடல்கள் உட்பட) பாடியுள்ளார், ஜிக்கி.

ஜிக்கி க்கும் (டி.கே.பகவதியைப் போல) அருமையான, மென்மையான குரல். ஆனால் இவர் அந்தக் காலத்திலேயே (பிற்கால எல்.ஆர்.ஈஸ்வரியைப் போல) தனது திறமையினால் குரலில் ஜாலங்கள் செய்து பல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார். நிறைய ‘க்ளப் டான்ஸ்’,காமெடிப் பாடல்கள் பாடினார். சுசீலாவுக்கு இணையாகப் புகழும் சேர்த்தார். திரை வாழ்வில் பாடகர் ஏ.எம். ராஜாவோடு பல இனிமையான டூயட்களைப் பாடியவர், பின்னர் அவரையே மணந்து, நிஜமான இல்வாழ்வில் நிம்மதியின்றி மறைந்தார் என்பது ஒரு மகா சோகம்!

இன்று நாம் கேட்கவிருக்கும் ஜிக்கியின் முதல் பாடல், ‘கண்கள்’ என்ற திரைப்படத்தில் வந்தது. (இது, நடிகர் ஸஹஸ்ரநாமத்தின் ‘ஸேவாஸ்டேஜ்’ நாடகக் குழுவினரால் நாடகமாக வெற்றி பெற்ற கதை. இதே குழுவினரோடு, இந்த நாடகத்தில் சிவாஜியும் நடித்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தவிரவும், தேவிகா என்கிற பிரமீளாவும் இந்தக் குழுவில்தான் நடிப்புப் பயிற்சி பெற்றார் என்கிற உப தகவலையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்!)

’கண்கள்’ படத்தின் பாடல்களை பலர் எழுதியிருப்பதால், இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. சுத்தமான கர்நாடக சங்கீத ராகமான ‘கல்யாணி’யில் அமைந்திருக்கிறது, இப்பாடல், (இதே ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்: மன்னர்களின் ‘தங்கப் பதுமை’யில் ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’, எம்.எஸ்.வியின் ’தவப்புதல்வனி’ல் ’இசை கேட்டால் புவி அசைந்தாடும்’ மற்றும் பலப்பல! இளையராஜா இந்த ராகத்தில் ஏகப்பட்ட பாடல்களைப் போட்டு, கல்யாணியை, உண்டு, இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார்! அவற்றில் ஒன்று, ‘சிந்துபைரவி’யில் யேசுதாஸ் பாடும் ‘கலைவாணியே’). இன்றைய பாடலுக்கு வருவோம்.

’காதலாகி, கண்ணீரும் மல்கி’ என்ற தொகையறாவோடு,

‘ஆடிப் பாடி தினம்

தேடினாலும் அவன் பாதம் காணமுடியாது’ என்று

ஆரம்பிக்கும் பாடல், கடைசியில், ஜிக்கியின் குரல் உச்சத்திற்குப் போய்,

‘கற்புள்ள மாதர்கள், காக்கும் உழவர்கள்,

கருத்தினில் வாழ்கிறான் கடவுள் – என்றறியாமல் (ஆடிப் பாடி)’ என்று

பாடலை முடிக்கும்போது, மெய் சிலிர்க்கிறது! ஜிக்கியின் குரலையும், பாடலின் கோர்விசையையும் ஊன்றிக் கேட்கும்போது, உங்களுக்கும் நிச்சயம் சிலிர்க்கும்! பாடல் இதோ:

Aadip paadi dhinam by Krishnamurthy80

அடுத்த இரு பாடல்களும், ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு நடித்த ‘மாமன் மகள்’ என்ற படத்திலிருந்து வருகிறது. (இந்தப் படத்தில் சந்திரபாபுவும் டி.எஸ்.துரைராஜ் என்கிற காமெடியனும் பாடிய ‘கோவா மாம்பழமே’ என்னும் பாடல் இன்று கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது!)

இதில் வரும் முதல் பாடலில், காதலைக் கொண்டாடிக் காதலி பாடுகிறாள், ‘ஏனென்று நீ சொல்லு தென்றலே’ என்று. மற்றது, தன்னுடைய அதே காதல் முறிந்துவிடுமோ என்கிற ஆதங்கத்தில் பாடும், ‘ஆசை நிலா சென்றதே’ என்ற சோக கீதம்!

இரண்டு பாடல்களிலும் குரலும், மெட்டும், உணர்ச்சிகளும் எப்படித் கொப்பளிக்கின்றன, பாருங்கள்! அதற்கு, வாத்தியங்கள் தான் எவ்வளவு அனுசரணை! இரண்டு பாடல்களிலும் வயலின்களும், சோகப்பாட்டில் ஷெனாயும் (நாதஸ்வரத்தின் தம்பி போல அதன் அரை அளவில் இருக்கும் காற்று வாத்தியம் இது! நாம் திரையில் சோகத்துக்கும், வடநாட்டில் நிஜத் திருமணத்திற்கும் உபயோகிக்கப்படுத்துவது!) அருமை, அருமை! முக்கியமாக, இரண்டு பாடல்களிலும், தபலா, டோலக் கின் அழுத்தமான வாசிப்புதான் பாடல்களின் ஜீவன் என்பது மறுக்க முடியாத உண்மை யல்லவா?!

மூன்று பாடல்களும் தனித்தனியே அனுபவிக்கப் பட வேண்டியவை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இங்கே இணை சேர்க்கப் பட்டுள்ளன. பொறுத்தருளுங்கள்!

பாடல்கள் இதோ:

Yean endru Nee sollu by Krishnamurthy80


Aasai Nila sendradhe by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Sunday, October 2, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பனிரெண்டு)


ஒரு சுகமான, மிகப்பழைய டூயட், உங்கள் ரசனைக்காக இன்று வருகிறது. இதுவரை நாம் கேட்காத இருவர் சேர்ந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தத் தலைமுறையினர் பலருக்கு, கே.ஆர்.ராமசாமியைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணீரென்ற குரலுடைய நாடக, திரைப்படக் கதாநாயகன். ’நேஸல் வாய்ஸ்’ எனப்படும், (கொஞ்சம் மூக்கால் பாடுவதுபோல் இருக்கும்) சுகமான குரல் கொண்டவர். அறிஞர் அண்ணாவின் இனிய நண்பர். அவரிடமிருந்து ‘நடிப்பிசைப் புலவர்’ என்ற பட்டம் பெற்றவர். தீவிர முற்போக்காளர். (ஒரு சமயம் கே.ஆர்.ஆருக் காகவே அண்ணா ஒரே இரவில் எழுதிய நாடகந்தான் ‘ஓர் இரவு’! இது பின்னாளில் ஏவிஎம் நிறுவனத்தின் திரைப்படமாகவும் வந்தது. நமது ‘குழந்தை’ எம்.எஸ். ராஜேஸ்வரியின் குரலில், ’துன்பம் நேர்கையில்’ என்கிற பாரதிதாசனின் அருமையான பாடல் இப்படம் மூலம்தான் பிரபலமடைந்தது.)

நாடகக் கலைமீது தீராப் பற்று கொண்டவர் கே.ஆர்.ஆர். தமிழகம் முழுவதிலும் தன்னுடைய சொந்த நாடகக் கம்பெனியின் மேடை நாடகங்களை நடத்தி (அப்போதுதான் தோன்றியிருந்த) தி.மு.கழகத்தின் கொள்கைகளை விளக்குவதில் தன் வாழ்நாளையும் பொருளையும் செலவிட்டவர். எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களுக் கெல்லாம் திரைத்துறையிலும், அரசியலிலும் முன்னோடி.

இவருடன் ஜிக்கி என்றழைக்கப் பட்ட பி.ஜி.கிருஷ்ணவேணியும் சேர்ந்து பாடியுள்ள பாடலிது . (இவரைப் பற்றி – அடுத்த பதிவில்!). பாடல், மாடர்ன் தியேட்டர்ஸாரின் ’சுகம் எங்கே?’ என்ற திரைப் படத்தில் இடம் பெற்றது. இப் படத்தின் நாயகர்கள்: கே.ஆர்.ராமசாமியும், சாவித்ரியும்! கதை, வசனம்: கண்ணதாசன் மற்றும் ஏ.கே.வேலன். பாடல்கள்: கண்ணதாசனும், மருதகாசியும். (இன்றைய பாடலை, இந்த இருவரில் யார் எழுதியது என்பது குறிப்பாகத் தெரியவில்லை). இசை: அப்போது இன்னமும் ‘மெல்லிசை மன்னர்கள்’ ஆகாத, விஸ்வநாதன்-ராமமூர்த்தி!

அவர்களின் திரைஇசை வாழ்வின் ஆரம்பகாலத்தில் வந்த படம், ‘சுகம் எங்கே?’ ஆயினும் பாடல் முழுவதிலும் அவர்களின் பிரத்தியேகக் கற்பனைகள் நிறைய விரவி இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். வழக்கம் போல மெட்டுக்குத் தான் முதல் இடம். என்றாலும், மாண்டலின், வயலின்கள், கிடாரின் ’கார்ட்ஸ்,’ தபலா இவற்றின் பங்களிப்பு, கோர்விசையில் அப்போதே அவர்களின் பாணியை உறுதிப் படுத்தியிருக்கிறது. முதலிலிருந்து முடிவு வரை எந்த வித நெருடலும் இல்லாத மெட்டின் சீரான போக்கு என்கிற (மன்னர்களின்) வெற்றி ரகசியமும் அப்போதே ஆரம்பித்திருக்கிறது! ’முரண்’ குரல்களான ராமசாமியின் கம்பீரக் குரலும், ஜிக்கியின் மென்குரலும் பரவசப்படுத்துகின்றன.

இங்கே கொடுத்திருக்கும் பாடலின், ஒலிப்பதிவு துல்லியமாக இல்லை யெனினும் பாடலை ரசிக்க முடிகிறது. கேளுங்கள்:

Senthamizh nattu solayile by Krishnamurthy80

மீண்டும் அடுத்த பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Thursday, September 29, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதினொன்று)

இன்றைய (சற்றே) பெரிய பதிவில், நாம் வித்தியாசமான மூன்று இசைக் கோர்வைகளைக் கேட்கவிருக்கிறோம். நமது தலைமுறையின் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் தனித்தன்மைகளையும், திரை இசையில் அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ள இவை பெரிதும் உதவும் என்று கருதுகிறேன்.

அதற்கு முன், சில விளக்கங்கள்:

திரைப்படங்களின் இசையமைப்பில் இரண்டு பிரிவுகள் உண்டு என்பதும், அவை, பாடல்கள் மற்றும் படம் நெடுகிலும் வரும் ரீ-ரெகார்டிங் (அதாவது, காட்சிக்கேற்ற இசைக் கோர்வைகள்) என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இவற்றைத் தவிர, எல்லாப் படங்களின் ஆரம்பத்திலும் (டைடில் ம்யூஸிக் என்கிற) முகப்பிசைக் கோர்வை ஒன்றும் இருக்கும், அல்லவா? இது, வாத்தியங்களின் கோர்வையாகவோ, அல்லது பாட்டாகவோ (’டைடில் ஸாங்!’) இருக்கலாம். ‘குலேபகாவலி’ யின் டைடிலில் வரும் ‘நாயகமே, நபி நாயகமே’ பாடல் போல! எப்படி இருந்தாலும், முகப்பிசை என்பது, படம் பார்க்க வந்தவர்களை படத்தோடு ஒன்றச் செய்ய வேண்டிய வேலையை, டைடிலிலேயே தொடங்கிவிடவேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

முகப்பிசையிலும், ரீ-ரெகார்டிங்கிலும் ’கருத்திசை’ (தீம் ம்யூஸிக்) என்ற ஒன்றையும் புகுத்துவதுண்டு. இதற்கு உதாரணம், ‘பாவமன்னிப்பு படத்தில் (’வந்தநாள் முதல்’ பாட்டில்) விஸிலிலும், ஹம்மிங்கிலும் வரும் இசை. இங்கே மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி வயலினில் வாசிக்கிறார், கேளுங்களேன்:

Paavamannippu theme by Krishnamurthy80

படம் நெடுகிலும் பல காட்சிகளில் இதே மெட்டை வேறு வேறு வாத்தியங்களிலும் குரல்களிலும், காட்சிகளின் ’மூடு’ க்கேற்ப இசைத்திருப்பார்கள். அதையே முகப்பிசையிலும் அற்புதமாக கோர்த்திருப்பார்கள். இதைத்தவிர, இதே படத்தின் காதலர்கள் சிவாஜி, தேவிகா இருவரும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் வேறொரு கருத்திசையும் ஒலிக்கும்!

திரைப்பட இசையமைப்பில் கடினமான விஷயம் (நான் கேட்டறிந்தபடி), (பாடல்களை விட,) ரீ-ரெகார்டிங்’க்கும், முகப்பிசைக்கும் இசையமைப்பதே என்பது பல இசையமைப்பாளர்களின் கருத்து. முக்கியமாக, இன்றுபோல் இல்லாமல், (கணினிகளின் துணை இல்லாத) அந்தக்காலத்தில் பாடலோ, முகப்பிசையோ எதுவானாலும் ஒரே தடவையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! தவறுகளுக்கும் ஒட்டு வேலைகளுக்கும் இடமேயில்லை! எனவே, இயக்குனர், இசையமைப்பாளர், கவிஞர் எல்லாரும் கூடி மெட்டையும் பாடல் வரிகளையும் முடிவு செய்ததும், பாடுபவர்களும், வாத்தியக் கலைஞர்களும், முழுப் பாடலையும், கோர்விசையையும் வாரக் கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே பதிவு செய்யத் துணிவார்கள்! மேடை நாடகங்களைப் போலத்தான்! (மனோகரா, பக்த மீரா படங்களின் இசையமைப்பாளர் திரு. எஸ்.வி. வெங்கடராமன், ஒரு முறை என்னிடம் சொன்னார்: “எங்க காலத்தில எல்லாம் பாடுகிறவர்களுக்கும், வாத்தியக்காரர்களுக்கும் சேர்த்து ஒரே ’மைக்’ தான்! அதுகிட்ட வந்து தான், பாடியோ, வாசித்தோ செல்ல வேண்டும்! ரெகார்டிங் அப்டிங்கறது, ஒரு ஸர்க்கஸ் மாதிரி நடக்கும் ஸார்”).

ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள், எல்லா வகை இசையமைப்பிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களின் பல டைடில் ம்யூஸிக் கோர்வைகள் மேல் நாட்டு ஸிம்பொனிகளுக்கு ஒப்பானவை என்பதில் ஐயமில்லை!

இங்கே நான் முதலாவதாக இணைக்க நினைத்திருந்தது, மெல்லிசை மன்னர்களின் ‘இது சத்தியம்’ பட முகப்பிசைக் கோர்வை. அதில், ’சத்தியம், இது சத்தியம்’ என்ற (அதே படத்தில் வரும்) பாடலை வைத்து முகப்பிசையைப் பின்னியிருப்பார்கள். தங்களின் எல்லா நேரடி மேடைக் கச்சேரிகளின் ஆரம்பத்திலும் இதையே இசைத்து வந்தார்கள். எனக்குக் கிடைத்த அதன் ஒலிப்பதிவு திருப்திகரமாக இல்லாமல் போனதால், அதே பாணியில் இசையமைக்கப்பட்ட ’பாலும் பழமும்’ திரைப்படத்தின் முகப்பிசைக் கோர்வையைக் கொடுத்திருக்கிறேன்:

Title music- Paalum pazhamum by Krishnamurthy80

இதில் (வாத்தியங்களில்) இசைக்கப்பட்டுள்ள ’பாலும் பழமும்’ என்ற பாடலுக்கு, மாண்டலினையும் வயலினையும் பிரதானமாக உபயோகித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான கோர்வைகள்! சுற்றிச் சுழண்டு வருகிற வயலின்களும், கணீரென்ற மாண்டலின் ஒலியும் கடைசியில் அதே பல்லவியை ஸிதாரில் வாசித்திருப்பதும், சொக்க வைக்கின்றன. மாறுதலுக்காக, முதல் பல்லவியை மாண்டலினிலும் இரண்டாவதை வயலின்களிலும் வாசித்திருக்கிறார்கள். அப்போது (நான் ஏற்கனவே கூறியபடி) மாண்டலினுக்கு வயலின்களையும், வயலின்களுக்கு மாண்டலினையும் ‘ஸெகண்ட்ஸ்’ ஆக வாசித்திருப்பது, பிரமாதமான கற்பனை! இவற்றோடு (கிளாரினெட் சேர்ந்த) குழலிசையும், கிடாரின் ‘கார்ட்’ களும் (பாடலில் அங்கங்கே வரும் ஸ்வரத்திற்கேற்ப ஜங், ஜங் என்று வருகிறதே, அதுதான் ‘கார்ட்ஸ்’) உங்களைத் திரைப்படத்தினைக் காணத் தயார் செய்துவிடும்! இவ்வாத்தியங்களின் கலவையான இந்த இசைக்கோர்வையை, திரையரங்கில், அந்த ஒலி பெருக்கிகளில் கேட்க எப்படி இருக்கும்?!

சொர்க்கந்தான்!

அடுத்து வருவது, ‘திருவிளையாடல்’ படத்தின் முகப்பிசை. இதற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார். ஒரு புராணப் படம் என்பதைக் கருத்தில் கொண்டு, நமது பாரம்பரிய வாத்தியங்களான நாதஸ்வரம், தவில், குழல், மற்றும் தபலா, ஸிதார் போன்ற இசைக் கருவிகள் மூலமாக, கர்நாடக சங்கீத ராகங்களை வைத்து முகப்பிசையைக் கம்பீரமாகக் கொண்டாடி இருக்கிறார். அந்த கம்பீரம், இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களிலும் ஏகமாக எதிரொலிக்கும்! கெளரிமனோகரி ராகத்தில் ‘பாட்டும் நானே’, மாண்ட் என்கிற ராகத்தில் ’ஒரு நாள் போதுமா’,ராகமாலிகையில் ’இல்லாத தொன்றில்லை’, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘இசைத்தமிழ்’ போன்ற பாடல்களை மிஞ்சுவதற்கு இன்று எந்த ராஜாவாலும் முடியாது என்பதுதான் நிதரிசனம்! இந்த சாதனை, மகாதேவனுக்கு இரண்டாவது முறை! ‘சங்கராபரணம்’ படமும் பாடல்களும் நினைவிருக்கிறதா?

இந்த முகப்பிசையின் பிற்பகுதியில், நாதஸ்வர இசைக்குத் துணையாக வயலின்களை உபயோகித்திருப்பது சுவாரஸ்யமான பின்னல். அதுவே தொடர்ந்து குழலாலும் இசைக்கப் படுகிறதையும் கவனியுங்கள். இப்போது இசையைக் கேட்போமா?:

Title music-Thiruvilayadal by Krishnamurthy80

கடைசியாக, மெல்லிசை மன்னர்கள், ‘பாசமலர்’ படத்திற்காக அமைத்திருந்த முகப்பிசைக்கு வருகிறோம். (இத் திரைப் படத்திற்கு ’பாசமலர்’ என்ற பெயரை யார் கொடுத்தார்கள் தெரியுமா உங்களுக்கு? படம் எடுத்து முடித்ததும், (அவர்களுக்குள்) படத்திற்குப் பொருத்தமான தலைப்பைத் தருவோருக்கு, ரூ.ஆயிரம் பரிசு என்று சொன்னார்களாம். கண்ணதாசன் இந்தப் பெயரை நொடியில் சொல்லிப் பரிசைத் தட்டிச் சென்றாராம்!)

இந்த முகப்பிசைப் பாடலை, தாள வாத்தியங்கள் ஏதும் துணை வராமல் தொகையறாவாகப் பாடியிருப்பவர், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் பாடிய முதல் (முழுப்) பாட்டு இது. இதன் ஒலிப்பதிவு முதலில் இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. ஆனாலும், அந்தக் காலத்திய ‘ரேடியோ சிலோனி’ல் இதை அடிக்கடி ஒலிபரப்பி மிகப் பிரபலமாக்கிய பின்னர், பாடல்கள் ஒலிநாடாவாக வெளியிடப் பட்டபோது, இதுவும் சேர்க்கப்பட்டது.

Title music- Pasamalar by Krishnamurthy80

இதிலும், இடையிடையே வரும் வயலின்களின் செழிப்பான ஆட்சியைக் கவனியுங்கள். படக்கதையின் ‘மூடு’க்கேற்றபடி, சோகத்தைப் பறைசாற்றும் இந்தப் பாடலின் (எதிரொலியை ஒத்த) ஒலிப்பதிவும் பாடகருடன் கூடவே துணை வரும் ஹார்மோனியமும் பின்னால் எங்கோ எப்போதோ ஒலிக்கும் (டிரம் வாத்தியத்தோடு ஒரு பெரிய ஜால்ரா போல இருக்குமே, அதன்) ஜல், ஜல் ஒலியும்........ ’பாசமலர்’ படம் வெளிவந்தபோது, (மொத்தம் 15 தடவைகளில்) இந்த இசைக் கோர்வையைக் கேட்பதற்காகவும் சில முறைகள் பார்த்தது இப்போது நினைவுக்கு வருகிறது!

இன்னொரு பாடலில் மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Monday, September 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பத்து)

சென்ற பதிவில் உங்களைச் சோகத்தில் ஆழ்த்தியதற்கு ஈடாக, விஸ்வநாதன் – ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை, சுசீலா இவர்கள் ஒன்று கூடி நமக்களித்த இன்னொரு ‘மாஸ்டர் பீஸ்’ஆன ஓரு துள்ளல் பாடலை இன்று கேட்போமா?

இயக்குனர் பீம்சிங்கின் ‘ப’வரிசை வெற்றிப் படங்களில் முதலாவதான ‘பதிபக்தி’ படத்தில், சிவாஜியின் தங்கையாக வரும் சாவித்திரி, ஆடு மேய்த்துக் கொண்டே இந்தப் பாடலைப் பாடுகிறார்.

‘இரை போடும் மனிதருக்கே, இரையாகும் வெள்ளாடே,

இதுதான் உலகம், வீண் அனுதாபம் கண்டு நீ, ஒருநாளும் நம்பிடாதே!’

என்று ஆரம்பிக்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளின் அழகைப் பாருங்கள்!. பாடல் முழுவதுமே நமக்கெல்லாம் சவுக்கடிதான்! பாடலைக் கேட்கும்போதே அது தெரியும்!

மெட்டின் சிறப்போ, பாடியவரின் திறமையோ, தெரியவில்லை - சுசீலாவின் தேன் குரலைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வளவு இனிமை! அத்துடன் பாடலின் முகப்பு மற்றும் இடையே வரும் கோர்விசையின் கூடவே (தாளமாக) வரும் ‘டபிள் பேஸி’ன் அதிர்வுகளையும் கவனியுங்கள். (இந்த வாத்தியத்தைப் பற்றி என்னுடைய மூன்றாவது பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேன்). எவ்வளவு துல்லியமான ஒலிப்பதிவு!

இதற்கான மெட்டோ, ஒரே வேகம் – நாம் முன்னர் ரசித்த ‘என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்’ பாடல் போல! இந்தப் பாடலிலும் வயலின்கள், டோலக் மற்றும் தபலா எனும் தாள வாத்தியங்கள், ஸிதார், குழல், மற்றும் (வயலினைப் போலவே வில் வைத்துக் கொண்டு இசைக்கப்படும்) தில்ரூபா எனும் வடநாட்டுத் தந்தி வாத்தியம் இவை எல்லாம் உண்டு. இவற்றை ஒருங்கிணைத்துக் கோர்த்து, மூன்று நிமிடங்களில் ஒரு மந்திர ஜாலமே நடத்திவிடுகிறார்கள், மெல்லிசை மன்னர்கள்! இதன் மத்தியில், ‘காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட’ புத்தர், (ஸிதார்), ’கடல் போலே உள்ளம் கொண்ட காந்தி, யேசுநாதருக்கு’ (வயலின்) என்று ஸ்பெஷல் இசை வேறு!

நான் வர்ணிப்பதை விட, பாடலை அனுபவித்து விட்டு, நீங்களே சொல்லுங்களேன்!

Irai podum by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே?

Monday, September 19, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஒன்பது)

நண்பர்களே! இன்று நாம் கேட்கப்போகும் இந்தப் பாடலை, (நான் ஏற்கனவே என்னுடைய முதல் பதிவில் எழுதியிருந்தபடி) குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்டால், உங்கள் மனது கரைந்து லேசாகிவிடும் என்பதற்கு நான் உத்திரவாதம்! இதை, சோகத்தைக் குரலில் கொண்டுவந்து கொட்டி எஸ்.வரலக்ஷ்மியும், சோகத்தையே குரலாகக் கொண்ட டி.எஸ். பகவதியும் பாடியிருக்கிறார்கள்.

ஆமாம். பகவதியினுடையது, மிக சோகமான குரல். ஆனால் அருமையானது, வித்தியாசமானது! நல்ல பாடகியான இவரின் மெலிதான குரல், கேட்பதற்கு வெகு சுகமானது என்றாலும், அக்காலத்திய பல கதாநாயகிகளுக்கு ஒத்து வராமல் போனது. ஆனாலும் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த குரலானது! இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

பாடலுக்கு வருவோம்.

தமிழர்களின் தனிச் சிறப்பான தாலாட்டையும், ஒப்பாரியின் சோகத்தையும் கலந்த ஒரு அபூர்வமான விருந்து, இந்தக் கண்ணதாசனின் பாடல். ’சிவகங்கைச் சீமை’ திரைப்படத்திற்கான இந்தப் பாடலை ஒரு காவியமாக்கியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

ஆங்கிலேயர்களுடன் போருக்குச் செல்லப் போகும் மருது சகோதரர்கள், திரும்பி வரப் போவதில்லை என்கிற தெளிந்த உள்ளுணர்வோடு, அவர்தம் மனைவியர் பாடுவதுபோல அமைந்துள்ளது இப்பாடல். சாதாரணமாக மகுடி ராகம் என்றறியப்படும் புன்னாகவராளி எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவிப் போடப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மெட்டையே பிரதானமாகக் கொண்ட இந்தப் பாடலில், பெண்டிர் இருவரின் குரல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம். பின்னணியில் அடக்கி வாசிக்கப் பட்ட தபலாவும், குழலும், சிதாரும், (கதையின் இறுக்கமான சூழ்நிலையில்), பாடலில் சோகத்தை அதிகமாக்குவதற்கு மட்டுமே உறுதுணையாக இருக்கிறது.

ஒரு அதிசயமாக, மன்னர்கள் இசையில் வயலின் சத்தமே கேட்காத ஒரு அரிய பாடல், இதோ:

Thendral vandhu veesadho by Krishnamurthy80

அழகான மெட்டும், அருமையான பாடலும், அவற்றைக் கச்சிதமாகக் கோர்த்துக் கொடுக்கப் பட்டுள்ள விதமும், எத்தனை திறமைசாலிகளுக்குப் புகழ் சேர்த்திருக்கின்றது! ’டீம் வொர்க்’ என்பதின் அர்த்தம் புரிகிறதா?!

மனதை உருக வைப்பதில் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முழுப் பாடலையுமே சொல்லலாம் என்றாலும்,

‘போர் மீறிப் புறப்படுவார் -

பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்’

என்ற வரிகளை வீரமாகவும், அடுத்து வரும்

’யார் வருவார், யார் மடிவார்,

யாரரிவார் கண்மணியே!’

என்ற வரிகளைச் சோகமாகவும் வரலக்ஷ்மி பாடும் போது, ஒன்றிக் கேட்கும் ரசிகனாகிய உங்கள் கண்களில் நீர் அரும்பாமலும் போகுமோ?

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!