Thursday, December 31, 2009

வயதும் வருடங்களும்!

எங்கள் கண் முன்னே வளர்ந்த பெண் பிள்ளைகள், அவர்கள் தம் பிள்ளைகளுடன் எங்கள் வீட்டிற்கு வருகைதரும் போதிலெல்லாம் என் சகோதரர் சொல்லுவார்: “இவர்களையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு வயதாகிவிட்டது என்கிற நினைவே தோன்றுகிறது” என்று! உண்மையான பேச்சு! மனதளவில் எவ்வளவு இளமையாக உணர்ந்தாலும், சமூக நாகரீகம் கருதி அடக்கி வாசிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். திருமணம் செய்து கொள்ளாத காரணத்தினாலோ என்னவோ, அநேகமாக எல்லா சூழ்நிலைகளிலும் நான் போகுமிடங்களில் எல்லாம் என் ஸ்வபாவப்படியே ஜாலியாகத்தான் பழகிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்கள் நேரில் சொல்வது ‘கொடுத்து வைத்தவர் ஐயா, நீர் - உமது வயதே தெரிவ்தில்லை’ என்று. பின்னால் என்ன பேசிக்கொள்ளுகிறார்கள் என்பதைப் பற்றி, நமக்கேன் கவலை! ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளன்று ”இதுவரை வாழ்க்கையில் குறிப்பிடும்படி என்ன சாதித்தோம்? வெறும் ’வேடிக்கை மனிதனாகவே’ வாழ்ந்து விட்டோமே” என்று ஆதங்கப்பட்டே வாழ்வின் விளிம்புக்கு வந்தாயிற்று!

வயது என்றதும் சமீபத்தில் நண்பர் ரவிகுமார் கூறிய ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. அவருடைய தந்தையார் வீட்டிலே விழுந்த காரணத்தினால் இடுப்பில் மூட்டுக்கிண்ணப்பந்து உடைந்து மருத்துவமனையிலே படுத்திருந்தார். வைத்தியர்கள் பந்தை மாற்றவேண்டுமென்று முடிவு செய்துவிட்டார்கள். இந்த நிலையிலே, ரவிகுமாரின் இளைய மகன் கல்லூரியிலிருந்து நேரே தாத்தாவைப்பார்க்க வந்தான். தன் தந்தையிடம், ’தாத்தாவிற்கு என்னப்பா ஆச்சு?’ என்று விசாரித்தான். ரவி கேட்டார்: ‘தாத்தாவின் வயது என்ன?’ என்று. அவருக்கு 80க்கு மேலே என்ற பதில் வந்தது. அதற்கு இவர், ’80 ஓவராகிவிட்டதல்லவா, அதனால், இப்போது பால் மாற்றச் சொல்லிவிட்டார்கள்’ என்று சொன்னார்! இது எப்படி இருக்கு?

Tuesday, December 8, 2009

காவல் நிலையத்தில்......

என்னுடைய பாஸ்போர்ட்டைப் புதுப்பிக்க விண்ணப்பித்திருந்த சமயம் நான் பட்ட பாட்டைப்பற்றி எழுதியிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியாக, நான் ஊரிலில்லாத சமயத்தில் என்னைத் தேடி காவல் துறை அன்பர் ஒருவர் (சீருடையில் இல்லாததால் அன்பரானார்!) வந்திருந்ததாகவும் என்னை வந்து காவல் நிலையத்தில் சந்திக்கச் சொன்னதாகவும் தகவல் கிடைத்தது. ஏற்கனவே மூன்று முறை காவல் நிலையத்திற்குச் சென்றிருந்ததால் (வீண் கற்பனையும் அற்ப சந்தோஷமும் வேண்டாம் - அந்த சந்திப்புகளும் இதே காரணத்துக்காகத்தான்!) என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்திருந்தது. இன்று காலை வழி கண்டுபிடித்துப் போய்ச்சேர்ந்தேன். அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் குடைச்சலான கேள்விகளின் ஊடே புகுந்து புறப்பட்டு வெற்றிகரமாகத் திரும்பினேன். அங்கே இலவச இணைப்பாகக் கிடைத்த காட்சியிது: ஒரு நடுத்தர வயது ஆணைத் தன் இருக்கைக்கு அருகில் (குத்த வைத்து) அமரச்சொல்லி ‘அன்புடன்’ விசாரித்துக் கொண்டிருந்தார் (சீருடையில் இல்லாததால் என் ஊகத்தில்) எழுத்தர். வீட்டு விலாசத்தைப் பற்றிய சில பல கேள்விகளுக்குப் பிறகு ஆரம்பித்தது அசல் விசாரணை. முதலில் கைகளை நீட்டச் சொல்லி, இரண்டடி தூரத்தில் நிற்கவைத்து, ஒரு நான்கடி நீளப் பிரம்பால் அடித்தார்கள் பாருங்கள், குலை நடுங்கிவிட்டது எனக்கு! அடிபட்டவனோ, அனுபவசாலி போலிருக்கிறது. அந்த அடிகளுக்கு நடுவே, முதலில் சொன்ன அண்ணாநகரிலிருந்து கோடம்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்தான். இன்னொரு அன்பர் சட்டையைப்பிடித்து, சுழற்றி அடித்தபோது, திருவள்ளூரின் ஒரு பகுதியான வள்ளுவர் நகரத்தில் மாரியப்பனின் பக்கத்து வீட்டுக்கு வந்துவிட்டான்! அப்போதும் விடவில்லையே அவர்கள்! மாரிமுத்துவின் தொலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கி, அந்த மாரிமுத்து இவனைப் பக்கத்து வீட்டுக்காரன் என்று உறுதியளிக்கும் வரையில் தரையில் அமர்ந்து இரண்டு கைகளையும் (சாணி தட்டுவது போலத்)தட்டிக் கொண்டிருக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள், என் வேலை முடிந்துவிட்டதால் (மனதிற்குள்) அலறி அடித்துக்கொண்டு ஓடி வெளியே வந்துவிட்டேன்! நம் சிறு வயதில் போலீஸைக் காட்டி, ‘பூச்சாண்டி’ என்று பயமுறுத்தியதில் பொய்யேயில்லை!