Thursday, September 29, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதினொன்று)

இன்றைய (சற்றே) பெரிய பதிவில், நாம் வித்தியாசமான மூன்று இசைக் கோர்வைகளைக் கேட்கவிருக்கிறோம். நமது தலைமுறையின் இரண்டு பெரிய இசையமைப்பாளர்களின் தனித்தன்மைகளையும், திரை இசையில் அவர்களின் வித்தியாசமான அணுகுமுறைகளையும் புரிந்து கொள்ள இவை பெரிதும் உதவும் என்று கருதுகிறேன்.

அதற்கு முன், சில விளக்கங்கள்:

திரைப்படங்களின் இசையமைப்பில் இரண்டு பிரிவுகள் உண்டு என்பதும், அவை, பாடல்கள் மற்றும் படம் நெடுகிலும் வரும் ரீ-ரெகார்டிங் (அதாவது, காட்சிக்கேற்ற இசைக் கோர்வைகள்) என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இவற்றைத் தவிர, எல்லாப் படங்களின் ஆரம்பத்திலும் (டைடில் ம்யூஸிக் என்கிற) முகப்பிசைக் கோர்வை ஒன்றும் இருக்கும், அல்லவா? இது, வாத்தியங்களின் கோர்வையாகவோ, அல்லது பாட்டாகவோ (டைடில் ஸாங்!) இருக்கலாம். ‘குலேபகாவலியின் டைடிலில் வரும் ‘நாயகமே, நபி நாயகமேபாடல் போல! எப்படி இருந்தாலும், முகப்பிசை என்பது, படம் பார்க்க வந்தவர்களை படத்தோடு ஒன்றச் செய்ய வேண்டிய வேலையை, டைடிலிலேயே தொடங்கிவிடவேண்டும் என்பதுதான் குறிக்கோள்.

முகப்பிசையிலும், ரீ-ரெகார்டிங்கிலும் கருத்திசை’ (தீம் ம்யூஸிக்) என்ற ஒன்றையும் புகுத்துவதுண்டு. இதற்கு உதாரணம், ‘பாவமன்னிப்பு படத்தில் (வந்தநாள் முதல்பாட்டில்) விஸிலிலும், ஹம்மிங்கிலும் வரும் இசை. இங்கே மெல்லிசை மன்னர் ராமமூர்த்தி வயலினில் வாசிக்கிறார், கேளுங்களேன்:

Paavamannippu theme by Krishnamurthy80

படம் நெடுகிலும் பல காட்சிகளில் இதே மெட்டை வேறு வேறு வாத்தியங்களிலும் குரல்களிலும், காட்சிகளின் மூடுக்கேற்ப இசைத்திருப்பார்கள். அதையே முகப்பிசையிலும் அற்புதமாக கோர்த்திருப்பார்கள். இதைத்தவிர, இதே படத்தின் காதலர்கள் சிவாஜி, தேவிகா இருவரும் தோன்றும் காட்சிகளில் எல்லாம் வேறொரு கருத்திசையும் ஒலிக்கும்!

திரைப்பட இசையமைப்பில் கடினமான விஷயம் (நான் கேட்டறிந்தபடி), (பாடல்களை விட,) ரீ-ரெகார்டிங்’க்கும், முகப்பிசைக்கும் இசையமைப்பதே என்பது பல இசையமைப்பாளர்களின் கருத்து. முக்கியமாக, இன்றுபோல் இல்லாமல், (கணினிகளின் துணை இல்லாத) அந்தக்காலத்தில் பாடலோ, முகப்பிசையோ எதுவானாலும் ஒரே தடவையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதையும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்! தவறுகளுக்கும் ஒட்டு வேலைகளுக்கும் இடமேயில்லை! எனவே, இயக்குனர், இசையமைப்பாளர், கவிஞர் எல்லாரும் கூடி மெட்டையும் பாடல் வரிகளையும் முடிவு செய்ததும், பாடுபவர்களும், வாத்தியக் கலைஞர்களும், முழுப் பாடலையும், கோர்விசையையும் வாரக் கணக்கில் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னரே பதிவு செய்யத் துணிவார்கள்! மேடை நாடகங்களைப் போலத்தான்! (மனோகரா, பக்த மீரா படங்களின் இசையமைப்பாளர் திரு. எஸ்.வி. வெங்கடராமன், ஒரு முறை என்னிடம் சொன்னார்: “எங்க காலத்தில எல்லாம் பாடுகிறவர்களுக்கும், வாத்தியக்காரர்களுக்கும் சேர்த்து ஒரே மைக் தான்! அதுகிட்ட வந்து தான், பாடியோ, வாசித்தோ செல்ல வேண்டும்! ரெகார்டிங் அப்டிங்கறது, ஒரு ஸர்க்கஸ் மாதிரி நடக்கும் ஸார்”).

ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள், எல்லா வகை இசையமைப்பிலும் சிறந்து விளங்கினார்கள். அவர்களின் பல டைடில் ம்யூஸிக் கோர்வைகள் மேல் நாட்டு ஸிம்பொனிகளுக்கு ஒப்பானவை என்பதில் ஐயமில்லை!

இங்கே நான் முதலாவதாக இணைக்க நினைத்திருந்தது, மெல்லிசை மன்னர்களின் ‘இது சத்தியம்பட முகப்பிசைக் கோர்வை. அதில், சத்தியம், இது சத்தியம்என்ற (அதே படத்தில் வரும்) பாடலை வைத்து முகப்பிசையைப் பின்னியிருப்பார்கள். தங்களின் எல்லா நேரடி மேடைக் கச்சேரிகளின் ஆரம்பத்திலும் இதையே இசைத்து வந்தார்கள். எனக்குக் கிடைத்த அதன் ஒலிப்பதிவு திருப்திகரமாக இல்லாமல் போனதால், அதே பாணியில் இசையமைக்கப்பட்ட பாலும் பழமும் திரைப்படத்தின் முகப்பிசைக் கோர்வையைக் கொடுத்திருக்கிறேன்:

Title music- Paalum pazhamum by Krishnamurthy80

இதில் (வாத்தியங்களில்) இசைக்கப்பட்டுள்ள பாலும் பழமும்என்ற பாடலுக்கு, மாண்டலினையும் வயலினையும் பிரதானமாக உபயோகித்திருக்கிறார்கள். என்ன அற்புதமான கோர்வைகள்! சுற்றிச் சுழண்டு வருகிற வயலின்களும், கணீரென்ற மாண்டலின் ஒலியும் கடைசியில் அதே பல்லவியை ஸிதாரில் வாசித்திருப்பதும், சொக்க வைக்கின்றன. மாறுதலுக்காக, முதல் பல்லவியை மாண்டலினிலும் இரண்டாவதை வயலின்களிலும் வாசித்திருக்கிறார்கள். அப்போது (நான் ஏற்கனவே கூறியபடி) மாண்டலினுக்கு வயலின்களையும், வயலின்களுக்கு மாண்டலினையும் ‘ஸெகண்ட்ஸ்ஆக வாசித்திருப்பது, பிரமாதமான கற்பனை! இவற்றோடு (கிளாரினெட் சேர்ந்த) குழலிசையும், கிடாரின் ‘கார்ட்களும் (பாடலில் அங்கங்கே வரும் ஸ்வரத்திற்கேற்ப ஜங், ஜங் என்று வருகிறதே, அதுதான் ‘கார்ட்ஸ்) உங்களைத் திரைப்படத்தினைக் காணத் தயார் செய்துவிடும்! இவ்வாத்தியங்களின் கலவையான இந்த இசைக்கோர்வையை, திரையரங்கில், அந்த ஒலி பெருக்கிகளில் கேட்க எப்படி இருக்கும்?!

சொர்க்கந்தான்!

அடுத்து வருவது, ‘திருவிளையாடல்படத்தின் முகப்பிசை. இதற்கு கே.வி.மகாதேவன் இசையமைத்திருக்கிறார். ஒரு புராணப் படம் என்பதைக் கருத்தில் கொண்டு, நமது பாரம்பரிய வாத்தியங்களான நாதஸ்வரம், தவில், குழல், மற்றும் தபலா, ஸிதார் போன்ற இசைக் கருவிகள் மூலமாக, கர்நாடக சங்கீத ராகங்களை வைத்து முகப்பிசையைக் கம்பீரமாகக் கொண்டாடி இருக்கிறார். அந்த கம்பீரம், இந்தப் படத்தில் வரும் எல்லாப் பாடல்களிலும் ஏகமாக எதிரொலிக்கும்! கெளரிமனோகரி ராகத்தில் ‘பாட்டும் நானே, மாண்ட் என்கிற ராகத்தில்ஒரு நாள் போதுமா’,ராகமாலிகையில் இல்லாத தொன்றில்லை, பீம்ப்ளாஸ் ராகத்தில் ‘இசைத்தமிழ்போன்ற பாடல்களை மிஞ்சுவதற்கு இன்று எந்த ராஜாவாலும் முடியாது என்பதுதான் நிதரிசனம்! இந்த சாதனை, மகாதேவனுக்கு இரண்டாவது முறை! ‘சங்கராபரணம்படமும் பாடல்களும் நினைவிருக்கிறதா?

இந்த முகப்பிசையின் பிற்பகுதியில், நாதஸ்வர இசைக்குத் துணையாக வயலின்களை உபயோகித்திருப்பது சுவாரஸ்யமான பின்னல். அதுவே தொடர்ந்து குழலாலும் இசைக்கப் படுகிறதையும் கவனியுங்கள். இப்போது இசையைக் கேட்போமா?:

Title music-Thiruvilayadal by Krishnamurthy80

கடைசியாக, மெல்லிசை மன்னர்கள், ‘பாசமலர்படத்திற்காக அமைத்திருந்த முகப்பிசைக்கு வருகிறோம். (இத் திரைப் படத்திற்கு பாசமலர்என்ற பெயரை யார் கொடுத்தார்கள் தெரியுமா உங்களுக்கு? படம் எடுத்து முடித்ததும், (அவர்களுக்குள்) படத்திற்குப் பொருத்தமான தலைப்பைத் தருவோருக்கு, ரூ.ஆயிரம் பரிசு என்று சொன்னார்களாம். கண்ணதாசன் இந்தப் பெயரை நொடியில் சொல்லிப் பரிசைத் தட்டிச் சென்றாராம்!)

இந்த முகப்பிசைப் பாடலை, தாள வாத்தியங்கள் ஏதும் துணை வராமல் தொகையறாவாகப் பாடியிருப்பவர், எம்.எஸ்.விஸ்வநாதன். இவர் பாடிய முதல் (முழுப்) பாட்டு இது. இதன் ஒலிப்பதிவு முதலில் இசைத்தட்டில் வெளியிடப்படவில்லை. ஆனாலும், அந்தக் காலத்திய ‘ரேடியோ சிலோனில் இதை அடிக்கடி ஒலிபரப்பி மிகப் பிரபலமாக்கிய பின்னர், பாடல்கள் ஒலிநாடாவாக வெளியிடப் பட்டபோது, இதுவும் சேர்க்கப்பட்டது.

Title music- Pasamalar by Krishnamurthy80

இதிலும், இடையிடையே வரும் வயலின்களின் செழிப்பான ஆட்சியைக் கவனியுங்கள். படக்கதையின் ‘மூடுக்கேற்றபடி, சோகத்தைப் பறைசாற்றும் இந்தப் பாடலின் (எதிரொலியை ஒத்த) ஒலிப்பதிவும் பாடகருடன் கூடவே துணை வரும் ஹார்மோனியமும் பின்னால் எங்கோ எப்போதோ ஒலிக்கும் (டிரம் வாத்தியத்தோடு ஒரு பெரிய ஜால்ரா போல இருக்குமே, அதன்) ஜல், ஜல் ஒலியும்........ பாசமலர்படம் வெளிவந்தபோது, (மொத்தம் 15 தடவைகளில்) இந்த இசைக் கோர்வையைக் கேட்பதற்காகவும் சில முறைகள் பார்த்தது இப்போது நினைவுக்கு வருகிறது!

இன்னொரு பாடலில் மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Monday, September 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பத்து)

சென்ற பதிவில் உங்களைச் சோகத்தில் ஆழ்த்தியதற்கு ஈடாக, விஸ்வநாதன் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை, சுசீலா இவர்கள் ஒன்று கூடி நமக்களித்த இன்னொரு ‘மாஸ்டர் பீஸ்ஆன ஓரு துள்ளல் பாடலை இன்று கேட்போமா?

இயக்குனர் பீம்சிங்கின் ‘பவரிசை வெற்றிப் படங்களில் முதலாவதான ‘பதிபக்தி படத்தில், சிவாஜியின் தங்கையாக வரும் சாவித்திரி, ஆடு மேய்த்துக் கொண்டே இந்தப் பாடலைப் பாடுகிறார்.

‘இரை போடும் மனிதருக்கே, இரையாகும் வெள்ளாடே,

இதுதான் உலகம், வீண் அனுதாபம் கண்டு நீ, ஒருநாளும் நம்பிடாதே!

என்று ஆரம்பிக்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளின் அழகைப் பாருங்கள்!. பாடல் முழுவதுமே நமக்கெல்லாம் சவுக்கடிதான்! பாடலைக் கேட்கும்போதே அது தெரியும்!

மெட்டின் சிறப்போ, பாடியவரின் திறமையோ, தெரியவில்லை - சுசீலாவின் தேன் குரலைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வளவு இனிமை! அத்துடன் பாடலின் முகப்பு மற்றும் இடையே வரும் கோர்விசையின் கூடவே (தாளமாக) வரும் ‘டபிள் பேஸின் அதிர்வுகளையும் கவனியுங்கள். (இந்த வாத்தியத்தைப் பற்றி என்னுடைய மூன்றாவது பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேன்). எவ்வளவு துல்லியமான ஒலிப்பதிவு!

இதற்கான மெட்டோ, ஒரே வேகம் நாம் முன்னர் ரசித்த ‘என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்பாடல் போல! இந்தப் பாடலிலும் வயலின்கள், டோலக் மற்றும் தபலா எனும் தாள வாத்தியங்கள், ஸிதார், குழல், மற்றும் (வயலினைப் போலவே வில் வைத்துக் கொண்டு இசைக்கப்படும்) தில்ரூபா எனும் வடநாட்டுத் தந்தி வாத்தியம் இவை எல்லாம் உண்டு. இவற்றை ஒருங்கிணைத்துக் கோர்த்து, மூன்று நிமிடங்களில் ஒரு மந்திர ஜாலமே நடத்திவிடுகிறார்கள், மெல்லிசை மன்னர்கள்! இதன் மத்தியில், ‘காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தர், (ஸிதார்), கடல் போலே உள்ளம் கொண்ட காந்தி, யேசுநாதருக்கு (வயலின்) என்று ஸ்பெஷல் இசை வேறு!

நான் வர்ணிப்பதை விட, பாடலை அனுபவித்து விட்டு, நீங்களே சொல்லுங்களேன்!

Irai podum by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே?

Monday, September 19, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஒன்பது)

நண்பர்களே! இன்று நாம் கேட்கப்போகும் இந்தப் பாடலை, (நான் ஏற்கனவே என்னுடைய முதல் பதிவில் எழுதியிருந்தபடி) குறிப்பிட்ட சூழ்நிலையில் கேட்டால், உங்கள் மனது கரைந்து லேசாகிவிடும் என்பதற்கு நான் உத்திரவாதம்! இதை, சோகத்தைக் குரலில் கொண்டுவந்து கொட்டி எஸ்.வரலக்ஷ்மியும், சோகத்தையே குரலாகக் கொண்ட டி.எஸ். பகவதியும் பாடியிருக்கிறார்கள்.

ஆமாம். பகவதியினுடையது, மிக சோகமான குரல். ஆனால் அருமையானது, வித்தியாசமானது! நல்ல பாடகியான இவரின் மெலிதான குரல், கேட்பதற்கு வெகு சுகமானது என்றாலும், அக்காலத்திய பல கதாநாயகிகளுக்கு ஒத்து வராமல் போனது. ஆனாலும் கண்ணதாசனுக்கு மிகவும் பிடித்த குரலானது! இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார்.

பாடலுக்கு வருவோம்.

தமிழர்களின் தனிச் சிறப்பான தாலாட்டையும், ஒப்பாரியின் சோகத்தையும் கலந்த ஒரு அபூர்வமான விருந்து, இந்தக் கண்ணதாசனின் பாடல். சிவகங்கைச் சீமை திரைப்படத்திற்கான இந்தப் பாடலை ஒரு காவியமாக்கியிருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்.

ஆங்கிலேயர்களுடன் போருக்குச் செல்லப் போகும் மருது சகோதரர்கள், திரும்பி வரப் போவதில்லை என்கிற தெளிந்த உள்ளுணர்வோடு, அவர்தம் மனைவியர் பாடுவதுபோல அமைந்துள்ளது இப்பாடல். சாதாரணமாக மகுடி ராகம் என்றறியப்படும் புன்னாகவராளி எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவிப் போடப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மெட்டையே பிரதானமாகக் கொண்ட இந்தப் பாடலில், பெண்டிர் இருவரின் குரல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம். பின்னணியில் அடக்கி வாசிக்கப் பட்ட தபலாவும், குழலும், சிதாரும், (கதையின் இறுக்கமான சூழ்நிலையில்), பாடலில் சோகத்தை அதிகமாக்குவதற்கு மட்டுமே உறுதுணையாக இருக்கிறது.

ஒரு அதிசயமாக, மன்னர்கள் இசையில் வயலின் சத்தமே கேட்காத ஒரு அரிய பாடல், இதோ:

Thendral vandhu veesadho by Krishnamurthy80

அழகான மெட்டும், அருமையான பாடலும், அவற்றைக் கச்சிதமாகக் கோர்த்துக் கொடுக்கப் பட்டுள்ள விதமும், எத்தனை திறமைசாலிகளுக்குப் புகழ் சேர்த்திருக்கின்றது! டீம் வொர்க் என்பதின் அர்த்தம் புரிகிறதா?!

மனதை உருக வைப்பதில் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் பெரும் பங்கு உண்டு. முழுப் பாடலையுமே சொல்லலாம் என்றாலும்,

‘போர் மீறிப் புறப்படுவார் -

பொன்னாட்டின் புகழ் வளர்ப்பார்

என்ற வரிகளை வீரமாகவும், அடுத்து வரும்

யார் வருவார், யார் மடிவார்,

யாரரிவார் கண்மணியே!

என்ற வரிகளைச் சோகமாகவும் வரலக்ஷ்மி பாடும் போது, ஒன்றிக் கேட்கும் ரசிகனாகிய உங்கள் கண்களில் நீர் அரும்பாமலும் போகுமோ?

அடுத்த பதிவில் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Thursday, September 15, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (எட்டு)

தமிழ்த் திரைப்படங்களில் டூயட் பாடல்களை டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில், (தமிழில் இவர்கள் இருவர் மட்டுமே 750 பாடல்களைச் சேர்ந்து பாடியிருப்பதாகவும், சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து 250 பாடல்களும், தனியாகச் சுமார் 1700 பாடல்களும் பாடியிருப்பதாகவும் சுசீலாவின் சொந்த வலைப் பூவிலிருந்து ஒரு தகவல்!) ஒரு மாறுதலாக, டூயட் பாடல்களில் ஆண்கள் குரலிலும் (’பொன்னொன்று கண்டேன்’, அவள் பறந்து போனாளே’ பாடல்கள்) மற்றும் பெண்கள் குரலிலும் பதிவான பல பாடல்கள் பிரபலமடைந்தன. (இதற்கு முந்தைய பதிவில் கேட்ட ‘சின்னஞ்சிறு கண்ணன்’ பாடல் போல!) இதைப் போன்ற முரணான குரல்களால் பாடப் பெற்ற பல டூயட் பாடல்கள் கேட்பதற்கு வெகு சுகமாக அமைந்தன.

இன்று போல் அல்லாமல், அந்தக் காலப் பாடகர்களின் குரல்கள் ஒன்றொன்றும் நன்கு வித்தியாசப் பட்டிருந்ததால், ஒரு பாட்டைக் கேட்ட உடனேயே பாடியவர் யார், இசையமைத்தது யார் என்பதையும், பல சமயங்களில், பாடலை எழுதியவரையும் கூடச் சரியாக ஊகிக்கமுடிந்தது!

இந்த இடத்தில், இன்னொரு தகவல்: மன்னர்களின் குருவான ஸி.ஆர்.சுப்பராமனுக்கு, ’இந்திப்பாடல்களைத் தழுவியே இசையமைப்பவர்’ என்றொரு பெயர் இருந்தது. (இத்தனைக்கும் இவர், ’தேவதாஸ்’ படத்தில் வரும் ‘துணிந்தபின் மனமே’ மற்றும் ‘உலகே மாயம்’ போன்ற மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்!) இதனால் மனம் புண்பட்டிருந்த சுப்பராமன், என்.எஸ்.கிருஷ்ணனின் ’மணமகள்’ படத்தில், ஒரு சவாலாக, கர்நாடக ராகப் பாடல்களை மட்டுமே கொடுத்து, அத்தனை பாடல்களையும் பிரபலமாக்கித் தன் திறமையைக் காட்டினார். உதாரணமாக, இந்தப் படத்தில் வந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற (ராகமாலிகை எனப்படும் பல ராகங்களை உள்ளடக்கிய) பாடல், எளிதில் அடைவதற்குக் கடினமான கர்நாடகக் கச்சேரி மேடைகளைச் சென்றடைந்து, இப்போதும், (அதாவது ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னரும்) கச்சேரி ரசிகர்களின் விருப்பப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனால், ’மணமக’ளில் நான் எடுத்துக் காட்ட வந்தது, இன்னொரு அற்புதமான ராகமாலிகையான ‘எல்லாம் இன்பமயம்’ என்கிற டூயட் பாடலை. இதை இரண்டு முரண்பட்ட குரல்களையுடைய எம்.எல்.வசந்தகுமாரியும் பி.லீலாவும் பாடியிருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் இசையமைப்பாளருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப்பாடல், இன்றும் சின்னத்திரையில் பல ’சூப்பர் சிங்கர்’களின் செல்லப் பாடலாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது! இந்தப் பாடலின் தேர்ந்தெடுத்த சுகமான ராகங்களையும், அவற்றிற்கு ஈடான ஸ்வர ஜதிகளையும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் நமக்கு சங்கீதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

இந்த உத்தியை, நமது பிற்கால மன்னர்களும் இன்ன பிற இசையமைப்பாளர்களும், பல பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். முரண்பட்ட குரல்களைக் கொண்ட சுசீலாவையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் வைத்து, ‘உனது மலர் கொடியிலே’, ’மலருக்குத் தென்றல் பகையானால்’ போன்ற எத்தனை தேனான பாடல்களை இன்றும் கேட்டு மகிழ்கிறோம்!

இப்போது, இன்று நாம் கேட்கப் போகிற (மெல்லிசை மன்னர்கள் இசையில்) ஒரு முன்னோடியான பாடலை, ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்திற்காக ஜமுனாராணியும், எல்.ஆர்.ஈஸ்வரியும் மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். கவனமாகக் கேளுங்கள், பாடலோடு இழைந்து வரும் வயலின்களும், தொடர்ந்து வரும் மாண்டலின் இசையும் நடுநடுவே தெளித்திட்ட குழலிசையும், ஒரே சீரான தாளமும் பாடலோடு நம்மையும் எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடும்! இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் கோர்விசையில், மாண்டலினுக்கு இசைவாக இன்னொரு ஸ்ருதியில் குழலை ஓட விட்டிருக்கிறதையும் அனுபவியுங்கள். (அந்தக் குழல் ’பிட்’ டை ஸெகண்ட்ஸ் என்று இசை மொழியில் கூறுவார்கள்):

Seyyum Thozhile Dheivam by Krishnamurthy80


இன்னொன்று - இங்கே இசையை மட்டுமே ரசிக்க வந்தவர்களை, பாடலின் வரிகளையும் ரசிக்க வைத்திருப்பவர், மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கண்ணதாசனைப் போலவே, இவருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் காம்பினேஷன் அமர்க்களமாக அமைந்தது. (‘இன்று நமதுள்ளமே’ எனும் ’தங்கப் பதுமை’ படப் பாடலில் ஒரு வரி: ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்......‘ இந்த உவமைக்கு ஈடேது, இணையேது?!)

நீங்கள் இப்போது கேட்ட பாடலின் சில வரிகளைத்தான் பாருங்களேன்:

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்த
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி’

மற்றும்,

‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை – அந்த
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை’

என்ற வரிகளெல்லாம் (வைரத்தை விடுங்கள்!) சுத்தமான ப்ளாட்டினம் அல்லது (இன்றைய விலையில்) தங்கம் அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Sunday, September 11, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஏழு)

மெல்லிசை மன்னர்கள் இசையில் உருவான ஆறு அற்புதமான பாடல்களைக் கேட்டோம். அவர்களுக்கு சமகாலத்தில் கோலோச்சிய இன்னொரு மேதை, கே.வி.மகாதேவன் இசையில் உருவான ஒரு அரிய பாடலை இன்று கேட்கலாமா?

’அரிய’ என்று ஏன் கூறினேன் என்றால், இன்று நாம் கேட்கப் போகும் பாடல் இடம் பெற்ற ‘மகாலக்ஷ்மி’ என்ற திரைப்படத்தில், இன்று எஞ்சியிருப்பதெல்லாம் இந்தப் பாடலின் ஒலி மட்டுமே!

யோசித்துப் பார்த்தால்,அந்தக் காலகட்டத்திலும் அதற்கு முன்னரும் இசையமைத்த எல்லாருடைய பலமும் மெட்டில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இசை அமைக்க ஆரம்பித்த பிறகு தான், மெட்டுக்களுக்கு மட்டுமின்றி, வாத்தியங்களின் இசைக் கோர்வைக்கும், பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் வந்தது எனலாம்.

தமிழ்த் திரை இசைத் துறையில் மன்னர்களுக்கும் ஸீனியரான மகாதேவனின் பாடல்களின் வெற்றிக்கு, இசைக்கோர்வையை விடவும் மெட்டுக்களும், தாள வாத்தியங்களுமே பிரதான காரணமானது. (‘வண்ணக்கிளி’ படத்தில் வரும் ‘மாட்டுக்கார வேலா’ மற்றும் ’வண்டி உருண்டோட’ என்கிற நல்ல பாடல்களை நினைவுக்கு கொண்டு வாருங்கள்! தாள வாத்தியமான தபலாவின் பங்கு விளங்கும்). இந்த வகையில் மகாதேவனிடமிருந்து பல அருமையான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன.

இப்போது மகாதேவன் மெட்டமைத்து, இரண்டு ஈஸ்வரிகள், (எம்.எஸ்.ராஜேஸ்வரியும், எல்.ஆர்.ஈஸ்வரியும்) பாடிய ‘சின்னஞ்சிறு கண்ணன்’ என்கிற இந்தப் பாடலைக் கேளுங்கள்:


Chinnanjiru Kannan by Krishnamurthy80


முதலில், இந்தப் பாடலில் இந்த இரண்டு வித்தியாசமான குரல்களை உபயோகித்த யோசனையே ஒரு அருமையான விஷயம்! அடுத்ததாக, இவ்வளவு காலம் (ஏறத்தாழ 50 வருடங்கள்!) கடந்தும் ஒரு பாடல் நிலைத்து நிற்கிறது (அதாவது, மொத்தத் திரைப்படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும்!) என்பது இன்னும் எவ்வளவு பெரிய விஷயம்! என்ன ஒரு மெட்டு! ‘இனிக்கவே ஒன்று தா’ என்று ராஜேஸ்வரி கேட்கும் போது, அவருடைய குரலின் குழைவில், உலகையே மறந்து, சின்னஞ்சிறு கண்ணனிடம் நாமும் கெஞ்சி நிற்கிறோமல்லவா, அதுதான் இந்தப் பாடலின் தனிச் சிறப்பு! அவரின் குரலுக்கு (மிகவும்) இளமையான எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல் எவ்வளவு அழகாகத் துணை போகிறது! தபலாவும் இந்தப் பாடலின் இன்னொரு ஹீரோ என்பதை மறுக்க முடியுமா? இந்த ஒரு பாடலைத் தவிர, ஈஸ்வரிகள் இருவரும் இணைந்து வேறு பாடல்கள் பாடியிருப்பதாக நினைவில்லை – ஆனால், இது ஒன்றே போதுமே!


மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Wednesday, September 7, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஆறு)

இன்று ஒரு வித்தியாசமான குரலில் இன்னுமோர் சோகப் பாடலைக் கேட்கலாமா?.

எஸ்.ஸி.கிருஷ்ணன் என்கிற பின்னணிப் பாடகரைப் பற்றி நம்மில் அதிகமானவர்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால், அவர் பாடிய சில பாடல்களைச் சொன்னால், “ஓ, அவரா?” என்பீர்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில், ’ஏ, தில்லா(ன்) டோமரி’ என்ற பாடல் (படத்தில், மனோரமா நாடகமொன்றில் பாடி ஆடுவது போல) வரும். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். அவரோடு ஒரு ஆண் குரலும் இணைந்து ஒலிக்கும். அது, எஸ்.ஸி.கிருஷ்ணனுடையது. நடிகர் தங்கவேலுவிற்கு நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். நல்ல பாடகர். குரல் கொஞ்சம் ஸி.எஸ்.ஜெயராமனை ஒத்திருக்கும். அவரைப் பல இசையமைப்பாளர்கள் காமெடி பாடல்கள் பாடவைத்தே வீணாக்கிவிட்டார்கள். ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள் அவரின் குரலை, இரண்டு பழைய பாடல்களில் அற்புதமாக உபயோகித்திருக்கிறார்கள். இரண்டுமே அந்தந்தப் படங்களில் அசரீரியாகத்தான் வரும். அதில் ஒன்று, எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படத்தின் டைட்டில் ஒடும் போது வரும் ‘நாயகமே, நபி நாயகமே’ என்ற அருமையான பாடல், இன்னொன்று, இன்று நாம் கேட்கப் போகும், (‘போர்ட்டர் கந்தன்’ படத்தில் வரும்) ’வருந்தாதே, மனமே‘ என்ற பாடல்.

திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட நல்லவனான ஒரு போர்ட்டர், குடும்பத்தோடு ஊரை விட்டு ரயிலில் ஓடும் போது பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கிறது.

”எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும்,
அழுதாலும் தொழுதாலும் அதில் ஓரெழுத்தும் மாறாதே”

என்ற விருத்தத்தோடு ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடலான இதை எழுதியவரின் பெயர் நினைவிலில்லை.

பாட்டிற்குத் தாளம்? முதன்மையாக, ஜிகு,ஜிகு என்கிற ரயில் ஓடும் சத்தந்தான்! இதோடு, மற்ற ஒலிகளையும் கோர்த்திருப்பதைக் கவனமாகக் கேட்டுப் பாருங்கள்:

Varundhathe maname by Krishnamurthy80


இப்போது, ஒரு ஒப்பீட்டிற்காக கீழே இணைக்கப் பட்டிருக்கும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். ’போர்ட்டர் கந்தன்’ படத்திற்குப் பிறகு, (ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர்!) மன்னர்கள் இசையமைத்த ’பச்சைவிளக்கு’ படப் பாடலின் முகப்பு இசை, இது!

Kelvi pirandhadhu indru (Music) by Krishnamurthy80


காலங்கடந்த இசைக் கோர்வையில் என்ன ஒரு சீரான வளர்ச்சி!

அதிக வாத்தியங்களை (முக்கியமாக வயலின்களையும், ட்ரம்பெட் எனப்படும் காற்று வாத்தியத்தையும்) இணைத்து இசைக் கோர்வையில் விளையாடியிருக்கிறார்கள். இரண்டையுமே கேட்கும் அனுபவம் சுகமானது அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

Saturday, September 3, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஐந்து)

கர்நாடக இசையில், மனிதனின் ஆதார உணர்ச்சிகளைகப் பிரதிபலிக்கும் ராகங்கள் ஏராளம் உண்டு. நீங்கள், உங்கள் ‘மூடு’க்கேற்ற ராகத்தையும் பாடலாம் – அல்லது ஒரு ராகத்தைப் பாடியும் ‘மூடை’ வரவழைக்கலாம்! நமது திரைப்படங்களின் இசையை, (பாடல்களாகட்டும், பின்ன்ணி இசையாகட்டும்) அந்தந்தப் படத்தின் கதையே முடிவு செய்கிறது என்பதையும், நமது படங்களில் எல்லா ’மூடு’களும் பரவியிருக்கும் என்பதையும் சொல்லித் தெரியவேண்டியதில்லை! இதில், சோகத்தை வெளிப்படுத்தக்கூடிய ராகமாக ‘முகாரி’ என்ற ராகத்தை, சாதாரணமாகக் குறிப்பிடுவார்கள். (இங்கே ஒரு செய்தி: இசையமைப்பாளர் ஜி.ராமநாதன், காதலை வெளிப்படுத்தும் விதமாக ’கானடா’என்கிற ராகத்தில் பல நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். ‘முல்லை மலர் மேலே’ என்கிற உத்தமபுத்திரன் படப் பாடல் நினைவிருக்கிறதா? ‘அம்பிகாபதி’க்காக இசையமைக்க உட்கார்ந்த போது, பாடலாசிரியரின் சவாலை ஏற்றுப் போட்ட மெட்டுத்தான், முகாரி ராகத்தில் அமைந்திருக்கும், ‘வாடா மலரே, தமிழ்த் தேனே’ என்கிற அற்புதமான பாடல்!) முகாரி ராகத்தை விடவும் சோக உணர்வு அதிகம் தென்படும் ராகத்தின் பெயர், சுபபந்துவராளி. இந்த ராகத்தை ஒட்டிய மெட்டுக்களில், மெல்லிசை மன்னர்களிடம் மூன்று அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார், சுசீலா. அவை, ’பாலும் பழமும்’ படத்தில் வரும் ‘இந்த நாடகம், அந்த மேடையில் எத்தனை நாளம்மா’ என்ற பாடலும், ’ஆனந்த ஜோதி’ படத்தில் வரும் ‘காலமகள் கண் திறப்பாள், சின்னையா’ என்ற பாடலுமாகும். மூன்றாவது (வரிசையில், முதலாவது?!) பாடல், ’புதையல்’ படத்தில் பத்மினிக்காக சுசீலா பாடியிருக்கும், ‘ஆசைக் காதலை மறந்து போ’ என்பது. காதலனை மறக்க வேண்டிய கட்டாயத்தில் கதாநாயகி பாடுகிறாள். பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல். இதே படத்தில் வரும் ‘விண்ணோடும் முகிலோடும்’ உனக்காக, எல்லாம் உனக்காக, சின்னச் சின்ன இழை பின்னிப் பின்னி வரும்’ என்ற பாடல்கள் போல பிரபலமாகாத பாடல், ‘ஆசைக் காதலை...’. ஆனால் இசையமைப்பில் இந்தப் பாடல்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நல்ல பாடல் என்பதால் இங்கே இடம் பெறுகிறது! பாடலும் இசையும் உங்கள் நினைவலைகளைத் தூண்டுமென்ற நம்பிக்கையோடு இணைத்திருக்கிறேன். கேளுங்கள்:



மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

Friday, September 2, 2011

ஸீனியர் ஸிடிஸன்ஸ்!

இன்றைய மொழியில் சொல்வதானால், ‘பெரிசுகள்’! இந்த வயதிற்கு (65+) வந்திருக்கும் எல்லாருக்கும் இந்த நிலையில் உள்ள சிரமங்கள் தெரியும். பிறந்ததில் இருந்து எத்தனையோ கஷ்டங்களுக்குப் பின்னர் மனிதன் அடையும் பதவி இது!. வேலையிலிருந்து மட்டுமல்ல வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று ‘நிம்மதி’யாக இருக்க வேண்டிய பருவம் என்று மற்றவர்களும், ஏன், அரசாங்கமுமே பிரகடனப்படுத்துகிற சமயம் இது! ’நன்றாக வேலை செய்தோம், நல்ல குடும்பத் தலைவனாக இருந்தோம், இனி மேலே நல்ல ஓய்வான, மனதுக்குப் பிடித்த வாழ்வு வாழலாம்’ என்ற நியாயமான ஆசைகளை எதிர்நோக்கும்போது, நடைமுறை வாழ்க்கை, நம்மைப் பார்த்து நகைக்கிறது! ‘வாய்யா, வா, உன்னைப்போல எத்தனை பேரைப் பார்த்துவிட்டோம்’ என்று! ’உனக்கு என்னதானய்யா பிரச்னை? போட்டதைத் தின்றுவிட்டு, கிருஷ்ணா, ராமா என்று கிடக்கவேண்டியது தானே?’ என்கிறீர்களா?! உங்கள் வீட்டு நாய் கூட ‘போட்டதைத்’ தின்பதில்லை, ஐயா! அதற்கும் தனியான உணவும், பணிவிடையும், பராமரிப்பும் அவசியம்! (நாயை ’அதை’ என்று குறிப்பிட்டாலே முறைப்பவர்கள் உண்டு, தெரியுமா உங்களுக்கு? அதன் பெயரைச்சொல்லி மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நீங்கள் தான்!) இன்றைக்கு எத்தனை ஸீ.ஸிக்கள் கண்ணியத்தோடு வாழமுடிகிறது? அப்படியே வாழ்கிறவர்கள் அதற்குக் கொடுக்கும் விலை என்ன? பிள்ளைகள் அயல் நாட்டில் பிழைக்கப் போனால், அவர்களின் திருமணத்திற்குப் பிறகு இவர்களும் கூடவே ‘சம்பளமில்லாத வேலைக்காரர்களாகச்’ செல்ல வேண்டியிருக்கிறதே, இதில் எத்தனை பேர் இந்த ’உத்தியோக’த்தை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதன் இன்னொரு கோடியில், முதியோர் இல்லங்களில் தனியாகவோ, தம்பதிகளாகவோ கிடப்பவர்கள் என்ன மன நிம்மதியோடு வாழ்வார்கள்? முதியோர்களின் சுகாதாரப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு கண்டிருக்கிறோம்? சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல், கிடைத்த காசை, மோசமான முதலீடுகளில் தொலைக்கும் முதியோர்களுக்கு அரசாங்கம் என்ன உதவி செய்கிறது? பிள்ளைகளால் நிராதரவாக விரட்டப் படும் முதியோர்களின் கதி தெரியுமா உங்களுக்கு? ஒரு வங்கியிலோ அல்லது அரசாங்க அலுவலகத்திலோ இவர்கள் அவமானப் படுத்தப் படுவதை அறிவீர்களா? இவைகளைப்போல இன்னும் எத்தனை பதில் இல்லாத கேள்விகள்? இவை எல்லாவற்றிகும் பதில் இருக்கிறது! இன்றைக்கு நாம் வேண்டுமென்றே மறந்திருக்கும் ‘மனித நேயம்’ என்பதை பள்ளிப் பருவத்திலிருந்தே மீண்டும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். மனித நேயம் என்பது உறவுகளிடையேயும் வெளியிலேயும் ஊடுபாவாக இருந்தது, இன்று எங்கே தொலைந்தது? அதைக் கண்டுபிடித்து, நாட்டிற்காகத் தன் வாணாளைத் தியாகம் செய்த முதியோர்களுக்கு மரியாதையை மீட்க வேண்டியது, ஒரு தனி மனிதனின், ஒரு அரசாங்கத்தின் கடமை இல்லையா? இது நடைபெறாத நிலையில், இன்றைய முக்கியமான, யாருக்கும் வேண்டாத, தீண்டத்தகாதவர்களான - முதியோர்கள் எனப்படும் ஸீனியர் ஸிடிஸன்களே, நீங்கள் செய்யக்கூடியது இரண்டு தான்! ’எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்று வாளாவிருக்கலாம், அல்லது, என்னைப் போல,அவரவர் கையறு நிலையை நினைத்து காலன் வரும் வேளையை எதிர் நோக்கிக் காத்திருக்கலாம்!