Showing posts with label Jamunarani. Show all posts
Showing posts with label Jamunarani. Show all posts

Thursday, October 27, 2011

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!



(நண்பர்களே! மேலே இருக்கும் படத்திற்கும் இன்றைய பாட்டுக்கும் சம்பந்தமில்லாத சீர்காழி கோவிந்தராஜன், மெல்லிசை மன்னர்களோடு அமர்ந்திருக்கிறார். இவர்கள் மூவரும் தத்தம் துணைவியருடன் இருக்கும் ஒரு அரிதான புகைப்படம் என்பதால் இதை இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன்!)

சோகத்திலும் ஒரு சுகமிருக்கிறது என்று கண்ணதாசன் சொல்லியது மிகவும் உண்மை! நாம் ரசித்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் சோகமாகவே அமைந்திருப்பது தற்செயல் அல்ல!

இன்று, நமக்காக ஜமுனாராணி ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திற்காக ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்’ என்ற கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு சோகப் பாடலைப் பாடுகிறார்.

’கவலை இல்லாத மனிதன்’, கண்ணதாசனின் சொந்தப் படம். மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தார்கள். சந்திரபாபு கதாநாயகனாக நடித்திருந்தார். (இவர் கதாநாயகனாக நடித்த இன்னொரு படம் ‘குமார ராஜா’. அந்தக்காலத்திலேயே ஒரு படத்துக்கு ரூ.ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர், சந்திரபாபு!) இவரைத் தவிர, எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, டி.ஆர்.மகாலிங்கம் முதலியவர்கள் ’கவலை இல்லாத மனிதன்’ படத்தில் நடித்திருந்தார்கள். பாடல்கள் எல்லாமே அற்புதமானவை. பாருங்களேன், நமது இன்றைய பாடலைத் தவிர,

‘காட்டில் மரம் உறங்கும்,

கழனியிலே நெல் உறங்கும், என்ற ஜமுனாராணியின் இன்னொரு பாட்டும்,

‘சிரிக்கச் சொன்னார், சிரித்தேன்,

பார்க்கச் சொன்னார் பார்த்தேன்’ என்ற சுசீலாவின் பாட்டும்,

இந்தப் படத்திலேயே மிகவும் பிரபலமான,

‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ மற்றும்,

‘கவலையில்லாத மனிதன்’ என்ற

சந்திரபாபுவின் பாட்டுக்களும் கேட்கும் போதெல்லாம் இனிப்பவை!

இவை போதாதென்று, டி.ஆர்.மகாலிங்கமும் தன் பங்குக்கு,

‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா’

என்ற நல்லதொரு பாடலையும் பாடியிருப்பார்!

இதெல்லாம் சரி, நீங்கள் எல்லாரும் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியதைக் கேட்டிருக்கிறீர்கள். ராமமூர்த்தி பாடியதைக் கேட்டதுண்டோ?!

இந்தக் ‘கவலை இல்லாத மனிதன்’ படத்திற்காக (படம் வெளிவரும் முன்) ரேடியோ சிலோனில் மன்னர்கள் இருவரையும் பேட்டி கண்டார் மயில்வாகனன் என்ற புகழ் பெற்ற அறிவிப்பாளர். பேட்டியின் முடிவில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்னர்கள் இருவரும் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்’ பாடலின் சில வரிகளைப் பாடினார்கள்! தொடர்ந்து சந்திரபாபுவின் பாட்டும் முதல் முறையாக ஒலிபரப்பானது!

இன்றைய பாடலுக்கு வருவோம்!

ஜமுனாராணி, மன்னர்கள் இசையில் தனியாகப் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். (மகாதேவி திரைப்படத்தில் ‘காமுகர் நெஞ்சில் ஈரமில்லை’ என்ற பாட்டும், குலேபகாவலி படத்தில் ‘ஆசையும் என் நேசமும்’ என்று போதையில் பாடும் பாட்டும் இங்கே இடம் பெறத் தகுந்த சிறந்த பாடல்கள்).

காதலன் இருக்க, வேறொருவன் தன்னைப் பெண் பார்க்க வந்த போது, தந்தையின் வற்புறுத்தலால் ஒரு பெண் (எம்.என்.ராஜம்) பாடும் பாடல் இது. அவளைப் பெண் பார்க்க வந்திருப்பவர்களின் உற்சாகத்தைத் தாளத்தில் (தபலா, டோலக்) அழகாகக் காட்டும் மன்னர்கள், பெண்ணின் சோகத்தை, பாடுபவரின் குரலிலும், அவள் பாடும் வார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் (ஸாரங்கி, ஷெனாய், கிடார்) அற்புதமான மெட்டிலும், கோர்விசைப் பின்னலிலும் கொடுத்திருப்பார்கள்! இந்தப் பாடலில் வயலின் கூட மிகவும் சிறிதளவே உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது, தெரிகிறதா?

ஜமுனாராணியின் குரல் விசேஷமானது. பாடும் போதே குரலில் ஒரு சிறு உடைப்பு தெரியும். (சீர்காழியின் குரலிலும் இது உண்டு!). முக்கியமாகச் சோகப் பாடல்களில் இந்த உடைப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் பாடலுக்குத் தனி மெருகூட்டும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Penn paarkka maappillai by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

Thursday, September 15, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (எட்டு)

தமிழ்த் திரைப்படங்களில் டூயட் பாடல்களை டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில், (தமிழில் இவர்கள் இருவர் மட்டுமே 750 பாடல்களைச் சேர்ந்து பாடியிருப்பதாகவும், சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து 250 பாடல்களும், தனியாகச் சுமார் 1700 பாடல்களும் பாடியிருப்பதாகவும் சுசீலாவின் சொந்த வலைப் பூவிலிருந்து ஒரு தகவல்!) ஒரு மாறுதலாக, டூயட் பாடல்களில் ஆண்கள் குரலிலும் (’பொன்னொன்று கண்டேன்’, அவள் பறந்து போனாளே’ பாடல்கள்) மற்றும் பெண்கள் குரலிலும் பதிவான பல பாடல்கள் பிரபலமடைந்தன. (இதற்கு முந்தைய பதிவில் கேட்ட ‘சின்னஞ்சிறு கண்ணன்’ பாடல் போல!) இதைப் போன்ற முரணான குரல்களால் பாடப் பெற்ற பல டூயட் பாடல்கள் கேட்பதற்கு வெகு சுகமாக அமைந்தன.

இன்று போல் அல்லாமல், அந்தக் காலப் பாடகர்களின் குரல்கள் ஒன்றொன்றும் நன்கு வித்தியாசப் பட்டிருந்ததால், ஒரு பாட்டைக் கேட்ட உடனேயே பாடியவர் யார், இசையமைத்தது யார் என்பதையும், பல சமயங்களில், பாடலை எழுதியவரையும் கூடச் சரியாக ஊகிக்கமுடிந்தது!

இந்த இடத்தில், இன்னொரு தகவல்: மன்னர்களின் குருவான ஸி.ஆர்.சுப்பராமனுக்கு, ’இந்திப்பாடல்களைத் தழுவியே இசையமைப்பவர்’ என்றொரு பெயர் இருந்தது. (இத்தனைக்கும் இவர், ’தேவதாஸ்’ படத்தில் வரும் ‘துணிந்தபின் மனமே’ மற்றும் ‘உலகே மாயம்’ போன்ற மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்!) இதனால் மனம் புண்பட்டிருந்த சுப்பராமன், என்.எஸ்.கிருஷ்ணனின் ’மணமகள்’ படத்தில், ஒரு சவாலாக, கர்நாடக ராகப் பாடல்களை மட்டுமே கொடுத்து, அத்தனை பாடல்களையும் பிரபலமாக்கித் தன் திறமையைக் காட்டினார். உதாரணமாக, இந்தப் படத்தில் வந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற (ராகமாலிகை எனப்படும் பல ராகங்களை உள்ளடக்கிய) பாடல், எளிதில் அடைவதற்குக் கடினமான கர்நாடகக் கச்சேரி மேடைகளைச் சென்றடைந்து, இப்போதும், (அதாவது ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னரும்) கச்சேரி ரசிகர்களின் விருப்பப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனால், ’மணமக’ளில் நான் எடுத்துக் காட்ட வந்தது, இன்னொரு அற்புதமான ராகமாலிகையான ‘எல்லாம் இன்பமயம்’ என்கிற டூயட் பாடலை. இதை இரண்டு முரண்பட்ட குரல்களையுடைய எம்.எல்.வசந்தகுமாரியும் பி.லீலாவும் பாடியிருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் இசையமைப்பாளருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப்பாடல், இன்றும் சின்னத்திரையில் பல ’சூப்பர் சிங்கர்’களின் செல்லப் பாடலாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது! இந்தப் பாடலின் தேர்ந்தெடுத்த சுகமான ராகங்களையும், அவற்றிற்கு ஈடான ஸ்வர ஜதிகளையும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் நமக்கு சங்கீதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

இந்த உத்தியை, நமது பிற்கால மன்னர்களும் இன்ன பிற இசையமைப்பாளர்களும், பல பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். முரண்பட்ட குரல்களைக் கொண்ட சுசீலாவையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் வைத்து, ‘உனது மலர் கொடியிலே’, ’மலருக்குத் தென்றல் பகையானால்’ போன்ற எத்தனை தேனான பாடல்களை இன்றும் கேட்டு மகிழ்கிறோம்!

இப்போது, இன்று நாம் கேட்கப் போகிற (மெல்லிசை மன்னர்கள் இசையில்) ஒரு முன்னோடியான பாடலை, ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்திற்காக ஜமுனாராணியும், எல்.ஆர்.ஈஸ்வரியும் மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். கவனமாகக் கேளுங்கள், பாடலோடு இழைந்து வரும் வயலின்களும், தொடர்ந்து வரும் மாண்டலின் இசையும் நடுநடுவே தெளித்திட்ட குழலிசையும், ஒரே சீரான தாளமும் பாடலோடு நம்மையும் எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடும்! இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் கோர்விசையில், மாண்டலினுக்கு இசைவாக இன்னொரு ஸ்ருதியில் குழலை ஓட விட்டிருக்கிறதையும் அனுபவியுங்கள். (அந்தக் குழல் ’பிட்’ டை ஸெகண்ட்ஸ் என்று இசை மொழியில் கூறுவார்கள்):

Seyyum Thozhile Dheivam by Krishnamurthy80


இன்னொன்று - இங்கே இசையை மட்டுமே ரசிக்க வந்தவர்களை, பாடலின் வரிகளையும் ரசிக்க வைத்திருப்பவர், மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கண்ணதாசனைப் போலவே, இவருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் காம்பினேஷன் அமர்க்களமாக அமைந்தது. (‘இன்று நமதுள்ளமே’ எனும் ’தங்கப் பதுமை’ படப் பாடலில் ஒரு வரி: ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்......‘ இந்த உவமைக்கு ஈடேது, இணையேது?!)

நீங்கள் இப்போது கேட்ட பாடலின் சில வரிகளைத்தான் பாருங்களேன்:

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்த
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி’

மற்றும்,

‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை – அந்த
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை’

என்ற வரிகளெல்லாம் (வைரத்தை விடுங்கள்!) சுத்தமான ப்ளாட்டினம் அல்லது (இன்றைய விலையில்) தங்கம் அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!