Thursday, October 27, 2011

பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்!(நண்பர்களே! மேலே இருக்கும் படத்திற்கும் இன்றைய பாட்டுக்கும் சம்பந்தமில்லாத சீர்காழி கோவிந்தராஜன், மெல்லிசை மன்னர்களோடு அமர்ந்திருக்கிறார். இவர்கள் மூவரும் தத்தம் துணைவியருடன் இருக்கும் ஒரு அரிதான புகைப்படம் என்பதால் இதை இந்தப் பதிவில் இணைத்திருக்கிறேன்!)

சோகத்திலும் ஒரு சுகமிருக்கிறது என்று கண்ணதாசன் சொல்லியது மிகவும் உண்மை! நாம் ரசித்துக் கொண்டிருக்கும் பல பாடல்கள் சோகமாகவே அமைந்திருப்பது தற்செயல் அல்ல!

இன்று, நமக்காக ஜமுனாராணி ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக ‘பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்என்ற கண்ணதாசன் எழுதிய அருமையானதொரு சோகப் பாடலைப் பாடுகிறார்.

கவலை இல்லாத மனிதன், கண்ணதாசனின் சொந்தப் படம். மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருந்தார்கள். சந்திரபாபு கதாநாயகனாக நடித்திருந்தார். (இவர் கதாநாயகனாக நடித்த இன்னொரு படம் ‘குமார ராஜா’. அந்தக்காலத்திலேயே ஒரு படத்துக்கு ரூ.ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர், சந்திரபாபு!) இவரைத் தவிர, எம்.ஆர்.ராதா, எம்.என்.ராஜம், ராஜசுலோசனா, டி.ஆர்.மகாலிங்கம் முதலியவர்கள் கவலை இல்லாத மனிதன் படத்தில் நடித்திருந்தார்கள். பாடல்கள் எல்லாமே அற்புதமானவை. பாருங்களேன், நமது இன்றைய பாடலைத் தவிர,

‘காட்டில் மரம் உறங்கும்,

கழனியிலே நெல் உறங்கும், என்ற ஜமுனாராணியின் இன்னொரு பாட்டும்,

‘சிரிக்கச் சொன்னார், சிரித்தேன்,

பார்க்கச் சொன்னார் பார்த்தேன்என்ற சுசீலாவின் பாட்டும்,

இந்தப் படத்திலேயே மிகவும் பிரபலமான,

‘பிறக்கும் போதும் அழுகின்றாய்மற்றும்,

‘கவலையில்லாத மனிதன்என்ற

சந்திரபாபுவின் பாட்டுக்களும் கேட்கும் போதெல்லாம் இனிப்பவை!

இவை போதாதென்று, டி.ஆர்.மகாலிங்கமும் தன் பங்குக்கு,

‘நான் தெய்வமா, இல்லை நீ தெய்வமா

என்ற நல்லதொரு பாடலையும் பாடியிருப்பார்!

இதெல்லாம் சரி, நீங்கள் எல்லாரும் எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியதைக் கேட்டிருக்கிறீர்கள். ராமமூர்த்தி பாடியதைக் கேட்டதுண்டோ?!

இந்தக் ‘கவலை இல்லாத மனிதன்படத்திற்காக (படம் வெளிவரும் முன்) ரேடியோ சிலோனில் மன்னர்கள் இருவரையும் பேட்டி கண்டார் மயில்வாகனன் என்ற புகழ் பெற்ற அறிவிப்பாளர். பேட்டியின் முடிவில் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி மன்னர்கள் இருவரும் ‘பிறக்கும் போதும் அழுகின்றாய்பாடலின் சில வரிகளைப் பாடினார்கள்! தொடர்ந்து சந்திரபாபுவின் பாட்டும் முதல் முறையாக ஒலிபரப்பானது!

இன்றைய பாடலுக்கு வருவோம்!

ஜமுனாராணி, மன்னர்கள் இசையில் தனியாகப் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார். (மகாதேவி திரைப்படத்தில் ‘காமுகர் நெஞ்சில் ஈரமில்லைஎன்ற பாட்டும், குலேபகாவலி படத்தில் ‘ஆசையும் என் நேசமும்என்று போதையில் பாடும் பாட்டும் இங்கே இடம் பெறத் தகுந்த சிறந்த பாடல்கள்).

காதலன் இருக்க, வேறொருவன் தன்னைப் பெண் பார்க்க வந்த போது, தந்தையின் வற்புறுத்தலால் ஒரு பெண் (எம்.என்.ராஜம்) பாடும் பாடல் இது. அவளைப் பெண் பார்க்க வந்திருப்பவர்களின் உற்சாகத்தைத் தாளத்தில் (தபலா, டோலக்) அழகாகக் காட்டும் மன்னர்கள், பெண்ணின் சோகத்தை, பாடுபவரின் குரலிலும், அவள் பாடும் வார்த்தைகளிலும், வாத்தியங்களிலும் (ஸாரங்கி, ஷெனாய், கிடார்) அற்புதமான மெட்டிலும், கோர்விசைப் பின்னலிலும் கொடுத்திருப்பார்கள்! இந்தப் பாடலில் வயலின் கூட மிகவும் சிறிதளவே உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது, தெரிகிறதா?

ஜமுனாராணியின் குரல் விசேஷமானது. பாடும் போதே குரலில் ஒரு சிறு உடைப்பு தெரியும். (சீர்காழியின் குரலிலும் இது உண்டு!). முக்கியமாகச் சோகப் பாடல்களில் இந்த உடைப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திப் பாடலுக்குத் தனி மெருகூட்டும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Penn paarkka maappillai by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!

2 comments:

  1. ஜமுனா ராணியின் குரல் இருக்கட்டும். எங்கிருந்து இப்படியொரு அருமையான புகைப்படத்தைப் பிடித்தீர்கள்?

    ReplyDelete
  2. நெட்டில் சுட்டது!

    ReplyDelete