மனிதர்கள் தங்களுடைய எந்த வயதிலும் தயங்காமல், சலிக்காமல் அன்பு செலுத்துவது, தங்கள் அன்னையிடம்! அதைப் போலவே, எந்த வயதிலும் ரசிக்ககூடியது தாலாட்டை! இரண்டும் நினைக்கவே இனிப்பவை.
நமது திரைப் படங்களில் (இப்போது புறந்தள்ளப் பட்டு வழக்கொழிந்து வரும்) தாலாட்டுப் பாடலை,(’மழை கூட ஒரு நாளில் தேனாகலாம்’ போல) வெறும் தாலாட்டாக மட்டும் உபயோகித்திருப்பது மிகவும் அரிது. பெரும்பான்மையான தாலாட்டுகள், நீங்கள் ஏற்கனவே ரசித்த ‘தென்றல் வந்து வீசாதோ’ போல, அல்லது வரப்போகும் இன்றைய பாடல் போல சோகம் கலந்ததாகவே காணப்படுகின்றன. இது தற்செயலா அல்லது வேண்டுமென்றே கடைப்பிடிக்கப் படுகிறதா யானறியேன்!
அதே போல, பெரும்பாலான திரைத் தாலாட்டுகளும், (இந்தப் பாடல் உட்பட) ‘வால்ட்ஸ்’ (Waltz) என்ற ஆங்கிலேய நடனத்தின் தாளத்தையே ஒட்டி இருக்கின்றன. (இந்தத் தாளம் (டுண், டக்டக்) என்று தொடரும் ’ஒன்றில் மூன்று’ தாளம்).
நண்பர்களே, இன்றும், வரும் சில பதிவுகளிலும் சில சுகமான தாலாட்டுப் பாடல்களை நீங்கள் கேட்கவிருக்கிறீர்கள். 1940 – 70க்கு இடைப் பட்ட முப்பது ஆண்டுகளில், தாலாட்டின் கோர்விசையமைப்பில் எத்தனை மாறுதல்கள் இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் உயர்ந்த ரசனைக்கென்றே உருவாக்கப் பட்டவை என்பது (இவற்றைக் கேட்கும்போது) உங்களுக்கு விளங்கும்.
இந்தப் பதிவுகளில் (கூடிய மட்டிலும்) வேறு வேறு வித்தியாசமான குரல்களில் பாடல்களை ரசித்து வருகிறோம், அல்லவா? இன்றைய பாடகரின் குரலோ, சாதாரணமான குரல்களிலிடமிருந்து மிகவும் வேறுபட்டது. இவருடைய குரலைப் போல, இவருக்கு முன்னாலும் சரி, பின்னாலும் சரி யாருக்கும் அமையவில்லை. அவ்வளவு தனித்தன்மை கொண்ட அற்புதமான, இதமான, சுகமான குரல்,இது!
இவருக்கு மட்டுமில்லை, நமது சமகாலத்தில் கோலோச்சிய டி.எம். செளந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் போன்ற கம்பீரமான ஆண் குரல்களைக் கொண்டவர்களுக்கு ஈடாகவும் இன்று வரை வேறு குரல்கள் கிடைக்க வில்லையே! கிடைக்கவில்லையா, அல்லது இன்றைய இசையமைப்பாளர்கள் வர விடுவதில்லையா என்பது விவாதத்துக்குறியது! (மற்றொன்று, டி.எம்.எஸ், என்றவுடன் நினைவுக்கு வருவது, அவர் பாடியவற்றிலேயே உன்னதமான தாலாட்டான ‘ஏன் பிறந்தாய் மகனே’ என்ற ‘பாகப் பிரிவினை’ பாடல்!சரிதானே?)
சரி, இதோ, இன்றைய பாடலைப் பாட வருகிறார், தமிழ்த் திரையின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். இவருடைய குரலில் ஒலிக்கும் மணி ஓசையைப் போன்ற ஒரு மயக்கும் ரீங்காரம் அடடா, அதைக் கேட்டுத்தான் ரசிக்க வேண்டுமே தவிர, வார்த்தைகளால் வர்ணிக்க நிச்சயம் முடியாது.
இன்றைய அவருடைய பாடல், (1940களில் வெளி வந்த) ‘அசோக்குமார்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்றது. இசையமைத்தவர் பாகவதரின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்.
படத்தில், இளவரசனான நாயகன் ஏழையாகி, அவனுக்குக் கண் பார்வையும் போய்விடுகிறது. அப்போது தன்னுடைய குழந்தையைத் தூளியில் போட்டு, இந்தப் பாடலைப் பாடுகிறார். பாடலில் பியானோ முக்கிய இடம் வகிக்கிறது. தாளமோ பாடல் முழுவதையும் ஒரே கதியில் தொடருகிறது. இருப்பினும், எல்லாவற்றையும் பின் தள்ளிவிட்டு, பாகவதரின் மற்ற பாடல்களைப் போல, இதிலும் அவரின் குரலுக்கும், மெட்டுக்கும் தான் முதலிடம். பாடலைக் கேளுங்கள்:
Unnaiye anbudan by Krishnamurthy80
மீண்டும் சந்திக்கும் முன்னர்: சென்ற பதிவில் இணைத்திருந்த (யாரடி வந்தார்’) பாடலின் நல்ல ஒலிப்பதிவு இப்போது கிடைத்தது. மாற்றியிருக்கிறேன். அனுபவியுங்கள் நண்பர்களே, அடுத்த பதிவில் சந்திக்கும் வரை!
உன்னையே அன்புடன் வாரியணைக்கும்......என்ற பாகவதரின் வசீகரமான குரலைக் கேட்கும்போது எங்கேயோ போய்விடுகிறோம். அந்த அளவுக்கு அந்தக் குரலும் அந்த இசையும் கேட்பவர்களை வேறொரு தளத்திற்கு இட்டுச்செல்கிறது.தவிர, தாலாட்டுப் பாடல்களுக்கெல்லாம் வால்ட்ஸ் என்ற ஆங்கிலேய தாளத்தை ஒட்டியே இசையமைக்கப்படுகிறது என்ற தகவல்களெல்லாம் முற்றிலும் புதிது. மிக அரிய பாடல்களைத் தேடி எடுத்துத் தருவதுடன் மிக அரிய தகவல்களையும் தருகிறீர்கள், வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, அமுதவன்!
ReplyDeleteகாலத்தை வென்று நிற்கும் பாடல்கள் பாகவதருடையவை.
ReplyDeleteவருகைக்கு நன்றி சென்னைப் பித்தன் அவர்களே! பாகவதரின் குரலும் திறமையும் காலம் கடந்தவைதான்!
ReplyDelete