இங்கே பல பதிவுகளில் நாம் வித்தியாச மான குரல்களைப் பற்றிப் பேசும் போது பானுமதியின் குரலைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறோம். அவர் பாடிய ஒரு மென்மையான காதல் பாடலை இன்று கேட்போமா?
1949 ல் வெளிவந்த ஜெமினியின் ’அபூர்வ சகோதரர்கள்’, ஒரு பிரபலமான ஆங்கில நாவல் மற்றும் திரைப்படத்தைத் தழுவி ஆச்சார்யா என்பவரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. இந்தப் படம் பல்வேறு காரணங்களினால் சூப்பர் ஹிட் ஆனது. (பின்னாளில் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்து, ’நீரும் நெருப்பும்’ என்ற பெயரில் அதே கதையை மீண்டும் எடுத்தார்கள்).
பழைய அபூர்வ சகோதரர்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், இசை. ஜெமினியின் ஆஸ்தான இசையமைப்பாளர் களான எஸ்.ராஜேஸ்வர ராவ், எம்.டி.பார்த்தசாரதி ஆகியோர் இசை யமைத்திருந்தார்கள். சரித்திரக் (கற்பனைக்) கதையான இதில், ஒட்டிப் பிறந்த இரட்டைச் சகோதரர்களாக எம்.கே.ராதா நடித்திருந்தார். இவர்களில் ஒருவரைக் காதலிப்பார் கதாநாயகி பானுமதி. படத்தில் ஒரு காட்சியில் ராணுவ வீரர்களை ஏமாற்றிவிட்டு வெளியேற, பானுமதி,
‘லட்டு, லட்டு மிட்டாய் வேணுமா,
ரவா லாடு பூரியும் வேணுமா’
என்று ஒரு பாடல் பாடி ஆடுவார்.இந்தப் பாட்டில், தமிழோடு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் பாடிடுவார். அந்தப் பாடல் மிகவும் பிரபலமடைந்தது.
’அபூர்வ சகோதரர்கள்’ படம் முழுவதும் முடிந்து, வெளியிடத் தயாராகிவிட்ட நிலையில், வேறொரு இந்திப் படத்திற்காக ஜெமினியில் ஒலிப்பதிவு செய்யப் பட்ட (நமது இன்றைய) பாடலின் மெட்டைக் கேட்டாராம் எஸ்.எஸ்.வாசன். அந்த மெட்டினால் முற்றிலும் கவரப்பட்டு, ’அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் அதை இடம் பெறச் செய்தாராம்.
அந்த மெட்டை, எஸ்.ராஜேஸ்வர ராவ் இசையில் பானுமதி மிக இனிமையாகப் பாடியிருக்கிறார். பானுமதியின் குரலோடு மதுரமான பியானோ இசையும் பாடல் முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றது. ஆரம்ப இசையில் பியானோ வாசித்திருப்பது கேட்க எவ்வளவு சுகமாக இருக்கிறது பாருங்கள்! அது மட்டுமில்லை, பானுமதி பாடும் போது வாசிக்கப் படும் பியானோவின் கார்ட்ஸ் எவ்வளவு அழகாக இணைகிறது! தபலாவும், குழலும் இருந்தாலும் அவை வெறும் துணை மட்டும் தான். பியானோ என்கிற மேற்கத்திய வாத்தியத்தை நமது சங்கீதத்திற்கேற்ப ராஜேஸ்வர ராவ் எவ்வளவு அழகாகக் கையாண்டிருக்கிறார், என்பதையும், அத்துடன் (1948-49ல்) எவ்வளவு துல்லியமாக ஒலிப்பதிவு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கூடக் கவனியுங்கள்! படத்திலும் இந்தக் காட்சியை அழகாகப் படம் பிடித்திருப்பார்கள். பானுமதியின் கைகள் மேல் ராதாவின் கைகளை வைத்து இரண்டு பேரும் இணைந்து பியானோ வாசிப்பது போல காட்டுவார்கள். அந்தக் காலத்தில் இது மிகவும் செக்ஸியான சமாசாரம்! பாடலைக் கேளுங்கள்:
Apoorva Sagotharargal -Maanum Mayilum.mp3 by Krishnamurthy80
மீண்டும் இன்னொரு பாடலில் சந்திப்போம், நண்பர்களே!
பல துறைகளிலும் வித்தகர் என்று சொல்லப்பட்ட நடிகை பானுமதியின் செம அலட்டல் பேட்டிகள், மற்றும் நடவடிக்கைகள் பற்றி நமக்கு அவ்வளவாக அவர் மீது ஈடுபாடு கிடையாது. ஆனால் அவரின் வசீகரக்குரலும் அதில் இணைந்திருக்கும் கம்பீரமும் பிடிக்கும். அந்த வகையில் தாங்கள் இன்று இணைத்திருக்கும் பாடலும் நல்லதொரு பாடலே. பாராட்டுக்கள்.
ReplyDeleteநமக்கும் அப்படித்தான்! அந்த மாதிரி குரல் இருந்ததால் தானே அந்த அலட்டலும்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ReplyDelete