Friday, October 21, 2011

பாரதியும், மன்னர்களும், சக்கரவர்த்தியும்!










மூன்றுக்கு மேற்பட்ட தலைமுறைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்?

கவியரசு கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் போலத் தரமான பாட்டுகள் எழுதலாம். அல்லது, ஒரு எஸ்.வி.வெங்கட்ராமன், ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், மெல்லிசை மன்னர்கள், திரை இசைத் திலகம் போல காலத்தால் அழிக்க முடியாத மெட்டுக்களைக் காற்றில் உலவ விடலாம். அல்லது, எக்காலத்திலும் அழியாப் புகழ் பெற பாரதியைப் போல கவியாகிடலாம்!

இவை யாதும் கைகூடவில்லை என்றால் இருக்கும் திறமையை நான்கு ஆட்களை வைத்தாவது வெளிச்சம் போட்டுக் காட்டி, ‘நான் மும்மூர்த்திகளை விட உயர்ந்தவன் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம்! பொய்யையும் திரும்பத் திரும்பச் சொல்லியே அதை மெய்யென்று நம்ப வைத்து விடுகிற உலகம் தானே, இது!

ஆகட்டும், நாம் நமது வேலையைப் பார்ப்போம்! நாம் எடுத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் தமிழ்த் திரையுலகில் ஏகப்பட்ட ஜீனியஸ்கள் உலா வந்தனர். பீம்சிங், ஸ்ரீதர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்களும் அருமையான தொழில்நுட்ப வல்லுனர்களும், நடிக, நடிகையரும், பாடகர்களும் இவர்கள் ஒவ்வொருவரின் தனித் திறமைக்காகவே ஒரு படத்தைப் பல முறைகள் பார்க்க வைத்தனர். அதைத் தமிழ்த் திரையின் பொற்காலமென்றே சொல்ல வேண்டும்! (பல தடவைகள் பார்த்த ‘பாவமன்னிப்புபடத்தை, சில முறைகள் எம்.ஆர்.ராதாவின் நடிப்புக்காகவே பார்த்தது நினைவுக்கு வருகிறது!)

இன்று, சற்று வித்தியாசமான விருந்தொன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. பல ஜீனியஸ்கள் ஒன்று சேர்ந்தால் என்ன கிடைக்கும்? நமக்கு நல்ல செமத்தியான படைப்பு ஒன்று கிடைக்கும்!

பாரதியின் கற்பனைகள் வானத்தை விஞ்சியவை. இல்லாவிட்டால், அன்னியரின் இருண்ட ஆட்சியிலே, ஒரே சமயம் தேசபக்திப் பாடல்களையும் கண்ணன் பாட்டுகளையும், காணி நிலம் வேண்டும்’, ‘சிந்து நதி மிசை நிலவினிலே போன்ற கற்பனைப் பாடல்களையும் போன்ற பல காவியங்களை உருவாக்கியிருக்க முடியுமா?

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், கதை மற்றும் பாடலாசிரியராகிப் பின்னர் இயக்குனரானவர். அதாவது, இயக்குனர் ஸ்ரீதரின் வழி வந்தவர். பெரும் வெற்றி பெற்ற சாரதா, பணமா, பாசமா’, குலமா, குணமா படங்களை எழுதி, இயக்கியவர். இவரின் இன்னொரு படைப்புத்தான் ‘கை கொடுத்த தெய்வம்’. சிவாஜி, சாவித்ரி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.ஆர்.ராதா நடித்திருந்தார்கள். கண்ணதாசன், பாரதியார் பாடல்களுக்கு மெல்லிசைமன்னர்கள் இசை யமைத்திருந்தார்கள்.

படத்தில் சிவாஜி உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் போது அவர் கனவில் இந்தப் பாடல் வரும். அவரே பாரதியாராகி, ‘சிந்து நதியின் மிசை நிலவினிலேஎன்று பாட ஆரம்பிப்பார்.

சிவாஜி எத்தகைய அற்புதமான கலைஞன், என்பதில் யாருக்கேனும் சந்தேகம் (!) வந்தால், இந்தப் பாடல் காட்சியையும், ‘திருவிளையாடல்படத்தில் வரும் (கெளரிமனோகரி ராகத்தில் அமைந்த) ‘பாட்டும் நானேபாடல் காட்சியையும் போட்டுக் காண்பியுங்கள்! சிவாஜிதான் நடிப்புலகச் சக்கரவர்த்தி என்று ஒப்புக் கொண்டு விடுவார்! தேஷ் என்ற ராகத்தில் அமைக்கப் பட்டிருக்கும் இந்த ‘சிந்து நதியின் மிசைபாட்டில், தன்னுடைய முகம், இடதுகை (வலது கை கூட பாட்டின் பிற்பகுதியில் தான் தெரியும்!) இவற்றை வைத்தே நமது கண்களில் நீரை வரவழைத்திருக்கும் உத்தமக் கலைஞன் சிவாஜி!

இந்தப் பாடலைப் படத்தில் இணைக்க வேண்டும், அதை இந்த இடத்தில் சேர்க்கவேண்டும், இப்படித்தான் படமாக்க வேண்டும், என்று எண்ணிச் செயல் படுத்தியிருக்கும் கே.எஸ்.ஜியும் சாதாரணமானவரில்லை!

எல்லாவற்றிற்கும் மேலாக, பாடலுக்கு ஆரவாரமில்லாத பாரம்பரிய இசையமைத்திருக்கும் மன்னர்களின் பணி, மகத்தானது. பாடியிருக்கும் டி.எம்.எஸ் கூட ஒரு ஜீனியஸ்தானே! இந்த பாடலில் வரும் தெலுங்கு வரிகளை ஜே.எல்.ராகவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடியிருக்கிறார்கள்.

இது தேர்ந்த கலைஞர்களின் கூட்டு முயற்சி. இதில், இசையமைத்த மன்னர்களுக்கும் பாடியவர்களுக்கும் மட்டும் மரியாதை செய்வது சரியென்று படவில்லை. அதனால் பாட்டின் விடியோவை உங்களுக்கு அளிக்கிறேன். பார்த்து, கேட்டு இன்புறுங்கள்!

இன்னொரு பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!

3 comments:

  1. அனேகமாய் பாரதியின் இந்த ஒரு பாடலுக்கு மட்டும்தான் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அந்த ஒரு பாடல் செம ஹிட். அதுபோலவே பாரதிதாசனின் தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற ஒரு பாடலுக்கு மட்டுமே விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை. அந்தப் பாடலும் காலத்தால் அழிக்கமுடியாத பாடலாக நிலைத்துவிட்டது.பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் இசையமைக்கிறோம். அது காலத்தைக் கடந்து நிற்கிறமாதிரி இருக்கவேண்டும் என்று தீர்மானித்துச் செய்த காரியமாகவே படுகிறது. இப்படியொரு கைவண்ணம் எல்லாம் யாருக்கும் வந்துவிடுமா என்ன!

    ReplyDelete
  2. இல்லை, அமுதவன், எனக்குத் தெரிந்து, புதையல் படத்தில், பாரதியின் ‘நல்ல காலம் வருகுது’ என்ற பாடலுக்கு மன்னர்களும், கலங்கரை விளக்கம் படத்தில் பாரதிதாசனின் ‘சங்கே முழங்கு’ என்ற பாடலுக்கு எம்.எஸ்.வியும் இசையமைத்திருக் கிறார்கள். இதில் இரண்டாவது பாடல் மன்னர்கள் பிரிந்த உடனேயே வந்தது. பாடலின் தரத்தைப் பார்த்தால், இருவரும் போட்ட எண்ணற்ற மெட்டுக்களில் ஒன்று என்பது புரியும்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  3. விட்டு விடுதலை என்ற பாடல் ராகத்துடன் வந்தால் கேட்க அருமையாய் இருக்கும்

    ReplyDelete