நாம் கேட்கவிருக்கும் தாலாட்டிற்கு, இன்று ஒரு முக்கியமான தினம். இன்றைக்குச் சரியாக 59 வருடங்களுக்கு முன்னர், 17-10-1952ல் வெளிவந்த மிகப் புகழ் வாய்ந்த பராசக்தி திரைப்படத்தில் இப் பாடல் இடம் பெற்றது. பின்னர் நடிகர் திலகமான சிவாஜி கணேசன் அறிமுகமான இந்தப் படத்திற்கு இசை ஆர்.சுதர்சனம். இவர் நீண்ட காலம் ஏவிஎம் ஸ்டுடியோஸின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர். சில காலம் அவர்கள் திரைப் படங்கள் எடுப்பதை நிறுத்தியிருந்த போது அங்கிருந்து வெளியேறிப் பின்னர் ‘பூம்புகார்’, ‘அன்புக்கரங்கள்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கும் இசையமைத்தார்.
ஏவிஎம் நிறுவனத்தினரின் திரைப்படங்களிலும், சின்னத்திரையில் அவர்களின் தொடர்களிலும் முதலில் அவர்களின் முத்திரை தோன்றும் போது கிளாரிநெட்டில் ஒரு அறிமுக இசை வருமல்லவா, அதற்கு மோகனம் என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் இசையமைத்தவரும் சுதர்சனம் தான். (இதே போல ஜெமினி நிறுவனத்தின் இரட்டைச் சிறுவர் லோகோவிற்கும் மோகன ராகத்தில் தான் (ட்ரம்பெட் வாத்தியத்தில்) மெட்டு அமைக்கப் பட்டிருக்கும்).
இந்த முகப்பு மெட்டு பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல்: சின்னத்திரையும், வானொலி நிலையங்களும் 24 மணி நேரத் தொல்லைகளாக மாறுவதற்கு முன்னால், ஒவ்வொரு நிலையத்துக்கும் தனித் தனியே அறிமுக இசை உண்டு. அந்த மெட்டைக் கேட்ட உடனேயே நீங்கள், அது இன்ன ரேடியோ ஸ்டேஷன் அல்லது இன்ன டிவி சானல் என்று சொல்லிவிட முடியும். அத்தகைய மெட்டை, ஆங்கிலத்தில் Signature tune என்று குறிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாளும் நிகழ்ச்சிகள் தொடங்கு முன்னர் அந்த மெட்டு ஒலிக்கும். ஆரம்ப காலத்தில் சன் தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
சின்னத்திரையில் தூர்தர்ஷனுக்காகப் போடப்பட்ட பிரத்தியேக மெட்டுக்கு வட இந்திய ஸிதார் மேதை பண்டிட் ரவிசங்கர் இசையமைத்தார். இது ஷெனாய் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும். அதற்கு மிகவும் முந்தைய ஸ்தாபனமான அகில இந்திய வானொலிக்காக போடப் பட்ட மெட்டுக்கு, (இது வயலின் வாத்தியத்தில் இசைக்கப் பட்டிருக்கும்) ரவிசங்கரின் தந்தைதான் இசையமைப்பாளர்! இரண்டுமே சிவரஞ்சனி என்ற ராகத்தில் (’பாலும் பழமும்’ படத்தில் வரும் ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடலின் ராகம்) அமைந்தவை.
ஏவிஎம் படங்களில் பாரதியாரின் (தீராத விளையாட்டுப் பிள்ளை போன்ற) பல பாடல்களுக்கு இசையமைத்து அவற்றைக் கர்நாடகக் கச்சேரி மேடைகளுக்கும் கொண்டு சென்ற திறமையாளர் சுதர்சனம். அத்தோடு 1940களிலேயே டி.கே.பட்டம்மாள் என்கிற பிரபல கர்நாடக சங்கீதப் பாடகியை திரை இசைக்கு அறிமுகப் படுத்தியவரும் இவர்தான். இந்த டி.கே.பியின் பேத்தியான நித்யஸ்ரீ மகாதேவன் தான் (‘ஜீன்ஸ்’ படத்தில் ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ (பீம்ப்ளாஸ் ராகம்). ’படையப்பா’ படத்தில் ’மின்சாரக் கண்ணா’ (வசந்தா ராகம்) முதலிய பாடல்களைப் பாடியவர்.
இசையமைப்பாளர் சுதர்சனத்தின் தம்பி தான் ஆர்.கோவர்தனம். இவர், மெல்லிசை மன்னர்களிடமும், இளையராஜாவிடமும் ‘இசை நடத்துனர்’ (Orchestra Conductor) ஆக இருந்தவர். தனியே, கைராசி,’பட்டணத்தில் பூதம்’ போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார்.
பராசக்தி படத்தின் பாடலுக்கு வருவோம். படத்தில் ஸ்ரீரஞ்சனி என்கிற நடிகை சிவாஜி சகோதரர்களின் தங்கையாக வருவார். இயற்கையாகவே மிகச் சோகமான தோற்றம் கொண்ட இவர், பராசக்தி படத்தில் விதவையாக, தன்னுடைய குழந்தையைத் தாலாட்ட இந்தப் பாடலைப் பாடுவார். பாடுவது தங்கை என்ற உண்மையை அப்போதுதான் தெரிந்து கொள்ளும் சிவாஜி வீட்டின் வெளியே நின்று கேட்பது போலக் காட்சி.
இந்தக் காட்சிக்கான பாடலை எழுதியிருப்பவர் கலைஞர். வெளியில் பார்த்துக் கொண்டிருப்பவன் தான் குழந்தையின் சின்ன மாமன் என்று தெரியாமலேயே, அவன் என்னென்ன சீதனம் கொண்டு வருவார் என்று எதிர் நோக்கும் பாடலை அற்புதமாக எழுதியிருக்கிறார். பாடியிருப்பவரோ நமக்கு ஏற்கனவே அறிமுகமான (’தென்றல் வந்து வீசாதோ’) டி.எஸ்.பகவதி. இவர் குரலின் முழு இனிமையை இந்தப் பாட்டில் சுகமாக அனுபவிக்கலாம்! மிகவும் ஸிம்பிளான கோர்விசை. (மெட்டின் மீது எவ்வளவு நம்பிக்கை, பாருங்கள்!) சில வயலின்கள், அவற்றிற்கேற்ப கிடாரின் கார்ட்ஸ், மற்றும் வீணை, தபலா இவைகளை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை எங்கோ அழைத்துச் செல்லும் அமைதியான பாடலிது. இந்தப் பாடலின் தாளமும் waltz வகைதான் என்பதோடு, 60 வருடங்களுக்கு முந்தைய துல்லியமான ஒலிப்பதிவையும் கவனியுங்கள்!
இந்தப் பாடல் என் நெஞ்சில் நிலைத்திருப்பதற்கு ஒரு முக்கிய காரணமுண்டு. என் அன்னைக்கு மிகவும் பிடித்த பாடல் இது. என்னை அடிக்கடி பாடச்சொல்லிக் கேட்டதுண்டு. (சிரிக்காதீர்கள், அப்போதெல்லாம் நான் நன்றாகவே பாடுவேன், ஸ்வாமி!) பாடலைக் கேட்போமா?
Konjum mozhi sollum by Krishnamurthy80
அடுத்து வரும் தாலாட்டில் சந்திக்கலாமா நண்பர்களே!
No comments:
Post a Comment