Wednesday, October 5, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிமூன்று)


சென்ற பதிவில் உங்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்ட பாடகி ஜிக்கியைப் பற்றி இங்கே கொஞ்சம் பேசுவோமா? அவர் பாடிய மூன்று இனிமையான பாடல்களை இன்று கேட்கப் போகிறீர்களே!

இவருடைய இயற் பெயர், பி.ஜி.கிருஷ்ணவேணி என்றிருந்தாலும், ஜிக்கி என்று சொன்னால்தான் எல்லாருக்கும் தெரியும்! ஜிக்கி, தன்னுடைய மிக இளம் வயதிலேயே திரை இசைத்துறையில் கால் பதித்துவிட்டார்.

இதைக் கேளுங்கள்: ஞான சௌந்தரிஎன்ற ஒரு செவிவழிக் கதையை இரண்டு பிரபல நிறுவனத்தவர்கள் படங்களாக (ஏறத்தாழ சமகாலத்தில்) எடுத்து வெளியிட்டனர். அவற்றில், புகழ் மிக்க ஜெமினி நிறுவனத்தின் தயாரிப்பு படுதோல்வியடைந்தது! ஸிடாடெல் ஸ்டுடியோஸ் ஜோஸப் தளியத் (ஜூனியர்) (இவர் தான் பின்னாளில் ஜெய்சங்கரை அறிமுகம் செய்தவர்). தயாரித்து, இயக்கி, டி.ஆர்.மகாலிங்கம், எம்.வி.ராஜம்மா நடித்து, எஸ்.வி. வெங்கடராமன் இசையமைத்திருந்த படமோ பிய்த்துக் கொண்டு ஓடியது! இதற்கு ஒரு காரணம், கிறித்துவ மத கோட்பாடுகளைத் தெளிவாகப் படத்தில் காட்டியிருந்தது. இன்னொரு மிக முக்கியமான காரணம்: படத்தின் இசை! இந்தப் படத்தில், பாடகி பி.ஏ.பெரியநாயகி பாடியிருந்த ஜீவிய பாக்கியமே’, வெட்டுண்ட கைகள் என்று எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்! இப்போது வேண்டுமானால் கூட, சென்ற தலைமுறையைச் சேர்ந்த கிறித்துவ நண்பர்களைக் கேட்டுப் பாருங்கள்! ‘ஞானசெளந்தரிஎன்ற உடனே அவர்கள்,

அருள் தாரும், தேவமாதாவே,

ஆதியே இன்ப ஜோதியேஎன்று

பாடவே ஆரம்பித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்! அவ்வளவு தூரம் ரசிகர்களின் மனம் கவர்ந்த இந்தப் பாடல், ஞான செளந்தரிபடத்தில், சிறுமி ஞானம், மங்கையாகுவதைப் பாட்டில் காட்டிடும் காட்சியில் வருகிறது. அதில், மங்கைக்காக பி.ஏ.பியும், சிறுமிக்கான போர்ஷனை இளம் ஜிக்கியும் பாடியிருக்கிறார்கள்! திரை இசைத் துறையில் ஜிக்கியின் முதல் பாடல் இது! எஸ்.வி. வெங்கடராமன் என்கிற மோதிரக் கையால் இப்படிக் குட்டுப் பட்ட ஜிக்கி, பின்னாளில் எவ்வளவு புகழ் பெற்றார் என்பது உங்களுக்கே தெரியும்.

(அப்போது புகழின் உச்சியில் இருந்த குமாரி கமலா எனும் பிரபல பரத மற்றும் திரை நாட்டிய தாரகையை ஒரு பாடல் பாட வைக்க வேண்டுமென்று ‘ப்ரஷர்வந்தபோது, அவரின் குரல் மைக்குக்கு ஏற்றதில்லை என்று நிராகரித்த தைரியக்காரர், இந்த எஸ்.வி.வி!) அவருடைய இசையமைப்பில் அற்புதமான சில பாடல்களைப் (இன்று நாம் கேட்கவிருக்கும் மூன்று பாடல்கள் உட்பட) பாடியுள்ளார், ஜிக்கி.

ஜிக்கி க்கும் (டி.கே.பகவதியைப் போல) அருமையான, மென்மையான குரல். ஆனால் இவர் அந்தக் காலத்திலேயே (பிற்கால எல்.ஆர்.ஈஸ்வரியைப் போல) தனது திறமையினால் குரலில் ஜாலங்கள் செய்து பல கதாநாயகிகளுக்கும் குரல் கொடுத்தார். நிறைய ‘க்ளப் டான்ஸ்,காமெடிப் பாடல்கள் பாடினார். சுசீலாவுக்கு இணையாகப் புகழும் சேர்த்தார். திரை வாழ்வில் பாடகர் ஏ.எம். ராஜாவோடு பல இனிமையான டூயட்களைப் பாடியவர், பின்னர் அவரையே மணந்து, நிஜமான இல்வாழ்வில் நிம்மதியின்றி மறைந்தார் என்பது ஒரு மகா சோகம்!

இன்று நாம் கேட்கவிருக்கும் ஜிக்கியின் முதல் பாடல், ‘கண்கள்என்ற திரைப்படத்தில் வந்தது. (இது, நடிகர் ஸஹஸ்ரநாமத்தின் ‘ஸேவாஸ்டேஜ்நாடகக் குழுவினரால் நாடகமாக வெற்றி பெற்ற கதை. இதே குழுவினரோடு, இந்த நாடகத்தில் சிவாஜியும் நடித்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். தவிரவும், தேவிகா என்கிற பிரமீளாவும் இந்தக் குழுவில்தான் நடிப்புப் பயிற்சி பெற்றார் என்கிற உப தகவலையும் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியம்!)

கண்கள்படத்தின் பாடல்களை பலர் எழுதியிருப்பதால், இந்தக் கருத்தாழம் மிக்க பாடலை எழுதியவர் பெயர் தெரியவில்லை. சுத்தமான கர்நாடக சங்கீத ராகமான ‘கல்யாணியில் அமைந்திருக்கிறது, இப்பாடல், (இதே ராகத்தில் அமைந்த மற்ற பாடல்கள்: மன்னர்களின் ‘தங்கப் பதுமையில் ‘முகத்தில் முகம் பார்க்கலாம்’, எம்.எஸ்.வியின் தவப்புதல்வனில் இசை கேட்டால் புவி அசைந்தாடும்மற்றும் பலப்பல! இளையராஜா இந்த ராகத்தில் ஏகப்பட்ட பாடல்களைப் போட்டு, கல்யாணியை, உண்டு, இல்லை என்று பண்ணிக் கொண்டிருக்கிறார்! அவற்றில் ஒன்று, ‘சிந்துபைரவியில் யேசுதாஸ் பாடும் ‘கலைவாணியே). இன்றைய பாடலுக்கு வருவோம்.

காதலாகி, கண்ணீரும் மல்கி என்ற தொகையறாவோடு,

‘ஆடிப் பாடி தினம்

தேடினாலும் அவன் பாதம் காணமுடியாது என்று

ஆரம்பிக்கும் பாடல், கடைசியில், ஜிக்கியின் குரல் உச்சத்திற்குப் போய்,

‘கற்புள்ள மாதர்கள், காக்கும் உழவர்கள்,

கருத்தினில் வாழ்கிறான் கடவுள் என்றறியாமல் (ஆடிப் பாடி) என்று

பாடலை முடிக்கும்போது, மெய் சிலிர்க்கிறது! ஜிக்கியின் குரலையும், பாடலின் கோர்விசையையும் ஊன்றிக் கேட்கும்போது, உங்களுக்கும் நிச்சயம் சிலிர்க்கும்! பாடல் இதோ:

Aadip paadi dhinam by Krishnamurthy80

அடுத்த இரு பாடல்களும், ஜெமினி கணேசன், சாவித்ரி, சந்திரபாபு நடித்த ‘மாமன் மகள்என்ற படத்திலிருந்து வருகிறது. (இந்தப் படத்தில் சந்திரபாபுவும் டி.எஸ்.துரைராஜ் என்கிற காமெடியனும் பாடிய ‘கோவா மாம்பழமேஎன்னும் பாடல் இன்று கூட ஒலித்துக் கொண்டிருக்கிறது!)

இதில் வரும் முதல் பாடலில், காதலைக் கொண்டாடிக் காதலி பாடுகிறாள், ‘ஏனென்று நீ சொல்லு தென்றலேஎன்று. மற்றது, தன்னுடைய அதே காதல் முறிந்துவிடுமோ என்கிற ஆதங்கத்தில் பாடும், ‘ஆசை நிலா சென்றதே என்ற சோக கீதம்!

இரண்டு பாடல்களிலும் குரலும், மெட்டும், உணர்ச்சிகளும் எப்படித் கொப்பளிக்கின்றன, பாருங்கள்! அதற்கு, வாத்தியங்கள் தான் எவ்வளவு அனுசரணை! இரண்டு பாடல்களிலும் வயலின்களும், சோகப்பாட்டில் ஷெனாயும் (நாதஸ்வரத்தின் தம்பி போல அதன் அரை அளவில் இருக்கும் காற்று வாத்தியம் இது! நாம் திரையில் சோகத்துக்கும், வடநாட்டில் நிஜத் திருமணத்திற்கும் உபயோகிக்கப்படுத்துவது!) அருமை, அருமை! முக்கியமாக, இரண்டு பாடல்களிலும், தபலா, டோலக் கின் அழுத்தமான வாசிப்புதான் பாடல்களின் ஜீவன் என்பது மறுக்க முடியாத உண்மை யல்லவா?!

மூன்று பாடல்களும் தனித்தனியே அனுபவிக்கப் பட வேண்டியவை. சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இங்கே இணை சேர்க்கப் பட்டுள்ளன. பொறுத்தருளுங்கள்!

பாடல்கள் இதோ:

Yean endru Nee sollu by Krishnamurthy80


Aasai Nila sendradhe by Krishnamurthy80

மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

No comments:

Post a Comment