இசையமைப்பாளர்கள் பாடுவது புதிதல்ல. மன்னர்களில் ஒருவரான எம்.எஸ்.விசுவநாதன் பாடகராகவே மாறியதை அறிவீர்கள். அவரோடு ராமமூர்த்தி ரேடியோ சிலோனில் பாடியது பற்றி நான் எழுதியிருந்ததும் நினைவிருக்கும். இன்னும், அந்தக் காலத்திய ஜி.ராமநாதனும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். தற்காலத்தில், இளையராஜா, தேவா போன்ற பலரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்கள்.
ஆனால் இன்று நாம் ரசிக்கப் போகும் பாடல், மிகவும் அரியது. இந்த இசையமைப்பாளர், இந்தப் பாடலைப் பாடும் போது அவ்வளவு புகழ் பெற்றிருக்கவில்லை! இசையமைப்பாளராகப் புகழ் பெற்ற பிறகோ, அவர் மைக்’கின் பக்கமே வரவில்லை! திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனைப் பற்றித் தான் சொல்கிறேன். திரைக்காக அவர் பாடியிருக்கும் ஒரே பாடலை இன்று கேட்கப் போகிறோம். அவருடன் இணைந்து, பி.லீலா பாடியிருக்கிறார். கேட்கும் படியான குரல் இருந்தும் ஏனோ கே.வி.எம் தொடர்ந்து பாடவில்லை!
பழைய பாடல் ரசிகராகிய உங்களுக்கு, இந்தப் பாட்டைக் கேட்கும் போதே, ‘இதே மெட்டை வேறு எங்கோ கேட்டிருக்கிறோமே’ என்று ஒரு சந்தேகம் வரும்! பி.லீலாவின் குரல் செய்யும் ஜாலமிது!
1950களில் வெளிவந்த இந்தப் பாடலும், 1970களில் வெளிவந்த ஜெமினியின் ‘இரும்புத்திரை’ படத்தில் எஸ்.வி.வெங்கடராமன் இசையில் பி.லீலாவும் டி.எம்.சௌந்திரராஜனும் இணைந்து பாடியிருக்கும்
‘நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்’
என்ற பாடலும், திரை இசைத் திலகத்தின் இசையில் ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் இடம் பெற்ற
‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’
எனும் சுசீலாவின் பாட்டும் ஒத்த மெட்டைக் கொண்டவை. இந்த மூன்று பாடல்களுமே ஷண்முகப்ரியா எனும் கர்நாடக சங்கீத ராகத்தைத் தழுவியவை!
இருபது வருட இடைவெளியிலும் பி.லீலாவின் குரலில் மாற்றம் தெரியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்! அயராத சாதகத்தின் (பயிற்சியின்) விளைவு, அது! அதனால்தான் அந்தக் கால பின்னணிப் பாடகர்களால் எவ்வளவு பெரிய, கஷ்டமான பாட்டாக இருந்தாலும் ஒரே மூச்சில், ஒரே டேக்கில் பாடமுடிந்தது.
வழக்கமான திலகத்தின் இசையைப் போலவே, பாரம்பரிய வாத்தியங்கள், பாரம்பரிய இசை! இனியும் தாமதப் படுத்தாமல் பாடலை ரசிக்க உங்களை அழைக்கிறேன்:
Kannodu Kannai Rahasiam - K.V.Mahadevan & P.Leela.mp3 by Krishnamurthy80
இன்னொரு பாடலுடன் அடுத்த பதிவில் சந்திப்போம், நண்பர்களே!
இந்தப் பாட்டைக் கேட்டிருக்கிறேன்,ஆனால் கே.வி.எம்.பாடியது என்று தெரியாது.நன்றாகப் பாடியிருக்கிறார்.பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசென்னைப் பித்தனுக்கு என் நன்றி. இந்தப் பாடல் ’மதன மோகினி என்கிற திரைப்படத்தில் இடம் பெற்றது எனும் தகவல் விட்டுப் போனது.
ReplyDelete