சென்ற பதிவில் கேட்ட ஒரு சுத்தமான கர்நாடக சங்கீதப் பாட்டுக்குப் பின்னர் இன்று இன்னொரு முழுமையான மெலடியை அறிமுகம் செய்யவிருக்கிறேன்.
பொதுவாக, ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்ததும் ஒலிப்பதிவிற்குப் போவதற்கு முன், எந்த வாத்தியம் எந்த இடத்தில் எப்படி வரவேண்டும் என்பதை இசைக் குறிப்பாக எழுதிக் கொடுத்துவிடுவது உதவி இசையமைப்பாளர்களின் பணி. இந்தக் குறிப்பை (வாத்தியங்களின்) arrangement என்பார்கள். பின்னர்தான் ஒலிப்பதிவின் போது ஒருவர் நின்றுகொண்டு (தாளம் காண்பிப்பதுபோல) கைகளை வீசி, இந்தக் குறிப்பின் படி பாடல் இருக்கிறதா என்று கவனிப்பார்........
1959ல் ’ராஜா மலையசிம்மன்’ என்று ஒரு திரைப்படம் வெளிவந்தது. இது, தெலுங்கிலும் தமிழிலும் ஒரே சமயம் வெளியிடப்பட்டது. வெற்றியடையாத இந்தத் திரைப் படத்திலிருந்து, என்னைப் போன்ற மெல்லிசைமன்னர்களின் உண்மை விசுவாசிகளுக்கு (பயப்படவேண்டாம்! காலையில் தமிழ்த் தினசரியில் விளம்பரங்கள் படித்ததின் விளைவு!) மட்டும் நினைவிருப்பது, இந்தப் படத்திற்கு மெல்லிசை மன்னர்கள் இசை என்பதும், இன்று நீங்கள் ரசிக்கப் போகும் பாடலும் தான்!
கவிஞர் மருதகாசி எழுதியுள்ள இந்தப் பாடலை, பி.பி.ஸ்ரீநிவாஸ் – சுசீலா இருவரும் பாடியிருக்கிறார்கள். இது ஒரு முழுமையான மெலடி என்று ஏன் சொன்னேன்? வாருங்கள் அலசலாம்!
பாடலின் ஆரம்ப இசையை குழல் ஆரம்பித்து வைக்கிறது. (ஒன்று கவனித்திருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இப்போதும் கூடப் பலசமயங்களில், குழல் இசைக்கும்போது கூடவே க்ளாரிநெட் அல்லது சாக்ஸபோன் துணைவரும். செவிக்குச் சுகமாக இருக்க வேண்டி இந்த ஏற்பாடு)
கார்ட்ஸ் (chords) என்றால் என்ன என்பதை இந்த ஆரம்பக் குழல் இசையின் இடையில் வரும் (ஜங், ஜங் எனும்) கிடார் மற்றும் டபிள் பேஸ் தாள ஒலியிலிருந்து புரிந்துகொள்ளலாம். நடுவில் பல வயலின்களும் சேர்ந்து இசைத்து, மாண்டலின் மூலமாகப் பாட்டின் பல்லவியைத் தொட்டு விடுகிறார்கள். இந்த மாண்டலினுக்கும் பாட்டின் பல்லவிக்கும் டோலக் எனும் தாளவாத்தியம் எவ்வளவு அழகாகக் கோர்க்கப்பட்டிருக்கிறது, பாருங்கள். அதே சமயம் பாட்டின் சரணத்தில் தபலாவும் சேர்ந்து கொள்கிறது. பாடகர்களும் பல இடங்களில் ‘ஸெகண்ட்ஸ்’ முறையில் (ஒருவர் மெயின் ஸ்ருதியிலும் மற்றவர் வேறொரு ஸ்ருதியிலும்) பாடியிருக்கிறார்கள். சுசீலாவோ, பி.பி.எஸ்’ஸின் குரலை ஒத்துத் தன்மையாகப் பாடியிருக்கிறார். பாட்டின் கோர்விசையோ, எழுத்தை மீறியது!
மொத்ததில், மூன்று நிமிடங்களுக்கும் மேல் போவதே தெரியாமல் அமர (அசர?!) வைக்கும் பாட்டு! கேளுங்கள்:
Azhage Amudhe - Raja Malaya simhan.mp3 by Krishnamurthy80
மீண்டும் மற்றொரு பாட்டுடன் சந்திக்கலாம், நண்பர்களே!
No comments:
Post a Comment