அன்று திருச்சி நகரை நோக்கிச் செல்லும் நகரப் பேருந்து. ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது, தலையை மட்டுமே திரும்ப முடிந்ததால், வேறு வழியில்லாமல் சுற்றி நின்ற மனிதர்களைப் படிக்க ஆரம்பித்தேன். அயல்நாடுகளில் மட்டுமல்ல, இங்கும் கூட ‘people watching’ அதாவது மக்களை நோட்டமிடுதல் ஒரு சுவாரஸ்யமான விஷயம்! என்னுடைய இன்றைய அனுபவத்தைக் கேளுங்கள்!
எட்டரையிலிருந்து (இது பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர், ஐயா!) என்னுடைய நிறுத்தத்துக்குக் காலை எட்டரைக்கு (இது காலம்!) வரவேண்டிய டௌன் பஸ், ஒரு வழியாக ஒன்பதே காலுக்கு வந்தது. சொல்லவே வேண்டாம். வழக்கமாக (எரிச்சலோடு) சொல்வது போல, ‘பேய்க் கூட்டம்’! எப்படியோ ஏறிவிட்டேன் என்பதைவிட, நடுவில் மாட்டிக் கொண்டதால் ஏற்றிவிட்டார்கள் என்பதுதான் உண்மை! என் பங்குக்கு நானும் முட்டி, மோதி, இரண்டு கால்களையும் வைக்கும் அளவுக்கு இடம் துழாவி, எப்படியோ உந்தின் நடு சென்டருக்குச் சென்று விட்டேன்.
பின் வாயில் அருகில் நின்று (?) கொண்டிருந்த நடத்துனர், மக்களை உள்ளே தள்ளிவிட, ஆனமட்டும் கூவிக் கொண்டிருந்தார். பக்கத்தில் இருந்தவர், (இத்தனை நெரிசலிலும்!) சட்டைப் பைக்குள் கை விட்டு, பான் பராக் பொட்டலம் எடுத்து, கிழித்து, பாககை வாயில் போட்டுக் கொண்டே, ‘எங்க போறது, முன்னால இருக்கறவுக போனாத்தானெ’ என்று முனக ஆரம்பித்தார்! வண்டியில் வழக்கம் போலவே சில மொபைல்கள் பல பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தன. இந்த இரைச்சல் போதாது என்று வண்டிக்குள்ளேயும் குத்துப் பாடல் கதறிக் கொண்டிருந்தது! திடீரென்று பாடல் மாறி ’பரமசிவன் கழுத்திலிருந்து’ என்று ஒலிக்க ஆரம்பித்ததும், பல குரல்கள் டி.எம்.எஸ் கூட கோரஸ் பாட ஆரம்பித்தன! இவர்களில், நின்று கொண்டிருந்த பலர், வண்டியின் கூரையில் விரலால் தாளம் தட்டித் தங்கள் ரசனையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தார்கள்.
என் பின்னே நின்றிருந்தவர் தன்னுடைய தொப்பையால் என் முதுகில் முட்டிக் கொண்டிருந்தார். வண்டி செல்லும் வேகத்தில் நான் அரை அடி முன்னோ, பின்னோ நகர்ந்தாலும் அவர் தொப்பை, ஏதோ என்னுடலில் ஒரு அங்கம் போலச் செயல் பட்டுக் கூடவே வந்தது! (இந்த மாதிரி மனிதர்கள் பலரைப் பார்த்திருக்கிறேன். இவர்கள், கண் பார்வையைச் சுழல விட்டுக் கொண்டு, தொப்பை மூலமே வரிசையில் நகருவார்கள். வெறும் இருவர் மட்டுமே வரிசையில் இருந்தாலும் இப்படித்தான் செய்வார்கள்!).
இன்னொருவரோ, அணுகுண்டே விழுந்தாலும் சரி, அம்மாவுக்கும் ஐயாவுக்குமான லேடஸ்ட் அறிக்கைப் போரைப் பற்றிய செய்திகளைப் படித்தே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவர் போல, ஒரு வார இதழை இரண்டாக மடித்து, அந்தச் செய்தி பிரசுரமாகி இருக்கும் பக்கத்தைக் கண்ணுக்கு மிக அருகில் வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருந்தார். விட்டால் பத்திரிகைக்கு உள்ளேயே போய்விடுவார் போல! அவர் மூக்குக் கண்ணாடியோ, அவர் விரல்களின் நடுவில் தொங்கிக் கொண்டிருந்தது!
அசௌகரியமாக நின்றுகொண்டிருந்த சில கிராமத்துப் பெண்டிர் தங்கள் சண்டையைத் தொடர்ந்து கொண்டு பேருந்துகளைச் சரியாக விடாத அரசாங்கத்தையும் (நடத்துனரையும்!) வறுத்துக் கொண்டிருந்தார்கள்! இள வயதினர், நடத்துனரின் அறிவுரை காதில் விழாதது போல, ஒடும் வண்டியில் தொங்கிக் கொண்டும், வண்டி நிற்கும் போது (ஏறத் தாழ ஐந்தாறு பேர்) எல்லாரும் இறங்கிக் கொண்டு, புறப்படும் போது எல்லாரும் மீண்டும் தொற்றிக் கொண்டும் இருந்தார்கள். இதில் என்ன சுகமோ?!
சுற்றி நடப்பது எதையும் கண்டுகொள்ளாமல் ஒருவர் ஏதோ ஸ்லோகத்தை முணுமுணுத்துக் கொண்டு, உலகத்தைப் பார்வையாலேயே வெறுத்துக் கொண்டிருந்தார்!
’என்னதான் நடக்கும், நடக்கட்டுமே’ என்று தம் அன்னையின் மடியிலோ, தோளிலோ, நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள், சில கொடுத்து வைத்த பச்சிளம் பாலகர்கள்! சில அன்னையரோ, தம் சிறார்களை இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் மத்தியிலோ அல்லது அவர்கள் மடியிலோ இருத்திவிட்டுத் தற்காலிக நிம்மதி அடைந்து கொண்டிருந்தார்கள்!
நிறுத்தங்களில், சில பயணியர் தாங்கள் ஏற்றியிருந்த மூட்டைகள், காய்கறிக் கூடைகள், பெரிய பைகள் இவற்றையும் இறக்குவதற்கும், அந்த நிறுத்தங்களில் ஏற முயன்ற பயணிகளோடும், நடத்துனரோடும் போடும் இரைச்சலும் சேர்ந்து கொண்டு..... பேருந்து ஒரு வழியாக சத்திரம் பஸ் நிலையத்தை எட்டியது. ‘அப்பாடா’ என்று இறங்க முயற்சித்தால், அங்கே காத்திருக்கும் கூட்டம் எங்களை இறங்க விடாமலும், அவர்கள் ஏறமுடியாமலும்....ஏன் கேட்கிறீர்கள்? அதற்குள் பேருந்தின் ஜன்னல் வழியாக கர்சீப், புத்தகம், துண்டு, செய்தித் தாள் இன்ன பிற வஸ்துக்கள் இருக்கைகளை ஆக்ரமித்துவிட்டன! ஸீட் ரிஸர்வேஷனாம்! கடைசியில் எப்படி உந்தில் ஏறினேனோ, அவ்வாறே மக்கள் மத்தியில் மிதந்து எப்படியோ விழாமல் தரையில் நின்றேன்! ஒரு இருபது நிமிடப் பயணத்தில் எவ்வளவு அனுபவம் பாருங்கள்!
சிற்றிலக்கியப்பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை விடவும் புரிகிற மாதிரியான வர்ணனையுடன் தங்கள் பயண அனுபவம் அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஏதாவது பாலியல் தொடர்பான தகவல்களைச் சேர்த்திருந்தீர்களேயானால் உண்மையிலேயே சிறுகதை என்றாகியிருக்கும். வாய்ப்பைத் தவறவிட்டு விட்டீர்கள் போங்கள்.
ReplyDeleteகதை எழுதும் வித்தை பிடிபடாமல்தானே இன்னும் முயற்சித்தவாறே இருக்கிறேன்! கருத்துக்கு நன்றி, அமுதவன்!
ReplyDelete