இந்தப் பதிவுகளில், இதுவரை, எவ்வளவோ வித்தியாசமான குரல்களைக் கேட்டோம், ரசித்தோம். இன்று நாம் ரசிக்கவிருப்பது ஒரு இசையரசியின் குரல். இப்போது எம்எஸ் அம்மா என்றழைக்கப்படும் எம்.எஸ். சுப்புலக்ஷ்மியைப் பற்றித் தெரியாத ரசிகர்கள் இருக்க வாய்ப்பேயில்லை! இவர் பாடியிருந்த பாட்டுக்களில் எதை வேண்டுமானாலும் எடுத்துத் தனித்தனியே ரசிக்கலாம் என்றாலும், இன்று நாம் தேர்ந்தெடுத்திருப்பது, அவர் மீரா திரைப்படத்தில் பாடியிருக்கும் ‘எங்கும் நிறைந்தாயே’ எனும் பாட்டு.
முதலில் இந்தத் திரைப்படத்தைப் பற்றி சில தகவல்கள்:
1946ல் (இசைச் சித்திரம் என்று டைடிலில் அறிமுகமாகும்) ‘மீரா’ திரைப்படம் முதலில் தமிழிலும் பின்னர் (டப் செய்யப் பட்டு) இந்தியிலும் வெளியான பிறகு, ஏற்கனவே பிரபலமாக இருந்த எம்.எஸ் அகில இந்திய சொத்தானார். இதன் இந்திப் பதிப்பில், கவிக்குயில் என்று மகாத்மா காந்தியால் அழைக்கப்பட்ட திருமதி சரோஜினி நாயுடு திரையில் தோன்றி முன்னுரை வழங்கியிருந்தார். இன்றும் ஒலிநாடாவிலும் குறுந்தகட்டிலும் விற்பனையாகும் இந்தப் படப் பாடல்கள் அனைத்துமே காலத்தால் அழிக்கமுடியாத காவியங்கள். பொதிகைத் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது இந்தப் படம்! இதில், எம்.ஜி.ஆர் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமோ?
’மீரா’ எம்.எஸ்ஸின் குடும்பப் படம். அவர் கணவர் சதாசிவம் (கல்கி வார இதழின் அதிபர்) தயாரிப்பாளர்களில் ஒருவர். இவர்களின் நெருங்கிய குடும்ப நண்பரும் கல்கி வார இதழின் ஆசிரியருமான கல்கி கிருஷ்ணமூர்த்தி இதில் சதாசிவத்துடன் சேர்ந்து கதை வசனம் எழுத, பாடல்களைப் பாபநாசம் சிவன் எழுதினார்.
மீராவின் பாடல்கள் அனைத்துமே கண்ணனை அடைய பக்தியால் உருகுவதான உணர்ச்சியால் நிரம்பியிருக்கும். அதற்கான அற்புதமான மெட்டுக்களை எஸ்.வி. வெங்கடராமன் போட, அவற்றைத் தன்னை விட யாராலும் இதை விடச் சிறப்பாகப் பாடியிருக்க முடியாது என்று நிரூபணமே செய்திருக்கிறார், எம்.எஸ்.! இந்தப் படத்தை, வடநாட்டில் மீரா உயிருடன் உலாவிய இடங்களிலேயே படமாக்கினார்கள். பல காட்சிகளில் எம்.எஸ். அந்தத் தெருக்களில் ஒடி வந்த போது, மக்களும் இவரை உண்மையான மீராவோ என்று நம்பி, கூடவே ஓடி வந்தனராம்!
இதைச் சொல்லிவிட்டு, இந்தப் பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதத்தையும் குறிப்பிடாவிட்டால் முழுமையாகாது. ஏனெனில், இந்தத் தமிழ்ப் படத்தை இயக்கியவர் எல்லிஸ்.ஆர்.டங்கன் எனும் அமெரிக்கர்! இவர் அமெரிக்காவில் திரைப்படம் இயக்கும் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு வந்து, தமிழ்நாட்டில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். இந்தப் படத்தின் சில காட்சிகளை (வட இந்திய) மதுரா கோவிலில் படமாக்கியபோது, அமெரிக்கரான டங்கன் உள்ளே வரக்கூடாது என்பதால் அவருக்கே ஒரு சர்தார்ஜி மாதிரி தாடி, தலைப்பாகை வைத்து அழைத்துச் சென்றார்களாம்! அவரும் தனக்குத் தெரிந்த சில இந்தி வார்த்தைகளை மட்டும் சொல்லியே சமாளித்தாராம்!
இந்தப் படத்தின் இசையைப் பற்றி எஸ்.வி.வெங்கடராமனுடன் (படம்) பேசிக் கொண்டிருந்தபோது, இந்தப் படத்தின் பிரதி ஒன்று ஹாலிவுட்டில் ‘காலத்தால் அழியாத உலகக் காவியத் திரைப்படங்கள்’ பெட்டகத்தில் பாதுகாக்கப் பட்டு வருவதாகச் சொன்னார்.
அவரிடம் இன்று நாம் ரசிக்கவிருக்கும் பாடலைப் பற்றிக் கேட்டபோது, இந்தப் பாடல் இசையமைத்துப் பதிவு முடிந்ததும் மீரா படத்தின் (உதவி) கலை இயக்குனர் சேகரிடம் எஸ்.வி.வி, “இந்த மெட்டைக் கேட்டதும் உங்கள் மனத்திரையில் என்ன வண்ணங்கள் தோன்றுகின்றன?” என்று கேட்டாராம். அதற்கு சேகர், மஞ்சளும் நீலமும் என்று பதிலளித்தாராம்! விஷயம் என்னவென்றால், இந்தப் பாட்டு, மீரா பாலைவனத்தின் வழியே ஒட்டகத்தில் பயணிக்கும்போது பாடுவதான காட்சியில் வருகிறது!
‘Haunting melody’என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் பாடல்களில் ஒன்றான இப்பாடலைக் கேட்கும்போது, உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரும். இந்தப் பாட்டில் இசைத்திருக்கும் தாளத்தை வேறு ஒரு பாட்டில் கேட்டிருக்கிறோமே என்று. இந்த (தாள) இசையால் ஈர்க்கப்பட்ட ஜி.ராமநாதன் ’மந்திரி குமாரி’ திரைப்படத்திற்காக உருவாக்கிய பிரபல ‘வாராய், நீ வாராய்’ பாட்டில் இதே வகைத் தாளத்தை உபயோகித்திருந்தார்!
இந்தப் பாடலில் இரண்டு குரல்களும், வீணை, தபலா மற்றும் பியானோவும் உபயோகப் படுத்தப்பட்டிருக்கிறது. முதலில் ஹம்மிங்காக ஒலிக்கும் ஆண் குரல் எஸ்.வி.வியுடையது! இரண்டு நிமிடங்களே வரும் பாட்டில் இத்தனை விஷயங்கள்! கேட்டு ரசியுங்கள்!
Engum niraindhaaye.mp3 by Krishnamurthy80
அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!
No comments:
Post a Comment