Friday, November 18, 2011

உனக்காகவே நான்….!

உனக்காகவே நான் உயிர் வாழ்வேனேஎன்று மனதை உருக்கும் ஒரு பாடல், ஜெமினி கணேசன், சாவித்ரி, ரங்காராவ் நடித்த ‘மாயாபஜார் படத்தில் இடம் பெற்றது. கண்டசாலா இசையமைத்து, அவரே பி.லீலாவுடன் பாடியிருப்பார். (மாயாபஜார் என்றதுமே அப்படத்தில் இடம் பெற்ற ‘ஆகா இன்ப நிலாவினிலே’, ‘கல்யாண சமையல் சாதம்பாட்டுகளும் நினைவுக்கு வந்திருக்குமே!).

நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே பாட்டு ‘பாகேஸ்ரீஎனும் ராகத்தைத் தழுவியது. பாடலை தஞ்சை ராமையதாஸ் எழுதியிருக்கிறார்.

ஒரு முறை மெல்லிசைமன்னர் ராமமூர்த்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட பாட்டை என்ன ராகம் என்று நான் கேட்ட போது அவர் சொன்னார்: “ராகமா? ராமமூர்த்தி ராகம், இல்லையென்றால் கிருஷ்ணமூர்த்தி ராகம் என்று வைத்துக் கொள்ளுங்களேன்! சினிமா பாட்டுக்கெல்லாம் ராகம் தேடாதீங்க ஸார்என்றார். அதனால்தான் நான் இன்ன ராகத்தைத் ‘தழுவியதுஎன்று எழுதித் தப்பித்துக் கொள்ளுகிறேன்! மிகப் பழைய படங்களின் பாட்டுப் புத்தகத்தைப் பார்த்தால் கூட, ‘மிச்ர மாண்ட்’, மிச்ர இந்தோளம் என்று அந்தந்தப் பாடல் வரிகளுக்கு மேல் ராகங்களுக்கு முன் ‘மிச்ரஎன்று சேர்த்துப் போட்டிருப்பார்கள். குறிப்பிட்ட ஸ்வரங்களைக் கொண்ட ராகத்தில் அன்னிய ஸ்வரங்கள் சேர்ந்தால் ‘மிச்ரஅதாவது கலப்பு, ஒரிஜினல் ராகம் இல்லை என்று ஆகிவிடும்!

இப்போது ‘பாகேஸ்ரீக்கு வருவோம்! இதே ராகத்தைத் தழுவி, குலேபகாவலியில் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ, போ, மீண்டசொர்க்கத்தில் கலையே என் வாழ்க்கையின், போன்ற பல சிறந்த பாட்டுக்கள் உண்டு.

இன்று நமது பதிவுக்குப் புதிதாக வந்திருக்கும் பாடகர், இசையமைப்பாளர் கண்டசாலாவுக்கு அறிமுகம் தேவையில்லை! ‘தேவதாஸ்படத்திற்காக அவர் பாடியிருந்த உலகே மாயம், உறவுமில்லை பகையுமில்லை, ஒன்றுமேயில்லைபோன்ற அத்தனை பாட்டுக்களும் சாகாவரம் பெற்றவை. இன்னும் சொல்லப் போனால், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ஆரம்பகாலப் பாட்டுக்கள் பல கண்டசாலா பாடியவை போலவே இருக்கும்! தெலுங்குத் திரையுலகில் கண்டசாலாவைத் தான் எஸ்.பி.பி இடம் பெயர்த்தார்!

கண்டசாலாவின் குரலிலே (நமது ஸி.எஸ்.ஜெயராமன் குரலைப்போல்) ஒரு அதிர்வும் சோகமும் கலந்திருக்கும். அதன் மயக்கத்திலேதான் அவருடைய (தெலுங்கு கலந்த) தமிழையும் பொறுத்துக் கொண்டோம்! இன்று நாம் ரசிக்கப் போகும் ‘உனக்காகவே பாட்டில் பி.லீலா, அவருடைய சோகத்திற்கு ஈடு கொடுத்து, நடிகை சாவித்ரிக்காக எவ்வளவு அருமையாகப் பாடியிருக்கிறார், என்பதை நீங்களே கேட்டுப் பாருங்கள். பாட்டின் இனிமையை, (பியானோ கார்ட்ஸ், கிடார், வீணை கலந்த) கோர்விசை எப்படி மேம்படுத்துகிறது என்பதையும் கவனியுங்கள்:

இந்தப்பாட்டை கீழ்க் கண்ட (லிங்க்) விலாசத்தைச் சொடுக்கி நீங்கள் ரசிக்கலாம்!

http://www.raaga.com/player4/?id=178090&mode=100&rand=0.47642345377244055

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே!

No comments:

Post a Comment