தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதுவதில் பல மரபுக் கவிஞர்களும் அக்காலத்தில் ஈடுபட்டிருந்தார்கள். பாவேந்தர் பாரதிதாசன் பரம்பரையில் வந்த சுரதா அவர்களில் ஒருவர். (இவரை உவமைக் கவிஞர் என்றும் குறிப்பிடுவார்கள்). இத்தகைய வல்லவர்களில் கடைசியாக வந்தவர்தான் நமது கவியரசர் கண்ணதாசன்! (நான் டி.ராஜேந்தரை இந்த லிஸ்டில் சேர்க்கவில்லை என்பதற்காக என் மேல் கேஸ் எதுவும் போடமாட்டீர்கள்தானே!)
அதேபோல, திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் ஸ்டுடியோ சொந்தக்காரராகவும் இருந்தவர் தமிழறிஞர் ஏ.கே.வேலன். தனித்தமிழ் ஆர்வலரான இவர், படங்களை இயக்கும் போது மற்ற இயக்குனர்களைப் போல் ‘start’ ‘cut’ என்று சொல்லமாட்டாராம். அதற்குப் பதிலாக, ‘முடுக்கு’ ‘நிறுத்து’ என்று தமிழில் சொல்வாராம்!
குறைந்த செலவில் சில நல்ல கருப்பு-வெள்ளைப் படங்களைக் கொடுத்தவர், வேலன். அவர் தயாரித்து இயக்கியவற்றில் மிகவும் நன்றாக ஓடிய படம் (1958ல் வெளியான) ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’. எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம் (இவர்கள் இருவரின் தமிழ் உச்சரிப்பும் சிவாஜியுடையதைப் போலவே செவிக்குத் தேனாக இனிக்கும்! அதே போல் ஓ.ஏ.கே.தேவர் என்ற நடிகரும் தமிழை அருமையாகப் பேசுவார் – ம்! அது ஒரு காலம்!) மற்றும் ராஜசுலோசனாவும் நடித்திருந்தார். அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை.
இந்தப் படத்திற்கு இசையமைத்தவர், மாமா என்று திரைப்படத் துறையினரால் அன்புடன் அழைக்கப்பட்ட கே.வி.மகாதேவன். இவர் இதில் இசையமைத்த பாட்டுக்கள், கவிஞர் சுரதாவால் எழுதப்பட்ட பின்னர் மெட்டமைக்கப் பட்டவை என்பது வியப்புக்குறியது. ’தை பிறந்தால்’ படத்தில் அனைத்துப் பாடல்களுமே அருமையாக இருந்தன. (இன்றும் பல தொலைக்காட்சிகளில் பொங்கல் திருநாளன்று ‘தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்’ என்ற டி.எம்.எஸ்-பி.லீலா பாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறதைப் பார்த்திருக்கலாம்!)
இந்தப் படத்தின் பாட்டுக்களில் மிகவும் பிரபலமானது, சீர்காழியின் ’மாஸ்டர்பீஸ்’களில் ஒன்றான ‘அமுதும் தேனும் எதற்கு?’. இத்தோடு திருச்சி லோகநாதன் பாடியிருந்த ‘ஆசையே அலைபோலே, நாமெலாம் அதன் மேலே’ என்ற (படகோட்டி பாடும்) பாட்டு, மற்றும் இன்று நாம் ரசிக்கவிருக்கும் தாலாட்டான ‘மண்ணுக்கு மரம் பாரமா’ இவை யாவும் இன்றும் நினைவு கூறி மகிழத்தக்கவை.
தன் பாடல்களில் தபலாவின் உபயோகத்திற்குப் பேர்போன மகாதேவன், தன்னுடைய இசையில் தாலாட்டுப் பாடல்களுக்கென்றே தனியே (கடம் எனப்படும் மண்பானையை உபயோகித்து) ஒரு தாளத்தை உருவாக்கியிருந்தார். இதை வைத்து இவர் போட்ட தாலாட்டு மெட்டுக்கள் எல்லாமே அனேகமாக வெற்றியடைந்தன. (’படிக்காதமேதை’ யில் ஒரே ஒரு ஊரிலே, ’வண்ணக்கிளி’ யில் ‘சின்னப் பாப்பா எங்கள் செல்லப் பாப்பா’ இவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன!)
இன்றைய நமது பாடலைப் பாடியிருப்பவர், நமக்கு ஏற்கனவே அறிமுகமான ’குழந்தை’ எம்.எஸ்.ராஜேஸ்வரி! இவர் பாடிய எந்தப் பாட்டில் தான் இனிமை இல்லை?
இந்தப் பாட்டில் சாதாரணமான வாத்தியங்களை உபயோகித்து, தமது பிரத்தியேகத் தாளத்துடன் (தபலாவைக்கூடக் கொஞ்சம் அடக்கி வாசித்து) பாடகியின் குரலுக்கு முன்னிலை கொடுத்திருக்கிறார், மகாதேவன்! பாடல் வரிகளும் அதற்கு முக்கியமான ஒரு காரணம் என்று நினைக்கிறேன்! கேட்டு ரசியுங்கள்:
Mannukku Maram by Krishnamurthy80
அடுத்த பதிவில் சந்திப்போம், நண்பர்களே!
No comments:
Post a Comment