வசனத் தமிழால் மாபெரும் வெற்றியடைந்த ’மனோகரா’ திரைப்படத்தைப் பற்றி அறியாத ரசிகர் இருக்க வாய்ப்பில்லை! கலைஞருக்கும், சிவாஜிக்கும் மட்டும் ஒரு மைல் கல் அல்ல இந்தப் படம். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட கண்ணாம்பாளின் தமிழ் உச்சரிப்புக்கும் கூடப் பரந்த பாராட்டுகளை அள்ளிக் குவித்தது, அது. அவர் மட்டுமல்ல, அந்தக்காலத்தில் தமிழ்த் திரையுலகில் இருந்த பானுமதி, சாவித்திரி, பத்மினி, தேவிகா போன்ற பிறப்பால் தமிழரல்லாத அத்தனை கதாநாயகிகளும் தமிழை அத்தனை அழகாகப் பேசினார்கள். கண்ணாம்பா, ’மனோகரா’ வுக்குப் பல ஆண்டுகள் முன்னரே ’கண்ணகி படத்தில் இளங்கோவனின் தீந்தமிழ் வசனங்களைப் பேசியிருந்தார். அதற்காகவே அந்தப் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது!
’மனோகரா’ திரைப்படத்தை இயக்கிய எல்.வி.பிரசாத் ஒரு தெலுங்கர் என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல்!
இந்தப் படத்திற்கு, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைத்திருந்தார். இவர், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மீராவாக வாழ்ந்திருந்த திரைப்படத்திற்கு அற்புதமாக இசை அமைத்து அகில இந்தியப் புகழ் பெற்றவர். (எம்.எஸ். பாடும் ’காற்றினிலே வரும் கீதம்’ நினைவிருக்கிறதா?!) இவர் இசையமைப்பில் ஜிக்கி பாடியிருந்த மூன்று பாடல்களை இந்தப் பதிவுகளில் ரசித்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த எஸ்.வி.வியிடம் மெல்லிசை மன்னர்கள் இருவரும் வேலை செய்திருக்கிறார்கள் என்பதும் கூடுதலான தகவல். இவர் மறைந்தபோது சென்னையில் ஒரு பெரும் இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து மரியாதை செலுத்தினார், எம்.எஸ்.விசுவநாதன்!
வெங்கடராமன் இசையமைப்பில் ‘மனோகரா’ படத்திற்காக டி.ஆர். ராஜகுமாரி பாடியிருக்கும் ‘பொழுது புலர்ந்ததே’ என்ற பாடலை இன்று கேட்டு ரசிக்கப் போகிறோம். இந்தப் பாடல், ’சந்திரகௌன்ஸ்’ எனும் வட இந்திய ராகத்தைத் தழுவியது. (பக்த மீராவில் எம்.எஸ். பாடியிருக்கும் ‘வேய்ங்குழலின் நாதம்’ என்ற பாட்டும் இதே ராகந்தான்). பாடியிருக்கும் ராஜகுமாரிக்கு அருமையான தாபம் (வேட்கை) கலந்த குரல்!
பாட்டின் கோர்விசையில் வழக்கமான வாத்தியங்களுடன் ஜலதரங்கமும் சேர்க்கப் பட்டிருக்கிறது. இது, பீங்கான் பாத்திரங்களில் நீரை அளவாக ஊற்றிக் குச்சியினால் தட்டினால் (மணி போன்ற) சத்தம் கொடுக்கும்.
ஒரு நல்ல மெலடியை ரசிக்கலாம், வாருங்கள்!
Pozhudhu pularndhathe.mp3 by Krishnamurthy80
அடுத்த பதிவில் சந்திக்கலாம், நண்பர்களே!
No comments:
Post a Comment