இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சில பாடல்களை ஒலிபரப்பும் போது, ‘இந்தப் பாடலை இன்னார் பதுமையாகப் பாடியிருக்கிறார்’ என்று குறிப்பிடுவார்கள்! நாமெல்லாம் அதை ’உணர்ந்து’ பாடியிருப்பதாகவோ அல்லது ‘பா’வத்தோடு’ பாடியிருப்பதாகவோ சொல்வோம்.
இதற்கு முன்னர், இந்தப் பதிவுகள் ஒன்றில் ஜிக்கி பதுமையாகப் பாடியிருந்த மூன்று பாடல்களைக் கேட்டோம், ரசித்தோம், வியந்தோம். அதே ஜிக்கி, 1957ல் வெளிவந்த ’நீலமலைத் திருடன்’ திரைப்படத்திற்காக, திரை இசைத் திலகத்தின் இசையமைப்பில் பாடியிருக்கும் வேறு வகையிலான பாட்டை இன்று கேட்டு ரசிக்கப் போகிறீர்கள்.
’நீலமலைத் திருடன்’ தேவரின் தயாரிப்பு. இந்தப் படத்தில் நாயகன் ரஞ்சன் குதிரை ஓட்டிக் கொண்டே பாடியிருக்கும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்ற டி.எம்.எஸ் பாட்டு மிகப் பிரபலம். இந்த ரஞ்சன் என்பவர் பி.ஏ. படித்துவிட்டு, ஜெமினி நிறுவனத்தினரின் மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற படங்களில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றவர்.
இவரோடு, இந்தப் படத்தில் அஞ்சலிதேவி நாயகியாகவும், ஈ.வி.சரோஜா நாயகியின் தோழியாகவும் நடித்தார்கள். இவர்கள் இருவரும் இந்தக் காட்சியில் இறுக்கமான டி-ஷர்ட் அணிந்து கொண்டு, இன்று நாம் ரசிக்கவிருக்கும்,
‘கொஞ்சு மொழிப் பெண்களுக்கு
அஞ்சா நெஞ்சம் வேண்டுமடி’
என்ற பாடலைப் பாடுவார்கள்! அடடா! மன்னிக்க வேண்டும், நாம் ரசிக்க வேண்டியது இசையை அல்லவா!
மேலே படத்தில் இருக்கும் ரஞ்சன் மற்றும் நடிகையரைத் தெரிகிறதா? எல்லாரும் அப்போது தெலுங்குத் திரையில் கொடிகட்டிப் பறந்த நாயகிகள். இதில் இருப்பவர்கள் அஞ்சலிதேவி, சாவித்ரி, சாரதா, கிரிஜா (இவர் ‘மனோகரா’ படத்தில் நடிகர் திலகத்தின் ஜோடி!) ஆகியோர்!
திரை இசைத் திலகத்தின் இசை என்றாலே அதில் தபலாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்பதை நீங்கள் (வேறொரு பதிவில்) ‘யாரடி வந்தார்’ பாடலில் கவனித்தீர்கள். இந்தப் பாட்டிலும் தபலாதான் நாயகன். தபலாவுக்கு இணையாக கூடவே ‘டிக்,டிக்’ என்ற ஒலியோடு ஒரு வாத்தியமும் ஒலிக்கிறதே, அது என்ன தெரியுமா? ரயிலில் பிச்சைக்காரர்கள் விரலிடுக்கில் இரு சிறு பலகைகளை வைத்துக்கொண்டு இசைப்பார்களே, அதே தான்! (ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் சிவாஜி இதை இசைத்துக் கொண்டுதான் ‘அம்மம்மா, தம்பி என்று நம்பி’ என்ற பாட்டைப் பாடுவார்).
இவற்றோடு, ஜிக்கியின் உச்சரிப்பையும் தவரவிடாதீர்கள். இவரின் (’துள்ளாத மனமும் துள்ளும்’ (கல்யாணப் பரிசு), ’ஊரெங்கும் தேடினேன்’ (தேன்நிலவு) போன்ற பதுமையாகப் பாடிய சில பாடல்களைத் தவிர்த்து) மற்ற பாடல்களில் தமிழை அழுத்தமாக உச்சரித்திருப்பார். பிற்காலத்தில் எல்.ஆர்.ஈஸ்வரியின் முக்கல், முனகல்களுக்கு ஜிக்கியும் ஒரு முன்னோடி!
பாட்டின் இசையில் மாண்டலின், குழல் வயலின்கள், சிதார் தவிர அகார்டியன் என்கிற (ஹார்மோனியம் போல தொனி வரும்) வாத்தியமும் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பல படங்களில் பார்த்திருப்பீர்கள். கழுத்தில் மாட்டிக் கொண்டு, ஒரு கையால் மடிப்புக்களை அழுத்திக் காற்றை உள்வாங்கி மற்ற கையால் கட்டைகளை அமுக்கி வாசிப்பார்கள். (‘பாவமன்னிப்பு’ படத்தின் பிரபல ‘அத்தான்’ பாட்டில் சரணத்திற்கு முன் இந்த அகார்டியனில் ஒரு மிகச் சிறந்த பீஸ் இசைக்கப்படுகிறது). கூடவே டபிள் பேஸ் அதிர்வுகளும் தனியாகக் கேட்பதையும் கவனியுங்கள்.
தாளத்தில் அமிழலாம், வாருங்கள்!
Konjumozhi pengalukku-Neelamalai thirudan.mp3 by Krishnamurthy80
மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!
No comments:
Post a Comment