Sunday, October 9, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பதிநான்கு)

சென்ற பதிவில், மூன்று அருமையான, அமைதியான பாடல்களைக் கேட்டீர்கள். இன்று கொஞ்சம் ஆர்ப்பாட்டமான பாடல் ஒன்று கேட்கலாமே!

டூயட்டுகள் என்றால் இரு ஆண்கள் அல்லது இரு பெண்கள் பாடுவது என்று உங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் இன்று இங்கே கேட்கவிருக்கும் பாடலில் ஒரு தபலா, நமது எல்.ஆர்.ஈஸ்வரியுடன் டூயட் பாடப் போகிறது!

கவிஞர் கண்ணதாசனிடம் ஒரு நல்ல பழக்கம். தனது சொந்தப் படங்களின் இசைக்கு, மெல்லிசை மன்னர்களையும், திரை இசைத் திலகத்தையும் மாற்றி மாற்றி உபயோகப் படுத்திக் கொள்வார். அவரின் (எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேவிகா நடித்த) ‘வானம்பாடிபடத்துக்குப் பின்னவரின் இசை. இந்தப் படத்தில், ‘கங்கைக் கரைத் தோட்டம்’ (சுசீலா), கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்’ (டி.எம்.எஸ்) என்ற பாடல்கள் மிகவும் புகழ் பெற்றன. அதே படத்தில் தான், ஒரு கணிகை மனையில் (ஜோதிலக்ஷ்மி) நமது இன்றைய பாடலைப் பாடி ஆடுவதாக வருகிறது.

தாளத்திற்கும், தாளத்தினாலும் பெயர் பெற்றவர், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் என்று முன்னரே குறிப்பிட்டிருக்கிறேனே, அதை உறுதிப் படுத்த இந்தப் பாடலைவிடப் பொருத்தமானது வேறில்லை!

இந்தப் பாடலில் இனம் பிரிக்க முடியாத அளவு ஈஸ்வரியின் குரலும், தபலாவும் ஒன்றிக் கிடக்கின்றன! ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இரண்டின் கூட்டும் அவ்வளவு இனிமை! இதைத் தவிர (கணிகை மனைக்கே உரிய ஹார்மோனியமும், ஸாரங்கி எனும் வடநாட்டு (வயலின் போன்ற) வாத்தியமும், மணிகளின் ஒலியும், குழலின் துணையும் இசைக்கு இசை சேர்க்கின்றன! இந்தப் பாடலையும் திரையரங்கில் கேட்பது மிக இனிமையான அனுபவம்! இப்போதும் எண்ணி எண்ணி இன்புறுகிறேன்!

இதற்கு மேலும் உங்களுக்கும், இந்த டூயட்டுக்கும் இடையில் நான் நிற்பதை விட, நீங்களே இதோ பாடலைக் கேட்டு அனுபவியுங்களேன்!

Yaaradi vandhar LRE.mp3 by Krishnamurthy80

மற்றொரு பாடலுடன் மீண்டும் சந்திப்போம், நண்பர்களே!

1 comment:

  1. திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். அவரை இன்றைய தலைமுறையினர் எவருமே குறிப்பிடுவதில்லை என்பதை கவனித்திருக்கிறீர்களா? பாட்டுக்கேட்கும் இளைய தலைமுறையினரை விடுங்கள், திரை இசையில் பணியாற்றும் மற்றும் இன்றைக்கும் நேற்றும் பிரபலமாக இருந்த,மற்றும் இருந்துவரும் எவருமேகூட குறிப்பிடுவதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. திரைஇசை என்பதே இளையராஜாவிலிருந்துதான் பிறப்பெடுத்திருக்கிறது என்றேதான் இன்றைக்கு இங்கே நிறையப்பேர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த பிம்பங்களை உடைக்கும் காரியத்தைத் தங்கள் வலைத்தளம் செய்துகொண்டிருக்கிறது, வாழ்த்துக்கள்.

    ReplyDelete