மன்னர்களின் இன்னொரு பரிபூரண மெலடியை ரசிக்க வருகிறீர்களா?
’போலீஸ்காரன் மகள்’ திரைப்படம் ஸ்ரீதரின் இயக்கத்தில் எடுக்கப் பட்டது. (அதற்கு முன்னர், நடிகர் சகஸ்ரநாமத்தின் ஸேவாஸ்டேஜ் நாடகக் கம்பெனியினரால் தமிழ்நாடு முழுவதும் நாடகமாக நடிக்கப் பட்டது). இந்தப் படத்திற்கும் கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தியினரின் கூட்டுதான்! ஸ்ரீதரின் படங்கள் எல்லாமே பாடல்களுக்குப் பெயர்பெற்றவை. அதிலும் (நெஞ்சில் ஓர் ஆலயம், சுமைதாங்கி, கலைக்கோவில் போல) இந்தக் கூட்டணியும் சேர்ந்தால் கேட்கவா வேண்டும்? (கேட்கத்தான் வேண்டும்!!!)
இந்தப் படத்தில் (ஒரு பாடலைத் தவிர) எல்லாப் பாடல்களையும் பின்னணியில் பாடியவர்கள், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஜானகி! அந்த ஒரே ஒரு பாடலை (’கண்ணிலே நீர் எதற்கு?’) ஜானகியோடு சேர்ந்து சீர்காழி பாடினார். சுசீலாவும் டி.எம்.எஸ்ஸும் பின்னணிப் பாடல் உலகையே தங்கள் வசம் வைத்திருந்த காலத்தில், இந்த மாதிரி வேறு பாடகர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்து இசையமைப்பாளர் தான் எஜமானர் என்று அவ்வப்போது பறை சாற்றிக் கொண்டிருந்தனர் நமது மன்னர்கள்! (இன்னொன்று நினைவுக்கு வருகிறது: ‘கற்பகம்’ படத்தில் நான்கே பாடல்கள், நான்கையும் சுசீலாவே பாடினார்! ‘பாலும் பழமும் படத்தின் எல்லாப் பாடல்களையும் டி.எம்.எஸ் – சுசீலா பாடினார்கள்!)
சாதாரணமாக, ஒரு பாடகரின் ‘ரேஞ்ச்’ (வீச்சு) என்பது, அவர்கள் கீழ்ஸ்த்தாயிலிருந்து மேல்ஸ்தாயி வரை கஷ்டப் படாமல், (கஷ்டப் படுத்தாமலும்!) சுலபமாக சஞ்சாரம் (போக்கு வரத்து!) செய்யும் திறமை ஆகும். (ஸ்தாயி என்பது எந்த நிலையிலும் ஸ்ருதியை விட்டு விலகாமல் இருப்பது). இன்று நாம் ரசிக்கப் போகும் பாடலைக் கேட்டால் இது உங்களுக்குச் சுலபமாக விளங்கிவிடும்.
பி.பி.ஸ்ரீநிவாஸின் குரல் மிக மென்மையானது. இந்தப் பாடலுக்கு முன்னர் அவர் பாடியிருந்த எல்லாப் பாடல்களும் அவருக்குச் சௌகரியமான ஸ்ருதி மற்றும் ரேஞ்சிலேயே இருந்தது. ஜானகிக்கும் (அந்த நாட்களில்) மேலே போகப் போக, குரல் சற்று க்ரீச்சிட ஆரம்பிக்கும். இங்கேதான் இசையமைப்பாளரின் திறமையும் அவதானிப்பும் வருகிறது!
தர்பாரி கானடா என்கிற வட இந்திய ராகத்தை வைத்துப் பின்னப் பட்ட இந்தப் பாடலில் எல்லோரும் சேர்ந்து நமது ரசிப்பையே வேறொரு தளத்துக்குக் கொண்டு சென்றுவிடுகிறார்கள்! (இதே ராகம், நமது கர்நாடக சங்கீதத்தில் கானடா என்று அழைக்கப் படுகிறது. சிவாஜி நடித்த ’உத்தமபுத்திரன்’ படத்தின் பிரபலமான பாடல் ‘முல்லை மலர் மேலே’ இந்த ராகந்தான்! இசையமைப்பாளர் ஜி.ராமநாதனுக்கு இந்த ராகம் ரொம்பவும் பிடித்தது. நிறைய மெட்டுக்கள் கானடா ராகத்தில் அமைத்திருக்கிறார்).
இவ்வளவு தூரம் நமது கவனத்தைக் கவர்ந்த, கண்ணதாசனின் ‘பொன் என்பேன், சிறு பூ என்பேன்’ பாடல், ’பொன் என்பேன்’ என்று மிகக் கீழ்ஸ்தாயியில் ஆரம்பிக்கும். பாட்டின் பல்லவியை மட்டும் கேட்டால், பாடுவது பி.பி.எஸ். – ஜானகியா என்று சந்தேகமே வரும்! அவ்வளவு கீழே தொடங்கும் பாட்டு, சரணத்தில் ‘உனை நானறிவேன், எனை நீ அறிவாய்’ என்று மிக மேலே போகும்.
பாடகர்களோடு குழலும், ஸிதாரும் தபலாவும் இசைந்து இன்பமூட்டுகின்றன. முதல் சரணம் ஆரம்பிக்குமுன் வீரிட்டு எழும் வயலின்களின் ஒலி நிச்சயமாகச் சிலிர்க்க வைக்கும். பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடும் போது ராமமூர்த்தியின் ஒற்றை வயலின் அவர் கூடவே வருவதையும் கவனியுங்கள்!
பி.பி.எஸ் – ஜானகி இருவருக்கும் இந்தப் பாடல் அவர்கள் இசைப் பயணத்தில் ஒரு முக்கியமான மைல் கல்!
பாடலைக் கேளுங்களேன்:
Pon enbean siru poo enbean by Krishnamurthy80
மற்றொரு பாடலோடு மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!
No comments:
Post a Comment