Thursday, September 15, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (எட்டு)

தமிழ்த் திரைப்படங்களில் டூயட் பாடல்களை டி.எம்.எஸ்.ஸும் சுசீலாவும் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில், (தமிழில் இவர்கள் இருவர் மட்டுமே 750 பாடல்களைச் சேர்ந்து பாடியிருப்பதாகவும், சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு சேர்ந்து 250 பாடல்களும், தனியாகச் சுமார் 1700 பாடல்களும் பாடியிருப்பதாகவும் சுசீலாவின் சொந்த வலைப் பூவிலிருந்து ஒரு தகவல்!) ஒரு மாறுதலாக, டூயட் பாடல்களில் ஆண்கள் குரலிலும் (’பொன்னொன்று கண்டேன்’, அவள் பறந்து போனாளே’ பாடல்கள்) மற்றும் பெண்கள் குரலிலும் பதிவான பல பாடல்கள் பிரபலமடைந்தன. (இதற்கு முந்தைய பதிவில் கேட்ட ‘சின்னஞ்சிறு கண்ணன்’ பாடல் போல!) இதைப் போன்ற முரணான குரல்களால் பாடப் பெற்ற பல டூயட் பாடல்கள் கேட்பதற்கு வெகு சுகமாக அமைந்தன.

இன்று போல் அல்லாமல், அந்தக் காலப் பாடகர்களின் குரல்கள் ஒன்றொன்றும் நன்கு வித்தியாசப் பட்டிருந்ததால், ஒரு பாட்டைக் கேட்ட உடனேயே பாடியவர் யார், இசையமைத்தது யார் என்பதையும், பல சமயங்களில், பாடலை எழுதியவரையும் கூடச் சரியாக ஊகிக்கமுடிந்தது!

இந்த இடத்தில், இன்னொரு தகவல்: மன்னர்களின் குருவான ஸி.ஆர்.சுப்பராமனுக்கு, ’இந்திப்பாடல்களைத் தழுவியே இசையமைப்பவர்’ என்றொரு பெயர் இருந்தது. (இத்தனைக்கும் இவர், ’தேவதாஸ்’ படத்தில் வரும் ‘துணிந்தபின் மனமே’ மற்றும் ‘உலகே மாயம்’ போன்ற மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்தவர்!) இதனால் மனம் புண்பட்டிருந்த சுப்பராமன், என்.எஸ்.கிருஷ்ணனின் ’மணமகள்’ படத்தில், ஒரு சவாலாக, கர்நாடக ராகப் பாடல்களை மட்டுமே கொடுத்து, அத்தனை பாடல்களையும் பிரபலமாக்கித் தன் திறமையைக் காட்டினார். உதாரணமாக, இந்தப் படத்தில் வந்த ‘சின்னஞ்சிறு கிளியே’ என்கிற (ராகமாலிகை எனப்படும் பல ராகங்களை உள்ளடக்கிய) பாடல், எளிதில் அடைவதற்குக் கடினமான கர்நாடகக் கச்சேரி மேடைகளைச் சென்றடைந்து, இப்போதும், (அதாவது ஏறத்தாழ 60 வருடங்களுக்குப் பின்னரும்) கச்சேரி ரசிகர்களின் விருப்பப் பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது!

ஆனால், ’மணமக’ளில் நான் எடுத்துக் காட்ட வந்தது, இன்னொரு அற்புதமான ராகமாலிகையான ‘எல்லாம் இன்பமயம்’ என்கிற டூயட் பாடலை. இதை இரண்டு முரண்பட்ட குரல்களையுடைய எம்.எல்.வசந்தகுமாரியும் பி.லீலாவும் பாடியிருக்கிறார்கள். கர்நாடக சங்கீதத்தில் இசையமைப்பாளருக்கு இருந்த ஆழ்ந்த ஞானம் பரிபூரணமாக வெளிப்பட்டிருக்கும் இந்தப்பாடல், இன்றும் சின்னத்திரையில் பல ’சூப்பர் சிங்கர்’களின் செல்லப் பாடலாகப் பரிணமித்துக் கொண்டிருக்கிறது! இந்தப் பாடலின் தேர்ந்தெடுத்த சுகமான ராகங்களையும், அவற்றிற்கு ஈடான ஸ்வர ஜதிகளையும் கேட்பதற்கும் ரசிப்பதற்கும் நமக்கு சங்கீதம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை!

இந்த உத்தியை, நமது பிற்கால மன்னர்களும் இன்ன பிற இசையமைப்பாளர்களும், பல பாடல்களில் கையாண்டிருக்கிறார்கள். முரண்பட்ட குரல்களைக் கொண்ட சுசீலாவையும் எல்.ஆர்.ஈஸ்வரியையும் வைத்து, ‘உனது மலர் கொடியிலே’, ’மலருக்குத் தென்றல் பகையானால்’ போன்ற எத்தனை தேனான பாடல்களை இன்றும் கேட்டு மகிழ்கிறோம்!

இப்போது, இன்று நாம் கேட்கப் போகிற (மெல்லிசை மன்னர்கள் இசையில்) ஒரு முன்னோடியான பாடலை, ‘ஆளுக்கொரு வீடு’ என்ற திரைப்படத்திற்காக ஜமுனாராணியும், எல்.ஆர்.ஈஸ்வரியும் மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் பாடியிருக்கிறார்கள். கவனமாகக் கேளுங்கள், பாடலோடு இழைந்து வரும் வயலின்களும், தொடர்ந்து வரும் மாண்டலின் இசையும் நடுநடுவே தெளித்திட்ட குழலிசையும், ஒரே சீரான தாளமும் பாடலோடு நம்மையும் எங்கோ கொண்டு போய் நிறுத்திவிடும்! இரண்டாவது சரணத்திற்கு முன்னால் வரும் கோர்விசையில், மாண்டலினுக்கு இசைவாக இன்னொரு ஸ்ருதியில் குழலை ஓட விட்டிருக்கிறதையும் அனுபவியுங்கள். (அந்தக் குழல் ’பிட்’ டை ஸெகண்ட்ஸ் என்று இசை மொழியில் கூறுவார்கள்):

Seyyum Thozhile Dheivam by Krishnamurthy80


இன்னொன்று - இங்கே இசையை மட்டுமே ரசிக்க வந்தவர்களை, பாடலின் வரிகளையும் ரசிக்க வைத்திருப்பவர், மக்கள் கலைஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். கண்ணதாசனைப் போலவே, இவருக்கும் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் காம்பினேஷன் அமர்க்களமாக அமைந்தது. (‘இன்று நமதுள்ளமே’ எனும் ’தங்கப் பதுமை’ படப் பாடலில் ஒரு வரி: ‘கண்ணிலே ஊறும் நீரும் இனி நம் நிலை காண நாணும்......‘ இந்த உவமைக்கு ஈடேது, இணையேது?!)

நீங்கள் இப்போது கேட்ட பாடலின் சில வரிகளைத்தான் பாருங்களேன்:

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்த
திறமை தான் நமது செல்வம்
கையும் காலுந்தான் உதவி – கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி’

மற்றும்,

‘சாமிக்குத் தெரியும் பூமிக்குத் தெரியும்
ஏழைகள் நிலைமை – அந்த
சாமி மறந்தாலும் பூமி தந்திடும்
தகுந்த பலனை’

என்ற வரிகளெல்லாம் (வைரத்தை விடுங்கள்!) சுத்தமான ப்ளாட்டினம் அல்லது (இன்றைய விலையில்) தங்கம் அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

1 comment:

  1. அருமையான பகிர்வு!நன்றி தோழரே.

    ReplyDelete