Wednesday, September 7, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (ஆறு)

இன்று ஒரு வித்தியாசமான குரலில் இன்னுமோர் சோகப் பாடலைக் கேட்கலாமா?.

எஸ்.ஸி.கிருஷ்ணன் என்கிற பின்னணிப் பாடகரைப் பற்றி நம்மில் அதிகமானவர்கள் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால், அவர் பாடிய சில பாடல்களைச் சொன்னால், “ஓ, அவரா?” என்பீர்கள். தில்லானா மோகனாம்பாள் படத்தில், ’ஏ, தில்லா(ன்) டோமரி’ என்ற பாடல் (படத்தில், மனோரமா நாடகமொன்றில் பாடி ஆடுவது போல) வரும். எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருப்பார். அவரோடு ஒரு ஆண் குரலும் இணைந்து ஒலிக்கும். அது, எஸ்.ஸி.கிருஷ்ணனுடையது. நடிகர் தங்கவேலுவிற்கு நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். நல்ல பாடகர். குரல் கொஞ்சம் ஸி.எஸ்.ஜெயராமனை ஒத்திருக்கும். அவரைப் பல இசையமைப்பாளர்கள் காமெடி பாடல்கள் பாடவைத்தே வீணாக்கிவிட்டார்கள். ஆனால், நமது மெல்லிசை மன்னர்கள் அவரின் குரலை, இரண்டு பழைய பாடல்களில் அற்புதமாக உபயோகித்திருக்கிறார்கள். இரண்டுமே அந்தந்தப் படங்களில் அசரீரியாகத்தான் வரும். அதில் ஒன்று, எம்.ஜி.ஆர். நடித்த ‘குலேபகாவலி’ படத்தின் டைட்டில் ஒடும் போது வரும் ‘நாயகமே, நபி நாயகமே’ என்ற அருமையான பாடல், இன்னொன்று, இன்று நாம் கேட்கப் போகும், (‘போர்ட்டர் கந்தன்’ படத்தில் வரும்) ’வருந்தாதே, மனமே‘ என்ற பாடல்.

திருட்டுப் பட்டம் சுமத்தப்பட்ட நல்லவனான ஒரு போர்ட்டர், குடும்பத்தோடு ஊரை விட்டு ரயிலில் ஓடும் போது பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கிறது.

”எழுதிச் செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற்செல்லும்,
அழுதாலும் தொழுதாலும் அதில் ஓரெழுத்தும் மாறாதே”

என்ற விருத்தத்தோடு ஆரம்பிக்கும் தன்னம்பிக்கை ஊட்டும் பாடலான இதை எழுதியவரின் பெயர் நினைவிலில்லை.

பாட்டிற்குத் தாளம்? முதன்மையாக, ஜிகு,ஜிகு என்கிற ரயில் ஓடும் சத்தந்தான்! இதோடு, மற்ற ஒலிகளையும் கோர்த்திருப்பதைக் கவனமாகக் கேட்டுப் பாருங்கள்:

Varundhathe maname by Krishnamurthy80


இப்போது, ஒரு ஒப்பீட்டிற்காக கீழே இணைக்கப் பட்டிருக்கும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். ’போர்ட்டர் கந்தன்’ படத்திற்குப் பிறகு, (ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குப் பின்னர்!) மன்னர்கள் இசையமைத்த ’பச்சைவிளக்கு’ படப் பாடலின் முகப்பு இசை, இது!

Kelvi pirandhadhu indru (Music) by Krishnamurthy80


காலங்கடந்த இசைக் கோர்வையில் என்ன ஒரு சீரான வளர்ச்சி!

அதிக வாத்தியங்களை (முக்கியமாக வயலின்களையும், ட்ரம்பெட் எனப்படும் காற்று வாத்தியத்தையும்) இணைத்து இசைக் கோர்வையில் விளையாடியிருக்கிறார்கள். இரண்டையுமே கேட்கும் அனுபவம் சுகமானது அல்லவா?

மீண்டும் சந்திப்போமா, நண்பர்களே!

6 comments:

  1. நன்றி, நண்பரே! இக்கால இளைஞர்கள் இழந்திருப்பதை எடுத்துக்காட்டவே இவற்றை எழுதி வருகிறேன். கடையை விரிப்போம்-கொள்வது அவரவர் கையில்!

    ReplyDelete
  2. எஸ்.சி.கிருஷ்ணனின் குரல் தங்கவேலுவுக்கு ரொம்பவே பொருத்தமாக இருப்பதைப் பல பாடல்களின்போது கவனித்திருக்கிறேன். மெட்டுபற்றிய தகவல்களுடன் இசைச்சேர்ப்பு பற்றிய நுணுக்கமான தகவல்களையும் சேர்த்துத் தருவது தங்கள் பதிவுகளுக்கு நிச்சயம் ஒரு தனித்துவத்தைத் தருகிறது,தொடருங்கள்.

    ReplyDelete
  3. தவராத ஆதரவளித்து வரும் அமுதவனுக்கு நன்றி!

    ReplyDelete
  4. 'தவறாது ஆதரவளித்து வரும்' என்றல்லவா இருக்கவேண்டும்! எழுத்துப்பிழையெல்லாம் செய்யமாட்டீர்களே...எப்படி வந்தது இந்தப்பிழை?

    ReplyDelete
  5. எதைச் சொல்லி சமாளிப்பேன்?! தவறு தான். சுட்டிக் காட்டித் திருத்தியதற்கு நன்றி, அமுதவன்!

    ReplyDelete