Monday, September 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்! (பத்து)

சென்ற பதிவில் உங்களைச் சோகத்தில் ஆழ்த்தியதற்கு ஈடாக, விஸ்வநாதன் ராமமூர்த்தி, பட்டுக்கோட்டை, சுசீலா இவர்கள் ஒன்று கூடி நமக்களித்த இன்னொரு ‘மாஸ்டர் பீஸ்ஆன ஓரு துள்ளல் பாடலை இன்று கேட்போமா?

இயக்குனர் பீம்சிங்கின் ‘பவரிசை வெற்றிப் படங்களில் முதலாவதான ‘பதிபக்தி படத்தில், சிவாஜியின் தங்கையாக வரும் சாவித்திரி, ஆடு மேய்த்துக் கொண்டே இந்தப் பாடலைப் பாடுகிறார்.

‘இரை போடும் மனிதருக்கே, இரையாகும் வெள்ளாடே,

இதுதான் உலகம், வீண் அனுதாபம் கண்டு நீ, ஒருநாளும் நம்பிடாதே!

என்று ஆரம்பிக்கும் பட்டுக்கோட்டையாரின் பாடல் வரிகளின் அழகைப் பாருங்கள்!. பாடல் முழுவதுமே நமக்கெல்லாம் சவுக்கடிதான்! பாடலைக் கேட்கும்போதே அது தெரியும்!

மெட்டின் சிறப்போ, பாடியவரின் திறமையோ, தெரியவில்லை - சுசீலாவின் தேன் குரலைத் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்லாமல் இருக்க முடியாது. அவ்வளவு இனிமை! அத்துடன் பாடலின் முகப்பு மற்றும் இடையே வரும் கோர்விசையின் கூடவே (தாளமாக) வரும் ‘டபிள் பேஸின் அதிர்வுகளையும் கவனியுங்கள். (இந்த வாத்தியத்தைப் பற்றி என்னுடைய மூன்றாவது பதிவிலே குறிப்பிட்டிருக்கிறேன்). எவ்வளவு துல்லியமான ஒலிப்பதிவு!

இதற்கான மெட்டோ, ஒரே வேகம் நாம் முன்னர் ரசித்த ‘என் வாழ்வில் புதுப் பாதை கண்டேன்பாடல் போல! இந்தப் பாடலிலும் வயலின்கள், டோலக் மற்றும் தபலா எனும் தாள வாத்தியங்கள், ஸிதார், குழல், மற்றும் (வயலினைப் போலவே வில் வைத்துக் கொண்டு இசைக்கப்படும்) தில்ரூபா எனும் வடநாட்டுத் தந்தி வாத்தியம் இவை எல்லாம் உண்டு. இவற்றை ஒருங்கிணைத்துக் கோர்த்து, மூன்று நிமிடங்களில் ஒரு மந்திர ஜாலமே நடத்திவிடுகிறார்கள், மெல்லிசை மன்னர்கள்! இதன் மத்தியில், ‘காலொடிந்த ஆட்டுக்காக கண்ணீர் விட்ட புத்தர், (ஸிதார்), கடல் போலே உள்ளம் கொண்ட காந்தி, யேசுநாதருக்கு (வயலின்) என்று ஸ்பெஷல் இசை வேறு!

நான் வர்ணிப்பதை விட, பாடலை அனுபவித்து விட்டு, நீங்களே சொல்லுங்களேன்!

Irai podum by Krishnamurthy80

அடுத்த பதிவில் சந்திக்கலாமா, நண்பர்களே?

2 comments:

  1. தங்கள் தேர்தெடுத்துக் கொடுக்கிற பாடல்கள் அனைத்தும்
    காலத்தை புறம்தள்ளிய பாடல்களாகவே உள்ளன
    நீங்கள் ஒவ்வொரு பாட்லுக்கும் கொடுக்கிற விளக்கம்
    மிக மிக அருமை.ஆயினும் எழுத்தின் வண்ணம்
    படிக்க கொஞ்சம் சிரமப் படுத்துகிறது
    முடிந்தால் விரும்பினால் மாற்றம் செய்யவும்
    அருமையான பாடல்களை தேர்ந்தெடுத்துக்
    கொடுப்பதற்கு என் மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும், பாராட்டுக்கும் நன்றி, திரு.ரமணி. ‘முடிந்தால்-விரும்பினால்’ என்பது தங்கள் பண்பைக் காட்டுகிறது! எழுத்தின் வண்ணம் பற்றி எனக்கும் தோன்றியது உண்மை. அடுத்த பதிவுகளில் நிச்சயம் சரி செய்து விடுகிறேன்.

    ReplyDelete