Friday, September 2, 2011

ஸீனியர் ஸிடிஸன்ஸ்!

இன்றைய மொழியில் சொல்வதானால், ‘பெரிசுகள்’! இந்த வயதிற்கு (65+) வந்திருக்கும் எல்லாருக்கும் இந்த நிலையில் உள்ள சிரமங்கள் தெரியும். பிறந்ததில் இருந்து எத்தனையோ கஷ்டங்களுக்குப் பின்னர் மனிதன் அடையும் பதவி இது!. வேலையிலிருந்து மட்டுமல்ல வாழ்விலிருந்தே ஓய்வு பெற்று ‘நிம்மதி’யாக இருக்க வேண்டிய பருவம் என்று மற்றவர்களும், ஏன், அரசாங்கமுமே பிரகடனப்படுத்துகிற சமயம் இது! ’நன்றாக வேலை செய்தோம், நல்ல குடும்பத் தலைவனாக இருந்தோம், இனி மேலே நல்ல ஓய்வான, மனதுக்குப் பிடித்த வாழ்வு வாழலாம்’ என்ற நியாயமான ஆசைகளை எதிர்நோக்கும்போது, நடைமுறை வாழ்க்கை, நம்மைப் பார்த்து நகைக்கிறது! ‘வாய்யா, வா, உன்னைப்போல எத்தனை பேரைப் பார்த்துவிட்டோம்’ என்று! ’உனக்கு என்னதானய்யா பிரச்னை? போட்டதைத் தின்றுவிட்டு, கிருஷ்ணா, ராமா என்று கிடக்கவேண்டியது தானே?’ என்கிறீர்களா?! உங்கள் வீட்டு நாய் கூட ‘போட்டதைத்’ தின்பதில்லை, ஐயா! அதற்கும் தனியான உணவும், பணிவிடையும், பராமரிப்பும் அவசியம்! (நாயை ’அதை’ என்று குறிப்பிட்டாலே முறைப்பவர்கள் உண்டு, தெரியுமா உங்களுக்கு? அதன் பெயரைச்சொல்லி மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நீங்கள் தான்!) இன்றைக்கு எத்தனை ஸீ.ஸிக்கள் கண்ணியத்தோடு வாழமுடிகிறது? அப்படியே வாழ்கிறவர்கள் அதற்குக் கொடுக்கும் விலை என்ன? பிள்ளைகள் அயல் நாட்டில் பிழைக்கப் போனால், அவர்களின் திருமணத்திற்குப் பிறகு இவர்களும் கூடவே ‘சம்பளமில்லாத வேலைக்காரர்களாகச்’ செல்ல வேண்டியிருக்கிறதே, இதில் எத்தனை பேர் இந்த ’உத்தியோக’த்தை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்? இதன் இன்னொரு கோடியில், முதியோர் இல்லங்களில் தனியாகவோ, தம்பதிகளாகவோ கிடப்பவர்கள் என்ன மன நிம்மதியோடு வாழ்வார்கள்? முதியோர்களின் சுகாதாரப் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு கண்டிருக்கிறோம்? சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல், கிடைத்த காசை, மோசமான முதலீடுகளில் தொலைக்கும் முதியோர்களுக்கு அரசாங்கம் என்ன உதவி செய்கிறது? பிள்ளைகளால் நிராதரவாக விரட்டப் படும் முதியோர்களின் கதி தெரியுமா உங்களுக்கு? ஒரு வங்கியிலோ அல்லது அரசாங்க அலுவலகத்திலோ இவர்கள் அவமானப் படுத்தப் படுவதை அறிவீர்களா? இவைகளைப்போல இன்னும் எத்தனை பதில் இல்லாத கேள்விகள்? இவை எல்லாவற்றிகும் பதில் இருக்கிறது! இன்றைக்கு நாம் வேண்டுமென்றே மறந்திருக்கும் ‘மனித நேயம்’ என்பதை பள்ளிப் பருவத்திலிருந்தே மீண்டும் பிள்ளைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். மனித நேயம் என்பது உறவுகளிடையேயும் வெளியிலேயும் ஊடுபாவாக இருந்தது, இன்று எங்கே தொலைந்தது? அதைக் கண்டுபிடித்து, நாட்டிற்காகத் தன் வாணாளைத் தியாகம் செய்த முதியோர்களுக்கு மரியாதையை மீட்க வேண்டியது, ஒரு தனி மனிதனின், ஒரு அரசாங்கத்தின் கடமை இல்லையா? இது நடைபெறாத நிலையில், இன்றைய முக்கியமான, யாருக்கும் வேண்டாத, தீண்டத்தகாதவர்களான - முதியோர்கள் எனப்படும் ஸீனியர் ஸிடிஸன்களே, நீங்கள் செய்யக்கூடியது இரண்டு தான்! ’எல்லாம் விதிப்படி நடக்கும்’ என்று வாளாவிருக்கலாம், அல்லது, என்னைப் போல,அவரவர் கையறு நிலையை நினைத்து காலன் வரும் வேளையை எதிர் நோக்கிக் காத்திருக்கலாம்!

4 comments:

  1. விரக்தியின் விளிம்பில் நின்று எழுதியது போல் தோன்றுகிறது.என்ன சார் குறைச்சல்?வாழ்க்கையைப் பயனுள்ளதாக ஆக்க வழியாயில்லை?கையில் வித்தை இருக்கு,கவலையேன்!

    ReplyDelete
  2. எனக்கு வாய்த்த சந்தர்ப்பங்களுக்கு ஆண்டவனுக்கு நன்றி கூறும் அதே வேளையில், எதுவுமே கிடைக்காமல் தடுமாறும் எண்ணற்ற ‘பெரிசுகளைப்’ பார்த்துப் பார்த்து விளைந்த வயிற்றெரிச்சல் இது, ஸார்!

    ReplyDelete
  3. எதற்கு? உங்களுக்கெல்லாம் இம்மாதிரியான மனத்தாங்கல்களெல்லாம் வரக்கூடாதே. உச்சகட்ட சுமைபோல மனதில் எண்ணம் கருக்கொண்டிருப்பதனை ஒரேயடியாகக் கொட்டிவிடுவது என்று நீங்கள் முயன்றிருப்பது பாரா கூட பிரிக்காமல் ஒரே தொடர்ச்சியாகச் சொல்லியிருப்பதிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகிறது. நான்கு அல்லது ஐந்து பாராக்களாகப் பிரித்திருந்தால் படிப்பதற்கு சிரமமின்றி இருந்திருக்கும். கனக்கும் சுமைகளைத் தூக்கி எறிந்துவிட்டு வழக்கமான கலகலப்பான ஆரெஸ்கேவாக வாருங்கள்.

    ReplyDelete
  4. நன்றி அமுதவன்! நான் என்னவோ பாரா பிரித்துத்தான் எழுதினேன் - ஏற்றினேன்! வலைக்கு என்ன விரக்தியோ, அடம் பிடித்து, ஒரே பாராவாக்கிவிட்டது! ஸீ.ஸிகளின் அவதிகள் குறித்து ஹிந்து தினசரியைத் தொடர்ந்து வாசிப்பதன் விளைவு, இந்தப் பதிவு. வயதானவர்கள் படும் பாடுகள் பற்றி,(எனக்குத் தெரிந்து) ஹிந்து மட்டுமே பதிவு செய்து குரல் கொடுத்து வருகிறது.உடல் தொடர்ந்து ஒத்துழைக்க மறுக்கும் போது, நமக்கும் ஒரு சலிப்பு வருவது தவிர்க்க முடியாதது தானே!

    ReplyDelete