Saturday, April 28, 2012

போறவளே, போறவளே!


ஏர் உழவனுக்கும் அவனுடைய முறைப்பெண்ணுக்குமான உறவு, பழைய தமிழ்த்திரைப்படங்களுக்கு ஒரு வரப்ரசாதம் என்றே சொல்லலாம்! இந்த உறவில், கேலியுண்டு, கெஞ்சலுண்டு, மோகமுண்டு இன்னும் என்னென்னவோ உண்டு! நமது இன்றைய பாடலில், நாயகன், நாயகியைக் கெஞ்சலோடு கொஞ்சுகிறான். அதற்கு முன், இன்றைக்கு ஊடகங்களிலே, கோவைத்தமிழ் சிறப்புப் பெற்றிருக்கிறதே, அது, 1957லேயே ‘மக்களைப்பெற்ற மகராசி’ எனும் திரைப்படத்தில் ஏ.பி.நாகராஜன் எழுத்தில் படம் முழுவதிலும் கையாளப்பட்டிருக்கிறது! சிவாஜி, பானுமதி,நம்பியார், எம்.என்.ராஜம், கண்ணாம்பா ஆகியோர் நடித்துப் பெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை, சோமு இயக்கியிருந்தார். இன்றைய நமது பாடலுடன், ‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா’‘மணப்பாறை மாடுகட்டி’ என்ற பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தன-ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ‘மணப்பாறை மாடுகட்டி’ எனும் பாடல் உருவான கதை தெரியுமா உங்களுக்கு? இயக்குனர், கதை-வசனகர்த்தா, பாடலாசிரியர் (மருதகாசி) மற்றும் இசையமைப்பாளர் (கே.வி.மகாதேவன்) இவர்கள் அமர்ந்திருக்க, பாடல் இடம் பெறும் காட்சி விளக்கப் பட்டதாம். சற்று யோசித்த மருதகாசி, பத்து நிமிடங்களில் பாடலை எழுதி முடித்துவிட்டாராம்! பின்னர் மகாதேவனிடம், ’நான் எழுதிய இந்தப் பாடலுக்கு எவ்வளவு விரைவில் உங்களால் இசையமைக்க முடியும்?’ என்று சவால் விட்டாராம்! மாமா என்ன லேசுப்பட்டவரா? இன்னுமொரு கால்மணி நேரத்தில் அவரும் இசையமைத்துக் கொடுத்து விட்டாராம்! இவ்வாறு அரை மணி நேரத்தில் உருவான பாடல், இன்றும் ஒலித்துக் கொண்டிருப்பது விந்தையல்லவா! ஆனால் இன்றோ, ஒரு படத்தில், ’அவ என்(னை) என்ன தேடி வந்த அஞ்சலை’ என்று ஒரு பாடல் போட்டு, கொஞ்ச நாள் கழித்து வேறொரு படத்திற்காக அதே பாட்டையே ‘வேணாம், மச்சான் வேணாம், இந்த பொண்ணுங்க காதலு’ என்று மெட்டுப் போட வெளிநாடு பறக்கிறார்கள்! என்ன கொடுமை சரவணன் இது! சரி, சரி நமக்கெதற்கு அதெல்லாம்! (இது எப்படி இருக்கு!) வாருங்கள், மருதகாசி எழுத, மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்-பானுமதியின் அற்புதமான நாட்டுப் புறப் பாட்டில் நம்மைக் கரைப்போம்!

6 comments:

  1. மணப்பாறை மாடு கட்டி - அப்பவும், இப்பவும், எப்பவும் ரசிக்க முடியும் ஒரு பாடல். அந்தப் பாடல் பற்றிய விஷயங்கள் இப்போது உங்கள் பகிர்வு மூலம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

    போறவளே போறவளே பாடலும் ரசித்தேன். தொடர்ந்து வரும் நல்ல பாடல்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, திரு.வெங்கட் நாகராஜ்!

      Delete
  2. என்ன இது? நாட்டுப்புற மெட்டெல்லாம் கே.வி.மகாதேவன் போன்றவர்களெல்லாம் போட்டிருக்கிறார்களா? அப்படியெல்லாம் இருக்காதே. நாட்டுப்புற மெட்டு, மெல்லிசை இவையெல்லாம் இளையராஜாவின் வருகைக்குப்பின்னர்தானே தமிழில் அறிமுகம் ஆகி இருக்கின்றன.இவற்றையெல்லாம் தமிழுக்குத்தந்த ஒரே இசையமைப்பாளரும் அவர்தானே?
    இப்படித்தானே இணையத்தில் உலாவரும் பெரும்பாலான நண்பர்கள் கருத்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஏதோ மாறுபட்ட விஷயங்களாகச் சொல்கிறீர்களே.
    இருங்கள்....இதோ கூப்பிடுகிறேன். இளையராஜா சேனையை.
    கே.வி.மகாதேவனை வேண்டுமானால் நாட்டுப்புற மெட்டுபோட்ட சாதாரணர் என்று வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம். ஆனால் மன்னர் மன்னர்களுக்கெல்லாம் மன்னர் இளையராஜாதான் என்பதுபோல் கருத்துரைகள் வரும். தயாராக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. சாமீ, நான் ஏதோ எனக்கும் உங்களுக்கும் பிடித்த பாடல்களைத் தேடினால் என்னென்னமோ முத்துக்கள் கிடைக்கின்றன-நானும் பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜா சேனையெல்லாம் உங்களைத் தான் குறி வைத்திருக்கிறார்கள்! (ஹிட் லிஸ்டில் முதல் பெயர் உங்களுடையது என்று கேள்விப் படுகிறேன்!) எதற்கு தெரியுமா? இளையராஜாவை நாட்டுப் புற மெட்டு, மெல்லிசை என்ற வளையத்துக்குள் அடக்கிவிட்டீர்கள்! அவர் கர்நாடக, மேற்கத்திய, இந்துஸ்தானிய இன்னும் உலகத்தில் எத்தனை வகை இசைகள் இருக்கிறதோ அத்தனைக்கும் ‘தந்தை’ அவர் என்ற மாபெரும் உண்மையை மறைத்த குற்றத்துக்காக! ஜாக்கிரதையாக இருங்கள், நண்பரே! தவறைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி!

      Delete
  3. அருமையான விரிவான விளக்கத்துடன்
    காலத்த்தை வென்ற பாடலை அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. நன்றி, திரு.ரமணி. உங்களைப்போன்ற ரசிகர்களின் ஆதரவுதான் எனக்குப் பெரும் உந்துதல்!

    ReplyDelete