Monday, February 21, 2011

புதுப் புலம்பல் ஒன்று!

நண்பர் கேட்டார், ‘என்ன ஸார், ரொம்ப நாளா பார்க்கமுடிவதில்லை, எழுதுவதாகவும் தெரியவில்லையே’ என்று. ஒரு தமிழன், அதிலும் தன் எழுத்தை அச்சில் (!) பார்ப்பவன், தனது பதிலை நேரடியாகச் சொல்லிவிட்டால் எப்படி?!

’அது வந்து ஸார், தேவன் எழுத்தாளர்களுக்குக் கூறியது தெரியுமா உங்களுக்கு? ”எதையும் எழுதி முடித்த பின்னர் அதை பெட்டிக்கு அடியில் போட்டுவிட்டு மறந்துவிடு. ஒரு ஆறு மாதம் கழித்து மீண்டும் அதை எடுத்துப் படித்துப் பார் - உனக்கே பிடித்திருந்தால் மட்டும் பிரசுரத்துக்கு அனுப்பு. இல்லையென்றால் குப்பைத்தொட்டியில் வீசு” என்று. நானும் இதுவரை (நான் எழுதிய)கணினிக்குள் கிடந்ததைப் படித்துப் பார்த்தால் அநேகமாக எல்லாமே புலம்பல்களாகவே இருந்தது.(வயதின் கோளாறோ என்னவோ தெரியவில்லை!) அதனால் கொஞ்ச நாள் விட்டுவிடுவோமே என்றுதான் எழுதவில்லை’ என்றேன். இருந்தாலும், புலம்பல் என்கிற தேசீய வியாதி (அல்லது மதம்!) என்னும் நதிப்போக்கில் நானும் பயணிக்க முடிவு செய்துவிட்டேன். எவ்வளவோ ’குப்பைகளில்’ இதுவும் இருக்கட்டுமே!

அதற்குத் தூண்டிய முக்கியமான நிகழ்ச்சிக்கு வருவோம்: இன்று மதியம் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். பள்ளி, கல்லூரிகள் முடியும் நேரமாதலின் சிறுவர்கள் கூட்டம் பஸ்ஸில் அதிகமாகவே இருந்தது. கடைசி வரிசையில் நான் அமர்ந்து வரும் போது சில சிறுவர்கள் படிக்கு வெளியே தொங்கிக்கொண்டு வருவதைக் கவனித்தேன். அங்கே படியில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவனிடம் (அவனுக்கு 12 வயதிற்குள் தான் இருக்கும்) ‘உள்ளே இடம் இருக்கிறதே, கொஞ்சம் போனால் என்னப்பா?’ என்றேன். அவனோ, தான் இறங்கப்போவதாகச் சொன்னான். உன்னப்போன்ற சிறுவர்கள் தொங்கிக் கொண்டு வருவது தெரியவில்லையா என்ற என் கேள்விக்கு ‘அதுக்கு என்னை என்னா பண்ணச் சொல்றே’ என்று பதில் வந்தது. சரி, தப்பு நம் மேலே தான் என்று வாயை மூடிக்கொண்டு பயணித்தேன். வரும் வழியிலேயே அவர்களின் (சினிமா வசனம் கலந்த) பேச்சும், நடுநடுவே சரளமாக விழுந்த கொச்சையான வசவுகளும் என்னைத்தவிர யாரையும் நெளிய வைத்ததாகத் தெரியவில்லை! ஒரு நாகரீகமான டயலாக்-(பேசுவது பள்ளிமாணவர்கள்!): ’பேசாம ஒரு ஹாப் (half) வாங்கி, அவனுக்கு ஊத்திட்டு, மீதியை எனக்கும் ஊத்துடா’. என்னத்தச் சொல்ல!

3 comments:

 1. வாங்கய்யா!புலம்ப வேண்டிய செய்திதான்!என்ன செய்யப் போகிறோம்?
  அப்படியே நம்ம கடைப்பக்கம் கொஞ்சம் வந்து விட்டுப் போறது!

  ReplyDelete
 2. என்ன செய்வோம்? வழக்கம் போல ஐயாவோ அம்மாவோ யாரோ ஒருவரைத் தேர்ந்தெடுத்து, நாள் தோறும் விழா நடத்தி, இலவசங்களைக் கூசாமல் பெற்று, வாழ்வின் உன்னததைக் கொண்டாடுவோம், வாருங்கள்!

  ReplyDelete
 3. எதையும் எழுதி முடித்தபின்னர் அதை பெட்டிக்கு அடியில் போட்டுவிடு. ஆறு மாதங்கள் கழித்து எடுத்துப்பார்.உனக்கே பிடித்திருந்தால் மட்டும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வை' - என்ற இந்த அட்வைஸ் தேவனால் அல்ல, கல்கி அவர்களால் கொடுக்கப்பட்டது. உங்களுக்கு கல்கியைப் பிடித்த அதே அளவுக்கு தேவனையும் பிடிக்கும் என்பதால் மாற்றி நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது. இரண்டு பேரில் யார் சொல்லியிருந்தாலும் மிகவும் நுணுக்கமான பார்வை அது. இரண்டாவது, கல்கி அளவுக்கு தேவன் 'சொன்னது' எதுவும் புழக்கத்தில் இல்லை.

  ReplyDelete