Wednesday, August 17, 2011

கொஞ்சும் இசையும் கொஞ்சம் ரசனையும்!

பழந்தமிழ்த்திரை இசை பற்றி அடிக்கடி இங்கே அலசலாம் என்கிற உத்தேசம்.அதாவது, (கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளையும் விஞ்சியதாகத் தானே சொல்லிக்கொண்டிருக்கும்) திரு. இளையராஜா அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்து எத்தனையோ இறவாப்பாடல்களை உருவாக்கி, சத்தமே இல்லாமல் சாதனைகள் பல செய்து போனவர்களைப்பற்றி அல்ல, அவர்கள் உருவாக்கிய சில அபூர்வமான, அற்புதமான பாடல்கள் பற்றிப் பேசப்போகிறோம். இதில் பாடல்களைப் பற்றிப் பேசப்போவது குறைவு. ரசிக்கப் போவதுதான் அதிகம். அதுதான் இந்தப் பதிவின் குறிக்கோளும் கூட.

ரசனை என்பது எல்லை கடந்தது. இதில்,பாடல்களை ரசிப்பதில் நம் போல யாருமில்லை. இன்றைய தினத்தில் வேண்டியதெல்லாம் ஒரு கைப் பேசி மட்டுமே.. ஒரே பேருந்தில் நான்கைந்து பாடல்கள் அலறிக்கொண்டிருக்கும்! யார் அதிகமான சத்ததை உலவவிடுகிறார்கள் என்று ஒரு அறிவிக்கப் படாத போட்டி! இதன் தலையாய சோகம், இன்றைய திரைப்பாடல்களும் ரசிப்பதற்காக உருவாக்கப் பட்டவைகள் என்று சொல்லமுடியாது. தப்புத் தாளத்தை (தப்பு என்கிற தாள வாத்தியம்) அடிப்படையாக வைத்தே எல்லா மெட்டுகளும் இருக்கின்றன. ‘மச்சானைப் பார்த்தீங்களா’ என்று இளையராஜா ஆரம்பித்து வைக்க, ‘ஒட்டகத்தைக் கட்டிக்கோ’ என்று ரஹ்மான் பின் தொடர, இன்று படத்திற்கு நான்கு பாடல்களாவது அந்த வகைதான்! மெலடி என்று கூறப்படும் மீதி இரண்டு பாடல்களும் (பெரும்பாலானவை) மனதில் நிற்பதில்லை என்பதுதான் நிதரிசனம்.

பாடல்களுக்குப் போகுமுன், அதிகபட்ச ரசனைக்காகச் சில முன்னேற்பாடுகள் தேவை. நான் சிபாரிசு செய்யும் பாடல்களை, (கூடியமட்டிலும்) இரவில், தனிமையில் கேளுங்கள். ஒரு நல்ல ஒலி பெருக்கியில், மிதமான ஒலி அளவில், அல்லது இன்றிருக்கும் கைப் பேசி/ஐ-பாட்டில் (காதுகளுக்குள் கருவியைப் பொருத்தி) இதமான ஒலி அளவில் கேட்டுப் பாருங்கள். இதை நான் கூறவில்லை. திரு.சுஜாதா அவர்கள் சொன்னது. இப்படிக் கேட்டால், பாடல்கள் முடிந்தவுடன் ‘ஐயோ, முடிந்துவிட்டதே’ என்றிருக்கும்! 1950 முதல் 1980 களின் பாடல்கள் இன்றும்கூட அதிகமாக விரும்பிக் கேட்கப்படுபவை. இவைகளிலும் பொறுக்கியெடுத்த சில பாடல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யவிருக்கிறேன். தேடிப் பிடித்து, கேட்டு அனுபவித்து, யான் பெற்ற(றுக்கொண்டிருக்கும்!) இன்பம், பெறுக இவ்வையகம்!

மாலையிட்ட மங்கை என்ற படத்திற்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. அதில் வரும் ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ என்கிற பாடலை ஒலிபரப்பாத ஒலிக்கருவியே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்! அதன் பல்லவி(மட்டும்), ஒரு இந்திப் படத்தில் திரு.நெளஷாத் உருவாக்கிய பாடலின் பிரதி. ஆனாலும் நாம் ரசிக்கப் போவது அந்தப் பாடல் இல்லை. அதே படத்திலிருந்து வேறு மூன்று பாடல்கள். அதில் முதலாவதாக வருவது, எம்.எஸ்.ராஜேஸ்வரி, தன் இனிமையான குழந்தைக் குரலில் பாடியிருக்கும்

‘மழைகூட ஒரு நாளில் தேனாகலாம்,
மணல் கூட சில நாளில் பொன்னாகலாம்,
ஆனாலும் அவையாவும் நீ யாகுமா,
அம்மா என்றைழைக்கின்ற சேயாகுமா!’ என்கிற தாலாட்டைக் கேளுங்கள்.

மனதை வருடும் இசை. குழைவான குரலுக்கிசைந்த வீணை, புல்லாங்குழல், இரண்டு தாள வாத்தியங்கள் மற்றும் கண்ணதாசனின் வரிகள் – இவ்வளவு தான் மொத்தமுமே! விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் ஏராளமான பாடல்கள் (‘ஆர்கெஸ்ட்ரேஷன்’ எனப்படும்) நிறைய வாத்தியங்களின் இசைக் கோர்வைக்குப் பெயர் போனவை.(இங்கே புதிய பறவை படத்திலிருந்து ’எங்கே நிம்மதி’ நினைவுக்கு வருகிறது) அவர்களிடமிருந்து இத்தகைய அமைதியான பாடல்கள் பல வந்திருக்கின்றன என்பதுதான் அவர்களைச் சிறந்த இசையமைப்பாளர்களாக்குகிறது. இந்தக் காவியத்துக்கு கவியரசின் வரிகள் ஒரு மகுடம்.

நான் கூறிய சூழ்நிலையில் இந்தப் பாடலைக் கேட்டு ரசியுங்கள் – இசையின் தாக்கம் என்னவென்பது உங்களுக்கு மேலும் புரியும்! மீண்டும் அடுத்த பாடலைப் பார்க்கும் முன், இந்தப் பாடலைக் கேளுங்கள்:

29 MAZHAI KOODA INH100310630 by Krishnamurthy80


4 comments:

 1. தங்களின் விமரிசனம் மற்றும் அனுபவக்கச்சேரி அமர்க்களமாக ஆரம்பித்திருக்கிறது என்று நினைக்கிறேன். தாலாட்டுப் பாடல்களுக்கும் புகழ்பெற்ற கவியரசரின் மிக அருமையானதொரு தாலாட்டுப்பாடல் இது. இந்த மொத்தப்பாடலிலும் வெறும் வீணை, புல்லாங்குழல் மற்றும் இரு தாளவாத்தியக்கருவிகள் மட்டுமே உபயோகிக்கப்பட்டிருக்கின்றன என்பது ஆச்சரியத்துக்குரியது. மனதை வருடுவது மட்டுமல்ல மனதில் இறங்கி சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துகொள்வதற்கும் கவியரசரும் அவரைச் சார்ந்த இசையரசர்களும் செய்திருக்கும் அற்புதங்களை இந்தத் தலைமுறையினருக்குத் தெரிவிக்க வேண்டியது அவசியம்தான்.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. நன்றி, அமுதவன். உங்கள் உந்துதல் இதை எழுத ஒரு முக்கிய காரணம்.

  ReplyDelete
 3. இணையத்தில் இந்த பாடலை தேடுபவர்களுக்கு கீழே உள்ள சுட்டி உதவும்..

  http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Maalaiyita%20Mangai/Mazhai%20Kooda%20-%20TamilWire.com.mp3

  ReplyDelete
 4. தங்கள் வருகைக்கும், சுட்டிக்கும் என் நன்றிகள், திரு.கண்ணன் அவர்களே! நானும், இனி வ்ரும் என் பதிவுகளில் குறிப்பிடப்படும் பாடல்களின் ஒலியையும் இணைக்க முயற்சிகள் செய்து வருகிறேன்.

  ReplyDelete