Monday, August 22, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!(இரண்டு)


கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்தது போல, எனது ரசனையில் இரண்டாவது பாடலும் கவியரசரின் மாலையிட்ட மங்கை படத்திலிருந்து தான். கவியரசரின் இந்தப்பாடலை, மெல்லிசைமன்னர்களின் இசையில் ஜமுனாராணி பாடியிருக்கிறார்.

’மாலையிட்டு மணமுடித்து பொட்டு வச்சு, பூ முடிச்சு
மங்கை இவள் வாழ வந்தாள் எங்கள் வீட்டிலே!
மாலை வெயில் போலே மஞ்சள் பூசும் பெண்ணை
வாழ வைக்க மகன் வருவான், கொஞ்ச நாளிலே!’

இந்தப் பாடலைப் பாடிய ஜமுனாராணி (பானுமதியைப் போல ஒரு வித்தியாசமான குரல் இவருக்கு!) மணமகளை வரவேற்கவும், நையாண்டி செய்யவும் கூடிய உணர்ச்சியை வார்த்தைகளில் வெளிப்படுத்தி, அழகாகப் பாடியிருப்பார். பின்னணியில், தாளமும் மற்ற தோழிகளின் குரல்களும் அதற்கு அருமையாகத் துணை போகும். ஆனாலும், கதைப்படி, அந்த மகிழ்ச்சி அந்த மணமகளுக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்த்தும் விதமாக மகா சோகத்துடன் ஒரு ஷெனாய் பீஸும் பாடலுக்கு முன்னரும் இடையிலும் ஒலிக்கும்!

இரு வேறு உணர்ச்சிகளை உள்ளடக்கி, கவியரசரும், மன்னர்களும் உருவாக்கிய இப்பாடல், ஒரு நல்ல பாடலுக்கு ஆரவாரமான இசை தேவையில்லை என்பதையே உறுதிப்படுத்துகிறது. பாடகியின் குரலும், மாண்டலினும் ஷெனாயும் கேட்கும் போதெல்லாம் சொக்க வைக்கும்! அநுபவியுங்கள், அடுத்த பாடல் வரும் வரை!

Malaiyittu manamudiththu by Krishnamurthy80

2 comments:

  1. நிச்சயமாய் ஜமுனாராணியின் குரல் ஒரு வித்தியாசமான குரல்தான். அதனால்தான் செந்தமிழ்த்தேன் மொழியாள் பாடலையும் அவரையே பாடவைத்து மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக்காட்டினர் விசுவநாதனும் ராமமூர்த்தியும். கவிஞருக்குப் பிடித்த குரல்களில் ஜமுனாராணியின் குரலும் ஒன்று என்று நினைக்கிறேன். தற்சமயம் அவர் மும்பையில் இருப்பதாகக் கேள்வி. தொடர்ந்து ரசனைக்கினிய பாடல்களைத் தொகுத்துக்கொண்டே இருங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. நன்றி,அமுதவன்! சமீபத்தில் பாடகர் மனோவுடன் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் ஜமுனாராணியின் கலந்துரையாடல் பார்த்தேன். இன்னமும் சற்றும் களைப்படையாத குரலில் பாடிக்கொண்டிருந்தார்!

    ReplyDelete