Friday, August 26, 2011

கொஞ்சும் இசையும், கொஞ்சம் ரசனையும்!

(மூன்று)

ஓரு இனிமையான செய்தி! கடந்த இரு பதிவுகளுக்கான பாடல்களின் ஒலிப்பதிவுகள் அந்தந்தப் பதிவுகளில் இணைக்கப் பட்டிருக்கின்றன. இனி வரும் பாடல்களுக்கும் இணைப்பு (கிடைத்த வரை!) உண்டு. கேட்டு மகிழுங்கள்.

நான் முதலில் குறிப்பிட்டிருந்ததைப் போன்ற சூழ்நிலையில் கேட்டால் இன்னும் இனிக்கும். நல்ல கருவிகளில் கேட்கும் போதுதான், அற்றை நாளிலேயே, (அதாவது, இன்று போல நவீன ஒலிப்பதிவுக் கருவிகள், கணினிகள் இல்லாத போதிலேயே) நமது ஒலிப்பதிவாளர்கள் எவ்வளவு அருமையாகப் பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்பதும் தெரியும். உதாரணமாக, பல பாடல்களில் டபிள் பேஸ் என்கிற (மகா பெரிய வயலினைப் போல இருக்கும் இதை, நின்று கொண்டு தான் இசைப்பார்கள்) வாத்தியத்தை தாளத்திற்கேற்பவும், அந்தந்த ஸ்வரத்திற்கேற்பவும் மீட்டியிருப்பார்கள். உங்கள் காதுகளில், அதன் தொனி ‘தொம், தொம்’ என்று தாளத்தோடு அதிரும்! பாடலில் இசைக்கப்பட்டிருக்கும் எல்லா வாத்தியங்களின் தொனியும் செவிகளில் அளவாக, அமுதமாக விழும். ஆனாலும் எந்த வாத்தியமும் பாடுபவரின் குரலையோ, உச்சரிப்பையோ என்றும் அமுக்கியதே இல்லை!

இன்னொன்று! நான் இணைத்திருக்கும் சில பாடல்களின் ஒலிப்பதிவு, மெச்சத்தகுந்ததாக இல்லை என்றால், அது என் ஒலிப்பதிவு அல்லது இணைப்பின் குறையே!

-0-

இனி இன்றைய பாடல்: ’மாலையிட்ட மங்கை’ படத்தில் என்னைக் கவர்ந்த மூன்றாவது பாடல், ‘நானன்றி யார் வருவார்?’. இந்தப் பாடலை, டி.ஆர்.மகாலிங்கமும், ஏ.பி. கோமளாவும் பாடியிருக்கிறார்கள். பாடல், ’ஆபோகி‘ என்கிற கர்நாடக சங்கீத ராகத்தில் அமைந்திருக்கிறது. (இதே ராகத்தில் அமைந்த இன்னொரு பாடல் மெல்லிசை மன்னர்கள் இசையில், ‘கலைக்கோவில்’ படத்தில் வந்த, பாலமுரளீகிருஷ்ணாவும் சுசீலாவும் பாடிப் பிரபலமான ‘தங்கரதம் வந்தது வீதியிலே’. இளையராஜாவும், இதே ராகத்தில் ‘இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ’ என்று ஒரு பாடல் போட்டிருக்கிறார்).

இந்தப் பாடலின் சிறப்பு என்ன? நீங்கள் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பல பாடல்களைக் கேட்டிருப்பீர்கள். நாடக மேடையிலிருந்து வந்தவர் என்பதால் கணீர்க் குரலில் உச்சஸ்தாயியில் பாடும் வழக்கம் உள்ளவர். (கூர்ந்து கவனித்திருந்தீர்களானால், ‘செந்தமிழ்த் தேன் மொழியாள்’ பாடல் கூட, கணீரென்றுதான் இருக்கும்!) ஆனால், இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். அவரை, மென்மையான குரலில் எவ்வளவு அழகாகப் பாட வைத்திருக்கிறார்கள் என்பதை! மனதைத் தழுவி, உள்ளே புகுந்து பாடலோடு ஒன்றச் செய்யும் வித்தை அது!

உடன் பாடியிருக்கும் ஏ.பி.கோமளா பழைய பாடகி. அருமையான குரல் வளம் கொண்டவர். ஸி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன், போன்ற அனைத்துப் பழம்பெரும் இசையமைப்பாளர்களிடமும் நிறையப் பாடியிருக்கிறார். (சிவாஜி நடித்த ’நான் பெற்ற செல்வம்’ படத்தில் ‘மாதா, பிதா, குரு தெய்வம்’ என்ற அருமையான பாடலைப் பாடியிருப்பார், கேட்டதுண்டோ?). நான் இன்னமும் விவரிப்பதை விட, நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கும் போது தானே உங்களுக்குப் புரியும்.

இப்போது பாடலைக் கேட்கலாமா?

Naanandri yaar varuvaar? by Krishnamurthy80

மீண்டும் இன்னொரு பாடல் மூலமாகச் சந்திப்போம், நண்பர்களே!



1 comment:

  1. மிக இனிமையான பாடல். பாடலுக்கான சிறப்பை நீங்களே சொல்லிவிட்டீர்கள். டி.ஆர்.மகாலிங்கத்தின் எல்லாப்பாடல்களுமே உச்சஸ்தாயியில் அமைந்திருக்க இந்தப் பாடல் மட்டுமே அவருடைய மென்மையான த்வனியைக் கேட்கச் செய்வதாக இருக்கும். இம்மாதிரியெல்லாம் படத்திற்குப் படம் நிறைய புதுமைகளைச் செய்துகொண்டே இருந்தவர்கள்தானே மெல்லிசை மன்னர்கள்! தொடரட்டும் உங்கள் அனுபவங்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete