Wednesday, March 4, 2009

தருணங்கள்!

தருணங்கள்!
-1-

நம்புவதே வழி என்ற மறை தனை நாம் இன்று நம்பிவிட்டோம்! - பாரதி

நானும் அண்ணாவும்!

எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத சில தருணங்கள் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. என் வாழ்விலோ, அப்படிப்பல, விலை மதிக்கமுடியாத தருணங்கள்! ஒரு வறிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும், நான் வளர வந்த இடத்தின் பெருமையால் விளைந்தன அவை. சம்பவங்களின் வலிமை, பெருமையால் அறுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் அச்சடித்தாற்போல நினைவில் நிற்கின்றன. என்னோடு அவை போவதில் எனக்கு உடன்பாடில்லாததால் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தேன்.

-0-

அரசியல் என்பது பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தும், பொது வாழ்க்கையில் தன்னலத்தை அறியாதவர்களைக் கொண்டதுமாக இருந்த பொற்காலம் அது! நான் மூன்று மாதக் குழந்தையாக 1941ல் என் தாயுடன் திண்டுக்கல் வந்தேன்.அங்கே என் தந்தை வேலை செய்து கொண்டிருந்த அட்வகேட் கணேச அய்யர் வீட்டில் சமீபத்தில் தான் ஒரு குழந்தை பிறந்தவுடன் இறந்திருந்தது. எனவே நான் அந்த வீட்டில் சுலபமாக எல்லாருடைய செல்லமுமானேன். அப்போதே, செவிகளில் விழுந்த பாடல்களை அப்படியே திரும்பவும் பாடுவேன்.....

-0-

திண்டுக்கல் என்பது ஒரு சிறிய அழகான பெருங்கிராமமாக அப்போது இருந்தது. அதன் அமைவிடம், திருச்சி, மதுரை, பழனி என்கிற முக்கோணத்தின் நடுவிலே இருப்பதால் எல்லா திசைகளிலிருந்தும் கடந்துசெல்ல (முக்கியமாக ரயிலில்) ஒரு பாலம் போன்றிருக்கிறது. நான் குறிப்பிட்ட கணேச அய்யர், பின்னாளில் முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். சுதந்திரப்போராட்டத் தியாகியாகவும், திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமாக இருந்த அவர் வீட்டிற்கு, (திண்டுக்கல் பக்கம் வரும்) அரசியல் தலைவர்கள் வந்து போவது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று.

கட்சி, கொள்கை பேதங்களெல்லாம் மேடைகளில் மட்டுமே இருந்த பொற்காலமது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி (இவர்கள் எப்போது திண்டுக்கல் வந்தாலும் இந்த வீட்டிற்கு வராமல் இருக்கமாட்டார்கள்) மற்றும் இதே ஊரில் அக்கட்சியின் தலைவர்களான ஏ.பாலசுப்பிரமணியம், (எனக்கு “பாலு மாமா”) தோழர்கள் எஸ்.ஏ.தங்கராஜ், என்.வரதராஜன் முதலியவர்கள் எனக்குஅண்ணாச்சிகள். திண்டுக்கல்லுக்கு அருகில் இருக்கும் காந்தி கிராமத்துக்கு வருகை தரும் பல தலைவர்களும் இங்கே வருவார்கள். இந்த வீட்டில், ஜே.பி.கிருபளானி அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்கியது நினைவிருக்கிறது. அவ்வை சண்முகம், பகவதி, கல்கி, செளந்தரம் ராமச்சந்திரன், அம்மு சுவாமிநாதன் (இவர்கள் இருவருடைய தேர்தல் மேடைகளிலும் நான் தேசபக்திப் பாடல்கள் பாடியிருக்கிறேன்) இப்படிப் பல தலைகள் வருவார்கள்! இது போக, கணேச அண்ணா (என்று தான் அவரை அனைவரும் அறிவார்கள்) திண்டுக்கல்லில் எந்த பொதுக்கூட்டத்தில் பேசினாலும் அடியேன் கூடவே செல்வதும், அவர் சொல்லும் போதெல்லாம் மேடையில் பாடுவதும் உண்டு. ஏறத்தாழ நான்கு வயதிலே, நான் பாரதியாரின் ‘ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே’ மேடையில் பாடியது நினைவிருக்கிறது.

கணேச அண்ணா, ராஜாஜி அவர்களின் பரம சிஷ்யர். அவர்கள் இருவரிடையே கடிதப் போக்குவரத்து உண்டு. அவரையும், அவரைப்போலவே நன்கு பழக்கமாக இருந்த காமராஜ் அவர்களையும் பெரும்பாலும் திண்டுக்கல் ரயில் நிலையத்திலோ அல்லது வேறு எங்காவதோ சந்திப்பது வழக்கம். (மாண்பு மிகு ராஜாஜி அவர்களுடன் என்னுடைய சொந்த அனுபவங்கள், பிறிதொரு இடத்தில்.)

முதல் சுதந்திர தினத்தன்று (1947) ஒரு காரில் அவருடன் முண்டியடித்துக் கொண்டு பயணம் செய்து, திண்டுக்கல் நகரைச் சுற்றி இருக்கும் பட்டி, தொட்டியெல்லாம் அவர் மூவர்ணக் கொடியைக் கொடியை ஏற்றியதைப் பார்த்த நினைவிருக்கிறது.

அதற்கும் முன்னர், மகாத்மா காந்தி தமிழ் நாடு சுற்றுப்பயணம் வந்த போது, சுட்டெரிக்கும் வெயிலில், என் அம்மாவின் இடுப்பில் அமர்ந்து,ஒரு பெரிய கூட்டத்தின் நடுவிலே இருந்து, ரயில் பெட்டி வாயிலில் காட்சி அளித்த அவரைப் பார்த்த நினைவு மசமசவென்று இருக்கிறது. அவர் சுடப்பட்ட அந்த வெள்ளிக் கிழமை மாலை வேளையில் கணேச அண்ணா தன் தலையில் கை வைத்துக் கொண்டு, இடிந்து போய் ரேடியோ அருகிலேயே அமர்ந்திருந்ததும் கண் முன்னே நிற்கிறது. நகர் முழுவதும் எத்தனை பேர் மொட்டை போட்டுக் கொண்டு, தங்கள், நெருங்கிய உறவினரை இழந்தது போல வாடி இருந்தனர்! அதன் பின்னர், ஒரு வருடத்திற்கு (கணேச அண்ணாவின் அறிவுரைப் படி) ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், அபிராமி அம்மன் கோவில் மண்டபத்தில் மாலை 5 லிருந்து 6 மணி வரை படையல் வைத்து, கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. பஜனைப்பாடல்களும், ’ரகுபதி ராகவ’ வும் பாடி, கடைசியில் ‘அஸதோமாம்...’ என்ற பிரார்த்தனையுடன் முடிவடையும். அதில் வைக்கப்பட்டிருக்கும் காந்திஜியின் உருவப்படத்திற்கு ஏராளமான புஷ்ப அலங்காரமும், பொரி, கடலை, தேங்காய், பழம் முதலியவை களும் திண்டுக்கல் கடைவீதி வியாபாரிகளின் உபயம். இதில் பாடுவதற்காக, நாகல் நகரிலிருந்து, பூர்ணையா என்ற ஸெளராஷ்ட்ர அன்பர் வருவார். துணைப் பாட்டு அடியேன். பூர்ணையா வரமுடியாத ஓரிரு வெள்ளிக்கிழமைகளில் என்னையே பிரார்த்தனையை வழி நடத்தச் சொல்லியிருக்கிறார், அண்ணா. (அப்போது எனக்கு வயது 7!).

நேருஜியை சில முறைகள் பார்த்திருக்கிறேன். அவற்றில், ஒரு முறை காந்தி கிராமத்தில் நடந்த விழாவில் மிக அருகில் (இரண்டடி தூரத்தில்) பார்த்தேன். இவர் மகள் இந்திராவுடன் பயணித்த என் அனுபவங்கள் வேறு இடத்தில்.

-0-

அண்ணா, திண்டுக்கல் நகர முனிசிபல் கவுன்ஸிலராக 3ம் வார்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். நகர சேர்மனாகவும் பதவியேற்றார். அப்போதெல்லாம், திண்டுக்கல் மாப்பிள்ளைகளுக்கு திருமணத்திற்குப் பெண் கொடுக்க வேற்றூரார் தயங்குவார்களாம்! அவ்வளவு தண்ணீர்ப் பஞ்சம்! இதற்காக ஒரு லட்ச ரூபாய் செலவில் திட்டம் தீட்டி, அருகிலுள்ள குடகனாற்றில் ஒரு தடுப்பு அணை கட்டவேண்டும் என்று முனிசிபல் கவுன்ஸிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்காக, அப்போது மானில முதல்வராக இருந்த ராஜாஜி அவர்களிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டது. அப்போது அண்ணாவைப் பார்க்கும் போதெல்லாம் ராஜாஜி அவர்கள், “என்னப்பா, ஒரு லட்சம்” என்று அழைப்பாராம்! ஆனால் அந்தத் திட்டம், ராஜாஜிக்கு அடுத்ததாக முதலமைச்சரான காமராஜ் அவர்கள் ஆட்சியில் தான் சாத்தியமானது. எனவே, ‘காமராஜ் சாகர்’ என்று பெயரிடப்பட்ட அந்த அணையின் ஆரம்ப விழாவில், அப்போதைய கவர்னர் மாண்புமிகு ஸ்ரீபிரகாசா அவர்கள் முன்னிலையில் அடியேன் (ஜெமினி ஓளவையாரில் வரும்) “வேழ முகத்து வினாயகனைத் தொழ” என்ற பாடலைக் கடவுள் வாழ்த்தாகப் பாடினேன். நகராட்சியின் சார்பில், மதுரையில் இருந்து வந்து புகைப்படம்கூட எடுத்தார்கள் - இப்போது திண்டுக்கல் நகராட்சியில் எங்காவது கிடக்கிறதோ, இல்லை ‘போயே போச்சோ’!

-0-

பல முறை நான் தனியே சென்று, திண்டுக்கல் வழியாகச்செல்லும் ரயிலில் ராஜாஜி அவர்களைப் பார்த்து வந்திருக்கிறேன். அப்போது பெரும்பாலும் மாலை வேளை என்பதால் அவருக்கு இந்த வீட்டில் இருந்து இரவு உணவு கொண்டு போய்க் கொடுப்பேன். ஒரு முறை அவர்கள் ரவா உப்புமா வேண்டுமென்றும், அவருக்குப் பல் இல்லாததால் உளுத்தம் பருப்பு, கடுகு முதலியவை தாளிக்காமல் எப்படிச் செய்து அனுப்ப வேண்டும் என்று ‘ரெஸிபி’ யுடன் கடிதம் எழுதியிருந்தார்கள்! மற்றொரு முறை என்னை, ’நீ கணேசனின் பிள்ளையா?’ என்று கேட்டார். நான் விளக்கியவுடன், ’ஓ, சுப்பிரமணியனின் பிள்ளையா’ என்றார். இந்த (அவர்கள்) நெருக்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு பின்னாளில் ஆர்வக் கோளாறினால் ஒரு காரியம் செய்தேன்:

இப்போதைப் போலவே, பள்ளிப் படிப்பிலும் நான் மரமண்டைதான்! கவனச் சிதறல்கள் ஏராளம். நான் 5வது ஃபார்மில் படித்துக் கொண்டிருந்தபோது என் படிப்பை (படிப்பின்மையை?) ப் பற்றி வீட்டில் திட்டி விட்டார்கள். அது வழக்கமானது என்றாலும், நமக்கு ரோஷம் (மட்டும்) அதிகமல்லவா,அதனால் (வீட்டில் உள்ளவர்களைப் பழிவாங்குவதாக நினைத்துக் கொண்டு) உடனே பெரியவருக்கு ஒரு கார்டில், ’நான் ஒழுங்காக முயற்சியெடுத்துப் படித்தாலும் மார்க் வரமாட்டேன் என்கிறது, வீட்டில் அனாவசியமாகத் திட்டுகிறார்கள், நான் இன்னார் வீட்டுப் பையன்’ என்று எழுதி, ரொம்பவும் சாமர்த்தியமாக, பள்ளி விலாசம் கொடுத்துத் தபாலில் அனுப்பி விட்டேன்.மூன்றாவது நாள் பதில் கடிதம் வந்துவிட்டது. அதை ஒரு ஆசிரியர் எடுத்து வைத்துக் கொண்டு, என்னை அழைத்து பலமாக விசாரித்து விட்டுக் கொடுத்தார். அதில் ராஜாஜி அவர்கள், “அடுத்த முறை சரியாகவே செய்வாய், ஆசீர்வாதம்” என்று எழுதியிருந்தார். கொண்டுபோய் வீட்டில் காண்பித்தவுடன் மீண்டும் (அவரைத் தொந்தரவு செய்ததற்கும் சேர்த்து) சரியான அர்ச்சனை நடந்தது! அடுத்த வருடம், 6வது ஃபார்ம், அதாவது எஸ்.எஸ்.எல்.ஸி., விடுவோமா? அப்போதும், ”தங்கள் ஆசியினால் போன வருடம் தேறி விட்டேன், அதனால் இந்த முக்கியமான பரிட்சைக்கும் தங்கள் ஆசி தேவை” என்று எழுதிவிட்டேன். இப்போதும் பள்ளி விலாசம் தான்! உடனே வந்த பதிலில், ஆசீர்வாதத்தோடு, “வீட்டு விலாசம் தந்திருக்க வேண்டும்” என்று ஒரு குட்டு! இந்த இரு கடிதங்களையும் இப்போதும் என்னிடம் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன்.

பள்ளிப்படிப்படிப்பு ஒருவாறாக முடிந்தது. யாருமே எதிர்பாராத வகையில் மொத்தத்தில் 52% வாங்கித் தேறியது, கடவுள் அருளாலா அல்லது, ராஜாஜி அவர்களின் ஆசியாலா தெரியவில்லை! இந்த அழகில், நான் மேற்படிப்பு, அதுவும் பாலிடெக்னிக்கில் படிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கு உதவுவதாக ஏற்கனவே வாக்களித்திருந்த (சிங்கப்பூரிலிருந்த) என் சித்தப்பா மாட்டிக்கொண்டார். மாதா மாதம் இந்தியாவிலிருந்த அவர் நண்பர் மணியார்டர் அனுப்ப, நான் மூன்றாண்டுகள் விருதுநகரில் விடுதியிலேயே தங்கிப் ’படித்தேன்’.

நான் மூன்றாம் ஆண்டை முடிக்கும் தறுவாயில், கணேச அண்ணாவிற்கு ஆரோக்கியம் சீரழிய ஆரம்பித்தது. விடுமுறையில் நான் வரும் போதெல்லாம் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். எப்போதுமே என்னை ஒரு தோழனாகவே கருதி, நடத்தியிருக்கிறார். தான் விரைவில் இறந்துவிடுவோம் என்பதை அவர் உணர்ந்திருந்த போது நடந்த அந்த சந்திப்புக்கள், என் வாழ்வில் மிகத் துயரமானவை. 1963ல் நான் படிப்பை முடித்த நிலையில், ”நான் யார் யாருக்கோ வேலை வாங்கித்தர சிபாரிசு செய்திருக்கிறேன், ஆனால் உனக்கு நல்லதொன்றும் நான் செய்ய முடியவில்லையே” என்று பலமுறை கூறி வருத்தப் பட்டார். அதற்குள், என்னுடைய சித்தப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் எனக்கு, சென்னையில் ஒரு தற்காலிக வேலை கிடைத்தது. நான் வேலையில் சேர்ந்த 15 நாட்களில் தந்தி வந்து விட்டது. இப்போது போல போக்குவரத்து வசதி யில்லாத காலம்! சென்னை எழும்பூரில் கூட்டமான கூட்டம். புறப்பட்டுக் கொண்டிருந்த ரயிலில் கதவுக்கு வெளியே தொங்கிக்கொண்டு செங்கல்பட்டு வரை சென்று பின் எப்படியோ உள்ளே நிற்க இடம் கிடைத்து, திண்டுக்கல் சேர்ந்து, அவரின் உடலைப் பார்த்த பின்னால் தான் எனக்கு உயிர் வந்தது. பிறகும், வீட்டில் இருந்த மற்றவர்களின் கட்டாயத்தையும் பொருட்படுத்தாமல் எல்லாக் கடன்களும் முடிந்த பிறகு தான் கிளம்பினேன். அதற்குப் பிறகு, ஒரே வருடத்தில் நான் பெங்களூரில் செட்டில் ஆகி விட்டேன். எதனாலோ தெரியவில்லை, அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அந்த வீட்டிற்கு நான் (இது வரையிலும்) இரு முறை, என்னை வளர்த்த அண்ணாவின் துணைவி இறந்த மறுநாளும், என்னை அப்போது செதுக்கிய இன்னொருவரான டாக்டர்.சுந்தரம் (அண்ணாவின் ஒரே பெண்ணின் கணவர்) இறந்த போதும் மட்டுமே சென்றிருக்கிறேன்!

இப்படியாக என் பாலகாண்டம் முடிகிறது.


-2-

நானும் அவர்களும்!


பெங்களுரில் வேலையில் சேர்ந்த பின்னர், நண்பர்கள் சேர்ந்தனர். கர்நாடக இசையிலும், புகைப்படம் எடுப்பதிலும் ஆழ்ந்த ஆர்வம் வந்தது. கச்சேரிகளைக் கேட்டும், நண்பர்கள் வீட்டு விழாக்கள் பலவற்றில் புகைப்படம் எடுத்தும், ஆர்வம் பித்தாக மாறியது! இதைத்தவிர, அகிலன், நா.பார்த்தசாரதி, சுஜாதா, நடிகர் சிவகுமார் போன்றவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு, உடன் பணிபுரிந்த நண்பர் அமுதவன் மூலம் கிடைத்தது. இந்த சமயத்தில் பலதடவை சிவகுமாருடன் வெளியூர்ப் படப்பிடிப்புக்களுக்கு சென்றிருக்கிறோம்.

மைசூர் அருகில், காவிரி சங்கமத்தில், இரவு முழுகக படப்பிடிப்பு. சிவா, நடிகை லட்சுமி, அமுதவன், இவர்களோடு நானும். இடைவேளைகளில் பழைய, மிகப்பழைய பாடல்களை அசை போட்டுக்கொண்டிருந்தோம். லட்சுமியின் தாயார், குமாரி ருக்மணி,வள்ளி திரைப்படத்தில் பாடிய (வாயசைத்த) பாடல்களை நான் பாட, மற்ற இருவரும் ரசிக்க, லட்சுமி, “ஐயோ, மாமா என்னமா பாடறார்” என்று உருக, படத்தின் இயக்குனர் வந்து, சிவாவிடம், ”சார், கொஞ்சம் படமும் எடுக்கலாமா, சார்?” என்று கேட்டது தனிக்கதை!

கலைஞர் தலைமையில், காரைக்குடியில் இளையராஜாவுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தினார், பழ.கருப்பையா. இதில்தான் கலைஞரால் ‘இசைஞானி’ பட்டம் சூட்டப்பட்டார், இளையராஜா. இந்த விழாவில் பங்கேற்ற சிவகுமார், எங்களையும் வரச்சொல்லியிருந்தார். அதிகாலையிலேயே காரைக்குடி சென்றுவிட்டோம். அங்கே. சிவகுமாரும், இளையராஜாவும் தனியாக ஒரு பெரிய பங்களாவில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அவர்களுடன் நாங்களும் சேர்ந்துகொண்டு அப்போது முதல் அடுத்த நாள் காலைவரை அவர்களோடு இருந்த அனுபவம் இனியது. அப்போது கலைஞரையும் படம் எடுத்தேன்.

சிவகுமாரின் நூறாவது பட விழா ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோது, எம்ஜிஆரைப்பல படங்கள் எடுக்க முடிந்தது. இதே போல, பெங்களுரில் ஒரு பொது நிகழ்ச்சியில் சிவாஜியையும், பிறிதொரு திருமணத்தில் ஜெயலலிதாவையும் படம் எடுத்திருக்கிறேன். எல்லாம் அருமையான கருப்பு-வெள்ளைக் காவியங்கள்!

ஒரு நடன நிகழ்ச்சியில் ஸ்ரீ வித்யாவைப் பல கோணங்களில் எடுத்த படங்களை அனுப்பி வைத்திருந்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது என்று புகழ்ந்து கூறியதாக எங்கள் பொது நண்பர் மனோபாலா (அவரேதான்!) கூறினார். பின்னர் ஒரு நாள் மாலை, ஒருவர் என் வீட்டிற்கு வந்து, உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தங்கியிருக்கும் எம்எல்வி அழைத்துவரச்சொன்னதாகச் சொன்னார்.
உடனே போனேன். ஸ்ரீவித்யா அடுத்த வாரம் மீண்டும் பெங்களுர் வருவதாகவும், அவர் நடன நிகழ்ச்சிக்காக அமெரிக்கா போக இருப்பதால், அதற்காக மறுபடியும் புகைப்படங்கள் எடுத்துத் தர முடியுமா என்று கேட்டார். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவர், ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா என்று இரண்டு, மூன்று முறை கேட்டார். நாளைக்கு உங்களுக்கு கச்சேரி இருக்கிறதே அதனால் வேண்டாம் என்றேன். சிறிது நேரம் கழித்து, ‘நீங்கள் பேசாமல் சாப்பிடுங்கள், நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்’ என்று, இருவரும் அதைச் சாப்பிட்ட பிறகு தான் அனுப்பினார். பின்னர் ஸ்ரீவித்யாவைப் படங்கள் எடுத்து அவை பத்திரிகைகளில் வந்தன. நடுவில், குமுதம், கல்கி, மற்றும் கன்னடப் பத்திரிகைகளில் பல அட்டைப்படங்களும், அமுதவனின் (சரோஜா தேவி, ஜெயந்தி போன்றவர்களின்) பேட்டிகளோடு என் படங்களும் பிரசுரிக்கப்பட்டன.

குமுதம் பால்யு, எங்களுக்கு நெருங்கிய நண்பரானார். ஒரு மதியத்தில் நண்பர் அமுதவனுடன் வீட்டிற்கு வந்தார். “உடனே காமிராவை எடுத்துக் கொண்டு புறப்படுங்கள்” என்றார். அப்போதே மூவரும் புறப்பட்டு இரவு சிக்கமகளுர் போய்ச் சேர்ந்தோம். அங்கேதான் இந்திரா காந்தி அவர்கள் ஒரு துணைத் தேர்தலில் நின்றிருந்தார். அவரை எதிர்த்து, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போட்டியிட்டார். இவர்கள் இருவரையும் சுற்றி எந்த பாதுகாப்பு வளையமும் இல்லாத நிலையில், மிக மிக அருகில் படங்கள் எடுக்க முடிந்தது. திருமதி. இந்திராவுக்கு மலர்களால் ஒவ்வாமை (அலர்ஜி) உண்டு என்பதை அவருடன் வந்திருந்த பெண் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டு, அவர் அருகிலேயே நின்று மாலைகள் அவர் கழுத்தில் விழாமல் பார்த்துக் கொண்டதற்காக பல முறை தாங்க்ஸ் வாங்கிப் பரவசப்பட்டோம்.என்ன இருந்தாலும்,(அப்போது) நாட்டின் முன்னாள் பிரதமர் அல்லவா?
மத்திய மந்திரியாக இருந்த ஜார்ஜ் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்க முடிந்ததே!

பால்யு, சாதாரண மக்களைப் பேட்டி எடுப்பதையும் படம் எடுத்தேன். அடுத்த வார குமுதம் இதழில் கட்டுரையோடு அவை வெளிவந்தன.

பிறிதொரு முறை, பெங்களுர் ஸிடி ரயில் நிலையத்துக்குப் போயிருந்தபோது, சென்னை செல்லும் வண்டியில் முதல் வகுப்பில் எம் எஸ் (& பார்ட்டி) என்று குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தேன். நடந்து வரும் வழியில், சதாசிவம் அவர்களும் மற்றவர்களும் எதிர் திசையில் பேரைத் தேடிக் கொண்டு போவதைப் பார்த்ததும், அவரிடம் போய், உங்கள் கோச் அந்தப்பக்கம் இருக்கிறது என்று அவர்கள் கூடவே (எம் எஸ் அவர்களின் கையிலிருந்த பெட்டியையும் வாங்கிக்கொண்டு) சென்று உட்காரவைத்தேன். திரும்பி வருமுன் எம் எஸ் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். உடனே, எழுந்து நின்று பதிலளித்தார். அப்படியே விழுந்து அவர்கள் இருவரையும் நமஸ்காரம் செய்தேன். இதற்குச் சில நாட்கள் கழித்து, அவர்களின் கச்சேரி பெங்களுரில் நடக்கப்போவதை அறிந்து, சதாசிவம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி, அம்மாவைப் புகைப்படம் எடுப்பதற்கு அனுமதி வேண்டியிருந்தேன். ராஜாஜியின் சீடர் அல்லவா, மூன்றாம் நாளே பதில் வந்தது. கச்சேரி நாள் அன்று, மாலை பசவன்குடியில் ஸ்ரீனிவாசன் அவர்கள் இல்லத்தில் வந்து படம் எடுக்கலாம் என்று. அவ்வாறே நிறையப் படங்கள் எடுத்து, இரண்டு செட் அனுப்பி, ஒன்றில் ஆட்டோகிராப் செய்து அனுப்ப வேண்டியிருந்தேன். அவர்களோ எல்லாப் படங்களையும் தன் ஆட்டோகிராபுடன் அனுப்பி வைத்திருந்தார்கள்!

இந்த மாதிரித் தருணங்களை அசை போட்டுக் கொண்டிருக்க வேண்டிய வயதில் இப்போது இருக்கிறேன். நண்பர்களும், இசையும், புகைப்படங்களும் இன்றும் என்னோடிருப்பது பெரிய மகிழ்ச்சி. கணேச அண்ணாவின் மூன்று வாரிசுகளில், மீந்திருக்கும் அவருடைய ஒரே பெண்ணும், பேத்திகளும், அவர்களுடைய குழந்தைகளும் இன்றும் அதே பிரியத்துடனே பழகி வருகிறார்கள். அவர் எனக்கு பல சமயங்களில் எழுதிய கடிதங்களும், ஆரம்ப நாட்களில் எனக்களித்த தமிழார்வமும், ஆங்கில அடிப்படையும் என்னிடம் மிஞ்சியிருக்கின்றன. உலக வழக்கம் போல், திண்டுக்கல்லில் இப்போது வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு அண்ணா என்று ஒருவர் இருந்ததே தெரியாது.......

எழுதிச்செல்லும் விதியின் கை, எழுதி எழுதி மேற் செல்லும்!

2 comments:

  1. Replies
    1. அந்த அருமையான ஊரைப்பற்றிய் மலரும் நினைவுகளைத் தூண்டிய உங்களுக்கு நன்றி,மகிழ்ச்சி,திரு ஷாநுக் அவர்களே!

      Delete